|
பா. செவுடனான நேர்காணலின் பெரும் பகுதியில் அவர் படைப்புகளில் கட்சிப் பிரச்சாரம்
மேலோங்கி இருப்பதால் படைப்பாற்றல் நிறைவானதாக இல்லை என்ற கருத்தை அவரை ஏற்கச்செய்ய
முற்பட்டது தேவையற்றது. கொள்கைச் சார்புடையோர் படைப்புகளில் கொள்கை
பிரதிபலிக்கத்தான் செய்யும். இல்லையென்றால் அவை போலித் தன்மை கொண்டவை.
மரண தண்டனை மட்டுமின்றி எல்லாவிதத் தண்டனைகளையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த
வேண்டும். தண்டனைகள், சிறைகள் எதற்கு? அவற்றினால் சமூகத்திற்கு ஏதேனும் பயனுண்டா?
இவையெல்லாம் ஆராயப்பட்டுக் குற்றவியல் சட்டமே மாற்றப்பட வேண்டும். ‘அபூர்வத்திலும்
அபூர்வமான’ என்ற சொற்றொடருக்கு ஒவ்வொரு நீதிபதியும் வெவ்வேறு அர்த்தங்களைக்
கொண்டுதானே மரண தண்டனையை விதிக்கிறார்கள். பள்ளிகளில் கொடுக்கப்படும் தண்டனைகள்
மாணவரது கற்றல் திறனையோ நடத்தையையோ மாற்றியதில்லை. சிறைச்சாலைகள் சீர்திருத்தும்
நிறுவனங்களாக இல்லாது சீர்கேட்டை வளர்ப்பவையாகவே உள்ளன.
கார்வரின் கதை மனித மனத்தைச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது. புறத் தோற்றம்
ஒருவரது அக அழகைக் காட்டாது என்ற ரொட்டிக்காரர் சித்தரிப்பு சிறப்பு.
எஸ். எஸ். ராஜகோபாலன்
சென்னை
தமிழக அரசு ஆணையின்படி மாவட்ட மையம், கிளை நூலகங்களில் ‘காலச்சுவடு’ அறிமுகமான பின்
அதை வாங்கக் கூடாது என்று சொல்வதைவிட அரசுக்கு எதிராக எதுவும் எழுதக் கூடாது என
நிபந்தனை போட்டிருக்கலாம். குறைகளை விமர்சித்தால் தாங்கிக்கொள்ளும்
முதிர்ச்சியில்லாமல் அதிர்ச்சியடைந்து தடுத்தது நல்ல வேடிக்கை. பிரச்சினைகளை
நேர்மையுடன் அணுகாமல் அரசியலாக்கினால் மேலும் புகார்களில் சிக்க வேண்டியிருக்கும்.
காலச்சுவடு முதல் அமர்நாத் யாத்திரைவரை அரசியலைப் புகுத்தினால் சிக்கலும்
சிரமமும்தான் அறுவடைப் பலன். மாற்றுக் கருத்துள்ளவர்களின் மனம் கோணக் கூடாது
என்பதற்காக விமர்சிக்கும் தைரியத்தை இழக்கலாமா?
சாமி,
திருவண்ணாமலை
தூண்டிவிடுகின்ற அரசியல்வாதிகளும் அதைத் தொடர்ந்து செல்லத் தயாராக இருக்கின்ற
மக்களும் இருக்கும்வரை அமர்நாத் போன்ற பிரச்சினைகள் இருந்தே தீரும்.“நோயாளி இறந்து
விட்டார், அறுவை சிகிச்சை வெற்றி” என்பது போலத்தான், செயல்வழிக் கற்றல் திட்டமும்
நல்ல திட்டமாக இருந்தும் கற்றல் திறன்களை அடைய இயலாமல் மாணவர்கள் பின்தங்கியே
உள்ளனர். நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்த ஆசிரியர்களோ அணி அணியாய்க் களமிறங்கிப்
போராடுகின்றனர். திட்டத்தைப் பற்றி அறிக்கை கேட்கின்ற அரசு, அது கிடைத்த பின்னும்
ஏன் வெளியிடத் தயங்குகிறது? அரங்கங்களிலும் நேர்காணல்களிலும் திட்டத்தைப் பற்றிப்
பாராட்டும் அதிகாரிகள், குறைகளைப் பற்றிக் கூற ஆசிரியர்களுக்கு அனுமதி தருவதில்லை.
