Google   www kalachuvadu.com

கட்டுரை
அறியப்பட வேண்டிய அண்ணா
மலர்மன்னன்

அண்ணா அவர்களுடன் சிறிது காலம் இருக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றவன் என்பதோடு, அவராலேயே மிகுந்த பாசத்துடன் ‘மலர்மன்னன்’ என்று பெயர் சூட்டப்பெறும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றவன் என்பதால், ‘காலச்சுவடு’105 வெளியிட்ட அவரது நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரையை ஆர்வத்துடன் வாசிக்கலானேன். காரணம், ‘காலச்சுவடு’ இதழில் இப்படியொரு கட்டுரை வெளியாகிறது என்றால், அது திராவிட இயக்க ஏடுகளில் வழக்கமாக வருவது போன்ற வெற்றுச் சொற்களின் ஆர்ப்பாட்டமாக இருக்காது என்கிற நிச்சயம்தான்.

எதிர்பார்த்தது போலவே சாரமுள்ள விரிவான கட்டுரையாக அது அமைந்து விட்டிருப்பதில் மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் தமிழ்ச் சமுதாயத்தில் வியக்கத்தக்க தனிச் செல்வாக்குடனும் இயற்கையாகவே அமையப் பெற்ற தலைமைப் பண்புடனும் விளங்கிய அண்ணா என்கிற தனிமனித ஆளுமையினை சார்பு ஏதுமின்றி ஆய்வுப் பார்வையுடன் அணுகியிருக்க முடிந்திருக்குமானால் அது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். புதிய தலைமுறையினருக்கு அண்ணாவைப் பற்றிய சரியான அறிமுகமாகவும் அது முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

கட்டுரை ஆசிரியர் க. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர் என்கிற தகுதிக்கு அப்பால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பதால்தானோ என்னவோ அந்த இயக்கத்திற்கு இயைந்ததாகவே அவரது கட்டுரை அமைந்துவிட்டது. ஓர் இயக்கம் பற்றிய ஆய்வாளராக மட்டுமே இருப்பவர் அந்த இயக்கம் தொடர்பான ஓர் ஆளுமை குறித்து எழுதுவதும் அந்த இயக்கம் சார்ந்த ஆய்வாளரே எழுதுவதும் ஒன்றுபோல இருக்க இயலாதுதானே.

முப்பதுகளில் ஓர் இளம் ரத்தமாக நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்ட அண்ணாவுக்கு, அவரது கீழ்த்தட்டு மத்தியதரக் குடும்பச் சூழல், தாம் பிறந்து வளர்ந்த பகுதியில் வாழ்ந்த மிகச் சாதாரண மக்களுடனான தொடர்பு ஆகிய காரணங்களால் சீமான்களே நிரம்பியிருந்த அந்தக் கட்சியில் இருப்பது சங்கடமாகவே இருந்தது. இருப்பினும் அவர் அங்கு இருக்கவே விரும்பினார் என்றால் அதற்குக் காரணம், ஈ.வே.ரா. அவர்களிடம் அவர் தமது உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டிருந்தது தான். நீதிக்கட்சியில் அவர் இருந்தார் என்பதை விடவும், ஈ.வே.ரா. அவர்களின் சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார் என்பதுதான் சரியாக இருக்கும். மேலும் நீதிக்கட்சி வெள்ளைய ஏகாதிபத் தியத்திற்கு ஒரேயடியாக அடிபணிந்து கிடந்தது அவரைக் கூச்சப்படுத்திக் கொண்டுதானிருந்தது. பிராமணரல்லாதார் நலன்களுக்காக வாதாடுகிற கட்சி என்கிற ஒரே அம்சம்தான் நீதிக்கட்சியில் அவரை நிலையாக நிறுத்திவைத்தது.

