Google   www kalachuvadu.com

கட்டுரைத் தொடர்
பசுமைப் புரட்சியின் கதை
நவீன வேளாண்மை ஊடுருவி வளர்ந்த கதை
சங்கீதா ஸ்ரீராம்

காலச்சுவடு இதழ் 100இல் வெளியானது நவீன வேளாண் அறிவியல் பற்றிய கதை. இந்த இதழில் வெளியாவது, அதன் அணுகுமுறையும் / வளர்ச்சியும் மனித இனத்தை, குறிப்பாகச் சுதந்திரம் பெறுவதற்குள் நம் நாட்டை எங்கெல்லாம் கொண்டுசென்றது என்பதை, பற்றிய தொடர்கதை.

I - தொடக்கம்

போரில் பிறந்த இரசாயனங்கள்

முக்கியமான இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் முதன் முதலில் உலகப் போர்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நாம் அதே உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு பூமியுடன் போர் புரிந்துவருகிறோம் - இந்தப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை உணராமலேயே.

19ஆம் நூற்றாண்டில், NPK கோட்பாடு பிரபலமான சில ஆண்டுகளிலேயே, பொட்டாஷ் (K) மற்றும் பாஸ்ஃபேட் உரங்கள் (P) உற்பத்தியாகிப் புழக்கத்திற்கு வந்தன. ஆனால் அதி முக்கியமான நைட்ரஜனை (N) வாயு வடிவத்திலிருந்து தாவரங்கள் உட்கொள்ளும் வடிவத்துக்கு மாற்றும் தொழில்நுட்பம் மட்டும் கண்டறியப்படவில்லை.

முதலாம் உலகப் போருக்குச் சற்று முன்பாக, ஹேபர், பாஷ் என்ற இரு ஜெர்மானியர்கள், வெடிமருந்துகளின் முக்கிய மூலப்பொருளான அமோனியாவை (நைட்ரஜன் வாயுவைப் பொருத்தி) உற்பத்திசெய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். இது இல்லையென்றால், ஜெர்மனியிடம் போரை நீட்டிப்பதற்கான ஆயுதங்கள் தீர்ந்துபோயிருக்குமாம். இந்தத் தொழில்நுட்பம் விரைவிலேயே மற்ற நாடுகளைச் சென்ற டைந்து, உலகெங்கும் அமோனியா உற்பத்தி பரவலாகின.

நாம் சுவாசிக்கும் காற்றிலிருக்கும் நைட்ரஜனைக் கொண்டே அமோனியாவைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை 1930களில் மேற்கொண்டு வெற்றியும் கண்டது அமெரிக்க அரசு. இந்த முறையில் அமோனியாவைத் தயாரிக்க அதிகமான அளவில் மின்சாரம் தேவைப்பட்டதால் பெரிய அணைகளுக்கருகே அமோனியா உற்பத்தி ஆலைகள் கட்டப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் முடியும் சமயத்தில், பல கோடி டன் அளவில் உலகெங்கிலும் அமோனியா உற்பத்தியாகிக்கொண்டிருந்தது. போர் ஓய்ந்ததும் ஆலைகளும் ஓய்ந்துநின்றன. இத்தனை முதலீடும் வீணாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று அவசர அவசரமாக யோசித்த சிலருக்கு, வேளாண் அறிவியல் முன்வைத்திருந்த NPK கோட்பாடு நினைவுக்குவந்தது. அமோனியாவைக்கொண்டு பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தயாரித்து, உலகெங்கும் விவசாயிகளை அவர்கள் நிலங்களில் கொண்டு கொட்டச் சொல்லலாமே என்றெண்ணி அதைச் செய்யவும் தொடங்கினர். இன்றுவரையில் 'உப்பு' என்று கிராமங்களில் வழங்கிவரும், கணக்கேயில்லாத டன் கணக்கில் மண்ணில் நாம் கொட்டிவைத்துள்ள யூரியாவின் கதை இதுதான். சுதந்திரம் பெறுவதற்குள் இந்தியாவில் ஆங்காங்கே சில செயற்கை உரத் தொழிற்சாலைகளும் நிறுவப்பட்டன.1

பல நூற்றாண்டுகளாகப் பயிர்ப் பாதுகாப்பு என்றாலே வேலியமைத்து கால்நடை, எலி போன்று பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் விலங்கினங்களிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தல், பஞ்சகவ்யம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளின் மூலமாக நோய், பூச்சி எதிர்ப்பு சக்தியை வளர்த்தல் என்றுதான் இந்தியாவில் பொருள் கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே சல்பர், பைரேத்ரம் (sulfur, pyrethrum) போன்ற அதிகப் பாதிப்பற்ற சில பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தன. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஒரே வகையான, அதுவும் அந்நிய ரகப் பயிரை விளைவிக்கத் தொடங்கியதிலிருந்து தான், பூச்சி என்பது ஒரு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்தது.