விளைவு, மாநிலம் முழுவதும் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மிகக் குறைவான மாணவர்
சேர்க்கை உள்ளது. இதனால் முறையான கல்வியறிவு பெற இயலாமல் தங்களது பொன்னான காலத்தைக்
கழிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் உள்ளனர். இசை நினைவுகள் குறித்து எழுதிய
அசோகமித்திரன், இசைமேதைகளின் அனுபவங்களை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். பா.
செவின் நேர்காணல் அருமை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி மேலும் அறிய
முடிந்தது.
தென்றல் கோ. சண்முகசுந்தரம்
நத்தக்காடையூர்
காஷ்மீர் பிரச்சினையில் வெறும் பார்வையாளர்களாக இருந்துவந்த நமக்கே சோர்வும்
சலிப்பும் ஏற்பட்டுவிட்டன. தீவிரவாதிகளைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அடக்கியாள
மத்திய அரசு தவறிவிட்டதென இதுநாள்வரை குற்றம் சுமத்திவந்த நாம், பேசாமல்
காஷ்மீருக்கு விடுதலை கொடுத்துவிட்டால் என்ன என்று இப்போது பேச ஆரம்பித்துவிட்டோம்.
‘காஷ்மீர் மக்களின் சுதந்திர வேட்கை’ என்றே கட்டுரை தொடங்குகிறது. நமக்கே
சகிப்புத்தன்மை நீர்த்துப்போய் விட்டதெனில், இந்தப் பிரச்சினையைக் கடந்த
அறுபதாண்டுகளுக்கும் மேலாகப் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் அணுகிவரும்
மத்திய அரசுகளின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். பண்டித நேரு முதல் இன்றைய
ஆட்சியாளர்வரை எவ்வளவு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது என்பதும்
நமக்குத் தெரியும். மத்திய அரசுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் இடையே இப்பிரச்சினை
இருந்துவரும் வரையில் பெரிய அளவில் பாதிப்புகள் நேரிட வாய்ப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்.
முதலான அமைப்புகள் இதில் தலையிடும் நிலை ஏற்பட்டால் பிரச்சினையை எந்தக் காலத்திலும்
முடிவிற்குள் கொண்டுவர இயலாமல் போய்விடும். புறநானூற்றுக் காட்சியெல்லாம் இப்போது
நினைவிற்குவருவது ஆபத்தானது. புறநானூற்றுக்குச் சொந்தக்காரர்களே தேசிய ஒருமைப்பாடு
குறித்தும் நாட்டின் இறையாண்மை குறித்தும் கவலைப்படும் நேரமிது.
‘பறையன் என்னும் சொல் மீதுள்ள பகை’ கட்டுரையில் ஸ்டாலின் ராஜாங்கம்
வெளிப்படுத்தியுள்ள கவலை நியாய மானது. கல்வி, பொருளாதாரத்தில் கடை நிலையில் உள்ள
விளிம்புநிலை மனிதர்களைக் குறிக்க சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டுவந்த இச்சொல்
தற்போது இழிவான மனிதர்களைக் குறிக்கும் சொல்லாக இவரால் பயன்படுத்தப்படுகிறது.
