Google   www kalachuvadu.com

எதிர்வினை
ராஜீவ் கொலையும் புலிகள் எதிர்ப்பும்
மலரவன், கோவை

‘காலச்சுவடு’ திசம்பர் இதழில் வெளியான நண்பர் கண்ணனின் “கண்ணோட்டம்”, நண்பர் கே.எஸ். முகம்மது ஷுஐப் (காயல்பட்டிணம்) எழுதிய வாசகர் கடிதம் ஆகிய இரண்டுக்குமான எதிர்வினை:

காலச்சுவடு இதழ் ஈழத்தமிழர்களின் துன்ப, துயரங்களுக்காகத் தொடர்ச்சியான கருத்துகளை வெளிப்படுத்திவருவதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் கருத்து முரண் நிறைந்தவையாகச் சில சமயங்கள் வெளிப்படுவதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. வாசகர் கடிதத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது என்றாலும், திசம்பர் இதழின் கண்ணோட்டம், குறிப்பிட்ட வாசகர் கடிதம் இரண்டும் புலிகள் பற்றிய கருத்தில் ஒற்றுமையாக இருப்பதே இந்த எதிர்வினைக்கான அடிப்படை.

தமிழீழ மக்களுக்கு ஆதரவான தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகள், பரிதாப உணர்வுகள் அந்த மக்கள் ஏதாவதொரு வகையில் இணைக்கப்பட்டிருக்கிற அரசியல் கட்சிகளையும் தாண்டி, சகோதர, மனிதநேய உணர்வோடு கலந்தே வெளிப்படுகின்றன.

தமிழீழ மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கு இருக்கிற வரலாற்றுத் தொடர்ச்சி, தமிழ் மக்களின் உணர்வுகளில் எப்பொழுதுமே தாக்கம் செலுத்தி வருகிறது.

நண்பர் கண்ணன் தனது கண்ணோட்டத்தில், புலிகளையும் அதன் தலைவரையும் ஆதரித்துப் பேசுவது, நம் எதிர்வினையின் ஒருங்கிணைவைச் சிதறடித்துச் சீரழிக்கிறது என்றும், ராஜீவ் கொலையால் இந்திய அரசியல் வரலாறு திசை திருப்பப்பட்டுவிட்டது என்றும் வருத்தப்படுகிறார். ஆனால் உண்மை என்ன?

ராஜீவ் காந்தி கொலை ஒரு கோணத்தில் மட்டும் விசாரிக்கப்பட்டு, ஒரு தரப்பினர் மட்டும் குற்றவாளிகளாக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டும்விட்டனர். உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும்தான் இந்த நிகழ்விற்குக் காரணமா? விசாரணையின் எல்லை காங்கிரசுகாரர்கள், அதிகாரவர்க்கம் அமெரிக்க சிஐஏ என்று இன்னும் கொஞ்சம் விரிந்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்.

ராஜீவ் கொல்லப்பட்டபோதும், இன்றும் எதிர்க்கட்சிகளாக, ஆளுங்கட்சிகளாக இருப்பவை புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வால்பிடித்துத் தானே திரிகின்றன. மாற்றாக எந்தப் பொருளாதாரத் திட்டமும் உலகமயமாக்கலுக்கு எதிராகக் கண்ணன் கூறுகிற இந்த எதிர்க்கட்சிகளிடம் இல்லையே!

ஈழ விடுதலையை ஆதரிப்பவர்கள், விடுதலைப்புலிகளைப் பெரும்பாலும் ஆதரிப்பதற்கான காரணம் என்ன? தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றுச் செல்வதால்தான். இன்றுவரை களத்தில் அவர்கள் மட்டுமே நிற்கிறார்கள் என்பதால்தான்.

தமிழீழ மக்களின் உரிமைக்காக, சாத்வீகமான சமரசமான தீர்வுகளைத் தமிழீழத் தலைவர்கள் முன்வைத்தனர். ஒப்பந்தங்கள் போட்டனர். உரிமைகளுக்காகக் கெஞ்சியுள்ளனர். இவை எதனையும் பொருட்படுத்தாத சிங்கள இனவெறி தமிழீழ மக்களைக் கொன்று குவித்தபோது, ஆயுதம் ஏந்திய எதிரியிடமிருந்து தற்காப்புக்காக ஆயுதமேந்தினர் ஈழ இளைஞர்கள். யுத்தம் அவர்கள்மீது திணிக்கப்பட்டது. இன்றுவரை ஒன்றரை லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 6000 தமிழீழப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாகி நடை பிணமாகியுள்ளனர்.