அன்றைக்கு அண்ணா எவ்வித முகவரியும் இல்லாத நபர். பொருளாதாரத்தில் எம்.ஏ. படித்த துடிப்பான இளைஞர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அழகாகப் பேசுகிறார் என்கிற யோக்கியதாம்சங்கள் மட்டுமே அவரைக் கட்சிப் பிரமுகர்கள் ஒருபொருட்டாக மதிக்கக் காரணமாக இருந்தன. எனினும் அண்ணா பொறுமையாகத் தமது வேளை வருவதற்காகக் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த வேளை வந்ததும் கட்சியைச் சீமான்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப் புத்திசாலித்தனமான நடவடிக்கையை எடுத்தார். திராவிட இயக்க வரலாற்றில் “அண்ணாதுரை தீர்மானம்” என்றே முக்கியத்துவம் பெற்றுவிட்ட அந்தத் தீர்மானம், கட்சியில் இருப்பவர்கள் ஆங்கிலேய அரசு வழங்கிய ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற அர்த்த மற்ற, வெற்றுச் சொல் அலங்காரமான பட்டங்களையெல்லாம் துறந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. தொடர்ந்து, நீதிக்கட்சி ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் பெறவும் அவர் முன்னின்றார்.

1947 ஆகஸ்ட் 15ஐ ஈ.வே.ரா. துக்க தினமாக அனுசரிக்குமாறு அறிவித்தபோது, அதுவரை தம் தலைவரை மறுத்து ஒரு வார்த்தைகூடப் பேசி அறியாத அண்ணா, அதற்குப் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்தார். வெள்ளையர் தர்பாருக்குத் தலை வணங்கிக்கொண்டிருந்த சீமான்களின் நீதிக்கட்சியில் அண்ணா எவ்வளவு சங்கடத்தோடு இருந்திருக்கிறார் என்பதைப் புலப்படுத்துவதாக அந்த எதிர்ப்பு வெளிப்பட்டது. நாம் அந்நியருக்குத் தாசர்கள் அன்று, நாட்டுப் பற்று இல்லாதவர்கள் அன்று என்பதை நிறுவுவதற்குக் கிடைத்திருக்கிற கடைசிச் சந்தர்ப்பம் இது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ளத் தவறிவிடுவோமானால் அதன் பிறகு நம்மீதுள்ள பழிச்சொல்லை நீக்கிக்கொள்வதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது என்றார் அண்ணா.

தமது கட்சியின் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒரேயடியாக மறுத்துவிட இயலாமல், “வெள்ளையர் ஏகாதிபத்தியம் அகல்வது முதல் கட்டம், அடுத்த கட்டம் வடவர் ஏகாதிபத்தியம் நீங்குவது. இப்போது முதல்கட்டமான வெள்ளையர் ஆட்சி நீங்குவது கொண்டாடப்பட வேண்டிய நாள்தான்” என்று அவர் விளக்கமளித்தாரேயன்றி, தமது தலைவர் “பிற ராஜதானிகளிலிருந்து வெள்ளையர் தங்கள் ஆட்சியை விலக்கிக்கொண்டாலும் எங்கள் ராஜதானியில் அவர்களின் ஆட்சி நீடித்திருக்க வேண்டும்” என்று சொன்னதை அண்ணா ஆதரிக்கவில்லை. அண்ணாவின் பரிணாமத்திற்கு இதனையே ஒரு தொடக்கமாகக் கொள்வது சரியாக இருக்கும்.

1949இல் ஈ.வே.ரா. அவர்கள் திருமணம் செய்து கொண்டதைக்காட்டிலும் அதற்கு அவர் சொன்ன சமாதானம்தான் அண்ணாவைப் பெரிதும் துணுக்குறச் செய்தது. கட்சியை ஏதோ தமது தனிச்சொத்துபோலப் பாவித்து, கட்சியின் உடமைகளுக்கு வாரிசு வேண்டுமென்பதற்காகத் தாம் திருமணம் செய்துகொண்டதாக ஒரு நிலப் பிரபுத்துவப் பெருந்தனத்துடன் ஈ.வே.ரா. அளித்த விளக்கம் அவரை வெகுவாகப் பாதித்தது.

