|
இமையத்தின் எதிர்வினை. ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளனாக எழுதியிருக்கிறார். தான்
ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளன் என்பதால் சிறுபத்திரிகைகளின் தவறுகளைக்
கவனப்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறார். அவ்வாறு அவர் செயல்படுவதற்கு அவரது
எழுத்து வாழ்க்கையில் முதல் சந்தர்ப்பம் 'காலச்சுவடு' வழி ஏற்பட்டிருக்கிறது. மிக்க
மகிழ்ச்சி. கடிதத்தில் எழுத்தாளனின் குரல் கேட்கவில்லை. தி.மு.க. பிரமுகரின் குரலே
கேட்கிறது.
'காலச்சுவடுக்குத் தடை' உண்மைக்கு மாறானது என்பது அவரது முதல் கண்டுபிடிப்பு.
கடையில் காசு கொடுத்து இதழை வாங்கும் வாசகனுக்கு இதழை அச்சிட, விநியோகிக்கத்
தடையில்லை என்பது தெரியாது. 'காலச்சுவடுக்குத் தடை' பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு
பக்கக் குறிப்பைப் படித்தாலும் புரியாது. இப்போது இமையம் தெளிவுபடுத்திவிட்டார்.
அவருக்கு நன்றி.
கனிமொழி கருணாநிதியை இப்பிரச்சினையில் தலையிட்டு நேர்செய்ய நாங்கள் கோரவில்லை.
கார்த்திக் சிதம்பரத்திற்கும் அவருக்கும் இணைத்து அனுப்பப்பட்ட கடிதம் 'கருத்து'
அமைப்பாளர்கள் என்ற முறையில் அனுப்பப்பட்டது. 'கருத்து' அமைப்பாளர்கள் கருத்துச்
சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போம் என்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு 'கருத்து'
இயங்கும் என்றும் அறிவித்திருந்தார்கள். 'கருத்து' அமைப்பு சார்பாக, 'காலச்சுவ'டின்
கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிடுங்கள் என்பது மட்டுமே
கோரிக்கை. எதிர்வினையாற்றிய எழுத்தாளர்கள் இதையும் தாண்டி எதிர்பார்த்திருக்கலாம்.
எம்.பி. பதவியின் அதிகாரத்திற்கு அப்பால் ஒரு இம்மியும் வரம்புமீறிச் செயல்படாதவர்
அவர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது என்று கருதி அமைதி அடைவோம்.
ஊடகத் துறைமீதான விமர்சனத்திற்குக் 'காலச்சுவடு' தமிழில் பிரதான களமாக
இருந்திருக்கிறது. சன் குழும நடவடிக்கைகள் பற்றிய முதல் விமர்சனமும் ஆழமான
விமர்சனமும் 'காலச்சுவ'டில் வெளிவந்திருக்கின்றன. மாறன்கள் தி.மு.க.விலிருந்து
விலக்கப்பட்டு நிற்கும்போது எழுதிய விமர்சனங்கள் அல்ல அவை. அதிகாரத்தின் உச்சியில்
அவர்கள் இருக்கும்போது எழுதப்பட்டவை. என்னுடைய 'பிறக்கும் ஒரு புது அழகு'
நூலுக்குக் கடந்த மாத 'தீராநதி'யில் விமர்சனம் எழுதிய இமையம் அதில் இடம்பெற்றுள்ள
மேற்படி விமர்சனங்களைப் படித்திருப்பார் என்றே நம்புகிறேன். கடந்த இதழில் 'தினகரன்'
வழக்குத் தொடர்ந்ததை வரவேற்றபோதும் 'ஊடக சுதந்திரத்தைக் காப்பதற்குப் பேர்போன
குழுமம் அல்ல சன் குழுமம்' என்ற விமர்சனத்துடனேயே வரவேற்றிருந்தோம். இப்போதும்
தி.மு.க.வை எதிர்ப்பதற்காக சன் குழுமத்திடம் பல்லைக் காட்டிக்கொண்டு போய்
நிற்கவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை அரசியல் தளத்தில் மட்டுமல்ல
பண்பாட்டுத் தளத்திலும் கடைபிடிப்பவர்களுக்கு இந்த அணுகுமுறை எரிச்சலையே தரும்.