1863இல் தொடங்கப்பட்ட பேயர் எனும் ஜெர்மானிய இரசாயனக் கம்பெனி, மருந்துகளையும் சாயங்களையும் தயாரித்துப் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது. 1914இல் முதலாம் உலகப் போரின்போது, ஒருபுறம் இந்த ஏற்றுமதிகளை மேற்கொள்ளத் தடை ஏற்பட்டாலும், மறுபுறம் போருக்குத் தேவையான இரசாயன ஆயுதங்களின் (வெடிமருந்துகளின்) தேவை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, 1925இல் தற்காலிகமாக I.G. Farben என்ற ஒரு கம்பெனியை அமைத்து, ஹிட்லரின் வதை முகாம்களுக்குத் தேவையான விஷ வாயுக்களையும் தயாரித்துக் கொடுத்தது. இப்படி, இரசாயனங்களைக் கொண்டு உயிர்களைக் கொல்லும் தொழில்நுட்பங்கள் வெகு விரைவில் பிரபலமாகி, இரண்டாம் உலகப் போரில் ஆர்கனோபாஸ்ஃபேட் எனும் பயங்கரமான விஷ வாயு வகை (nerve gas) கண்டுபிடிக்கப்பட்டது. 2

19ஆம் நூற்றாண்டிலேயே DDT எனும் இரசாயனம் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 1939இல்தான் அதன் உயிர்கொல்லித் தன்மை வெளிச்சத்திற்கு வந்தது. அமெரிக்க ராணுவத்தினருக்குப் பெரும் தொல்லையாகியிருந்த மலேரியாக் கொசுவை ஒட்டுமொத்தமாக அழித்து, அதன் கண்டுபிடிப்பாளருக்கு நோபெல் பரிசையே பெற்றுத் தந்தது! பூச்சிக்கொல்லி விவசாயத்தில் பெரும் இடத்தைப் பிடித்தது.3

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பாகவே அங்கும் இங்குமாக இந்த இரசாயனங்கள் எல்லாமே புழக்கத்திற்கு வந்தன.

நவீன இரும்புக் கருவிகள்

இங்கிலாந்தில் தொழிற்புரட்சியில் வளர்ச்சி கண்ட இரும்புத் தொழிற்சாலை, பல நவீன விவசாயக் கருவிகளைப் பெருமளவில் உற்பத்திசெய்து தள்ளியது. உற்பத்திசெய்த பின், பெரும்பான்மையினர் விவசாயிகளாக இருந்த நம் நாட்டில் அவற்றைக் கொட்டுவதற்கு வசதியாக இருந்தது. இரும்பு ஏரைப் பல சோதனைப் பண்ணைகள் மூலமாகப் பிரபலப்படுத்த முனைந்தும், அதன் விலை, எடை, மண்ணில் ஏற்படுத்தும் சேதம் காரணமாக இந்திய விவசாயிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆனால் சிறிய மரத்தாலான கரும்பு (நாட்டு) ஆலைகளுக்குப் பதிலாக, இரும்பாலான ஆலைகளை அறிமுகப்படுத்தினர். மரத்தாலான ஆலைகளுக்கு அடுத்தபடியாக பெஹியா ஆலை என்று அழைக்கப்பட்ட இரும்பாலான ஆலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய ஆலை, உபயோகிப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்து, அதிகச் செயல்திறன் கொண்ட காரணத்தால் மக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரைவில் நாடெங்கும் பரவியது.4 சுதந்திரத்திற்குச் சற்று முன்பாக, அமெரிக்க டிராக்டர்களும் இந்தியாவிற்குள் புகுந்தன.

n

II - வளர்ச்சி

"பிரம்மாண்டமான இரசாயன ஆலைகளையும் இரும்பு ஆலைகளையும் நிறுவியாயிற்று. பின்னர், அவை ஓயாமல் உற்பத்திசெய்து தள்ளிக்கொண்டிருக்கும் இரசாயனங்களுக்கும் கருவிகளுக்குமான சந்தையை விரிவுபடுத்த வேண்டுமே!" இதுதான், ஜே.சி. குமரப்பா நுணுக்கமாக விளக்கியிருக்கும் "வன்முறைப் பொருளாதார"த்தின் அடிப்படை. அவருடைய விளக்கத்தின்படி, தேவையின் அடிப்படையில் உற்பத்திசெய்கின்ற பொருளாதாரம் சமாதானப் பொருளாதாரம். தேவையைக் கணக்கிலேயே கொள்ளாமல் உற்பத்திசெய்துவிட்டு, பலவந்தமாகப் போரிட்டுச் சந்தையைத் தேடும் பொருளாதாரம் வன்முறைப் பொருளாதாரம்.5 இன்று நாம் பரவலாகப் பார்க்கும் இந்த 'வன்முறைப் பொருளாதாரம்', பருத்தி, இரசாயனம் மற்றும் இரும்பு ஆலைகளில் தான் பிறந்தது என்றுகூடச் சொல்லலாம்!

