|
நெய்தல் இலக்கிய அமைப்பு அளித்துவரும் ‘இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி
விருது’ இந்த ஆண்டு பிரான்ஸிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்டது. சான்றிதழும் பத்தாயிரம்
ரூபாய் ரொக்கத் தொகையும் அடங்கிய இவ்விருது வழங்கிய நிகழ்ச்சி 19.10.2008 அன்று
நாகர்கோவில், ரோட்டரி கம்யூனிட்டி சென்டர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு
நெய்தல் கிருஷ்ணன் தலைமையேற்க, தேர்வுக்குழு அறிக்கையைக் கவிஞர் சுகுமாரன் படித்தார்.
தமிழவன் சு.ரா. விருதை வழங்கிச் சிறப்புரையாற்றினார். பிரான்ஸிஸ் கிருபா விருதைப்
பெற்றுக்கொண்டு நன்றி கூறினார். அரவிந்தன் விழா நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை
ராஜமார்த்தாண்டன் ஒருங்கிணைத்தார்.
“பிரிட்டனில் வட்டார மொழிகளைப் பற்றிய பதிவுகளைப் பள்ளி கல்லூரிகளில்
பாடத்திட்டத்தில் வைத்திருக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் வட்டார மொழியைப் பரிகாசம்
செய்கிறோம். இந்த மாவட்டத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே நான் கர்நாடகம்
சென்றுவிட்டாலும் நண்பர்கள் என்னிடம் நாகர்கோவில் மொழியின் சாயல் உள்ளது என்கின்றனர்.
இது எனக்குச் சந்தோஷமான விஷயம்தான். நான் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளையோ
நூல்களையோ படிக்கவில்லை. இனி படிப்பேன்; படித்து என் கருத்தைச் சொல்வேன்” என்ற
தமிழவன் சு.ராவுடனான நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து இளம் படைப்பாளியைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவரான கவிஞர் சுகுமாரன்,
“இந்நிகழ்வு சிறப்புக்குக் காரணம் நெய்தல் கிருஷ்ணன்தான். போலியான இலக்கிய அரசியலால்
கிருஷ்ணனைப் போன்ற உற்சாகக் குன்றை வீழ்த்திவிட முடியாது. அவர் சு.ராவின்
வாசகராகவும் நண்பராகவும் அவரிடமிருந்து தூண்டுதல் பெற்ற எழுத்தார்வலராகவும்
இருக்கிறார். தேர்வு முறையிலும் இறுதி முடிவிலும் அவர் குறுக்கிடவில்லை; கவிதை,
நாவல் ஆகிய படைப்புத் துறைகளில் தன்னுடைய அடையாளத்தை உருவாக்கியிருக்கும் பிரான்சிஸ்
கிருபா தொடர்ந்து அர்த்தமும் செறிவுமுள்ள படைப்புகளை உருவாக்கி அளிக்க சுந்தர
ராமசாமி நினைவு விருது தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.
தேர்வுக்குழுவில் இருக்கும் பாவண்ணன் நிகழ்ச்சிக்கு வர இயலாததால் கட்டுரையை
அனுப்பியிருந்தார். சுகுமாரன் அதைப் படித்தார்.
“இளம் வாசகர்களும் படைப்பாளிகளும் சொந்தமான சுயமான கண்ணோட்டங்களை
உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை சு.ரா. எல்லாக்
கட்டங்களிலும் வலியுறுத்திவந்தார். குட்டி ரேவதி, தமிழ்ச்செல்வி, பிரான்சிஸ் கிருபா,
ஜே.பி. சாணக்யா, ஷோபா சக்தி, வா.மு. கோமு, கீரனூர் ஜாகீர் ராஜா, கோமல் அன்பரசன்,
அமரந்தா ஆகியோர் இந்த ஆண்டு, தேர்வுக்குழுவினர் முதல் கட்டத்தில் தேர்ந்தெடுத்த
படைப்பாளிகள். பின் தொடர்ந்த விவாதத்தில் கிருபா தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு
கவிதைத் தொகுதிகளும் ‘கன்னி’ நாவலும் கிருபாவின் ஆக்கங்கள். தடுமாற்றங்களுக்கும்
அலைக்கழிப்புகளுக்கும் இடையில் சிக்கிக் சுழலும் இளம் மனத்தை வெவ்வேறு படிமங்கள்
வழியாகவும் கவித்துவம் மிகுந்த வரிகள் வழியாகவும் வெளிப்படுத்துபவர் கிருபா” எனத்
தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் பாவண்ணன்.
கிருபாவின் படைப்புகளை மதிப்புரை செய்ய இருந்த மோகனரங்கனும் நிகழ்ச்சிக்கு வர
இயலாததால் அவர் அனுப்பியிருந்த கட்டுரையை ராஜமார்த்தாண்டன் வாசித்தார்.
“பிரான்சிஸ் கிருபா ஏறக்குறைய 300 கவிதைகளை எழுதியுள்ளார். இளந்தலைமுறையில் இவர்
முக்கியமான கவிஞர். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த இவரது சொல்லாட்சியும்
பிரயோகமும் கற்பனையின் விரிவும் அபாரமானது. ‘கன்னி’ நாவல் கிருபாவின் முதல் உரைநடைப்
படைப்பு. முன்னோடிகள் எவரது சாயலும் பாதிப்பும் இல்லாது தனக்கானதொரு தனிவழியே
நடந்திருக்கிறார். வாசகனின் கவனத்தை வசீகரமான நடைமூலம் தொடர்ந்து
தக்கவைத்துக்கொள்ளும் அதே சமயத்தில் அவனுடைய யூகங்களுக்கு மறைமுகமான சவால்களையும்
எழுப்பும் விதமாக எழுப்பப்பட்ட ‘கன்னி’ சமீபத்திய நாவல்களில் முக்கிய வரவு” எனக்
கட்டுரையை முடிந்திருந்தார் க. மோகனரங்கன்.
இந்த விருது வழங்கும் செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் அக்கறைகளையும்
உழைப்பையும் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்ட அரவிந்தன், அடுத்த ஆண்டு விருதுக்கான
வயது 40 என்ற வரையறையை இறுக்கமாகப் பிடிக்காமல் 40 - 42 வயதை எட்டுகிறவர்களையும்
தேர்வுக்குழு கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றும் அறிவித்தார்.
(சுருக்கப்பட்ட வடிவம்) |