Google   www kalachuvadu.com

பதிவு
கவிஞர்களின் கவிதைப்போர்
சு.மு. அகமது

காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவுசெய்து இருக்கின்றனர் தமிழின் தீவிரப் படைப்பாளிகள். அரை நூற்றாண்டாகத் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாய மாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ்த் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து அக்கறை செலுத்திவந்தன என்றால் அது தவறல்ல. கொடுங்கனவாய் முடிந்து போன ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்சினைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.

துன்பப்படும் மக்கள் துயரின் காத்திரத்தைப் பேசினால்கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. பிறகான காலகட்டங்களில் எத்தனையோ அழிவுகளைச் சிங்களப் பேரினவாத ராணுவம் தமிழ் மக்கள்மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு, செம்மணி புதைகுழி, செஞ்சோலைக் குழந்தைகள் படு கொலை எனப் பட்டியலிட முடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில் தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மன சாட்சியை உலுக்கத் திரண்டது மக்கள் எழுச்சி. ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தில் உடன்பாடில்லாத இடதுசாரிகள்கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறை காட்டினர்.

தொடர்ந்து பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தின. ஆனால் அறிவுலகம் அடர்ந்த மவுனத்தைக் கடைபிடித்தது. பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்துப் பத்திகளாக, கட்டுரைகளாக எழுதிக் குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறு எந்த பிரச்சினையானாலும் சரி தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது.

உலக அளவிலான வன்முறைகளையும் விடுதலைப் போராட்டங்களையும் விரிவாக எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்தச் சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை. கவிஞர்கள் லீனா மணிமேகலை, சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்த, தமிழ்ப் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் திசம்பர் 07.12.2008 அன்று சென்னை காந்திசிலை அருகில் நடைபெற்றது. அறிக்கையோ சுவரொட்டியோ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் நிகழ்ச்சிக்குத் தலைமை என்றில்லாமல் அனைவருக்கும் பொறுப்பு என்பதான சனநாயகத் தன்மை இருந்தது.

யவனிகா ஸ்ரீராம், எஸ். தேன்மொழி, கம்பீரன், தமிழச்சி தங்கபாண்டியன், யாழன் ஆதி, பாலைநிலவன், அ.வெண்ணிலா, கண்டராதித்தன், அய்யப்பமாதவன், இன்குலாப், இளம்பிறை, கோணங்கி, செல்மா பிரியதர்சன், நரன், கு.உமாதேவி, வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்நதி, இசை, இன்பா சுப்பிரமணியம், பவுத்த அய்யனார், வ.கீதா, அ. மங்கை, ரேவதி, உமா ஷக்தி, பிரசன்னா ராமஸ்வாமி, அபிலாஷ், விஜயலஷ்மி, கனிமொழி, சுகிர்தராணி, கிருஷாங்கினி, ஆனந்த், யூமா வாசுகி, ரமேஷ் பிரேதன், அரங்கமல்லிகா இவர் களோடு மேலும் பலர் கவிதை வாசிப்பில் கலந்துகொண்டனர். செம்பை மணவாளன், றொபேட், ரவி சுப்பிரமணியன் ஆகியோரால் இடையிடையே உணர்வெழுச்சி மிக்க பாடல்களும் பாடப்பட்டன.

நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முடிவில் வளர்மதி இயக்கிய குறுநாடகம் மிகவும் அர்த்தச்செறிவு மிக்கதாக இருந்தது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது இருந்தது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதுமாகும்.

உள்ளடக்கம்