|
தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையன்றில் பணியாற்றி
ஓய்வுபெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை
எழுதப்போவதாகக் கூறி, யாரையெல்லாம் படிக்க வேண்டும் எனக் கேட்டார். காலச்சுவடு
பதிப்பக வெளியீடான 'தமிழினி 2000' பெருந்தொகுப்பில் இருக்கும் எனது 'தமிழ் தலித்
இலக்கியம்' கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை
வாசித்துவிட்டேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்புகளைத்
தொகுத்துவைத்துள்ளேன்; வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது
2000க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள், படைப்புகளின் விவரம் வேண்டுமென்றார்.
கவிதையில் சுகிர்தராணியும் சிறுகதையில் அழகிய பெரியவனும் ஜே. பி. சாணக்யாவும்
நினைவுக்குவர அவர்கள் எழுதிய தொகுதிகளின் பெயரைச் சொன்னபோது திரும்பவும் இரண்டு நாள்
கழித்துத் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறினார்.
தனித்துவத்தை
நிலைநாட்டிக்கொண்டு தொடர்ந்து படைப்புகளைச் செய்துவரும் தலித் படைப்பாளிகளின்
பெயர்கள் நினைவுக்குவருவது போலப் புதிய பெயர்கள் எதுவும் நினைவுக்குவரவில்லை.
2000க்கு முன் தமிழ்க் கருத்தியல் தளத்திலும் படைப்புத் தளத்திலும் விமர்சனத்
தளத்திலும் தவிர்க்க முடியாத சொல்லாகவும் சொல்லாடலாகவும் இருந்த தலித், தலித்தியம்,
தலித் கலை இலக்கியம் ஆகியன அடைய நினைத்த இலக்குகளை அடைந்துவிட்டதால் இனிச் செய்ய
வேண்டியது எதுவுமில்லை என அங்கேயே தங்கிவிட்டனவா? ஆரம்பித்த வேகத்தில் சில பத்து
எழுத்தாளர்களை அடையாளப்படுத்திய தலித் இலக்கியப் போக்கு அடுத்த கட்ட நகர்வினை
முன்னெடுக்கும் படைப்பாளிகளை உருவாக்காமல் நின்றுபோய்விட்டது என்றால்
புனைகதையாசிரியர் சோ. தர்மன் சமீபத்தில் 'தலித்தியம் பின்தங்கிவிட்டது' என்று
சொன்னது சரியான கூற்றுதானா? (சோ. தர்மனிடம் நேர்காணல் செய்த தீராநதி (ஜூன் 2008)
அந்நேர்காணலுக்குத் தந்திருந்த தலைப்பு இது) பின்தங்கிவிட்டது உண்மைதான் என்றால்
அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்? இடதுசாரி இயக்கங்கள் சார்ந்து இயங்கும்
படைப்பாளிகளின் தொடர்ச்சியில் இப்படியான அசைவின்மையும் வெற்றிடமும் ஏற்படாதபோது
தலித் இயக்கங்களுக்கு மட்டும் இத்தகைய நிலை ஏற்படுவதற்கான காரணங்களும் சாதியம்
சார்ந்தவைதாமா? இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்க வாய்ப்பாக அமைந்தது அந்தப்
பேராசிரியரின் தொலைபேசி அழைப்பு.
