Google   www kalachuvadu.com

தலையங்கம்
முடிவின்றித் தொடரும் துயரம்
ஈழப் படுகொலையின் 25வது ஆண்டை இலங்கை இனவெறி அரசு மிகக் கொடூரமான முறையில் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கவும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கவும் நடத்தப்படும் போர் எனக் கூறிக்கொண்டு ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்றுகுவிக்கிறது இலங்கை ராணுவம். 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்துவரும் தமிழ் மக்கள் இப்போது நடைபெற்றுவரும் தாக்குதல்களால் நிலைகுலைந்து மற்றுமொரு இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். 2001, செப்டம்பர் 11க்குப் பிறகு ஈழத் தமிழர்களைச் சந்தேகக்கண்கொண்டு நோக்கும் சர்வதேசச் சமுதாயம் புகலிடம் நாடிவரும் ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கத் தயங்கும் இச்சூழலில் தமிழக மக்களிடமிருந்து ஆதரவான குரல்கள் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.

1991இல் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் இலங்கை இனச் சிக்கல்களைக் குறித்து வெளியிடப்படும் மிகவும் சாதாரணமான ஒரு கருத்துங்கூட ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவானதாகப் பார்க்கப்பட்டது. தமிழக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் சிறிதும் கருணையற்ற முறையில் நடத்தப்பட்டனர். சர்வதேசச் சட்டங்களைப் பொருட்படுத்தாமல் அகதிகளைத் துன்புறுத்தியது அப்போதைய தமிழகக் காவல் துறை. ராஜீவ் காந்தி கொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியிலமர்ந்த ஜெயலலிதா அரசு ஈழத் தமிழர்களின் மீது வெறுப்பைக் கக்கியது. அகதி முகாம்களில் வாழும் தமிழர்களைப் பிச்சைக்காரர்களாகவும் பாலியல் தொழிலாளர்களாகவும் மாற்றியது அவரது அரசின் அணுகுமுறை.

தஞ்சையில் 1994இல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த தமிழறிஞர்களுங்கூடப் பயங்கரவாதிகளாகவும் புலிகள் ஆதரவாளர்களாகவும் பார்க்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்கவிடாமல் திருப்பியனுப்பப்பட்டனர். அவர்களில் பலர் புலிகளின் அரசியலோடும் வழிமுறைகளோடும் உடன்பாடற்றவர்கள். ஜெயலலிதா அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களைப் புகலற்றவர்களாக்கியது. ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்னும் அக்கறையுடன் செயல்பட்ட சர்வதேச மனித உரிமை ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரலெழுப்புவதற்குக்கூட இயலாதபடி தமிழ்ச் சமூகத்தின் குரல்வளையை நெரித்திருந்தது ஜெயலலிதா அரசு.

தடா, பொடா போன்ற தீவிரவாதத் தடுப்புச் சட்டங்களைக்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜனநாயகவாதிகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்திக்கொண்டார் ஜெயலலிதா. ஈழத் தமிழர்களின் மீது கருணை காட்டிய குற்றத்துக்காக நெடுமாறன், வைகோ போன்றவர்களைப் பொடாச் சட்டத்தின் கீழ் சிறைவைத்த பெருமைகொண்ட அவருக்கு ஆட்சிப் பொறுப்பில் இல்லாதபோதுங்கூட ஈழத் தமிழர் எதிர்ப்புநிலையைக் கைவிட முடியவில்லை. சென்ற ஆண்டு புலிகள் அமைப்பின் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டபோது கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை அவர் எதிர்த்ததற்கு ஈழத் தமிழர்களின் மீது கொண்டுள்ள வெறுப்புதான் முதன்மையான காரணம். எந்தவொரு ஜனநாயக நடவடிக்கையையும் பயங்கரவாதமாகப் பார்க்கும் அவரது பாசிச மனோபாவத்திற்குத¢ தமிழக மக்களிடமிருந்து ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத்தியதில் பெரும் பங்குண்டு.

தற்போதைய இலங்கை இனவெறி அரசு தமிழர்கள்மீது நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பு ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திமுகவோடு தமக்குள்ள முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

வழக்கம்போல் தமிழ்த் திரைப்படத் துறையினரும் இப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். கடந்த 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் திரைப்படக் கலைஞர்கள் நடத்திய பேரணி மக்கள் கவனத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அரசுக்கு நடுவணரசு செய்துவரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என முதல்வர் கோரியுள்ளார். அதை வலியுறுத்திப் பிரதமருக்குத் தந்திகள் அனுப்ப வேண்டுமென முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று லட்சக்கணக்கானவர்கள் தந்தி அனுப்பியிருக்கிறார்கள். கட்சிகளின் கரிசனங்களுக்குப் பின்னால் அரசியல் ஆதாயங்களும் தேர்தல் கணக்குகளும் இருக்கலாம்தான். கண்டன ஆர்ப்பாட்டங்கள், தந்திகள், உண்ணா விரதங்கள், மனிதச் சங்கிலிகள் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் தனிமைப்பட்டுக்கிடந்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கு அரசும் தமிழக மக்களும் மேற்கொண்டுவரும் இது போன்ற நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டக்கூடும். தங்கள் உணர்வுகளை முற்றாகப் புறக்கணிக்க முடியாது என்பதை இலங்கை அரசுக்குத் தமிழக மக்களின் எதிர்ப்புக் குரல்கள் உணர்த்துமெனில் அது ஒரு முக்கியமான வெற்றிதான்.

இந்திய மண்ணில் ஈழத¢ தமிழர்களுக்கு ஆதரவாக உருவாகிவரும் குரல்கள் இலங்கை அரசுக்கு ஒருபோதும் நல்ல செய்தியாக இருக்கப்போவதில்லை. அப்பாவித் தமிழர்களைக் கொன்றொழிப்பதில் அது இனியும் மனம்போன போக்கில் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை உணர்த்த வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உண்டு. அரை நூற்றாண்டாக முடிவின்றித் தொடரும் ஈழத் தமிழர்களின் துயரத்திற்குத் தீர்வு காணவும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவமளிக்கவும் வேண்டிய கட்டாயத்தை இலங்கை அரசுக்கு உருவாக்கக்கூடுமெனில் தமிழகத்தில் தற்போது நடந்துவரும் இந்தப் போராட்டங்கள் அர்த்தமுடையவையாகும்.

உள்ளடக்கம்