திராவிடர் கழகத்திலிருந்து அவர் ஒதுங்கிக்கொண்டபோது, அவரைப் பின்தொடர்ந்து ஏராளமானவர்களும் விலகிவந்ததன் தொடர் நிகழ்வாக அண்ணா தனிக் கட்சி தொடங்கியபோது, அது தமது தாய்க் கழகத்தின் தொடர்ச்சியாக அமைந்துவிடலாகாது என மிகுந்த முன்யோசனையுடன் திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சுட்டுவதுபோல அமைந்துவிடாமல் ஒரு நிலப்பரப்பை அடையாளப்படுத்துவதுபோன்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்றே அழைக்கச் செய்தார்.

சொல்லப்போனால் ஒரு கட்சி தனக்கென கடவுட் கொள்கை எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லைதான். எனினும், தாம் இருந்துவந்த இயக்கத்தின் தலைவர் மேடைக்கு மேடை “கடவுளைக் கற்பித்தவன் அயோக்கியன். கடவுளை நம்புபவன் முட்டாள். கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை” என்று பிரகடனம் செய்துவந்ததால் எங்கே தங்கள்மீதும் இங்கிதமற்றவர்கள் என்கிற முத்திரை விழுந்துவிடுமோ என்றுதான் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதே தங்கள் கொள்கை என்று அண்ணா அறிவித்தார்.

எந்தவொரு சமயத்திற்கும் தமது கட்சி விரோதியல்ல என்று உறுதியளிப்பதற்காகத் தம்மைக் காவி கட்டாத ஹிந்து, குல்லா அணியாத முகமதியன், சிலுவை தரிக்காத கிறித்தவன் என்று அண்ணா சொன்னார்.

தி.மு.க.வைத் தொடங்கியபின் அவரது கண்ணோட்டம் துரிதகதியில் மாற்றமடைவது வெளிப்படையாகவே புலப்பட்டது. தமது கட்சி சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரை துவேஷிக்கிற கட்சி என்கிற அபவாதத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவே ‘ஆரியம் தம்பீ, அநந்தாசாரியாரிடம் மட்டுமல்ல, அரிய நாயக முதலியாரிடமும் இருக்கிறது’ என்று அண்ணா எழுதவும் பேசவும் செய்தார்.

தீண்டாமை, பாலிய விவாகம் போன்ற சமூகப் பழக்கவழக்கங்களை ஆதரிப்பவர்களை ‘சனாதனிகள்’ என்று அழைத்தது போலத்தான் ‘ஆரியம்’ என்ற சொற்பிரயோகத்தை அண்ணா பயன்படுத்தினார்.

