|
மனித சமூகத்தின் ஆடைத் தேவைக்கு அடிப்படையான தாவரம் பருத்தி. தாவரவியலாளர்
gossypium linn என்று இதைக் குறிப்பிடுவர். வறட்சியைத் தாங்கும் தன்மையது
என்பதால் பெரும்பாலும் வளமான வயல்களில் இதைப் பயிரிடுவதில்லை. கரிசல் நிலமே இதற்கு
மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. செம்மண் நிலங்களிலும் இதைப் பயிரிடுவதுண்டு.
குத்துச் செடியாக இது வளரும். தேன் சுரப்பிகள் கொண்ட இதன் பூக்கள் மஞ்சள் மற்றும்
வெளிரிய கருஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இதன் காய் முற்றிய பிறகு அதிலிருந்து
பஞ்சை எடுக்கலாம். இவ்வேலையைத்தான் 'பருத்தி எடுத்தல்' என்பர்.
கொடிபோல் படரும் ஒரு வகைப் பருத்தியை வீடுகளில் வளர்ப்பதுண்டு. இதன் காய்கள்
சிறியதாக இருக்கும். விளக்கெரிக்கும் திரியினைத் திரிக்க வீடுகளில் இதனைப்
பயன்படுத்துவர். எண்ணெய் விளக்குகளின் மறைவையட்டி இச்செடியும் அநேகமாக
மறைந்துவிட்டது. கிறித்துவுக்கு முந்தைய தொல் தமிழ்க் கல்வெட்டுகளில் அறுவை (துணி)
வணிகன் என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளமையால் பருத்தியின் பயன்பாடு தமிழ்நாட்டில்
தொன்மையான ஒன்று என்பது புலனாகிறது.
பருத்தியின் இளங்காயைப் பறவைகள் கொத்திப் பிளந்ததால், உதிர்ந்த பருத்தி விதைகளை
வறுமையுற்ற பெண்கள் உணவுக்காகச் சேகரிப்பதை அகநானூறு (129: 8-10) குறிப்பிடுகிறது.
பஞ்சிலிருந்து நூல் நூற்கும் பெண்கள் 'பருத்திப் பெண்டு' எனப்பட்டனர் (புறம் 125:8,
326:5) இவ் வேலையைக் கைம்பெண்டிர் செய்ததாக நற்றிணையும் (353:1) இறையனார் களவியல்
உரையும் (நூற்பா 1) குறிப்பிடுகின்றன. கையால் நூற்பதால் கிட்டும் ஆதாயம் மிகவும்
அற்பமானது என்பதனைக் 'கப்பல் விட்டுக் கெட்ட குடிய கொட்டை நூத்தா அடைக்கப் போற'
என்ற பிற்காலப் பழமொழி உணர்த்துகிறது.
புத்தகத்தைக் குறிக்க 'நூல்' என்ற சொல் தமிழில் உள்ளது யாவரும் அறிந்தது. நூல் என்ற
பெயர்க்காரணம் குறித்து 'நன்னூல்' இலக்கணம் எழுதிய பவணந்தி முனிவர் பின்வரும்
விளக்கத்தைத் தருகிறார்.
| பயன்படுத்தும் சொற்கள் |
- |
பஞ்சு |
| எழுதும் செய்யுள் |
- |
இழை |
| எழுதுபவன் |
- |
நூல் நூற்கும் பெண் |
| எழுதுபவனின் வாய் |
- |
நூற்கும் கை |
| அறிவு |
- |
கதிர். |
பருத்தியின் இலையும் மொட்டும் மருத்துவக் குணம் உடையன. இவற்றை அரைத்துப் பசும்பாலில்
கரைத்து உட்கொண்டால் மேக நோய்களும், இரத்தப் பித்த நோய்களும் நீங்கும் என்று 'பதார்த்த
குண பாடம்' (604) குறிப்பிடுகிறது.
முற்றிய பருத்திக் காயிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக் கும்போது பருத்தி விதைகள்
கிடைக்கும். 'பருத்திக் கொட்டை' என்றும் இதைக் குறிப்பிடுவர். இதை நீரில் ஊறவைத்தும்
ஊறவைக்காமலும் மாடுகளுக்கு உணவாக வைப்பர். உழுதுவந்த காளைமாடுகளுக்கு ஊரவைத்த
பருத்தி விதையை அதற்கென்று ஒதுக்கியுள்ள ஆட்டுரலில் அரைத்துக் கொடுக்கும் வழக்கமும்
இருந்துள்ளது. ஆண்கள் நின்றுகொண்டு அரைக்கும் வகையில் இவ்வுரலின் உயரம்
அமைந்திருக்கும். பருத்தி விதையை ஏதேனும் ஒரு வழியில் தின்னும் பால் மாடுகளின் பால்
அடர்த்தி கூடுதலாக இருக்கும். தற்போது பருத்தி விதையிலிருந்து எண்ணெய்
எடுக்கிறார்கள்.
பருத்தி எண்ணெயின் பயன்பாடுகளாகப் பின்வருவனவற்றை
The Useful Plants of India என்ற நூல் குறிப்பிடுகிறது. பருத்தி விதை பி-காம்ப்ளக்ஸ் உயிர்ச்சத்தை
அதிகமாகக் கொண்டது. தூய்மைப்படுத்திய பருத்தி விதை எண்ணெய் உணவுத் தயாரிப்பிலும்,
தரம் குறைந்த எண்ணெய் சோப்புத் தயாரிப்பிற்கும், மசகு எண்ணெய் மற்றும் மேற்பூச்சு
எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணெய்க்கு மாற்றாக மருந்துத்
தயாரிப்பில் இது இடம்பெறுகிறது.
