|
சுந்தர ராமசாமி நாகர்கோவில்
23.4.1982
அன்புள்ள புஷ்பராஜன்,
உங்கள் 19.4.1982 கடிதம். அதைப் படித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் மிக்க
மகிழ்ச்சி அடைந்தோம். நீங்கள் வந்துபோனதில் எங்களுக்கு எவ்வளவோ சந்தோஷங்கள்.
எல்லாவற்றையும் உங்களிடம் கூறிக்கொண்டிருப்பது அழகல்ல. ஆனால் ஒரு உண்மையான ஜீவனை,
அன்புள்ளம் கொண்ட ஜீவனைச் சந்திக்கும்போது - இவற்றைத் தேடிக் கிடைக்காமல்
பரிதவித்துக்கொண்டிருக்கும்போது - கிடைக்கும் பரவசத்தை மறைப்பது அழகல்ல. எது சகல
உன்னதங்களுக்கும் அடிப்படையோ அது உங்களிடம் இயற்கையில் கூடி நிற்கிறது. இதை
அடிப்படையாகக் கொண்ட உங்கள் ஆளுமை முழுக்கவும் வெளிப்பட்டு நீங்கள் மிகவும் மேலான
நிலைக்கு வர வேண்டும் என்று நான் உணர்ச்சிவசப்பட ஆசைப்படுகிறேன். ஏதோ
சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு மிகச் சுருங்கிய நேரத்திலேயே ஆழ்ந்த
நட்பாக மாறிவிட்டது. இது மேலும் தளைத்து இருவருக்கும் என்றென்றும் மானசீக பலம்
தந்துகொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மௌனியைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது சரிதான். ஆனால் அதையும் தாண்டி அவரைச்
சந்திப்பது ஒரு அனுபவமாகவே இருக்கும். நினைவில் நீங்காது நிற்கும் அனுபவமாக,
பளீரென்று தாக்கும் ஆளுமை ஒன்று அவரிடம் உண்டு. மற்றொருமுறை நீங்கள் வரும்போது
அவரைச் சந்திக்கலாம்.
கோவைக் கூட்டம் மே மூன்றாவது வாரம். மு.த. பற்றிய கட்டுரையை எழுதவே ஆரம்பிக்கவில்லை.
தேதி கொடுத்து ஒன்றை எழுத ஒப்புக்கொண்டால் அந்த நிமிஷத்திலிருந்து அந்தக்
காரியத்தைச் செய்ய முடியாத அவஸ்தை எனக்கு ஏற்பட்டுவிடும். எத்தனையோ முறை
பட்டாகிவிட்டது. இன்னும் புத்தி வரவில்லை. அங்கு போய்விட்டு வந்து அங்கு நடந்த
விபரங்களை எழுதுகிறேன்.
குலசிங்கத்திடமிருந்து கடிதம் வந்தது. காகங்கள் கட்டுரையை அனுப்பக் கேட்டிருக்கிறார்.
தொடர்ந்து அனுப்புவதாக இருக்கிறேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.
'சதங்கை' ஆசிரியரை நான் சமீபத்தில் பார்க்கவில்லை. அதனால் இலங்கையிலிருந்து வந்த
பதில் பற்றித் தெரியாது. பதில் 'சதங்கை'யில் பிரசுரமானால் அவசியம் பிரதி
அனுப்பிவைக்கிறேன்.
நீங்கள் எழுதிக்கொடுத்த புத்தகப் பட்டியலைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
கூடுமானவரையிலும் தேடிக் கண்டுபிடித்து அனுப்புகிறேன். புதிய புத்தகங்களை - நீங்கள்
படிக்க வேண்டியவை என்று நான் கருதுபவற்றை - அனுப்பிவைக்கிறேன். நீங்கள்
படித்துவிட்டுப் பிற நண்பர்களுக்கும் கொடுக்கலாம். 'பிரசாதம்', 'திரைகள் ஆயிரம்'
பிரதிகளும் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
வேதசகாயகுமாருக்கு இப்போது ஸ்ரீலங்காவுக்கு வரமுடியுமா என்பது தெரியவில்லை. அவர்
மனைவி கர்ப்பவதியாக இருக்கிறார். அத்துடன் தனிக்குடித்தனம் போவதுபற்றியும்
யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நண்பர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.
நான் சென்னை போயிருந்தேன். ஒரு வாரம் அங்கிருந்தேன். மு.த.வின் 'ஏழாண்டு இலக்கிய
வளர்ச்சி'யும், சிவகுமாரனின் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும்
புத்தகமாக க்ரியா வெளியிடுவது தீர்மானமாகிவிட்டது.
நாங்கள் தந்த புத்தகத்தைச் சாருவுக்கு நீங்கள் அனுப்பிவைத்தமைக்கு நன்றி.
அவளிடமிருந்து கடிதம் வரவில்லை. அடிக்கடி எழுதக்கூடியவள் அல்ல.
எங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். புகை வண்டியில் சந்தித்த என் தங்கை
உமாவை நீங்கள் விவரித்த ஒரு வரியில் அவள் கேரெக்டர் உருவாகிவிட்டது. அவளைச்
சந்திக்கும்போது உங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.
க்ரியா மூலம் இலக்கிய இதழ் ஒன்றைப் புத்தக வடிவமாகக் கொண்டுவர நினைத்திருக்கிறோம்.
வருஷத்திற்கு 3, 4 புத்தகங்கள் வரும். பெரிய அளவில் 96 பக்கங்கள். விலை ஏகதேசமாக
ரூபாய் பத்து இருக்கும். மிகத் தரமாகக் கொண்டுவர வேண்டும் என்ற யோசனை.
ஆங்கிலம் மூலம் உலக இலக்கிய/சிந்தனைப் பரப்பையும் ஆழத்தையும் தெரிந்துகொள்ளக்கூடிய
வாய்ப்பை நீங்கள் அதிக அளவில் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இது
உங்களைப் பெரிய அளவில் விகாசப்படுத்தும். இயற்கையான நற்பண்புகளுடன் இந்த விகாசமும்
கூடும்போது பல நல்ல விளைவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் மேல்நிலைக்கு வர வேண்டும்
என்ற ஆசையில் இதை எழுதுகிறேன்.
ஜே.ஜே. படித்துப் பார்த்தீர்களா? உங்கள் அபிப்பிராயம் எனக்கு மிக முக்கியம். ஆனால்
அவசரமில்லை. சாவகாசமாகப் படித்துவிட்டு எழுதுங்கள். உங்கள் மனைவியையும் படிக்கச்
சொல்லுங்கள்.
'அலை'க்கு எழுதலாம். தாராளமாக. எழுதுவதை ஒரு வேலையாக மேற்கொள்ளும்போது என்னால் எழுத
முடியாமல் ஆகிவிடுகிறது. என்னுடைய இயற்கையான இயக்கத்தில் எழுதினால் - அது 'அலை'க்கு
ஏற்றது என்று எனக்குப் படுமென்றால் - அவசியம் அனுப்பிவைக்கிறேன்.
இங்கு ஹரிஹரன் அய்யர், என் மனைவி, கண்ணன், தங்கு எல்லோரும் சுகம்.
அன்புடன்
சு.ரா.
l
இலங்கையில் குருநகர் கிராமத்தில் பிறந்த மு. புஷ்பராஜன், தற்போது லண்டனில்
வாழ்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'அலை'யின் (முதல் 25 இதழ்கள் வரை)
ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தவர். இவரது 'மீண்டும் வரும் நாட்கள்' (ஜூலை 2004)
கவிதைத் தொகுப்பு தமிழியல் - காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
|