‘ஆரிய மாயை’ ‘கம்ப ரசம்’ ஆகிய நூல்களை எழுதியமையும், கம்ப ராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களைத் தீக்கிரையாக்க வேண்டும் என்று பேசிய ‘தீ பரவட்டும்’ என்கிற சொற்பொழிவும் அண்ணா இளமை வேகத்தில் இருந்த 1945 வாக்கிலும் அதற்கு முன்புமான காலகட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு குறிப்பிட்ட சாதியாரையும் பெயர் சொல்லித் தமது கட்சியில் சேருமாறு அழைக்காத அண்ணா, தமது கட்சியின் மீது படிந்துள்ள சாயம் நீங்க வேண்டும் என்பதற்காகவே ‘பிராமண இளைஞர்கள் தி.மு.கழகத்தில் பெருமளவில் சேர வேண்டும்’என்று வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தார். நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் முதன்முதலில் தம்மைச் சந்தித்து, தி.மு. கழகத்தில் சேர்ந்தபோது, அவர் பிராமணராக இருக்கக்கூடுமோ என்று தாம் நினைத்ததாக அண்ணா சொன்னார். பிராமணர்கள் தமது கட்சிக்கு வர வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆவல் அதில் வெளிப்படையாகத் தெரிந்தது. அண்ணாவின் மனப்பூர்வமான விருப்பத்தை அறிந்தமையால்தான் பிராமணரான வழக்கறிஞர் வி. பி. ராமன் தி. மு. கழகத்தில் சேர்ந்ததோடு, அண்ணா நடத்திய ‘ஹோம் லேண்டு’ ஆங்கில வார இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார். அவரைப் போலவே மேலும் பல பிராமண இளைஞர்களும் தி.மு.க.வில் சேர்ந்தனர். வெகு விரைவிலேயே வி.பி. ராமன் தி.மு.க.விலிருந்து மனம் வெதும்பி வெளியேற நேர்ந்தது. ஆனால் அதற்குக் காரணம் நிச்சயமாக அண்ணா அல்ல. காரணம் எனக்குத் தெரியும் என்றாலும் அதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் இது பற்றி மேலும் விவரிக்க இயலவில்லை. சம்பத் விலகிச்சென்றதை எப்படித் தமது தனிப்பட்ட இழப்பாகக் கருதினாரோ அதேபோலத்தான் வி. பி. ராமன் விலகலையும் அண்ணா பேரிழப்பாகக் கருதினார். நான் வட மாநிலங்களிலேயே வாழ்ந்துவந்தவன் என்பது மனத்தில் பதிந்துவிட்டிருந்ததால்தானோ என்னவோ என்னிடம் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்த அண்ணா, ‘வீ நீட் இன்டலெக்சுவல்ஸ். சம்பத் ஈஸ் அன் இன்டலெக்சுவல். ராமன் ஈஸ் அன் இன்டலெக்சுவல். அன்ட் வீ ஹேவ் லாஸ்ட் தெம்’ என்று அண்ணா அவர்கள் ஒருமுறை வேதனையுடன் சொன்னது இன்றும் எனது காதில் ஒலிக்கிறது.

‘சோ’ நையாண்டி அரசியல் விமர்சன நாடகங்களை நன்றாக நடத்துகிறார். அது மக்களிடம் எடுபடுகிறது. அவரும் நம்மோடு சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று அண்ணா ஒருமுறை தனியாகப் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார். சோ தமது நாடகத்திற்கு வருமாறு அழைத்தபோது, அண்ணா மிகவும் ஆர்வத்துடன் சென்று, நாடகத்திற்குத் தலைமை வகித்து, ‘சோ’வை வானளாவப் புகழ்ந்து பாராட்டினார். சோ தமது கழகத்திற்கு வந்தால் விவரம் தெரிந்த மத்தியதர வர்க்கத்தினரின் பேராதரவு தமது கட்சிக்கு உறுதியாகக் கிடைத்துவிடும் என்று அண்ணா கருதினார்.

க. ராஜாரம், ஏ. பி. ஜனார்த்தனம் எனப் பலர் ஈ. வே. ரா., அண்ணா ஆகிய இருவரிடமுமே கட்டுண்டு கிடந்தார்கள். அவர்களால் திராவிடர் கழகத்திலிருந்து விலகிவர இயலவில்லை. தங்களின் உள்ளம் கவர்கள்வனான அண்ணாவைப் பிரிந்திருப்பதையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அத்தகையவர்கள் மனம் சோர்ந்துவிடலாகாது என்பதற்காகவே ‘திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்’ என்று அண்ணா வர்ணித்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரையும் ஒரு குறிப்பிட்ட சமய நம்பிக்கையை இழிவுசெய்யும்படியாகத் திராவிடர் கழகம் நடத்திய பிள்ளையார் பொம்மை உடைப்பு, உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ என்கிற பெயர் அழிப்பு போன்ற போராட்டங்களில் அவர் தமது கட்சியை ஈடுபடுத்தவோ அவற்றை ஆதரிக்கவோ இல்லை. ‘நான் பிள்ளையார் பொம்மையை உடைக்கமாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டேன்’ என்று அப்போது அண்ணா சொன்னது பலராலும் மிகவும் ரசிக்கப்பட்ட வாசகம்.