தீண்டாமை காரணமாகத் தான் ஒதுக்கப்படுவதைத் தன்னுணர்வோடு - அதனால் உண்டாகும்
வலியோடும் கோபத்தோடும் - சொல்வதைத் தனது தனித்துவமான அடையாளமாக முன்மொழிந்து
எழுந்தது தமிழ் தலித் இலக்கியம். 2000க்கு முன்பு பாமாவின் 'கருக்கு', 'சங்கதி'
ஆகியவை தொடங்கிவைத்த அந்தத் தனித்துவம் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படாமல் போனதற்கான
காரணங்கள் என்னவாக இருக்கும்? தலித் இலக்கியப் பரப்பில் தன்வரலாறுகளுக்கு இடமில்லை
என உறுதியாகக் கூற முடியுமா? என்று கேள்வியை எழுப்பி விமர்சனரீதியாகத் தக்க
காரணகாரியங்களோடு அவ்வகை எழுத்துக்களைக் கைவிட்டதாகச் சொல்ல முடியாது. வந்த வழி
எதுவோ அந்த வழியிலேயே வெளியேறியும்விட்டன தன்வரலாறுகள். மராட்டிய மொழியிலிருந்தும்
கன்னடத்திலிருந்தும் தன்வரலாறுகளை மொழிபெயர்த்துப் பெற்ற உந்துதலிலிருந்து ஏராளமான
தன்வரலாறுகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுண்டு. ஆனால் வந்தவையோ மிகக்
குறைவு. அவையும் முழுமையான தன்வரலாறுகள் அல்ல. கே. ஏ. குணசேகரனின் தன்வரலாற்றுக்
கதையான 'வடு', அழகிய பெரியவனின் 'தகப்பன் கொடி' ஆகியன தன் வரலாற்றுச் சாயல் கொண்ட
நெடுங் கதைகள் என்பதை வாசித்தவர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
2000க்கு
முன் தீவிரமான தலித்திய விமர்சகராகவும் தலித்தியக் கருத்தியல்களை உருவாக்கித்
தந்தவருமான ராஜ்கௌதமன், தலித்திய விமர்சனத்தைத் தள்ளிவைத்துவிட்டு 2000க்குப் பின்
இரண்டு நாவல்களை எழுதியதோடு தலித் சொல்லாடல் வெளியிலிருந்து ஒதுங்கிவிட்டார். 'சிலுவை
ராஜ் சரித்திரம்', 'காலச் சுமை'ஆகிய இரண்டும் ஒருவிதத்தில் தன்வரலாற்றுத் தன்மை
கொண்ட நாவல்கள்தாம். இவை தவிர 2000க்குப் பின்வந்த பெரும்பாலான தலித் நாவல்கள்
தன்வரலாற்றுப் போக்கிலிருந்து விலகிச்சென்றனவாக அடையாளம்பெற்றன. பாமாவின் மூன்றாம்
நாவலான 'வன்மம்' தலித் சாதிகளாக, ஒடுக்கப்பட்ட சாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட
குழுக்களுக்கிடையே உருவாகிவரும் முரண்பாட்டை, வன்மத்தை விவரித்தது. உருவாகும்
வன்மத்தால் ஆதிக்கச் சாதிகள் அடையும் பலன்களை விரிவாகப் பேசாமல் உள்முரண்பாட்டை
மட்டுமே பேசியதால் கூடுதல் கவனம் பெறாமல் போய்விட்டது. 2000க்கு முன் 'உப்பு வயல்'
நாவலை வெளியிட்ட ஸ்ரீதர கணேசன் தொடர்ந்து நாவல்களை எழுதி வெளியிடுபவராக உள்ளார்.
ஆனால் அந்நாவல்கள் சாதிய அடையாளங்கள் கொண்டன என்றாலும் வர்க்க முரண்பாட்டை
மையப்படுத்தி கதையாக்கத்தைக் கொண்ட பிரதிகளே.
விரிவான வாசக கவனத்தையும் விமர்சனப் பார்வைகளையும் எதிர்கொண்டு அங்கீகாரத்தைப்
பெற்ற சோ. தர்மனின் 'கூகை'யையும் இமையத்தின் 'செடலை'யும் தலித் இலக்கியப் பட்டியலில்
சேர்க்கலாம் என நினைக்கும்போது கொஞ்சம் தயக்கமும் இருக்கிறது. காத்திரமான படைப்புச்
செயலில் ஈடுபடும் இவ்விருவரும் தங்களை - தங்கள் படைப்புகளை - தலித் என்னும்
கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை என்று உரத்து முழங்கிவருகின்றனர். ஆனால் அந்தக்
கூண்டு தரும் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வேண்டாமென விலக்குபவர்களாகவும்
தெரியவில்லை. தலித் இலக்கியம் தனது வரையறைகளை உருவாக்கத் தொடங்கி, எல்லைகளை
விரிவாக்கியபோது இவ்விருவரது எழுத்துக்களும் - குறிப்பாக நாவல்களும் சிறுகதைகளும் -
அந்த வரையறைகளுக்கும் போக்கிற்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன என்பதை
விமர்சனபூர்வமாக நிறுவ முடியும். இமையமும் சோ. தர்மனும் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் தலித் இலக்கியத்தின் அழகியலையும் கருத்தியலையும் இவ்விருவரது
படைப்புகளும் உருவாக்கித் தந்துள்ளன என்ற கூற்றைப் புறந்தள்ளிவிட முடியாது. சூழல்
உருவாக்கும் நெருக்கடி அல்லது சலுகைகளைத் தனிமனிதர்கள் மீறிச் சென்றுவிட முடியாது.