எழுதப்பட்டதை, படித்ததை, இப்போது அறியாதது போலப் பாசாங்காக எழுத வேண்டிய
நிர்ப்பந்தம் இமையத்திற்கு.
'காலச்சுவடு' நூலகத் துறையை நம்பிச் செயல்படவில்லை. 'காலச்சுவ'டின் வளர்ச்சி நூலகத்
துறை சார்ந்து ஏற்படவில்லை. இந்தப் போராட்டம் தேவை சார்ந்தது அல்ல, உரிமை
சார்ந்தது. நூலகத் துறை மூலமாகவும் வாசகர்களை எட்டும் உரிமை சார்ந்தது. தமிழக
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், எங்கள் தமிழ்ப் பங்களிப்பின் அடிப்படையில்
நாங்கள் கோரும் உரிமை இது. ஊரெல்லாம் நடக்க, ஆட, பாட உரிமை இருந்தாலும் ஒரு
கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டால் நாத்திகர்கள்கூட அந்த உரிமை கோரிப்
போராடுவது போன்றது. நூலகத் துறையுடன் உறவு வேண்டாம் என ஒரு பதிப்பாளர்
முடிவுசெய்வது அவருடைய சுதந்திரம். அரசு தடைசெய்ய முடிவுசெய்தால் அம்முடிவு
விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள்மீது 'காலச்சுவடு' கடுங்கோபத்தை வெளிப்படுத்தியது கலைஞரின்
நள்ளிரவுக் கைதின்போது. அதனை அடியற்றி வெளியிட்ட இரண்டு இதழ்களின் சிறப்புப்
பகுதிகளைப் படித்துப் பாருங்கள். குஜராத் படுகொலையின்போது தி.மு.க. 'நீதிக்கும்
அநீதிக்கும் இடையில் நடுநிலை வகித்தபோது' 'காலச்சுவடு' கடுமையாக
எதிர்வினையாற்றியது. ஊடகங்களையும் கடுமையாகத் தொடர்ந்து விமர்சித்துவருகிறது.
நீதிமன்றத்தின் 'நீதிமன்ற அவமதிப்பு' அதிகாரத்தை விவாதத்திற்கு
உட்படுத்தியிருக்கிறது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இப்பூவுலகில் எதுவும் இல்லை
என்பதே எங்கள் நம்பிக்கை. அதிகார வழிபாட்டாளர்களுக்கு இதெல்லாம் புரியாது.
கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன் என்பதெல்லாம் அரசியலுக்கு வரும்போது
ஏற்பட்ட பெயர் மாற்றங்கள். நாங்கள் ஏற்படுத்தியவை அல்ல. தாமே சூட்டிக்கொண்டவை.
ஊடகங்களில் இடம்பெறுபவை. தி.மு.க. கட்சிப் போஸ்டர்களில் காணக்கிடைப்பவை. கூடவே
இடம்பெறும் 'கவிப்பேரரசே', 'திராவிட அழகி', 'முத்தமிழ் சங்கமமே', 'பெண்ணியமே'
போன்றவற்றையும், பெண்கள் மாநாட்டில் சூட்டப்பட்டு, அடக்கத்துடன் மறுக்கப்பட்ட,
'பெண் பெரியார்' பட்டத்தையும் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறோம்.
நூலகத் துறை 'காலச்சுவடு'க்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்
எழுதிய ஆளுமைகள் 'காலச்சுவடு' பற்றிய தங்கள் மதிப்பீட்டை, நம்பிக்கையை
வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் 'காலச்சுவ'டின் நல்கைகள்
தேவையில்லை. சுயமரியாதையுள்ள சுதந்திரமான ஆளுமைகளின் கருத்துகள் அவை. அவர்கள்
வெளிப்படுத்திய 'காலச்சுவடு' பற்றிய எண்ணங்கள், எதிர்மறையான சூழலில் பெற்ற மிகை
அழுத்தமாக இருக்கலாம். அதை மறுப்பவர்களும் ஏற்பவர்களும் இருப்பார்கள். அவர்கள்
எழுத்து, அவர்கள் நம்பிக்கை. அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம். அந்த
வெளிப்பாடு 'காலச்சுவடு' என்ற கூட்டு முயற்சி, பண்பாட்டு இயக்கம் பற்றியது.