1957க்குப் பிறகு ராஜாஜியின் சுதந்திரக் கட்சியும் தி.மு.கழகமும் நெருங்கிவரத்தொடங்கியது அண்ணாவுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

1957 தேர்தலில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அண்ணா போட்டியிட்டபோது, ஈ.வே.ரா. அவரைப் பழிவாங்கச் சங்கற்பம் செய்துகொண்டதே போல் தமது தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் தெருத் தெருவாகச் சென்று அண்ணாவைப் பலவாறு தூற்றிப் பிரச்சாரம்செய்த மாதிரியே 1962 தேர்தலிலும் அண்ணாவுக்கு யாரும் வாக்குப் போடாதீர்கள் என்று மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தல் பிரச்சாரம் ஓயும் இறுதி நாளன்று ராஜாஜி அண்ணாவுடன் ஒரே மேடையில் நின்று, அண்ணாவின் திறமைகளையும் நற்பண்புகளையும் பலவாறு பாராட்டி, தமிழகச் சட்டமன்றத்தில் அண்ணாவைத் தங்களின் பிரதிநிதியாகப் பெற்றிருப்பது காஞ்சிபுர மக்களுக்குக் கிடைத்துள்ள பெருமை, அது தொடர வேண்டுமென்று கூறினார்.

மனம் நெகிழ்ந்த அண்ணா, “ராஜாஜி அவர்களே, நான் ஒரு தலைவருக்கு என் உழைப்பையெல்லாம் கொடுத்தேன். எனது உள்ளத்தையெல்லாம் அவரிடம் பறிகொடுத்தேன். அவரிடம் உண்மையான தொண்டனாக இருந்தேன். ஆனால் அவரிடமிருந்து கிடைக்காத நல்வாழ்த்து, அவரிடமிருந்து வராத நல்லெண்ணம், நான் காலமெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த உங்களிடமிருந்து கிடைக்கப்பெறுகிறேன். இது உலகிலேயே பெரிய விசித்திரம்” என்று சொன்னார்.

ராஜாஜி காங்கிரசிலேயே இருப்பாரேயானால் அவருக்கு எவ்வளவோ பலன்கள் கிட்டும். என்னோடு சேர்ந்திருப்பதால் காங்கிரசில் இருக்கிற ஒரு சாதாரண தொண்டன்கூட அவரை எப்படியெல்லாமோ ஏசுகிறான், அந்த ஏச்சுத்தான் அவருக்குக் கிடைக்கிறது என்று வருந்திய அண்ணா, “இருந்தாலும் ராஜாஜி அவர்களே, இவனுக்கு கீதைகூடத் தெரியுமா என்று நினைக்காதீர்கள், நிஷ்காமிய கர்மமாகப் பலனை எதிர்பாராமல் இன்றைக்கு நீங்கள் உங்கள் கடமையைச் செய்துகொன்டிருக்கிறீர்கள்” என்று கூறியபோது, ராஜாஜி முகம் மலரச் சிரித்தார்.

அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் நற்பயனாக அண்ணா மாநிலங்களவை உறுப்பினராகி, தமது பேச்சாற்றலாலும் பழகும் பண்பாலும் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்த, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் தம் அபிமானிகளாக்கிக்கொண்டார்.

1962 தேர்தலில் தோல்வியடைந்ததும் அண்ணா எவரிடமும் சொல்லாமல் பெங்களூருக்குச் சென்று ஜயநகரில் ஜய விலாஸ் என்ற பெயரில் இருந்த தம் நீண்ட கால நண்பர் புட்டாசாமியின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். இந்த புட்டாசாமி ஒரு பிராமணர். செல்வம் மிக்க வியாபாரியான புட்டாசாமி, அண்ணா பயணம் செய்வதற்காகத் தமது காரைக் கொண்டு வந்து நிறுத்துவதில் பெருமைகொள்வதோடு, அண்ணாவின் சாரதியாக இருப்பதிலும் மகிழ்ச்சி எய்தியவர்.