தலித்தியம், தலித் இலக்கியம், அதன் அழகியல் போன்றவற்றை உருவாக்குவதற்கான
பங்களிப்பைச் செய்துள்ள படைப்பாளி சிவகாமியின் ஈடுபாடுகள் 2000க்குப் பின் பல
தளங்களில் கிளைபிரிந்து நிற்கின்றன. 'புதிய கோடாங்கி' வழியாக அறியவரும் அவரது
செயல்பாடுகள் பண்பாட்டுத் தளங்களிலிருந்து விலகிப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு
முக்கியத்துவம் தரும் போக்காக மாறிவருவதைக் காட்டுகின்றன. தலித்துகள் - அரவானிகள்
கூட்டமைப்பு, பெண்கள் ஐக்கியப் பேரவை, தலித் நில உரிமை இயக்கம், எஸ். சி. / எஸ். டி
ஊழியர்கள் மாநாடு எனத் தாவித்தாவிச் செல்லும் நிலையில் அவரது படைப்பாளி அடையாளம்
குறைந்து செயலாளி அடையாளம் மேலோங்கிவருகிறது. செயலாளியாக மாறினாலும் தொடர்ந்து
எழுதும் ஆற்றல் கொண்டவர் சிவகாமி.
அங்கீகரிக்கப்பட்ட
சிறுகதை வடிவம், உத்தி, நுட்பங்கள் என்பவற்றைப் பொருத்திப் பார்த்து
விமர்சிக்கும்போது இவையெல்லாம் தேறாது என ஒதுக்கத்தக்கனவாக இருந்தன என்றாலும்,
1990களில் வெவ்வேறு வட்டாரப் பின்னணியின் சாதிய முரண்பாடுகளைக் கதைகளாக எழுதி
வெளியிட்ட விழி. பா. இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், அறிவழகன், அபிமானி, பாமா
போன்றவர்கள் தங்களது படைப்புலகத்தையும் கருத்துலகத்தையும் புதிய தளங்களுக்குள்
நகர்த்தாமல் அங்கேயே தங்கிவிட்டார்கள். அழகிய பெரியவன் தொடர்ந்து எழுதுபவராக இருக்க
சுதாகர் கத்தக், வெ. வெங்கடாசலம், ஜே. பி. சாணக்யா போன்றவர்கள் தொடர்ந்து எழுதும்
முயற்சியிலிருந்து விலகி நிற்கின்றனர். அப்படி விலகி நிற்கத் தனிநபர் சார்ந்த
காரணங்கள் இருக்கக்கூடும் என்றாலும் இயக்கம் சார்ந்து உருவாகும் படைப்பாளிகள்
இயக்கத்தின் திசைமாற்றத்தோடு ஒத்துப்போக முடியாமல் பின்தங்கிவிட நேர்வதுமுண்டு
என்பதையும் மறுத்துவிட முடியாது.
அதே சமயம் முற்போக்கு இலக்கியம் என்ற எல்லைக்குள் செயல்படுவதாக நம்பும் ஆதவன்
தீட்சண்யாவின் படைப்புச் செயல்பாடு அப்படி நின்றுபோகவில்லை. தொடர்ந்து அவர் எழுதும்
கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அனைத்தும் சாதியத்தின் மீதான விமர்சனங்களாகவே
இருக்கின்றன. காத்திரமான விமர்சனங்களை வைக்கத்தக்க இடங்களைக் கண்டுபிடித்துத்
தீவிரமாக அதைத் தாக்குவதற்குரிய மொழியையும் புதியபுதிய படைப்பு முறையையும்
கைக்கொள்வதைப் பிரக்ஞையோடு செய்கிறார். இந்தப் பிரக்ஞை அவர் செயல்படும் முற்போக்கு
இலக்கியப் போக்கில் இல்லாத ஒன்று. பொருளாதார விடுதலையை அல்லது சமத்துவத்திற்கான
குரல்களை எழுப்புபவர்கள் தங்களின் குரல்களை முற்போக்குக் குரல்கள் என்று
முன்மொழிந்த போதும் பண்பாட்டுத் தளத்தில் அக்குரல்கள் என்ன மாற்றத்தைச் செய்யும்
எனச் சொல்ல முடியாத தயக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தனர்; இருக்கின்றனர். ஆனால் ஆதவன்
தீட்சண்யாவின் எழுத்துக்கள் அப்படிப்பட்டவை அல்ல.
