|
மார்க்சியத்தைக் கீழை - மேலை மார்க்சியம் என்று நாகராஜன் பிரிவுபடுத்திப்
பேசிவருவது உண்மையில் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க உதவுமா என்னும் கேள்வி எழுகிறது.
சமுதாயக் கோட்பாடுகள் பல உண்டு என்றாலும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் சமூகத்தை
அணுகிப் புரிந்துகொள்ள முயலும்போது பல விசயங்கள் தெளிவுபடுகின்றன. சமுதாயம் என்பது
ஒரு அமைப்பு. மனிதன் அந்த அமைப்பின் வழியாகத்தான் வாழ்கிறான். இந்தச் சமுதாய
அமைப்பில் பொருளாதார அமைப்பு, அரசியல் அமைப்பு, கலாச்சார அமைப்பு எனப் பல உள்ளன. இவை
ஒன்றுக்கொன்று தொடர்பும் பாதிப்பும் கொண்டு செயல்படுகின்றன. பொருளாதார அமைப்பை
அடிக்கட்டுமானம் என்றும் அரசியல், கலாச்சாரம், கருத்தியல் ஆகியவற்றாலான அமைப்பை
மேல்கட்டுமானம் என்றும் கார்ல் மார்க்ஸ் பார்க்கிறார். பொருள் உற்பத்தி நடவடிக்கையே
மனிதனின் பிரதானச் செயல்பாடு. அதை அவர் அடிக்கட்டுமானச் செயல் என்கிறார்.
மேல்கட்டுமானம், அடிக்கட்டுமானம் இரண்டிற்குமிடையே உள்ள உறவு இயங்கியல் தன்மை
கொண்டது என்றும் உணர்த்துகிறார். மனிதன் தன்னை உழைப்பின் வழியே கட்டமைத்துக் கொண்டு
வருகிறான். அதுவே வரலாறு என்றும் மார்க்ஸ் கூறுகிறார்.
மனிதன் சமுதாய அமைப்பின் வழியாகத்தான் வாழ்கிறான் என்பது உண்மை என்றாலும், அவனது
உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டுவந்து மனிதநேயம்மிக்க வாழ்க்கைக்கு அந்தச் சமுதாய
அமைப்பு வழிவகுக்கிறதா என்பது தான் கேள்வி. முதலாளிய அமைப்பான மேற்கத்திய சமுதாயம்
மனிதன் தன் ஆற்றலை அனுபவிக்க வழிவகுக்கவில்லை. மாறாக, உற்பத்திக்குத் தேவையான
உழைப்பைத் தரும் உயிரியாக மாற்றப்படுகிறான் என்பதை உணர்ந்த சிந்தனையாளர்களில்
மார்க்ஸ§ம் ஒருவர். மனிதன் அந்நியப்படுத்தப்படும் தளத்தை மார்க்ஸ்
சுட்டிக்காட்டுகிறார். எனவே, அதற்குக் காரணமான பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டிய
அவசியத்தையும் அந்த இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டியதையும் உணர்த்துகிறார். இங்கும்
அவர் இயங்கியல் நிலையிலிருந்துதான் பேசுகிறார். இவ்வாறுதான் தத்துவங்கள் உலகை
விளக்கி வந்துள்ளன. ஆனால், இப்போது அதை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்
என்கிறார்.
மார்க்ஸின் கோட்பாட்டில் பல இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. 'எல்லாவற்றையும்
பேசிவிட்டேன். இனி நீங்கள் செயல்படுங்கள்' எனக் கூறும் மதவாதியல்ல மார்க்ஸ். அவர்
எழுத்துக்களில் கலாச்சாரம் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. மார்க்சிய நோக்கில்
கலாச்சாரம் பற்றிய சிந்தனைகள் இப்போது நிறைய வெளிப்பட்டுவருகின்றன. கலாச்சாரம்
என்பது அர்த்தங்கள், திறமைகளின் குவியல் என்னும் மானுடவியல் நோக்கு பின்னுக்குத்
தள்ளப்பட்டு, அதிகாரத்துக்கான போராட்டங்கள் அங்கும் நடைபெறும், நடைபெறுகின்றன
என்னும் கோட்பாடு கலாச்சாரச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டாக, தமிழ்ச்சூழலில் அவ்வப்போது தோன்றி மறையும் சிற்றிதழ்களை ஏதோ ஒரு
சிலரின் அரிப்பு எனப் பார்ப்பது தனிமனிதவாதத்தின் பிரதிபலிப்பு. மாறாகச்
சிற்றிதழ்கள் கலாச்சாரத் தளத்தில் வெடிக்கும் போராட்டங்கள், அவற்றுக்குப்
பின்புலமாக உன்னதம் பற்றிய பார்வைகளும் மதிப்பீடுகளும் செயல்படுகின்றன எனப்
பார்த்தால் சிற்றிதழ்களின் சீரிய பங்களிப்பு விளங்கும்.
கலாச்சாரம் பற்றிய ஆய்வுகளில் மிகப் பெரிய உந்துதலைத் தந்தது கிராம்ஷியின் மேலாண்மை
என்னும் கருத்தாக்கம். கிராம்ஷியின் மார்க்ஸிய விளக்கங்களை மேலைமார்க்சியம் என்று
கூறுவார்கள். இவரைப் போன்றே இன்னும் சிலரும் மேலை மார்க்சியர்கள் என
அறியப்படுகின்றனர். திரு. நாகராஜன் மனத்தில்கொண்டுள்ளது, 'மார்¢க்சியம் ஒரு
அறிவியல்' எனக் கூறிக்கொண்டு கார்ல் கௌட்ஸ்கி, ஜார்ஜ் பிலக்கனாவ் ஆகியோர் முன்வைத்த
வறட்டு மார்க்சியத்தைத்தான். அந்த வறட்டு மார்க்சியத்தை நிராகரித்துவிட்டு மனிதச்
செயல்பாட்டுக்கான வெளி (space) உடைய மார்க்சிய விளக்கத்தை கிராம்ஷி முன்வைத்தார்.