இந்த வன்முறைப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்து, அதன் பலன்களைப் பரவலாக விநியோகப்படுத்துவதற்கென்றே இந்திய வேளாண் துறையும் அதனைச் சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களும் அவற்றை இயக்குவதற்காக ஆள்களைத் தயார் செய்து கொடுக்கப் பல்கலைக்கழகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக உலகெங்கும் நிறுவப்பட்டன.

1860களில்தான் நமக்குத் தேவையான கதை ஆரம்பமாகிறது. நாம் முன்பு பார்த்ததுபோல, இங்கிலாந்து ஆலைகளுக்குத் தீனிபோட, அமெரிக்க நீள ரகப் பருத்தியைச் சந்தையில் விற்க, அரசு ஒரு பருத்தித் துறையை நிறுவிப் பல ஆண்டுகள் முயன்றது. ஆனால் நாட்டுப் பருத்திப் பயிரில் கிடைத்த பல அனுகூலங்களின் (காண்க: இதழ் 99 கட்டுரை) காரணத்தால், நம் விவசாயிகள் இந்த அந்நிய ரகத்தைப் பல ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அரசு பரிசுகளையும் தண்டனைகளையும் கையாண்டும்கூட எந்தப் பயனும் இருக்கவில்லை. 1861 அமெரிக்க உள்நாட்டுக் கலவரத்தின்போது, இங்கிலாந்தின் அமெரிக்கப் பருத்தியின் இறக்குமதி பெரிய அளவில் தடைபட்டுப்போனபோது, இந்தியாவில் அதை விளைவிக்கும் முயற்சியில் முன்பைவிடத் தீவிரமாக இறங்க வேண்டியது அவசியமாயிற்று. அந்தச் சமயத்தில்தான், இந்தியாவில் ஒரு தனிப்பட்ட வேளாண் துறையும் அதைச் சார்ந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்களும் பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட வேண்டும் என்கிற பேச்சே தொடங்கியது.6

அதே சமயத்தில், இரசாயன உபயோகத்தையும் இந்தியாவில் வந்து குவிந்த நூற்றுக்கணக்கான இரும்புக் கருவிகளையும் பரவலாக்குவதற்கென்றே 1863இல் சைதாப்பேட்டையில் தொடங்கி, நாடெங்கும் பல 'பரிசோதனைப் பண்ணை'கள் உருவாயின. இவை 'நவீன கருவிகளின் பொருட்காட்சியகங்க'ளைப் போன்று காட்சியளித்தனவாம்! இந்த 350 ஏக்கர் சைதாப்பேட்டைப் பண்ணையை இருபதே ஆண்டுகள் முடிவதற்குள் இழுத்து மூடிவிட்டனர். "இந்திய வேளாண்மையைப் பொறுத்தவரையில், இந்தப் பண்ணையின் முடிவுகள் முற்றிலும் எதிர்மறையாக உள்ளன" என்று அதன் காரணத்தை மதராஸ் வேளாண் துறையின் இயக்குநர்களே விளக்கினர். 7

பிறகு, "இந்திய விவசாயியின் சூழ்நிலைகளையும் செயல்முறைகளையும் பற்றித் தீரவிசாரித்துத் தெரிந்துகொள்ளும்வரையில், அவருக்குக் கற்பிக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்" என்று மதராஸ் வேளாண் குழு 1890இல் செய்த ஆலோசனை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.8 இதற்காகத்தான், 1890களில் வோல்கர், மாலிசன் போன்ற விஞ்ஞானிகள் இங்கிலாந்திலிருந்து அழைத்துவரப்பட்டனர்.

இதே காலகட்டத்தில், இந்திய விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்த ஏ. ஓ . ஹ்யூம், மேயோ பிரபு ஆகியோர் மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு வேளாண் துறையை நிறுவுவதற்காக அரசாங்கத்திடம் ஓயாமல் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களது கற்பனையின்படி, இத்தகைய துறையின் எல்லா மாகாணங்களின் இயக்குநர்களும் ஆண்டின் பயிர்க் காலம் முழுவதும் கிராமம் கிராமமாகப் பயணித்து, இந்திய வேளாண் முறைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, விவசாயிகளின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, கோடைக்காலங்களில் மட்டுமே தங்கள் அலுவலகங்களில் தங்கி, தாங்கள் கற்றதை அறிக்கைகளாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.9 இவ்விருவரின் கோரிக்கை பலமுறை நிராகரிக்கப்பட்டு, இறுதியில் 1871இல் "அரசாங்க வருமானம், வேளாண்மை மற்றும் வர்த்தகத் துறை" ஒன்று நிறுவப்பட்டது. இந்தப் புதிய துறை வேளாண் வளர்ச்சிக்காக ஒன்றுமே செய்யவில்லை! அதன் பெயருக்கு ஏற்றபடி, எப்படியெல்லாம் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது என்பதும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதும்தான் இந்தத் துறையின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மாகாணங்களிலும் வேளாண் துறைகள் நிறுவப்பட்டன.