இந்தியச் சமுதாயத்தில் பொருளாதார சமத்துவம் இல்லாத காரணத்தால் பாரதூரமான வேறுபாடு
நிலவுகிறது என்பதைத் தனது படைப்புகளில் மையப்படுத்தாமல், தீண்டாமை சார்ந்து - சாதி
காரணமாக - ஒதுக்கப்படும் புள்ளிகளையே மையப்படுத்துகிறார். சாதி வேறுபாடு சார்ந்த
புள்ளியை அடையாளப்படுத்தித் தாக்குதல் தொடுக்கும் தீட்சண்யா, பிற முற்போக்கு அல்லது
இடதுசாரிப் படைப்பாளிகளைப் போல இயக்கம் கற்றுத்தந்துள்ள முன்முடிவை நோக்கி
நகர்த்தாமல் விட்டுவிடுவதன் மூலம் அவர்களிடமிருந்து வேறுபட்டும் நிற்கிறார். இதுவும்
இன்றைய நிலையில் ஒரு தலித் படைப்பாளி தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் போதுமான
பாதுகாப்பு அரண் எனலாம். அதன் மூலம் ஒரு தலித் வாசகரிடம் கோபத்தையும் தலித் அல்லாத
வாசகரிடத்தில் குற்றவுணர்வையும் உண்டாக்கி, சாதியத்தின் மீதான கவனத்தைக் குவித்தல்
சாத்தியம். சுகிர்தராணியின் பெண்மையக் கவிதைகளும் தலித்மையக் கவிதைகளும் இந்த
எல்லைவரை வந்து நிற்பதன் மூலமே கவனிக்கத்தக்க கவிதைகளாக ஆகியுள்ளன.
தலித்
கலை இலக்கியம் சார்ந்த புதிய படைப்புகளும் படைப்பாளிகளும் கவனம் பெறத்தக்க வகையில்
வெளிப்படவில்லை என்ற போதிலும் சமூக நிகழ்வுகள் சார்ந்த கவன ஈர்ப்பும்
வெளிப்படுத்துதலும் 2000க்குப் பிந்திய ஆண்டுகளில் கூடுதலாகியுள்ளன. ஊடகங்களின்
கவனத்துக்கே வராமல்போயிருக்கக்கூடிய பல நிகழ்வுகள் தலித் இயக்கங்களின்
செயல்பாடுகளால் அரசு எந்திரங்களின் கவனிப்பைப் பெற்றுள்ளன. மேலவளவு வன்முறை தொடங்கி,
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல்,
நக்கலமுத்தன்பட்டி, செடப்பாளையம், காக்கிவாடன்பட்டிவரை ஜனநாயக எல்லைக்குள் நின்று
கிடைக்க வேண்டிய குடிமை உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்தும் தைரியமும்
பாதுகாப்புணர்வும் கிடைக்கக் காரணம் புதிய தலித் எழுச்சியின் பின்விளைவுகள்தான்.