கிராம்ஷி போன்றோரின் எதிர்வினை இரண்டாம் அகிலம் முன் நிறுத்திய (கௌட்ஸ்கி)
மார்க்சியத்துக்கும் சோவியத் முன்வைத்த அதிகாரபூர்வ (official) மார்க்சியத்துக்கும்
எதிரானது. நாகராஜன் இதைக் கவனித்ததாக இவர் கட்டுரைகளிலிருந்து தெரியவில்லை.
மேலை-கீழை என்னும் இவர் பார்வை இந்திய மரபை மேலெடுத்துச் செல்வதைவிட அதைக் காக்கவே
பயன்படலாம். மேலும், மெய்காண்முறை பற்றிய நாகராஜனின் கருத்து எந்த அளவிற்கு
ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதும் ஐயத்திற்குரியதே.
இயற்கை விஞ்ஞானம் பின்பற்றும் positivism சமூக மெய்மையை அறிய உதவாது என்பது
மார்க்ஸின் உறுதியான நிலைப்பாடு. அதனாலேயே அகஸ்ட் காம்ட் போன்றவர்களை அவர்
விமர்சித்தார். மார்க்ஸ் மேற்கொண்டது இயங்கியல் முறை (dialectical method).
வரலாற்றில் சமூகத்தின் இயக்கத்தையும் மாற்றத்தையும் புரிந்துகொள்ள இயங்கியல் தான்
சரியான வழி என்று அதை மிகவும் சிலாகித்து மார்க்ஸ் எங்கல்ஸ§க்குக் கடிதம் எழுதினார்
(Bottomore). ஒரு விசயத்தைப் பற்றிய அறிதல் எப்படிச் சரியானது எனத்
தெரிந்துகொள்வது? அந்த அறிதலின் அடிப்படையில் செயல்படும்போது கிடைக்கும் பலனை
வைத்தே அதைக் கணிக்க முடியும். எனவேதான் அறிதலைவிட அதன் அடிப்படையிலான செயல்பாடு
இன்னும் மேலான புரிதலுக்கு இட்டுச்செல்லும் என்றார். அறிதல் பற்றிய மார்க்ஸின்
இந்தக் கோட்பாடே Theory of Praxis எனப்படுகிறது.
நாகராஜன் மிகவும் மேலோட்டமாக அன்பு வழி, அன்பு காட்டு, தொண்டுசெய், மக்களை நேசி
போன்றவற்றை மாவோவிடமிருந்து எடுத்து அவை வைணவத்தில் இருந்தது எனக் கூறிக் கீழை
மார்க்சியம் எனச் சுருக்குகிறார். இந்த அணுகல் மார்க்சியத்தில் இல்லை என்கிறார்.
உண்மையில் 1920களில் கிராம்ஷி மேலாண்மை (hegemony) என்னும் கருத்தாக்கத்தை
முன்வைத்துப் பேசும்போது, மேலாண்மையை அரசு மேற்கொள்ளும் கட்டாயம், வன்முறை
ஆகியவற்றால் மட்டுமே கட்டமைக்க முடியாது. சிவில் சமூகத்தின் ஒப்புதலைப்
பெறும்போதுதான் ஒரு அதிகாரக் கூட்டம் தன் மேலாண்மையைப் பரவலாக்க முடியும்.
அதற்காகப் பல குழுக்களை வென்றெடுக்க அந்த அதிகாரக் கூட்டம் சதா முயலும் என்கிறார்.
அதே சமயம் புரட்சிக்குத் தன்னைத் தயார்செய்து கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சியும்
எதிர்-மேலாண்மையை (counter-hegemony) ஏற்படுத்த உழைக்க வேண்டும். அதாவது, கட்சி
பரந்துபட்ட மக்களுக்கு அறிவு மற்றும் ஒழுக்கத் (intellectual and moral) தலைமையைத்
தர வேண்டும். இந்த ஒழுக்கத் தலைமை என்பதில் அகந்தையை ஒழி, தொண்டுசெய் என்பவை
அடங்குமல்லவா?
நாகராஜன் இந்த விஷயங்களை மனத்தில் கொள்ள வேண்டும். நாம் மெய்காண்முறையில் அன்பைக்
கலந்து அணுகி மெய்மையைக் கண்டோம் எனக் கூறிப் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டாம்.
வைணவமும் பிறவும் தரிசித்தது எந்த மெய்மையை? அந்தத் தரிசனத்தின் அடிப்படையில்
செயல்பட்டது யாரை நோக்கி? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் சமுதாயத்திலேயே உள்ள
மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தீண்டத்தகாதவர்கள் என்று நம் மெய்காண்முறை
ஒதுக்கிவைத்துவிட்டதே? இந்த மெய்காண்முறை வகுத்துக்கொடுத்த விடுதலையின் பாதை எது?
மேற்கத்திய மார்க்சியத்தில் சில கூறுகள் இல்லை, நம் மரபில், தரிசனங்களில் அவை உள்ளன
என்னும் கண்டுபிடிப்புகள் நம்மைச் செயலூக்கிகளாக மாற்றவில்லை என்பதை நம் வரலாறு
காட்டுகிறது. அதற்கான கோட்பாட்டை இதுவரை உருவாக்கவில்லை என்பது நம்முடைய குறை.
அதனைப் பிறர்மேல் சுமத்துவது எப்படிச் சரியாகும்?
|