அண்ணா அப்பொழுது சிரவண பெலகோலாவில் இருக்கும் கோமட்டீஸ்வரர் சிலையைக் காணச் சென்றார்கள். முழு நிர்வாணக் கோலத்தில் நின்றிருக்கும் கோமட்டீஸ்வரரை அண்ணா தமது பூர்விக, வாசனையுடன் ஆபாசம் என்று வர்ணிப்பதற்குப் பதிலாக அந்த மகத்தான துறவு நிலையினையும் தியான முனைப்பினையும் கண்டு மெய்மறந்து நின்றார். பின்னர் தமிழகம் திரும்பியதும் அதன் சிறப்பினைத் தமது ‘தம்பி’க்குத் தெரிவிக்கும் முகமாக ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார். ஓரளவுக்கு ஆன்மிக உந்துதலின் வெளிப்பாடாக அமைந்த அந்த வரிகள் அவரது தம்பிமார்களுக்கு வியப்பாகக்கூட இருந்திருக்கலாம்!

“பல ஆண்டுகளாகவே எனக்கு, பேசாமலே பல கூறும் பேருருவாக, சிற்பக் கலைச் சிறப்புக்கு ஈடற்ற எடுத்துக்காட்டாக விளங்கிடும் கோமட்டீஸ்வரர் சிலையினைக் காண வேண்டுமென்ற ஆவல் உண்டு. அந்த இடத்திற்கு அருகேகூடச் சென்றிருப்பேன்; காண வாய்ப்பும் ஓய்வும் கிடைத்ததில்லை. அழகிய சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் பேசாப் பேருருவை இம்முறைதான் கண்குளிரக் காண முடிந்தது.

பெங்களூர் நகரிலிருந்து நூறு கல் தொலைவில் உள்ள சீரூர் சிரவண பெலகோலா. அங்குதான் வெளிநாட்டு விற்பன்னர்களும் கண்டு வியந்திடும் அந்தச் சிற்பம் இருக்கிறது, குன்றின் மீது. அறுபது அடி உயரம் அந்தப் பேருரு. பிறந்த மேனி. திறவாக் கண்கள். எனினும் கனிவு வழிகிறது. நின்ற நிலை. காண்போரை நின்ற நிலையினராக்கிவிடும் கவர்ச்சி!

அந்தப் பேருருவுக்குப் பின்னணியாக, நீல நிற வானம்!

தன்னை மறந்த நிலையில், பிறந்த மேனியாய் நிற்கும் அந்தப் பேருரு, மனத்தினை ஓரிடத்தில் பதியவைத்து, மற்ற எதனையும் எண்ணிட முடியாத நிலைபெற்று இருக்கும் காட்சி கண்டாரே கருத்தறிவார், கண்டதனை விளக்கிட இயலாது; உண்மை (இதனை எழுதுகிறபோது, ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்கிற தத்துவ வாக்கியத்தின் தாக்கம் அண்ணாவுக்கு ஏற்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றலாம்!).

காலடியில் புற்றுகள்! செடிகொடிகள்! செடி கொடிகள் கோமட்டீஸ்வரரின் காலிலும் கரத்திலும் மார்பிலும் படருகின்றன. அசையா நிலை. உணரா நிலை. மனம் ஓரிடத்திலே முழுக்க முழுக்க ஒன்றிவிட்டதனால், செடிகொடி படருவது பற்றிய உணர்ச்சியே எழவில்லை. செடிகொடிகள் மட்டுமல்ல, தம்பி! சீறிடும் பாம்புகள் உடலைச் சுற்றிக் கொண்டுள்ளன. உணர்வு இல்லை. கனிவும் கவர்ச்சியும் மிக்கதோர் நிலையில் பேருரு!

உற்று உற்றுப் பார்த்தேன், அப்பேருருவினை. நெருங்கி நின்று பார்த்தேன். தொலைவிலிருந்து பார்த்தேன். பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணம் எழுகிறது (திராவிட நாடு 11.3.1962)”என்று தம்பிக்கு எழுதிய கடிதத்திலே அண்ணா குறிப்பிட்டார். இந்த வரிகளைப் படிக்கிறவர்களுக்கு, அவர்கள் ஈ.வே.ரா. அவர்களின் மனப்போக்கினையும் அறிந்தவர்களாக இருக்கும்பட்சத்தில், அண்ணா ஈ.வே.ரா.விடமிருந்து எவ்வளவு தொலைவு விலகி வந்துவிட்டிருந்தார் என்பது விளங்கும்.