கிறித்தவ மதத்திற்குள் செயல்படும் ஒதுக்கல்கள் இன்று வெளிப்படையாகப் பேசப்படுவதன்
பின்னணியில் தலித் இயக்கங்கள் இருக்கின்றன. சாதி வேறுபாட்டின் ஆறாதரணமாக
இருந்துவரும் உத்தப்புரம் கலவரங்களின் வரலாறு அரை நூற்றாண்டைத் தாண்டியது என்றாலும்
இந்தமுறைதான் ஊடகங்களாலும் அரசாலும் கவனம்பெறும் நிகழ்வாகியுள்ளது. அதன் பின்னணியும்
தலித் அரசியலும் தலித் இயக்கங்களின் பருண்மையான வெளிப்பாடுகளும்தான் என்றபோதிலும்
தீண்டாமை ஒழிப்பு என்ற பண்பாட்டு நடவடிக்கைகளை மையப்படுத்திய இயக்கங்கள் இங்கு
எடுக்கப்படாமலேயே நின்றுபோய்விட்டன. அதற்கான அமைப்புகளும் பண்பாட்டுத்தளச்
செயலாளிகளும் தளர்ச்சி அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
அந்தத்
தோற்றம் ஓரளவு உண்மைதான் என எடுத்துக்கொண்டு அதற்கான காரணங்கள் என்னவாக
இருக்கக்கூடும் என யோசிக்கலாம். நிலவுடைமை சார்ந்த வாழ்க்கைமுறையிலிருந்து பணம்
சார்ந்த வாழ்க்கை முறைக்குத் தமிழர்களை / இந்தியர்களை மாறச்சொன்ன காலனிய
ஆட்சிக்காலம்தான் இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது. காலனியப் பொருளியல்
நடைமுறைகளாலும் கருத்தியலாலும் உருவாக்கப்பட்ட இந்திய நடுத்தரவர்க்க மனிதர்கள்
அசலான இந்தியர்களாக இருக்க முடியாமல் தவித்ததன் விளைவுகளே நவீன இந்தியச்
சிந்தனைப்போக்குகளும் இலக்கியப் போக்குகளும். அசலான இந்தியர்களாக இருப்பது என்பது
மனித உயிரியின் வாழ்நிலைக்கும் இருப்பிற்கும் அதன் கர்மமும் முன்வினைப் பயனும்தான்
காரணம். அதிலிருந்து விடுபடுதல் சாத்தியமற்றது. எல்லாவகை வேறுபாடுகளையும்
ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் இந்தப் பிறவியின் சாத்தியம். இதிலிருந்து விடுபடுதல்
என்பது ஆன்மாவின் விடுதலையாக மட்டுமே இருக்க முடியும் என்பதைத் தவிர வேறில்லை.
அரூபமான ஆன்ம விடுதலையைப் பேசிய மரபிலிருந்து விலகிப் பருண்மையான மனிதர்களின்
விடுதலையைப் பேசும் நவீனச் சிந்தனைகளும் அவற்றின் தொடர்ச்சியான நவீன இலக்கியப்
போக்குகளும் இலக்காகக்கொண்டதும் விடுதலை என்ற சொல்லைத்தான். ஆனால் இரண்டு
விடுதலைகளும் ஒன்றல்ல. தனிமனிதனின் ஆன்ம விடுதலைக்குப் பதிலாக மனிதர்களின் விடுதலையை
- சமூகத்தின் விடுதலையை - முன்மொழிந்தன என்பதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பின்பாதியில் தோற்றம் கொண்ட இயக்கங்கள், அவை சார்ந்த இலக்கியப் போக்குகளின்
வேறுபாடுகள். தேச விடுதலை என்னும் பருண்மையான ஒன்றிற்காக - பறையர் தொடங்கிப்
பார்ப்பனர் வரையிலான - அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய தேசத்தின் விடுதலையை
முன்மொழிந்த பாரதியைத் தமிழின் முதல் நவீனக் கவி என்று சொல்வது இந்தப்
பின்னணியில்தான்.
பருண்மையான
தேச விடுதலைக்குப் பின்னர் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட குழுக்களுக்கான விடுதலைக்
குரல்கள் இந்தியாவில் எழுப்பப்பட்டன. அதற்கான சூழலும் வரலாறும் பின்னணிக்
காரணங்களும் வெளிப்படையானவை. முதலில் அரசியல் இயக்கமாகத் தொடங்கி திரள்மக்களிடம்
அறிமுகம் பெற்ற பின்னர் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களை வளர்த்தெடுத்த போக்காகத்
தேசிய இயக்கத்தைச் சொல்ல முடியும் என்றால் திராவிட இயக்கத்தை இதன் மறுதலையாகத்தான்
சொல்ல வேண்டும். முதலில் பண்பாட்டு வெளியில் வெளிப்பாடுகளைக் காட்டிவிட்டு அரசியல்
இயக்கமாக அது மாற்றம் பெற்றது. வெகுமக்களைச் சென்றடைய விரும்பும் எந்த ஒரு
இயக்கத்திற்கும் அரசியல் பொருளாதார முழக்கங்கள் அல்லது ஆயுதங்கள் உதவுவதைக்
காட்டிலும் பண்பாட்டு முழக்கங்களே அதிகம் பயன்படும் என்பது தமிழக வரலாறு
உணர்த்தியுள்ள பாடம்.