மாக்கள், கயவர், கீழ்மக்கள் எனப் பல சொற்கள் தமிழில் உள்ளன. பிற மொழிகளிலும்
இருக்கக் கூடும். அவற்றை உரிய இடங்களில் பயன்படுத்தலாம். இச்சொல், சாதி
அடிப்படையைக் குறிக்கும் சொல் என்பதை அறியாமலேயே உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது
என்றும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சாதாரண மக்களாலும் வசைச் சொல்லாக இது
கையாளப்படுகிறது என்றும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், இச்சொல் சாதி அடிப்படையைக் குறிக்கும் சொல் எனத்
தெரிந்துகொண்டே பெரும் அளவிலான மக்கள் தொகையைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இனத்தை
இழிவுபடுத்துதல் எவ்வகையிலும் நியாயமில்லை.
சமூக விமர்சனங்களைப் படைப்பாக்குவதற்குப் பதிலாக அதையே படைப்புக்குள் நேரடியாகப்
பேசுவது கலையாகாது எனப் பா. செ குறிப்பிடுகிறார். கட்சி, இயக்கம், இனம், மொழி, மதம்
இவற்றில் எதையும் சாராமல், அத்தகைய வட்டங்களிலிருந்து முற்றிலும் வெளியேவந்து
தீர்வைப் பற்றிப் பேசும்போது அதை வெறும் பிரச்சாரம் என ஒதுக்கிவிடல் நியாயமில்லை.
கா. தங்கதுரை,
பழனி
பா. செவின் இலக்கிய வழிப்பயணம் என்பதே அரசியலோடு தொடர்புடை யதுதான். 60களில் எழுந்த
இந்தி எதிர்ப்புப் போராட்டம் 70களில் உரு வான நெருக்கடிநிலை இரண்டிலும் பா. செவின்
பங்களிப்பு அசாதாரண மானது. தமிழ் மொழியின் மீதுள்ள பற்று, பொதுவுடைமைக்
கருத்துகள்மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கை இரண்டில் முன்னது இந்தி
எதிர்ப்புக்கான காரணமாகவும் பின்னது நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்யப் பட்டபோது
உருவானதாகவும் இருக்கக்கூடும். ‘இரவுகள் உடையும்’ நூலில் குறிப்பிடப்பட்ட மேற்கோள்
ஏற்படுத்திய தாக்கம் மறக்க இயலாதது. அந்நூலின் மேல் அட்டை கறுப்பு நிறத்தில்
அச்சிடப்பட்டிருந்தது. இயல்பை மீறிய அக்கதைகள் உருவாக்கிய எழுச்சிக்கு, இன்று
என்னால் விளக்க மளிக்க முடியவில்லை.
‘மனஓசை’ இதழ், தமிழகத்தில் பல படைப்பாளிகளை உருவாக்கியது. தேவிபாரதி,
பெருமாள்முருகன், கோ. கேசவன், விழி.பா. இதயவேந்தன் எனப் பலரையும் உருவாக்கியுள்ள
‘மனஓசை’ ஏற்படுத்திய தாக்கம் மிகவும் முக்கிய மானது. இயக்கரீதியிலான இதழாக
விளங்கியபோதும் அன்றைய கால கட்டத்தில், வெகுமக்கள் வாங்கி வாசிப்பதென்பது இயல்பாக
நடந்தது. குறிப்பாக அவ்விதழில் இடம்பெற்ற முகப்புப் படங்கள் வாசகனுக்குக்
கொந்தளிப்பை, சிந்தனையை ஏற்படுத்தின.
கே. ரவிச்சந்திரன்,
ஈரோடு
செயல்வழிக் கற்றல் கட்டுரை குறித்து: அரசு கல்வித் துறை செயல்பாட்டின் மீதான
ஆர்வத்தில் ஒரு தன்னார்வலனாக எங்கள் மாவட்டத்தில் பல பள்ளிகளுக்குச்
சென்றிருக்கிறேன்.
பல பள்ளிகள் இன்றும் மைதானமோ கழிப்பறை வசதியோ இன்றி கோழிப் பண்ணைக் கட்டடங்களுக்கு
நிகராகவே விளங்குகின்றன. வறிய குழந்தைகள் தாம் செல்லும் இடம் குறித்து
மகிழ்ச்சியடைய அங்கே ஏதுமில்லை. பல குழந்தைகள் களத்துமேட்டு வேலைக்குப் போனால் ரூ.