1962 மே முதல் நாள் அன்று, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் தம்முடைய முதல் உரையை நிகழ்த்திய அண்ணா, முதல் பேச்சிலேயே பிரிவினைக் கோரிக்கை பற்றிப் பேச விரும்பவில்லையாம். (இது குறித்து அண்ணாவே பதிவுசெய்திருக்கிறார்) ஆனால் தேசிய ஒருமைப்பாடு பற்றிக் குடியரசுத் தலைவர் உரையில் வலியுறுத்தப்பட்டிருந்ததால் அதையே சாக்கிட்டு, உணர்வுபூர்வமாக தேசிய ஒருமைப்பாடு நிலவ வேண்டுமானால் வட்டாரங்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கலாகாது என்று பேசினாரேயன்றி, ஜின்னாவைப் போல நாங்கள் தனித் தேசியம், உங்களோடு சேர்ந்திருப்பது எங்களுக்குச் சாத்தியம் இல்லை என்று முழங்கவில்லை.

அந்த உரையின்போது அண்ணா அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் விதமாக, ‘நான் ஒரு திராவிடன்’ என்று தொடக்கத்தில் சொன்னார்தான். அது அவர் தமது வட்டாரத்தைக் குறிப்பதாக இருந்ததேயன்றி, நான் வேறு, நீங்கள் வேறு என்று பாகுபடுத்துவதுபோல ஒலிக்கவில்லை. அவர் அவ்வாறு தம்மை அறிமுகம் செய்து கொண்டதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. ஒருவேளை எவரேனும் எதிர்க் குரல் எழுப்பியிருந்தால், உடனுக்குடன் பதிலடி கொடுப்பதில் வல்லவரான அண்ணா, நமது தேசிய கீதத்திலேயே திராவிடம் இருப்பதை நினைவூட்டியிருக்கக்கூடும்.

அண்ணா தம்மை ‘சாமானியன்’ என்று சொல்லிக்கொள்வதுதான் வழக்கமேயன்றி, ‘சூத்திரன்’ என்று சொல்லிக்கொண்டதில்லை. அது ஹிந்து சமூகத்தை இரு துண்டுகளாகப் பிளவுபடுத்துவதாகும் என்பதை அவர் அறிந்திருந்தார். கன்னியாகுமரி முனையில் சுவாமி விவேகானந்தர் தியானத்தில் அமர்ந்த பாறைக்கு மாற்றுச் சமய அடையாளம் கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அவ்வாறு நேர்ந்தால் அது ஒரு வேற்றுக் கலாச்சார வெளிப்பாடாகவே அமைந்துவிடுமாதலால் அந்த முயற்சியை எதிர்கொள்ள அந்தப் பாறையின் மீது நமது மண்ணுக்கே உரித்தான பாரம்பரியக் கலாச்சாரம் மிளிருமாறு அங்கு விவேகானந்தர் நினைவாலயம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த மாவட்டத்து மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் மாற்றுச் சமயத்தினராக இருந்தமையால் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமனும் எதிர்ப்புக்குத் துணையாக இருந்தார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசாங்கம் வாக்குகளைக் கருத்தில் கொண்டு, விவேகானந்தர் நினைவாலயம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்தது. ஆனால் அண்ணாவோ அந்தச் சமயத்தில் வாக்கு வங்கி அரசியல் நடத்தாமல் தாயகத்தின் பாரம்பரியமான கலாச்சாரத்திற்கு மாறான அடையாளம் அங்கு ஏற்பட்டுவிட இடமளித்து விடலாகாது என்பதற்காக விவேகானந்தர் நினைவாலயத்திற்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசிடம் அனுமதி கோரும் மனுவிலும் கையொப்பமிட்டார். தமது கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அனைவரையும் அதேபோலக் கையெழுத்திடச் செய்தார். விவேகானந்தர் நினைவாலய வரவேற்புக் குழுவில் தமது கட்சியின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. நெடுஞ்செழியனை இடம்பெறச்செய்து, அந்த முயற்சிக்குத் தி.மு.க.வின் அதிகாரபூர்வமான ஆதரவை வெளியிட்டார்.