துணைக்கண்டத்தை ஒத்த தேசம் என்னும் பெருவெளியில் மொழி சார்ந்த தேசிய இனக்குரல்கள்
காணாமல் போய்விடும் என்று கருதியவர்கள் அதற்கான குரல்களை முதலில் கலை இலக்கியத்
துறையில் பதிவுசெய்ததன் தொடர்ச்சியாகவே திராவிட இயக்க அரசியலைப் புரிந்துகொள்ள
வேண்டும். திராவிட இயக்கங்களின் முன்னோடியான நீதிக் கட்சியின் ஆயுதம்
பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்றாலும் திராவிடர் கழகமாகவும் திராவிட முன்னேற்றக்
கழகமாகவும் மாறித் தமிழகத்தில் வெகுமக்கள் அரசியல் தளத்தைக் கைப்பற்றியதும் ஆட்சி
அதிகாரத்தைச் சுவைத்துக் கொண்டிருப்பதும் அவ்வியக்கத்தினர் கையிலெடுத்த பண்பாட்டு
ஆயுதங்களின் தெரிவுகளால்தான். சமஸ்கிருத எதிர்ப்பு, சமஸ்கிருதத்தைப் புனித மொழியாக
முன்னிறுத்திய பார்ப்பனர் எதிர்ப்பு, பார்ப்பன மேலாண்மைக்கு வழிவகுத்த இந்துக்
கடவுள் பிம்பங்கள்மீதான வெறுப்பு என்பதில் தொடங்கி, இந்தி எதிர்ப்பையும்
கையிலெடுத்தபோதுதான் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலை நெருங்க முடிந்தது.
ஆட்சி அதிகாரத்தை நெருங்கியபின், ஆயுதமாகப் பயன்பட்ட எல்லாவகையான
எதிர்ப்புகளையும் கைவிட்டதோடு அதன் மறுதலையாகச் செய்திருக்க வேண்டிய தமிழ் வளர்ச்சி,
தமிழர் முன்னேற்றம், தமிழ்ப் பண்பாட்டைக் கட்டியெழுப்புதல் முதலான தமிழ் அடையாளங்கள்
எதனையும் பற்றிய அக்கறைகளுக்குள் திராவிட இயக்கங்கள் செல்லவில்லை.
தமிழ்
மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை இலக்கியங்கள் ஆகியவற்றை நவீனப்படுத்தி, உலகக்
கலை இலக்கிய வளர்ச்சியோடும் சொல்லாடல்களோடும் உறவுகொள்ளத்தக்க மொழியாகத் தமிழை
மாற்றுவதைப் பற்றிய அக்கறைகள் இங்கு முன்மொழியப்படவில்லை. அதற்கு மாறாகப்
பின்நோக்கிச் செல்வதைப் பற்றிய பேச்சுகளே இலக்கிய வளர்ச்சியாகவும் பண்பாட்டு
வளர்ச்சியாகவும் முன்னிறுத்தப்பட்டன. தாங்கள் முன்வைத்த பண்பாட்டு அடையாளங்களின்
இலக்குகள் எவை என்பதிலும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இத்தகையன என்பதிலும்
தெளிவின்மை ஏற்படும்போது நகர முடியாமை தவிர்க்க இயலாத ஒன்று. பண்பாட்டுத் தளத்தில்
இலக்குகள் இல்லாதது போலவே அரசியல், பொருளாதாரத்தளத்திலும் தனித்துவமான அடையாளங்களையோ
இலக்குகளையோகூடத் திராவிட இயக்கங்கள் முன்வைத்ததில்லை. அதனால்தான் தமிழகத்தின்
நிலவியல் சூழலைக் கவனத்தில் கொண்டதாகத் திட்டங்களை முன்வைக்காமல் திரள்மக்களை வாக்கு
வங்கிகளாக மாற்றிக் கட்டமைக்கும் அரசியல் முன்மொழிவுகளையே முன்வைக்க நேர்கிறது.