40 கூலி என்ற எதார்த்தத்தில் தம் எதிர்காலத்தை இழக்கிறார்கள். மீறிவரும்
பிள்ளைகளுக்கே பொதுக்கல்வி கிடைக்கிறது. மூன்று மணிநேரம் பயணித்து மாவட்டம் விட்டு
மாவட்டம் வரும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களைப் பண்படுத்துவதில் கவனம் செலுத்துவது
கடினம். எந்த அரசுப் பள்ளி ஆசிரியரும் தன் பிள்ளைகளுக்குப் பொதுக்கல்வியைத் தர
விரும்புவதில்லை. பிரம்பின்றி அடக்கியாள்வதே தலைமையாசிரியரின் தலையாய பணி.
தலைமையாசிரியர் ஒருவர் பணிநேரம் முடிந்தும் இரவு 7.30 வரை உதவியாசிரியர்களைப்
பணியாற்ற வைத்ததைப் பார்த்திருக்கிறேன். இடைநிலை ஆசிரியர்கள் நிலையோ பரிதாபம்.
அவர்கள் என்ன செய்கிறார்களென அவர்களுக்கே தெரியாது. அறியாத குழந்தைகள், அறிந்தும்
அறியாத ஆசிரியர்கள் சந்தித்துக்கொள்ளும் அபத்தப் புள்ளியாக இருக்கின்றன ஆரம்பப்
பள்ளிகள். இந்தச் சூழ்நிலையில் மேலும் வளம் சேர்க்க வந்திருப்பதே சர்வ சிக்ஷா
அபியான் (ஷிஷிகி) திட்டம். எங்கள் ஊரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஷிஷிகி வகுப்பு
நடைபெறும் இடம் கொட்டடிதான். வசதியின்மை காரணமாகக் கவனம் சிதறும் ஆசிரியர்கள்,
ஙிணிஜி எனப்படும் கண்காணிப்பாளர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்படுவர். பள்ளியில்
தலைமையாசிரியரும் ஙிணிஜிகளும் மாறி மாறி இடைநிலை ஆசிரியர்கள்மீது அதிகாரம்
செலுத்திப் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.
கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதிக்கு கணக்குவழக்கு பார்க்க ஏதேனும் வாரியம்
இருப்பதாகத் தெரியவில்லை. ஷிஷிகி வாயிலாக அதன் அதிகாரிகள் மத்திய அரசின் நிதியைச்
சுருட்டியதுபோக ஆரம்பக் கல்வி கற்கவரும் குழந்தைகள் கைகளில் எஞ்சியிருப்பவை
பொம்மைப்படம் போட்ட சில அட்டைகளே. இதில் நடைபெறும் ஊழலைத் தட்டிக்கேட்கவோ மறு
சீரமைப்புக்கு ஆவணசெய்யும் திராணியோ எந்த ஆசிரியர் சங்கங்களுக்கும் இல்லை. கட்சி,
மத, ஜாதி பேதங்களிலும் அவற்றில் எழும் ஆதாயங்களிலும் ஆசிரியர்களைக்
கட்டிப்போடுவதன்றி இச்சங்கங்களினால் மாணவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. வணிகக் கல்வி
எல்லோரையும் மாற்றிவிட்டது. தனி மனிதனைச் சுயசார்பு, சுயசிந்தனை, படைப்பாற்றல்,
தன்னம்பிக்கை கொண்டவனாக மாற்றும் மாற்றுக் கல்வியோ நம் அரசியல் பாரம்பரியத்தைக்
கேள்விக்குள்ளாக்கிவிடும். எனவே எந்தக் காலத்திலும் அரசாங்கத்திடமிருந்து அப்படி
ஒரு கல்வித் திட்டம் வராது எனத் தாராளமாக நம்பலாம். தற்போது இருக்கும் ஆசிரியர்கள்
தாராளமாக “அறம் செய விரும்பு’’ எனக் கற்பித்துக்கொண்டிருக்கலாம்.
