Google   www kalachuvadu.com

பதிவு: Between the Lines
கோடுகளாகவும் வண்ணங்களாகவும்
அருண்மொழி

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக அண்மையில் சென்னை லலித் கலா அகெடமியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் திரண்ட தமிழ் நவீன ஓவியக் கலைஞர்கள் ஓவியப் பட்டறைகள், விவாதங்கள், கவிதை வாசிப்பு எனப் பல்வேறு வகைகளில் தம் கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். ஓவியக் கலைஞர்கள், சிற்பிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பலதரப்பினரும் பங்கேற்ற, நவம்பர் 13 முதல் 16வரையிலான நான்கு நாள் நிகழ்வுகளில் அல்போன்ஸ் ராஜ், ஆர்.பி. பாஸ்கரன், எஸ்.ஜி. வாசுதேவ், பொன் ரகுநாதன், பெருமாள், சிற்பி தெட்சிணாமூர்த்தி முதலான மூத்த கலைஞர்களின் படைப்புகளோடு இளைய தலைமுறை ஓவியக் கலைஞர்களான அபராஜிதன், கணேஷ், பிரசன்னா, சிவா, பெனித்தா பெர்சியாள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

ஙிமீtஷ்மீமீஸீ tலீமீ லிவீஸீமீs என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில் ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு நிதி திரட்டப்பட்டது. இது போன்ற ஒரு பிரச்சினைக்காக அனைத்துக் கலைஞர்களும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு என நிகழ்வில் கலந்துகொண்ட ஓவியர்கள் விஸ்வம், வீரசந்தானம், தெட்சிணாமூர்த்தி முதலானோர் கருத்துத் தெரிவித்தனர். “கலைஞர்கள் தமக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை இது போன்ற சிக்கலான தருணங்களில் வெளிப்படுத்துவது ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது” என்ற விஸ்வம் இந்நிகழ்வுகளின் மூலம் ஈழத் தமிழர்களுக்காகச் சுமார் ஆறு லட்ச ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இது போன்ற செயல்பாடுகளைக் கலைஞர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஓவியர் புகழ் வரைந்த “ஈர்ப்பு” கண்காட்சியின் முதல் நாளிலேயே நல்ல விலைக்கு விற்றது. இதே போல் ஓவியர்கள் வீரசந்தானம், நெடுஞ்செழியன், ட்ராட்ஸ்கி மருது, எம். நடேஷ் ஆகியோரது ஓவியங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இலங்கையின் வரைபடத்தினுள் நத்தைகளும் கிளிஞ்சல்களும் ஊர்ந்து திரிந்த பெனித்தாவின் ஓவியம் கூர்மையான அரசியல் விமர்சனத்தின் சாயல்களுடன் விளங்கியது. ஈழத் தமிழர்கள் படுகொலையில் தன் ஆயுத உதவி மூலம் இந்திய அரசும் பங்கெடுத்துக்கொள்கிறது என்னும் விமர்சனத்தையும் அதை உடனடியாக நிறுத்திவிட்டுப் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கோருவதாக இருந்தது அந்த ஓவியம்.

மூத்த ஓவியர்களில் ஒருவரான விஸ்வம் கண்காட்சிக்காக வைத்திருந்த விஷீஸ்மீனீமீஸீt ஷீயீ tலீமீ ழிணீtuக்ஷீமீ என்னும் ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பு. இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இயற்கைச் சிதைவு, இடப்பெயர்வுகளின் துயரங்கள் எனப் பல அம்சங்களைத் தன் வண்ணங்களிலும் கோடுகளிலும் பிரதிபலித்த ஓவியம் அது. நான்கு நாட்களில் 217 ஓவியர்களின் ஓவியப் படைப்புகள் ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1983ஆம் ஆண்டில் ஓவியர் வீரசந்தானம் “நிமீஸீஷீநீவீபீமீ” என்னும் தலைப்பில் ஈழப் பிரச்சினைக்காக ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். இப்பொழுது அப்ராஜிதன், சிவா, கணேஷ், மைக்கேல், பிரசன்னா, பெனித்தா போன்ற இளம் படைப்பாளிகளின் முன் முயற்சியால் இப்படியொரு நிகழ்வு நடத்தப்பட்டிருப்பது குறித்துப் பலரும் பாராட்டினர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் அ. மங்கை தொகுத்த ‘பெயல் மணக்கும் பொழுது’ என்னும் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து சிவரமணி, செல்வி, கேப்டன் வானதி, சங்கரி, ஔவை, வஹிமா ஜஹான் போன்ற ஈழப் பெண் கவிஞர்களின் தீவிரமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பிரேமா ரேவதி, கல்பனா, கவிதா, உஷா, கவிண்மலர் போன்ற பெண் படைப்பாளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களுக்கிடையே அமர்ந்து வாசித்தார்கள். இவை போன்ற இனப்படுகொலைகளாலும் போர்களாலும் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவோர் பெண்களே. ஈழத்துப் பெண்களின் துயரங்களையும் இடப்பெயர்வினால் இழந்துபோகின்ற அடையாளங்களையும் மையமாக வைத்துப் பல கவிதைகள் வாசிக்கப்பட்டன.

எழுத்தாளர் கோணங்கி, ப்ரஸன்னா ராமஸ்வாமி, பேராசிரியர் வீ. அரசு, நாடகக் கலைஞர் பிரளயன், கவிஞர் கனிமொழி எனப் பலரும் இந்த நிகழ்விற்கு வந்திருந்து ஓவியக் காட்சியிலும் கவிதை வாசிப்பு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘ஒரு தாயின் புலம்பல்’ ஒரு சிறந்த படைப்பாக்கம். நிகழ்வில் சோமீதரன் இயக்கிய, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான ஆவணப்படம் “எரியும் நினைவுகள்” தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் திரையிடப்படவில்லை. இது பலருக்கும் ஏமாற்றமளித்தபோதிலும் ஈழத் தமிழர்களின் துயரங்களில் பங்குகொள்ள அவர்கள்மீதான இனவெறித் தாக்குதல்களைக் கண்டித்துத் தமிழகத்தின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் பல எழுத்தாளர்களுடனும் கவிஞர்களுடனும் கோடுகளாகவும் வண்ணங்களாகவும் இணைந்து நின்று தம் எதிர்ப்பைப் பதிவுசெய்திருப்பது முக்கியமானதொரு நிகழ்வு எனச் சொல்லலாம்.

உள்ளடக்கம்