இந்த அவலம் ஐந்தாண்டுக்கொருமுறை மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து
வாக்குகளைக் கவர்வதற்கான இலவசங்கள் சார்ந்த திட்டங்களின் பெருக்கத்தை
இந்தவிதமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுந்த தலித் எழுச்சியைப் பேசத்
தொடங்கிவிட்டு அந்த நூற்றாண்டின் முன்பாதியில் தோன்றிய திராவிட இயக்க எழுச்சியைப்
பற்றிப் பேசுவதற்குக் காரணம் இரண்டுக்கும் ஒற்றுமை அதிகமாகவும் வேறுபாடுகள்
குறைவாகவும் இருக்கின்றன என்பதுதான்.
இயக்கத்திற்கான கட்டமைப்பு, அதன் தலைமை குறித்த பிம்ப உருவாக்கம், அரசியலற்ற
திரளைத் தலைமைகளுடைய பேச்சு மூலமாக மட்டுமே வழிநடத்துதல், வெகுமக்கள் ஊடகங்களை
உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் தீர்மானமற்ற ஈடுபாடு, குறுகியகால லாபத்தை
மையப்படுத்தி அணி மாறுதல் எனப் பல ஒற்றுமைகள் தலித் இயக்கங்களுக்கும் திராவிட
இயக்கத்துக்கும் காணப்படுகின்றன என்றாலும் அதன் தோற்ற காலத்தில் குறிப்பான
வேறுபாட்டோடு கிளர்ந்தெழுந்தது தலித் இயக்கம். ஒட்டுமொத்தத் தமிழர்களின் வாழ்வுரிமை
பற்றிய அக்கறைகளை வெளிப்படுத்துவதாகப் பாவனை செய்ததில்லை தலித் இயக்கங்கள். இந்து
சமயத்தின் சமூகக் கட்டமைப்பான சாதியத்தின் மீது கறாரான விமர்சனத்தையும் அதனைப்
புரட்டிப்போடும் நோக்கங்களையும் முன்மொழிந்த தலித் இயக்கங்கள், அதற்கு முந்திய
இடஒதுக்கீட்டு அரசியலிலிருந்து குறிப்பான விலகலை முதன்மைப்படுத்தின என்பதை நாம்
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படியரு நெருக்கடியைத் தமிழ்நாட்டின்
தென்மாவட்டக் கலவரங்களும் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் அறிவார்ந்த சூழலும்
உருவாக்கித்தந்தன.
'கற்பி; ஒன்றுசேர்; போராடு' என்ற அம்பேத்கரின் வாசகங்களைச் சொன்னதோடு 'அடங்க மறு
; அத்து மீறு; கலகம் செய்' என்ற முழக்கங்களையும் தீவிரமாக முன்வைத்து வெளிப்பட்டபோது,
அதற்கு முன்பிருந்த சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் பின்தங்கின.
தலித் இயக்கங்கள் ஏற்பாடுசெய்த மாநாடுகள், கருத்தரங்குகள், கலை விழாக்கள் போன்ற
பருண்மையான வெளிப்பாடுகளும் எழுத்து வடிவில் வந்த படைப்புகளும் தீண்டாமை ஒழிப்பை
முதன்மையாகக் கொண்டு நிலவியல் வெளியிலும் பண்பாட்டு வெளியிலும் தலித்துகளுக்கு
மறுக்கப்பட்ட இடங்களைக் கைப்பற்றுவதை நோக்கி நகர்ந்ததைப் பாரதூரமாகவே காண முடிந்தது.