சீனு,
கடலூர்
செயல்வழிக் கற்றல் முறைக்குப் பின்பு முதல் வகுப்பு படிக்கும் மாணவன் கைவிரல்களை
நீட்டி இது என்னவென்று கேட்டு அவனே பதில் சொல்கிறான். ஆரம்பக் கல்வியில் இது நல்ல
வளர்ச்சி. கல்வி என்பது மாணவனின் திறமையை வெளிக்கொணர்வதாகவும் படைப்புத் தன்மையை
உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். செயல்வழிக் கற்றல் முறையில் இவ்வாய்ப்பு
இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் எப்போதும் பழமைக்கே தோள் கொடுக்கும் ஆசிரியர்கள்,
மனப்பாடம் செய்யும் முறைக்கே மாற வேண்டுமென வலியுறுத்துவது கண்டனத்திற்குரியது. இது
குறித்து ஆசிரியர்களை மட்டும் குறைசொல்வது சரியல்ல.
சுதந்திரத்துடன் கூடிய ஒழுக்கம், படைப்பாற்றல், சிந்தனைத் திறன், புத்திசாலித்தனம்
என ஒரு குழந்தைக்குத் தேவையானவற்றைப் பெற அரசையே கிராமப்புற மாணவர்கள்
நம்பியுள்ளனர். இதை வழங்கக்கூடிய திறமையும் பொறுப்புணர்வும் அரசுகளுக்கு உள்ளதா?
கடமையை நிறைவேற்றுகிறதா? என்றால் ஏமாற்றமே ஏற்படுகிறது.
செயல்வழிக் கற்றல் முறையில் வெற்றி புலப்பட வேண்டுமானால் சிலகாலம் பொறுத்திருக்க
வேண்டும். அதற்குள் அதிலுள்ள நுணுக்கமான குறைகளைக் களைய வேண்டும். எதிர்கால
அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதில் காட்டும் அலட்சியம் நம்மை நாமே
அழித்துக்கொள்வதற்குச் சமம்.
சாருமதி,
கிளாக்குளம்
பா. செவின் நேர்காணல் குறித்து: ‘வாழ்விலிருந்து எனது இலக்கியம்’ படித்தேன். இன்றைய
உலகமய- தனியார்மய- தாராளமயத் தத்துவ நடைமுறை தமிழகக் கலை, இலக்கிய உலகிலும்
ஒட்டுமொத்த ஊடகத் துறையிலும் தமிழர் வாழ்விலும் கடுமையான ஆனால் கண்ணுக்கும்
கருத்துக்கும் அவ்வளவு எளிதில் புலனாகாத பண்பாட்டுச் சீரழிவுகளையும்
தரக்குறைவுகளையும் அடிமையின் மோகத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,
படைப்பாளியின் தன்மானமும் சமுதாய நல உணர்வும் மனிதநேயமும் விலை பேசப்பட்டு
விற்பனைப் பண்டமாக்கப்படும் இக்காலகட்டத்தில், வாழ்விலிருந்து புதுமை இலக்கியத்தைக்
கலை அழகுடனும் பன்முகப் பார்வையுடனும் பொதுமை அறச்சார்புடனும் 40 ஆண்டுகளுக்கும்
மேலாகப் படைத்துவரும் பா. செவின் நேர்காணலைக் ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது
பெரிதும் வரவேற்கத்தக்கது. கவிஞர் இன்குலாபின் நேர்காணலையும் இது போன்ற செறிவுடனும்
விரிவாகவும் வெளியிடுக.