பருத்தி எண்ணெய் எடுக்கும்போது கிடைக்கும் பிண்ணாக்கு மிகவும் மெல்லியதாக இருக்கும்.
துவரம் பருப்பு எடுக்கும்போது கிட்டும் குருணையினைத் தண்ணீரில் ஊறவைக்கும்போது,
நொதித்தல் நிகழ்ந்து நுரைத்துக்கொண்டு காடி போல் இருக்கும். இதைப் பசு மாடுகள்
குடித்தால் பால் அதிகமாகச் சுரக்கும். ஆனால் பாலின் அடர்த்தி குறைந்து நீர்த்தன்மை
மேலோங்கி இருக்கும். இதைத் தவிர்க்கும் வழிமுறையாகப் பருத்திவிதைப் பிண்ணாக்கைத்
துவரங்குருணையுடன் கலந்து ஊறவைப்பார்கள்.
பருத்தி விதையை அரைத்துப் பால் எடுத்து அதனுடன் தேங்காய்ப் பாலையும் கருப்புக்
கட்டியையும் கலந்து நன்றாகக் கொதிக்கவைப்பார்கள். 'பருத்திப் பால்' எனப்படும் இதனைப்
பருகினால் நெஞ்சுச் சளியும் அதனால் ஏற்படும் நெஞ்சு வலியும் நீங்கும். மூடைகளை
முதுகில் சுமக்கும்போது பாரம் தாங்காமல் குனிந்துபோவதால் மார்பில் ஏற்படும்
வலியையும் இது போக்கும். அத்துடன் பசி தாங்கும் தன்மையது. இதனால் தான் உடல்
உழைப்பாளிகள் கூடும் பகுதிகளில் இன்றும் பருத்திப் பால் விற்பனை சூடாக நடக்கிறது.
பருத்திக் காயைத் தாக்கும் காய்ப்புழுக்களை அழிப்பதற்காகப் பூச்சிக்கொல்லி
மருந்துகளால் நீராட்டும் இக்காலக்கட்டத்தில், பருத்தி விதைகள் நஞ்சாகின்றன.
இந்நிலையில் இதை உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது.
ஆங்கில ஆட்சியின்போது இங்கிலாந்துக்குத் தேவையான பருத்தியை இந்தியாவிலிருந்து
கொண்டுசென்றார்கள். அமெரிக்காவில் விளைந்த நீண்ட இழைப் பருத்தியும்
இங்கிலாந்துக்குச் சென்றது. அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் நடந்தபோது அங்கிருந்து
இங்கிலாந்துக்குப் பருத்தி ஏற்றுமதியாவது தடைபட்டது. இதற்கு மாற்றுவழியாகத்
தென்தமிழகத்தில் பருத்திவிதையையும் கரிசல் நிலப் பகுதியில் நீண்ட இழைப்
பருத்தியையும் அறிமுகப்படுத்தினர். நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய சீர்திருத்தக்
கிறித்தவ சபையின் உபதேசியார்கள் தம் சமயப் பணியுடன் புதிய பருத்தி விதையையும்
விற்பனைசெய்யும் பணியையும் மேற்கொண்டனர். கரிசல் நிலப் பகுதியின் வணிகர்கள் மற்றும்
பெருநிலக்கிழார்களின் பொருளியல் நிலை புதிய பருத்தி ஏற்றுமதியால் உயர்ந்தது. இக்கால
கட்டத்தைப் பருத்தியின் திடீர் மதிப்பு உயர்வுக் காலம் என்று குறிப்பிடுவர். இதன்
விளைவாகக் கிணறுகள், மாட்டு வண்டிகள் ஆகியவை கரிசல் நிலப் பகுதியில் அதிகரித்தன.
இப்பொருளியல் வளர்ச்சியானது சமூக உயர்வுக்கான பண்பாட்டு அடையாளப் போராட்டங்களுக்குத்
தூண்டுகோலாக அமைந்தது.
பருத்தி எடுத்தபின் அதன் செடியை வேருடன் பிடுங்கிக் காயவைத்து, கட்டுகளாகக்
கட்டிவிடுவர். காய்ந்த பருத்திச் செடி 'பருத்திமார்' என்றும் அவற்றைச் சேர்த்துக்
கட்டிய கட்டு, 'பருத்திமார்க் கட்டு' என்றும் அழைக்கப்படும். இது எரிபொருளாகப்
பயன்படும். தைப் பொங்கல், கோவில் பொங்கல் ஆகியவற்றில் இதுவே எரிபொருளாகும்.
இன்றுவரை ஏழைகளின் எரிபொருளாகவும் இது பயன்படுகிறது.
இக்கட்டுகளை விற்கவந்த ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களிடம் வேறொரு சமூகத்து ஆண்கள்,
'மார் என்ன விலை?', 'மார்கட்டு நல்லா இல்லையே!- நல்லா இருக்கே!' என்ற சொற்களைச்
சிலேடையாகப் பயன்படுத்தியது, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்
தென்மாவட்டத்தில் நிகழ்ந்த சாதிக் கலவரம் ஒன்றுக்கு உடனடிக் காரணமாக அமைந்தது.
உலகமயமாக்கலின் விளைவாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திவிதைகளும்
அறிமுகமாகத்தொடங்கியுள்ளன. எல்லா வேளாண் விளை பொருட்களைப் போலவே பருத்தியின் விலையை
நிர்ணயிக்கும் உரிமை உழவர்களிடம் இல்லை. இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு
ஆளாகிறார்கள். இதன் எதிர்விளைவுகளாக மராட்டியத்திலும் ஆந்திரத்திலும் வேளாண்குடிகள்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் அரசோ வெளிநாட்டிலிருந்து பஞ்சை
இறக்குமதிசெய்கிறது.
|