குறிப்பாகக்
கலை இலக்கிய வெளியில் மற்ற எல்லாப் போக்குகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டுத்
தவிர்க்க முடியாத ஒன்றாக தலித் கலை இலக்கியங்கள் வரிசை கட்டின. தலித் கவிதை, தலித்
நாடகம், தலித் புனைகதைகள், தலித் விமர்சனம் என அதன் வீச்சை இரண்டாயிரத்தின் கடைசிப்
பத்தாண்டுகளின் சிறுபத்திரிகைத் தொகுப்புகளை வாசிப்பவர்கள் உணர முடியும். தலித்துகள்
எழுதுவது தலித் இலக்கியம் என்ற நிலை மாறி, தலித் எழுத்துக்களை தலித்துகளே எழுத
வேண்டும் என்ற கருத்து முழக்கமாக்கப்பட்டதின் எதிர்மறை விளைவுகளை இந்த நேரத்தில்
விவாதிக்க வேண்டியுள்ளது. இந்திய சாதியத்தின் கருத்தியல் பரிமாணமான ஒதுக்கிவைத்தலும்
ஒதுங்கிநிற்றலும் தீவிரமாகச் செயல்பட அந்த முழக்கம் காரணமாகிவிட்டதோ என்ற ஐயம்
தோன்றுகிறது. எல்லாவற்றையும் சந்தேகப்படுதல் தேவை என்ற போதிலும் நம்பிக்கையின்மையின்
தொடர்ச்சியால் ஆதரவு சக்திகளும் ஜனநாயகக் குரல்களும் தலித்தியச்
செயல்பாடுகளிலிருந்து விலகிச்சென்றன என்பதைக் கவனத்தில் கொண்டு மறுபரிசீலனைகள்
செய்யப்படும் திறப்புகள் நடைபெற்றிருக்க வேண்டும். அத்திறப்பைச் செய்ய வேண்டிய
அமைப்புகளே உள்முரண்பாடுகளைச் சரிசெய்ய முடியாமல் தவிக்கும் பிளவுண்ட கூறுகளாகவும்
மையநீரோட்ட அரசியலில் கலக்கும் வேகத்தோடும் இருந்ததால் அத்தகைய மறு பரிசீலனைகள்
சாத்தியமாகாமல் போய்விட்டன.
இதேபோல் தலித் இயக்கங்களும் இலக்கியவாதிகளும் மறுபரிசீலனைசெய்ய வேண்டிய புள்ளிகள்
பலவும் உள்ளன. வரலாற்றைப் பயன்படுத்துவது, மத அடையாளத்தைக் கைவிடுவது அல்லது
உருவாக்கிக்கொள்வது பற்றியும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மாறிவரும்
உலகமயச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்துவதையும் அதற்கேற்ப மனிதவளமாக மாறுவதையும்
பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. கிடைக்கின்ற கல்வி, தேவையான கல்வியா என்ற
கேள்வியைக் கேட்டு நிராகரிக்கத்தக்க கல்வி என்றால் கைவிடவும் தயாராக வேண்டியுள்ளது.
இடஒதுக்கீடு என்பது அளிக்கப்பட வேண்டிய உரிமை என்பதாகப் பார்க்கப்படாமல் பெறவேண்டிய
சலுகை என்பதாக நம்பவைக்கப்பட்ட வரலாற்றை மறுக்க வேண்டியுள்ளது. அரசியல் சுதந்திரம்
அடைந்த காலத்திற்கும் முன்பிருந்தே நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீடு இலக்கியப்
படைப்பின் மையமாகாமல் ஒதுங்கிப்போன கருப்பொருள்களுள் முதன்மையானது என்பதைத் தமிழ்
இலக்கியப்பரப்பை வாசிப்பவர்கள் உணரக்கூடும். இப்படிச் சொல்வதன் நோக்கம் தலித்
இயக்கங்கள் இடஒதுக்கீட்டைக் கைவிட வேண்டும் என்பதல்ல, அது ஒன்றே சர்வரோக நிவாரணி
என்ற கருத்தினைக் கைவிட வேண்டும் என்பதுதான்.
இத்தகைய விவாதங்களை எல்லாம் நடத்தித் தனியான அடையாளங்களை உருவாக்கிக்காட்ட
முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அறிவுஜீவிகளையும் படைப்பாளிகளையும்
கொண்டிருந்த இயக்கமாகத் தோற்றம்தந்த தலித் எழுச்சி 2000க்குப் பின் திருவிழாக்
கூட்டத்தில் திசை தப்பிய குழந்தையாக நிற்கிறது என்பதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் அரசியல் என்னும் திருவிழாவிற்குள் திராவிட இயக்கம் திசைமாறியதுபோல தலித்
இயக்கங்களும் திசை குழம்பி நிற்கின்றன. அந்தத் திசைக் குழப்பம் திரும்பவும்
இடஒதுக்கீடு என்னும் மாயமானை மட்டும் விரட்டும் கவனத்தை உண்டாக்கிவிடும்
சாத்தியங்கள் நிறைய உள்ளன. |