தி.க.சி.,
நெல்லை
செயல்வழிக் கற்றல் தேவையா தேவையில்லையா என்கிற விவாதங்களுக்கிடையே நாம் கவனிக்க
வேண்டியது மாணவர்களின் மனோநிலையைத் தான். வெறும் குழந்தை ரோபோக்களை
உற்பத்திசெய்துகொண்டிருந்த மனப் பாடத் தொழிற்சாலையிலிருந்து ஒரு தலைமுறை
விடுவிக்கப்பட்டிருப்பது எவ்வளவு ஆரோக்கியமான விஷயம். சர்ச்சில்
அமர்ந்திருப்பதுபோல் ஒருவர் முதுகை மற்றொருவர் பார்க்குமாறு ஆங்கிலேயர்களால்
வடிவமைக்கப்பட்ட வகுப்பறைச் சூழலைக் குழந்தைகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்குமாறு
மாற்றியமைத்திருப்பதே ஒரு சாதனை தான். மாணவர்கள் காதுகளை மாத்திரமே கொண்டிருக்கும்
ஜந்துகள் என்ற மதிப்பீட்டிலிருந்து மாறி, அவர்களது படைப்பாக்கத் திறனைக்
கருத்தில்கொண்டு,
Constructivist approach என்கிற முறையைக்
கொண்டுவந்த தமிழகக் கல்வி அமைச்சகம் பாராட்டத் தக்கது.
ஒரு திட்டம் அமலாக்கப்படுகையில் குறைகள் ஏதுமற்று அமலாவது சாத்தியமில்லைதான்.
ஆயினும் ஆசிரியர் பற்றாக்குறை, இடவசதிக்குறைவு போன்ற முக்கிய அம்சங்களை அரசு
கவனத்தில் கொண்டிருந்திருக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்த்துக் குரலெழுப்பும்
ஆசிரியர் சங்கங்களின் கூற்றுகளில் சில நியாயமற்றவை. இச்செயல்வழிக் கற்றல்
முறையினால் தான் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது
என்பது அதில் ஒன்று. ‘ஆங்கிலவழிக் கல்வி மோகத்தினாலும் தனியார் பள்ளியில்
குழந்தைகளைப் படிக்கவைப்பது உயர்வானது என்ற பெற்றோர்களின் மனோபாவத்தினாலும் கடந்த
சில வருடங்களாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம்
சரிந்துவந்துள்ளது’ எனச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் பா. கல்யாணி.
இச்செயல்வழிக் கல்வி அறிமுகமாவதற்கு முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர்களுள் எத்தனை பேர்
தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருந்தனர் என்பதை ஆசிரியர் சங்கங்கள்
சுயபரிசீலனைசெய்ய வேண்டும்.
செயல்வழிக் கற்றல் முறையில் பெரும் குறைபாடாக நான் காண்பது அதன் அமலாக்கத்தில்
நிலவும் ஜன நாயகமின்மைதான். இதை இரண்டு வகையாகப் பகுக்கலாம். முதலாவது ஆசிரியர்
சங்கங்களும் வே. வசந்திதேவியும் குறிப்பிடுவதுபோல் சமச்சீர் கல்வி இல்லாமை,
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இத்திட்டத்தைக் கொண்டுவராமல் அல்லது மெட்ரிகுலேசன் முறையை
ஒழிக்காமல் இது சாத்தியமில்லை. கலந்தாய்வு ஒன்றில் ‘இத் திட்டம் மெட்ரிகுலேசன்
பள்ளிகளில் ஏன் அமல்படுத்தப்படவில்லை’ என்றொரு கேள்விக்கு இத்திட்டத்தின் முன்னாள்
இயக்குநர் விஜயகுமார், “தனியார் பள்ளிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு
அனுப்பட்டும்’ என்று தன்னுடைய ‘ஆசை’யைப் பதிலாகத் தந்தார். சமச்சீர் கல்விமுறை
இல்லாத இக்காலகட்டத்தில் அப்பதில் ஒரு ‘நகைச்சுவை’யாகத்தான் தோன்றுகிறது. சமச்சீர்
கல்வியைத் தடுத்துக்கொண்டிருக்கும் மெட்ரிகுலேசன் லாபிகளின் அரசியல், பொருளாதாரச்
செல்வாக்கு நாம் அறியாததா என்ன?