தனிநபர்களைப் புகழ்ந்து, காலில் விழுந்து நல்கைகளைப் பெறும் அரசியல்
பண்பாட்டிற்கும் இதற்கும் ஒப்பீடு இல்லை. தன்னைக் கட்சிக்காரர்கள் புகழ்ந்தால்
'வாயை மூடுடா' என்று சப்தமிடும் காமராஜருக்கு இயக்கத்தைப் புகழ்ந்தால் கசக்குமா
என்ன?
'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' மாநாடு எந்தச் சூழலில் நடத்தப்பட்டது என்பது
பொறுப்பாசிரியர் தேவிபாரதியின் கட்டுரையைப் படித்தால் புரியும். 'காலச்சுவடு'க்கு
நூலகத் துறை தடைவிதித்ததைப் பற்றி அக்கட்டுரையில் பேசப்படவில்லை.
கட்சித் தலைமையோடு இன்று நெருக்கம் கொண்டிருக்கும் தி. மு. க. பிரமுகர் இமையத்தின்
இரண்டு வரிகள் முக்கியமானவை.
'அரசு நினைத்தால் நூலகத் துறையில் மட்டுமல்ல 'காலச்சுவ'டையே நிறுத்த முடியும்;
'காலச்சுவடு'க்கு வரும் விளம்பரங்களை நிறுத்த முடியும்.'
ஒரு இதழ் செயல்பட அனுமதி வழங்குவது மாநில அரசல்ல, மத்திய அரசு. மாநில அரசு ஒரு இதழை
அழித்தொழிக்க உடந்தையாவதற்குத் தமிழகத்தில் பல உதாரணங்கள் உண்டு. 'தராசு' முதல்
'தினகரன்' வரை. படுகொலைகளில் முடிந்த முயற்சிகள் அவை. இமையம் மிரட்டுவதுபோல இந்த
ஆளும் வர்க்கம் செயல்படாது என்ற கற்பனையில் நாங்கள் போராடவில்லை. இமையத்தின்
மிரட்டலை அவர்களின் வருங்காலத் திட்டமாகவே பார்க்க முடிகிறது. 'அன்பான மனிதர்'களின்
செயலூக்கம் நாங்கள் அறியாதது அல்ல. அதைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை. ஏற்கனவே
என்மீது உப்புச் சப்பற்ற காரணங்களுக்காக போலீசில் புகார் கொடுப்போம் என்ற மிரட்டல்
வந்தது. சில எழுத்தாளர்களுக்குக் 'காலச்சுவ'டில் எழுதத் 'தடை'
விதிக்கப்பட்டிருப்பதும் நாங்கள் அறிந்த செய்திதான். முந்திய இதழில்
குறிப்பிடப்பட்டதுபோல 'ஏற்பட இருக்கும் இழப்புகள் பற்றிய முழுமையான புரிதலுடனே
இப்போராட்டத்தைத் துவங்கியிருக்கிறோம்.' கூலிப்படையினரால் 'காலச்சுவடு'
நிறுத்தப்பட்டாலும் அப்போதும் சூழலில் அதன் இன்மையின் விகாசம்தான் ஏற்படுமே அன்றி
அடிபணிதலின் சீரழிவு அல்ல.
னீ
'காலச்சுவடு' ஏன் நூலகங்களில் தடைசெய்யப்பட்டது என்பது முக்கியமான கேள்வி. அரசைத்
தடைசெய்யத் தூண்டிய குறிப்பிட்ட செயல்பாடு என்ன என்பதை ஊகிக்க முடியாது.
இம்முடிவுக்குப் பின்னால் செயல்படும் உணர்வுகளும் அதிகாரத்தின் இழைகளும்
'காலச்சுவ'டின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தவை. எந்தத் தனிநபரோடும் பொருத்திப்
பார்த்து விளக்கிவிடக்கூடியவை அல்ல.
'காலச்சுவடு' எழுப்பும் கேள்விகளும் முன்வைக்கும் நியாயமான தர்க்கங்களும் இத்தடையை
எதிர்கொள்வதில் வெளிப்படும் உறுதியும் அதிகார வர்க்கத்தில் பதற்றங்களை
உருவாக்கிவருகின்றன. இத்தடையை ரகசியப் பேரங்கள் மூலம் நாங்கள் எதிர்கொள்ளவில்லை.