தமிழீழ மக்களின் விடுதலைக் குரலாகப் போர்க்களத்தில் ஒலித்துக்கொண்டிருப்பது புலிகளின் குரலே. ஈழப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியவர்கள் புலிகளே. சர்வதேச நாடுகளும் புலிகளையே விடுதலைப் போராளிகளாக, ஈழத்தின் பிரதிநிதிகளாக அங்கீகரித்துள்ளன. 25 ஆண்டு காலம் ஈழமக்களின் பேராதரவோடு விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர்.

மற்ற போராளிக்குழுக்கள் தங்களுடைய சமரசத் திட்டங்களால் ஈழமக்களுக்குப் பெரிதாக ஒன்றையும் செய்துவிடவில்லை. மக்களின் நம்பிக்கையையும் பெற முடியவில்லை. இந்திய உளவு அமைப்பான ஸிகிகீவின் கூலிப் படைகளாக, சிங்கள அரசின் ஊதுகுழல்களாகச் சீரழிந்துவிட்டனர். இன்று, இப்போது ஈழ, தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாகத் தெரிபவர்கள் புலிகள் மட்டுமே. சிங்கள அரசு புலிகள்மீது போடுகின்ற குண்டு ஈழவிடுதலையின் மீது போடுகின்ற குண்டாகும். இலட்சோப லட்சம் ஈழ மக்கள் தங்கள் உயிரை இழந்து, புலிகள் தங்கள் உயிரை இழந்து, தங்கள் விடுதலையின் வேர்களைக் காத்து நிற்கின்றனர். அது மரமாக வளரும் என்ற நம்பிக்கையை ஈழமக்கள் புலிகளிடமிருந்துதான் பெறுகின்றனர்.

ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே வழி என்று முன்வைக்கப்படுகின்ற வாதம், ஈழத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்விற்கு ஏதாவது சொல்லியாக வேண்டும் என்பதற்காக ஒப்புக்கு வைக்கப்படுகிறது.

ஈழத் தலைவர்கள் முன்வைத்த அத்தனை அரசியல் தீர்வுகளையும் சமரசத் திட்டங்களையும் பாழாக்கித் தமிழின அழித்தொழிப்பைச் சிங்கள அரசு தொடங்கியதால்தான் தனித் தமிழீழக் கோரிக்கை வந்தது. இதை முன்வைத்த தமிழ் அமைப்புகள் 18க்கு 17 இடங்களில் தேர்தலில் வெற்றி பெற்றன. ஈழ மக்கள் தனி ஈழத்தை வேண்டி நின்றனர். இந்த வரலாறு தெரியாத முட்டாள்கள் அல்ல, தனி ஈழத்தை எதிர்ப்பவர்கள்.

இந்த வரலாறு தெரிந்தும், சிங்கள அரசு கொடுக்காத, கொடுக்க நினைக்காத உரிமையை இவர்களின் வாய் முணுமுணுக்கிறது. ஈழ மக்களின் உணர்வுகளுக்கெதிராக இந்த முணுமுணுப்பு எழுகிறது என்றால், ஈழ மக்களின் துன்ப, துயரங்களில் அக்கறையில்லாதவர்கள் அந்த நபர்கள். இவர்களின் வாயிலிருந்துதான் வருகிறது புலிகள் எதிர்ப்பு. இந்திய இறையாண்மை, இலங்கை இறையாண்மை போன்ற வெற்று கோஷங்கள். இவர்கள்தான் கண்ணன் கூறுவதுபோல ஈழ மக்களின் படு கொலைக்கெதிரான நம் எதிர்வினையின் ஒருங்கிணைவைச் சிதறடித்து, சீரழித்து, துரோகமிழைப்பவர்கள்.