ஜனநாயகமின்மையின் இரண்டாவது வகை கல்வி அதிகாரிகள்- ஆசிரியர்கள் உறவு. இத்திட்டம்
அமலாக்கப்படுவதில் அரசுக்குள்ளான ஆர்வத்தை அதிகாரிகள் தங்களின் ‘அதிகாரமாகக்
கட்டமைத்துக்கொண்டு விட்டனர். முந்தைய கல்வி முறையைவிட இக்கல்வி முறையில் அவர்களின்
அதிகாரச் செங்கோல் ஓங்கியிருப்பதாக ஆசிரியர் சமூகம் கருதுகிறது. அதனாலேயே
இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கக் கோருவதற்குப் பதிலாக இத்திட்டத்தையே
கைவிடக் கோருகிறார்கள்.
ஒருவருக்கு ஒருவர் சமம் என்கிற ஜனநாயகக் கோட்பாடு மட்டும் எந்த மட்டத்திலும்
பின்பற்றப்படுவதில்லை. அதுவே பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம். பல அதிகாரிகள்
ஆசிரியர்களுடனான ஜனநாயகத்தை விரும்புவதில்லை. பல ஆசிரியர்கள் தங்கள் நாற்காலிகளைத்
துறந்து மாணவர்களுடன் சரிசமமாக அமரும் ஜனநாயகத்தை விரும்புவதில்லை. ஆனால் மாணவர்கள்
ஜனநாயகத் தன்மையுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற்கிறார்கள். காரணம் அவர்கள் இன்னும்
குழந்தைகளாக இருக்கிறார்கள்.
நக்கீரன்,
நன்னிலம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துச் சில செய்திகள் இதுவரை பதிவு செய்யப்படாதவை.
சுயவிமர்சன நோக் கோடு அந்த நிகழ்வுகளைக் கூறுகிறார் பா. செ. இந்தி எதிர்ப்புப்
போராட்டம் குறித்து அவரிடம் கூடுதலான தகவல்கள் உண்டு. அவரே இந்த வரலாற்றை
எழுதுவாரேயானால், இது பற்றிய ஒருசில நூல்களைவிடக் கூடுதலான வெளிச்சம் கிடைக்கலாம்.
நேர்காணலில் ஒரு தகவல் தவறு. காமராசனும், காளிமுத்துவும் தலை மறைவாய் இருந்த ஊர்
கீழக்கரை என்று வருகிறது. அது கீழக்கரை அல்ல என்பது எனக்குத் தெரியும். அது நண்பர்
ஹசன் முகமது அவர்களுடைய இடைக்காட்டூராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்
அப்போது எங்கிருந்தார்கள் என்பது எனக்குக்கூடத் தெரியாது. நாங்கள் படித்த மதுரை,
தியாகராசர் கல்லூரியில் இன்னும் பலர் முன்னணியில் நின்று போராட்டத்தை
எடுத்துச்சென்றனர். போடிநாயக்கனூர் சுருளிவேலு, சொக்கன், முருகையா, கன்னியப்பன்
என்று பல முகங்கள் நினைவில் உடனடியாக வருகின்றன. தோழர்கள் சிறைப்பட்டபிறகு
தொய்வில்லாமல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது ஓர் அறைகூவலாகவே இருந்தது. பட்ட
காயங்களும் வலியும் அவமானங்களும் சிறைவாசக் கொடுமைகளுக்கு இணையாகவே இருந்தன. இந்த
மாபெரும் போராட்டத்துக்கு ஒரு முறையான வரலாற்றுப் பதிவு இல்லை என்பது உண்மைதான்.
அதற்கு முன்பே 1938இல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ‘தமிழன் தொடுத்த போர்’
என்று விரிவாக எழுதப்பட்டுள்ளது. அந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரில் பாரதிதாசன்
எழுதிய பாடல்கள், 1965 இந்தி எதிர்ப்புப் போரிலும் உணர்வூட்டின.