யாரிடமும் ரகசியக் கோரிக்கை எதுவும் முன்வைக்கவில்லை. அத்தகைய பேரங்களின் மூலம்
ஒருவேளை நூலக உத்தரவு திரும்பக் கிடைத்திருந்தாலும் அது கருத்துரிமையைப்
பணயம்வைத்துப் பெறும் நல்கையாகவே இருந்திருக்கும். அதிகார வர்க்கம்
எதிர்பார்த்தவாறு உதவி கேட்டுப் போய் நிற்கவில்லை, மாறாகப் பொதுக்களத்தில்
விவாதமாக்கினோம் என்பது அதிகார வர்க்கத்தின் பதற்றத்தை அதிகமாக்கியுள்ளது.
இமையத்தின் கடிதம் இப்பதற்றத்தின் ஒரு வெளிப்பாடு. அதிகார வர்க்கத்தின்
அருகாமைக்காக ஏங்கி வாலாட்டவும் அடிவருடவும் தயங்காத நமது பல மானங்கெட்ட
பண்பாட்டாளர்களின் செயல்பாடுகள் எமது சுயமரியாதையை இன்று குற்றமாகப்
பார்க்கவைத்துள்ளன.
அரச அமைப்புக்கும் ஊடகங்களுக்கும் இடையில் இன்று இருந்துவரும் உறவு பற்றிய
பரிசீலனையாகவும் ஒரு ஜனநாயக அரச அமைப்பில் நியாயமாக இந்த உறவு எவ்வாறு இருக்க
வேண்டும் என்ற விவாதமாகவும் 'காலச்சுவடு தடை'யை முன்னெடுக்க முயன்றுவருகிறோம்.
இவ்விவாதத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற சக்திகள் இதைத் தனிநபர் பிரச்சினையாகச்
சுருக்கத் தொடர்ந்து முயன்றுவருகின்றன.
இன்றைய தமிழக அரசு ஒரு பழமைவாத அரசு. ஒரு தலைவரின் வாரிசுகளே ஆளும்
தகுதிகொண்டவர்கள் என்ற மூடநம்பிக்கையை மக்களிடையே கடும் பிரச்சாரம் மூலம்
பரப்பிவரும் அரசு இது. நமது குடிமக்கள் அதிகாரத்தைக் கண்டு மிரளக்கூடியவர்களாக
இருக்கும்வரை நாட்டில் ஏற்படும், ஏற்படுத்தப்படும் குழப்பங்களும் கலகங்களும்
பழமைவாத அமைப்பை வலுப்படுத்துபவையாகவே அமையும். தெளிவான, தர்க்கரீதியான, நிதானமான
சிந்தனைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. குடிமக்களின் விழிப்புணர்வு பழமைவாதத்தைத்
தகர்த்துவிடும் ஆற்றல் கொண்டது. வெகுஜன ஊடகங்கள் அரசை விமர்சிக்கும்போதும்
ஒட்டுமொத்தத்தில் குழப்படியான சிந்தனைகளையே முன்வைக்கின்றன. இவை ஒரு பழமைவாத
அரசுக்கு ஆபத்தாக அமைவதில்லை. 'காலச்சுவடு' முன்வைக்கும் பார்வை பழமைவாதத்திற்கு
முற்றிலும் விரோதமானது. கட்சியிலும் அரசியலிலும் எந்தத் தேர்தலையும் சந்திக்காமல்
அதிகாரத்தைக் கவ்வியிருப்பவர்களுக்கு விழிப்புணர்வின் பரவலாக்கம் அச்சத்தை
ஏற்படுத்தக்கூடியது. எனவேதான் சிறிய இதழாக இருந்தாலும் 'காலச்சுவ'டை இந்தப் பழமைவாத
அரசு ஆபத்தாகப் பார்க்கிறது. அரசின் நூலகத் தடை உத்தரவு 'காலச்சுவ'டின்
வளர்ச்சிக்குத் தடைபோடும் நோக்கம் கொண்டது. இம்முயற்சியைத் தோல்வி அடையச் செய்வதில்
வாசகர்களின் ஆதரவை, எழுத்தாளர்களின் ஆதரவை எதிர்நோக்கி இருக்கிறோம்.