1967 தேர்தலின்போதும் தி.மு.கழகத்திற்கு எதிராக மிகக் கடுமையான பிரச்சாரத்தை ஈ.வே.ரா. மேற்கொள்ளத் தவறவில்லை. அவரது எதிர்ப்பையும் மீறி அந்தத் தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்காக ஒரு சம்பிரதாயமாகக் கூட ஈ.வே.ரா. அவர்களிடமிருந்து ஒரு நல்ல வார்த்தை அண்ணாவுக்கு வரவில்லை. ஆனால் என்ன இருந்தாலும் நம்மையெல்லாம் ஆளாக்கியவர் அவர். அவரிடம் வாழ்த்துப் பெறாவிட்டால் இந்த வெற்றிக்குப் பொருளே இல்லை என்று சொல்லி, ஈ.வே.ரா. இருக்கும் இடம் தேடிச் சென்று அவரிடம் வலிந்து வாழ்த்துப் பெற்றார் அண்ணா.

“அண்ணாவைப் பார்க்கவே எனக்குக் கூச்சமாகிவிட்டது” என்று அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டார் ஈ.வே.ரா.

ஈ.வே.ரா. வை மட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரத்தின்போது தமது கட்சியை வரம்புமீறித் தூற்றிய காமராஜரையும் பக்தவத்சலத்தையும்கூட வீடு தேடிச்சென்று மரியாதை செலுத்தி ஆதரவு கோரினார் அண்ணா.

ஈ.வே.ரா. அவர்களிடம் “இந்த அரசு உங்களுக்கு எங்களின் காணிக்கை” என்று சொன்னதும், தேர்தலில் தங்களைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து மரியாதை செலுத்தி ஆதரவு கோரியதும் அண்ணாவின் பெருந்தன்மை. ‘அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்கிற குறள் வாக்கின்படி நடந்து கொண்ட பக்குவம்.

முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த அண்ணாவிடம், ஈ.வே.ரா. உரிமை எடுத்துக்கொண்டு, அரசு தனது மதச்சார்பின்மையை உறுதிசெய்யும் பொருட்டு அலுவலகங்களில் மாட்டியுள்ள கடவுளர் படங்களையெல்லாம் எடுத்துவிடுமாறு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது, முகதாட்சண்யம் பார்த்து, அதைத் தட்டமாட்டாமல் அவ்வாறே சுற்றறிக்கை அனுப்ப ஏற்பாடுசெய்த அண்ணா, கையோடு அப்போது அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவராம கிருஷ்ணனை அழைத்து, “அலுவலகத்தில் பெரும் பான்மையினர் எந்தச் சமயம் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அந்தச் சமயம் தொடர்பான சின்னங்களைத் தமது அலுவலகத்தில் வைத்துக்கொள்வது ஒருவிதத்தில் நல்லதுதான். அவற்றின் எதிரில் முறைகேடாக நடந்துகொள்ளும் துணிவு அவர்களுக்கு வராது. அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டக் கூடாது என்பது சுற்றறிக்கைதான். கண்டிப்பான ஆணை அல்ல” என்று சொன்னார். (கமண்டேஷன் ஓன்லி; நாட் அன் ஆர்டர்)

பாலக்காட்டுப் பிராமணரான சிவராம கிருஷ்ணன், ஐ.சி.எஸ். (அவர்தான் தமிழ்நாட்டில் பொறுப்பில் இருந்த கடைசி ஐ.சி.எஸ்.) பின்னர் இந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி, “அண்ணா வாஸ் ஜெம் ஆஃப் எ மேன்” என்று மகிழ்வார். அண்ணா என்கிற ஆளுமையின் படிப்படியான பரிணாமம் இது. இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறும் எந்த ஆய்வும் அவரைப் பற்றிய முழுமையான ஆய்வாக இருப்பதற்கில்லை.

உள்ளடக்கம்