Google   www kalachuvadu.com

மதிப்புரை
செயலின் தீவிரம் சுமக்கும் மொழியின் எளிமை
அதியன் கௌரி

காந்தியச் சிந்தனைகளில் பற்றுக்கொண்டு கிராமக் களப்பணிகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கிய இந்திரா, தன் கிராமத்தில் ஆதிக்கச் சக்திகளால் தலித் மக்களுக்குக் குடிதண்ணீர் மறுக்கப்பட, அதை நிவர்த்திக்கும் சமூகக் கடமை இருப்பதை உணர்கிறார். அரசியல் அதிகாரம் மூலம் இப்பிரச்சினையைக் களைய முனைந்து, பல இடர்களுக்கும் தொடர் தோல்விகளுக்கும் பிறகு அதில் வெற்றிபெறுகிறார். இந்தப் போராட்டத்தின் சாரத்தைத் தன் பார்வையில் பங்கேற்பாளராகவும் முன்னெடுத்துச்சென்றவர் என்ற முறையிலும் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புற வர்ணனையில் ஆரம்பிக்கின்றது முதல் அத்தியாயம். கவுன்சிலர் பதவிக்குத் தேர்தல், போட்டியிடல், வெற்றிக்காகத் திட்டமிடல், ஊர்ப் பிரச்சினைகளை அறிதல், மக்களிடம் நெருங்குதல், வெற்றிபெறுதல், முதல் கவுன்சிலர்கள் கூட்டம், ஊராட்சி உறுப்பினர்களின் அதிகாரப் பகிர்வு வரையறை என்று ஒரு மிதமான போக்கில் செல்லும் இந்தப் பதிவு இதன் முக்கியப் பிரச்சினையான தலித் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் பற்றிய ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து வேறு தளத்தில் இயங்குகிறது.

குடிநீருக்காகச் சகல துயரங்களையும் சந்திக்கின்றனர் தலித் மக்கள். 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற வீறுகொண்டு எழுந்த மக்களை இதுவரை இருந்துவரும் விதி சோறுகொண்டு அடித்து அமரச்செய்கிறது. தலித் காலனிக்குக் குடிதண்ணீர் கொண்டுசெல்லும் முயற்சியில் இந்திராவுக்குத் தோல்வி மேல் தோல்வி வர, தன் இயலாமையை நினைத்து வெட்கம் கொள்கிறார். உணர்ச்சிகளின் மேலீட்டால் கண்ணீர்விட்டு அழுகிறார்.

பொதுவாக அனுபவப் பதிவை எழுதுகிறவர்கள் அடிநாதமாய்த் தங்களின் தீரங்களை மறைமுகமாக ஆங்காங்கே பதிவுசெய்துகொண்டு செல்வார்கள். ஆனால் இந்தப் படைப்பின் வழியெங்கும் அவர் தன் இயலாமையை, தோல்விகளை, அச்சத்தை, சறுக்கல்களை, சூழ்நிலைக் கைதியாய்த் தான் ஆக்கப்பட்டதை, தேர்ந்தெடுத்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டதை, பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட பலகீனமான தருணங்களை எவ்விதப் பாசாங்குமின்றிப் படைப்பில் பதிவுசெய்திருக்கிறார். இந்த நேர்மையே படைப்பை வாசக அனுபவத்திற்கு நெருக்கத்தில் வைக்கின்றது.

இந்திரா தன் போராட்டக் காலத்தில் பிரச்சினையின் உச்சத்தில் தனிநபராக உண்ணாவிரதம் இருக்கிறார். அங்கு ஆதிக்கச் சாதியினர் குழுமியிருக்கின்றனர். தலித் இளைஞர்கள் இவரது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகத் தம் மக்களையும் ஈடுபடவைக்க முனைகின்றனர். ஆனால் அவர் அதைத் தடுத்துவிடுகிறார். காரணம் தலித் மக்களும் இங்கு கூடினால் பிரச்சினை வேறு திசையில் பயணிக்கக்கூடும். உண்ணாவிரதத்தின் நோக்கம் சிதைக்கப்படும். அதுமட்டுமின்றி தலித் மக்கள்மேல் ஆதிக்கச் சாதியினருக்குத் தீராத வன்மம் கூடும், இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற்றாலும் தொடர்ந்து வேறு விதங்களில் அந்த வன்மம் செயல்படும் என்று கருதி அவர்களை அங்கு வரவிடாமல் தடுக்கிறார். இறுதியில் இந்திராவின் உறுதி தலித் மக்களுக்கு வெற்றியை ஈட்டித்தருகிறது.

இந்திராவின் மொழிநடை லகுவாக இந்தப் படைப்பைத் தாங்கிக்கொண்டு பயணிக்கின்றது. சரளமான, மனத்துக்கு இணக்கமான எளிய நடை இந்தப் பதிவின் உண்மைத் தன்மையை உள்ளது உள்ளபடி உணரச்செய்கிறது. சில இடங்களில் மொழி இந்த அனுபவப் பதிவைப் படைப்பிலக்கியமாக்கிவிடும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

இந்தப் படைப்பின் மூலம் இந்திரா தலித் மக்களின் துயரங்களை, கதறல்களை அதன் வீரியம் குறையாமல் எடுத்துரைக்கிறார். இது நாவலாக ஆக்கப்பட்டிருப்பின் இன்னும்கூட வீரியம் கொண்டிருக்கக்கூடும். இந்தப் படைப்புக்குள் மூன்று சக்திகள் இயங்குகின்றன. ஒன்று பாதிக்கப்பட்ட தலித் மக்கள். இரண்டு அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் உயர்சாதியினர். இந்த இரண்டிற்கும் இடையில் எரியும் வீட்டில் பிடுங்கும் குணம்கொண்ட அரசியல் அதிகார வர்க்கம். இதில் ஒவ்வொரு இயங்கு சக்திகளின் பார்வை வழியே இந்தப் பிரச்சினையைக் கொண்டுசென்றிருந்தால் தலித் மக்களின் துயரங்கள் அவர்களின் வாயிலாகவே சொல்லப்பட்டிருக்கும் சாத்தியங்கள் ஏற்பட்டு அதன் அதிர்வுகள் கூடுதலாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனாலும் இவையத்த நேர்மை நிலை அனுபவப் பதிவுகள் சாதியமெனும் விஷ விருட்சத்தின் வேர்களில் விடப்படும் கொதிநீராய்த் தொடர்ந்து ஊற்றப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாசக விருப்பமாக இருக்கிறது.

உள்ளடக்கம்