னீ
இமையத்தைப் பத்தாண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரியும். அவரது 'கோவேறு கழுதைகள்'
நாவல் வெளிவந்த புதிதில் அவரைத் தலித் விரோதியாகச் சித்தரித்து ஒழித்துக்கட்ட ஒரு
இயக்கமே நடந்தபோது அவருடன் நின்ற இதழ் 'காலச்சுவடு.' அவரது எழுத்துகளை அதிகம்
வெளியிட்ட, விமர்சித்த இதழும் 'காலச்சுவடு'தான். அவருக்குக் 'காலச்சுவ'டில் கிடைத்த
கருத்துச் சுதந்திரத்தால் 'காலச்சுவடு'க்குக் கிடைத்த பாராட்டுகளும் பழிபாவங்களும்
அவருக்குத் தெரியும். இவற்றில் வெளிப்பட்ட உறுதியான நிலைப்பாடுதான் இன்று இந்தப்
போராட்டத்திலும் வெளிப்படுகிறது. தொடர்ந்தும் வெளிப்படும்.
முதல் சந்திப்பில் கரைவேட்டி கட்டிய தி.மு.க. தொண்டராகவே அவரைச் சந்தித்தேன்.
அடுத்த பத்தாண்டுகளில் இமையத்திடம் ஒரு உறுதியான நிலைப்பாடு இருந்தது. கட்சி
அரசியலை இலக்கிய வாழ்க்கையில் கலப்பது இல்லை என்பதும் இலக்கிய அங்கீகாரத்தைக்
கட்சியில் பயன்படுத்துவது இல்லை என்பதும். முன்னர் இவரது இலக்கிய ஆளுமை கட்சியில்
கண்டுகொள்ளப்படவில்லையே என்று நான் வருந்தியது உண்டு. அரசியலைப் புனருத்தாரணம்
செய்வதற்காகப் பண்பாட்டுத் தளத்திலிருந்து அரசியலில் களம் இறங்கியிருப்பவர்களின்
வருகைக்குப் பிறகு இந்நிலை மாறியிருக்கிறது. இன்று தி.மு.க. பிரமுகராக இமையம்
உயர்ந்திருக்கிறார். ஆனால் இம்மாற்றம் இமையத்தை வளர்க்கவில்லை, சீரழிக்கிறது. இதைப்
பார்க்கும்போது கட்சியில் அவர் இலக்கியவாதியாக அறியப்படாமல் இருந்த நிலையே மேல்
என்று தோன்றுகிறது. தன் இலக்கிய அங்கீகாரத்தைப் பயன்படுத்திக் கட்சிக்காரர்களுக்கு
இன்று இலக்கியப் பாராட்டு விழா நடத்துகிறார் இமையம். நேற்றுவரை நவீனக் கவிதை பற்றி
ஒரு சொல்லும் பேசாதவர் இன்று தி.மு.க. அரசியல்வாதியின் கவிதை நூலுக்குப் பாராட்டுரை
எழுதுகிறார். இமையத்திடம் மட்டுமல்ல இந்தச் சீரழிவு. ஆயுள் காலத்தைச்
சுயமரியாதையோடு செலவழித்த எழுத்தாளர்கள் இன்று அதிகாரத்திற்கு வாழ்த்துப்பா
பாடுகிறார்கள். அதிகாரத்தின் அருகாமை சென்னையிலிருந்து களியக்காவிளைவரை
பண்பாட்டாளர்களைப் பல்லிளிக்கவைக்கிறது. கலகக்கண்மணிகள் அதிகாரத்திற்கு வீரவாள்
வழங்குகிறார்கள்.
வணிக இதழ்களில் எழுதுவதும் எழுதாதிருப்பதும் எழுத்தாளனின் தேர்வு. எழுதுவது ஒன்றும்
குற்றமல்ல. ஆனால் ஒரு படைப்பாளி அரசியல் ஆதாயங்களுக்காக அறிந்து தெரிந்து
பொய்மைகளைக் கட்டவிழ்த்துவிடுவது குற்றம். இமையத்தின் கடிதம் ஒரு சுயமரியாதை கொண்ட
எழுத்தாளனின் வீழ்ச்சி. ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் எழுத்துலக வருகை. இதனால்
அவருக்கு ஏற்படவிருக்கும் அரசியல் ஆதாயங்களுக்கு வாழ்த்துகள். |