விடுதலைப்புலிகள் மனித மாண்பைச் சீரழித்துவரும் பாசிச சக்திகள் என்ற கே.எஸ். முகம்மது ஷுஐப்-ன் கருத்து நியாயமானதா? 1987இல் ஈழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப்படை தமிழீழப் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது அவருக்குத் தெரியாதா? தமிழ் இளைஞர்களையும் ஈழப் போராளிகளையும் கொன்றொழித்து வீடுகளைத் தரைமட்டமாக்கி, ஈழ மண்ணில், ‘அபு கிரைப்’ சித்திரவதை முகாமுக்கு முன்னோடியாகச் சித்திரவதைகளை அரங்கேற்றியது யார்? இந்திய அமைதிப்படைதானே? விடுதலைப் புலிகள் இந்திய, சிங்கள மக்களுக்கெதிராக இந்தக் கொடுமைகளை அரங்கேற்றியுள்ளனரா? பொதுமக்களுக்கு எதிராகக் கற்பழிப்புகள், சித்திரவதைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனரா? இல்லையே. யுத்தத்தில் மக்கள் உயிரிழந்திருப்பார்களே ஒழிய, இந்திய, சிங்கள ராணுவம்போல் செய்தது கிடையாதே!

இந்திய அமைதிப்படை இத்தனை அட்டூழியம் செய்ததற்கும் அது ஈழத்திற்குச் சென்றதற்கும் யார் காரணம்? கேட்டவுடன் கண்ணீர் வரவழைக்கும் பழிவாங்கத்தூண்டும் கொடுமைகளை ஈழத்தில் அரங்கேற்றியது நமது காந்தி தேசத்து ராணுவம். தன்னை நம்பிய ஈழமக்களைக் கொன்றொழித்து, ஈழப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் சித்திரவதைகளுக்குட்படுத்திய இந்திய ராணுவம் செய்தது சரிதான் என்றால், ராஜீவ் கொல்லப்பட்டதும் சரிதான். சீக்கியர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு மன்னிப்புக் கேட்கத் தெரிந்த ராஜீவ்காந்தியின் வாரிசுக்கு, ஈழமக்களிடம் மன்னிப்புக் கேட்க முடியுமா? கேட்டால்தான் மன்னிக்கப்படுகிற குற்றமா?

வரலாற்றில், அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பாசிச சக்திகள் யாருக்கும் நல்ல சாவு கிடைத்ததில்லை. ஹிட்லர், முசோலினி, சதாம் உசேன் வரிசையில் ராஜீவ்காந்தியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தன் அரசு செய்ததை, ராணுவம் செய்ததை மறைத்துவிட்டு, இந்திய இறையாண்மையைப் பற்றிக் கவலைப்படுபவர்களே இன்றும் நமது இந்திய அரசின் ராணுவ, பொருளாதாரப் பங்களிப்புகள் சிங்களனுக்குக் கொடுக்கப்படுவதை நம்மால் தடுக்க முடியவில்லையே? பாசிசங்களைக் கட்டவிழ்த்துவிடுபவர்களாக, இன அழிப்பை நிகழ்த்துபவர்களாக இருக்கிற இந்திய, சிங்கள அரசுக்குப் பாசிசப் பட்டம் கொடுக்காமல், விடுதலைப் போராளிகளுக்குக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம்? ஒடுக்குகிறவர்கள் பக்கமா? ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமா? சிந்திக்க!

n

ஒரு அரசியல் தலைவர் கொல்லப்படும்போது அதன் தாக்கம் அவர் சார்ந்தோ குடும்பம் சார்ந்தோ கட்சி சார்ந்தோ முடிவடைவதில்லை. ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் கைவண்ணம் இருப்பதையே இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. மாற்றான ஆதாரங்களை முன்வைக்கும் கட்டுரையோ நூலோ வெளிவந்திருக்குமாயின் பரிசீலிக்கலாம். புதிய பொருளாதாரக் கொள்கை உருவான பின்னர் அதைப் பின்னோக்கி யாரும் நகர்த்த முடியாது. இது போன்ற தர்க்கங்களின் வழி ஒரு தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் நிகழ்வை முழுமையாகச் சுட்டிவிடவும் முடியாது. இந்தியாவை விடுங்கள். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால்தானே ஜெயலலிதா ஜனநாயகத்தைச் சாகடித்த அசுர பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் தமிழகத்தைச் சீரழித்தார். ராஜீவ் காந்தி குற்றமிழைத்திருக்கலாம். தமிழ் மக்கள் என்ன குற்றமிழைத்தார்கள்?

கண்ணன்
ஆசிரியர்

உள்ளடக்கம்