இந்த நேர்காணலின் பிற்பகுதி அவருடைய படைப்பு சார்ந்தது. கேள்விகள்
விமர்சனப்பூர்வமாக இருந்தன. ஆனால் அவருடைய நோக்கங்களையும் வெளிப்பாட்டு
முயற்சிகளையும் அதற்கு அவர் செய்த கலை நியாயங்களையும் அவரே முன்மொழியும் வகையில்
கேள்விகள் அமையவில்லை. கேள்வியாளர்களுடைய நோக்கங்களுக்கு இழுத்துச் செல்கிற
வகையிலேயே கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். பா.செ.யிடமிருந்து ஒரு
வகையான ஒப்புதல் வாக்குமூலம் பெறும் முயற்சிதான் நடைபெற்றதாகத் தோன்றுகிறது.
கேள்வியாளர்கள் சுட்டிக்காட்டிய பா. செ.யின் குன்றுதல்களுக்கு அப்பாலும் விரிந்து
செல்லும் வெளிப்பாடுகள் அவர் எழுத்துக்களில் உண்டு.
இடதுசாரி, முற்போக்கு முகாமில் இருப்பவர் அனைவரும் ‘இலக்கியமற்றவர்கள்’ என்ற
நிலைப்பாட்டில் கேள்வியாளர்கள் நிற்காதது ஒரு வகையில் ஆறுதலளிக்கிறது. பா.செயின்
நிலைப்பாட்டை ஏற்காதவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு நேர்காணல் என்பது அத்தகைய
நிலைப்பாட்டின் நியாயங்களைப் பேசவிடுவதாக அமைய வேண்டும்.
பின்நவீனத்துவங்களைத் தொடர்ந்து படைப்பாளிகளின் மொழியில் ஏற்படும் மாற்றங்களைக்
கேள்வியாளர்கள் வற்புறுத்துவது விமர்சனப்பூர்வ மற்றது என்றுதான் தோன்றுகிறது.
நுண்மையான சிக்கல்களையும் பலதரப்பட்ட பார்வைகளையும் படைப்பாளி எதிர்கொள்ள வேண்டும்
என்பது சரிதான். ஆனால் அதற்கான ஒரு கட்டளை மொழியை யாரும் ஏற்படுத்திவிட முடியாது.
பின்நவீனத்துவம் சார்ந்துவரும் எழுத்துக்களின் மொழி ஒரே தன்மையாய் வெளிவரும்
போக்காக உற்றுநோக்கினால் காண முடியும்.
பிறகு ‘வானம்பாடிகள்’ குறித்து அவர் செய்யும் மதிப்பீடு முழுக்கச் சரியானது அன்று.
வானம்பாடி இயக்கத்தில் நானும் இருந்ததில்லை. அவர்களுடன் உடன்பாடும் மறுப்பும்
சார்ந்தே என் தொடர்புகள் இருந்தன. குறையாகக் காட்டப்படும் அதீத கற்பனைகளை
எதிர்ப்பக்கமும் காண முடியும்; பிரகடனங்களும் உண்டு. பொதுவாக கவிஞர்களிடமுள்ள
புனைவியல் தன்மையின் தொடர்ச்சிகள்தாம் வானம்பாடிகளும். அவர்களில் பலரின் மானுடநேயம்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஒருவகையில் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின்
வழித்தோன்றல்கள்தாம் வானம்பாடிகளும். கவிஞர்கள் மீரா, ஞானி, புவியரசு போன்றோரிடம்
இருந்த தனித்துவப் போக்கை, வானம்பாடியின் தீவிர எதிர்ப்பாளர்கள் கண்டுணரத்
தவறிவிட்டார்கள். மீராவின் ஊசிகளின் அங்கதம் இன்னும் கூர்மழுங்காதது. பா.செ.
வானம்பாடிகள் குறித்த விமர்சனத்தை இன்னும் கவனமாக முன்வைத்திருக்க வேண்டும்.
சார்பற்றவர்கள் என்று யார் இருக்கிறார்கள்?
இன்குலாப்,
சென்னை |