கர்சன் பிரபு தலைமையில் 1905இல் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Agricultural Research Institute - IARI), பூசாவில் (பிஹார்) நிறுவப்பட்டது. "முதல்முறையாக, இந்திய வேளாண்மையின் ஆய்விலும் செயல்முறையிலும் விஞ்ஞானத்தைப் புகுத்தவிருக்கிறோம். இதுவே நாம் செய்யவிருக்கும் உண்மையான சீர்திருத்தமாகும்!" என்று தங்கள் நோக்கத்தை அறிவித்தார் கர்சன்.10 அதற்குள், ஜெர்மனியில் தொடங்கி, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இயங்கிக்கொண்டிருந்த நவீன ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாதிரியைக் கொண்டு, இந்தியாவின் எல்லா மாகாணங்களிலும் ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகள், பண்ணைகளைக் கொண்ட வேளாண் கல்லூரிகளும் ஆராய்ச்சி நிலையங்களும் உருவாக்கப்பட்டன. 1929இல் "Imperial Council of Agricultural Research" (ICAR) நிறுவப்பட்டது.

ஒவ்வொரு நிலையத்துக்கும் வெவ்வேறு வேளாண் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டனர். அப்போது பூசாவில் பொருளாதாரத் தாவரவியலாளராக (economic botanist) வந்திறங்கியவர்தான், நமக்கு ஏற்கனவே அறிமுகமான இந்திய விவசாயிகளையும் பூச்சிகளையும் தன்னுடைய பேராசிரியர்களாக ஏற்றுக்கொண்ட ஆல்பர்ட் ஹோவார்ட்.

n

III- வரவேற்பு

சரி. இதுவரை நிறுவப்பட்டிருந்த இந்த ஆராய்ச்சி நிலையங்களும் பல்கலைக்கழகங்களும் இந்தியா சுதந்திரம் பெறும்வரையில் நாற்பதாண்டுகளாக என்னதான் செய்துகொண்டிருந்தன? இரசாயனங்களுக்கும் நவீன கருவிகளுக்கும் இந்திய மண்ணில் எத்தகைய வரவேற்புக் கிடைத்தது?

பல்கலைக்கழகங்கள்

வோல்கரைப் பொறுத்தவரையில், இளைய தலை முறையினருக்கு வேளாண்மையின் மேல் ஆர்வம் வளர்த்து, தரமான பண்ணைகளை உருவாக்குவதற்கான பயிற்சி ஒன்றும் அளிக்காமல், அவர்களை நிலங்களிலிருந்து விலக்கி ஒன்றுக்கும் உதவாத புத்தக அறிவைத் திணித்தன பல்கலைக்கழகங்கள். "செயற்கை உரங்கள், உலர்ந்த இரத்தம், புகைக்கரி போன்று இந்த நாட்டின் வேளாண்மையில் இடம்பெறாதவற்றைப் பற்றியெல்லாம் கற்றுத் தருகிறார்கள். ஆனால், கால்வாய் மற்றும் கிணற்றுப் பாசனம், பிண்ணாக்கு போன்ற பல முக்கியமான அம்சங்களைப் பற்றிய குறிப்புகூட இல்லை.11 . . . இத்தகைய கல்வியை உள்வாங்கிய பின், அரசாங்கத்தில் மேசையில் உட்கார்ந்துகொண்டு எப்படிக் கைநிறையச் சம்பளம் வாங்கலாம் என்பதுதான் எல்லாப் பட்டதாரிகளின் ஒரே குறிக்கோளாக உள்ளது"12 என்றெல்லாம் அவர் குறை கூறினார்.

ஆராய்ச்சி நிலையங்கள்

வேளாண் ஆராய்ச்சியின் போக்கையும் அதன் பயனையும் பூசாவில் பணியாற்றிய ஹோவார்டே கூறக் கேட்போம்!

"1899இல் மேற்கிந்தியத் தீவுகளில், காளான் ஆய்வாள ராகப் (விஹ்நீஷீறீஷீரீவீst) பணிபுரிந்தபோதும் பிறகு இங்கிலாந்தில் தாவரவியலாளராகப் பணிபுரிந்தபோதும் எனக்கென்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஒரு துண்டு நிலம்கூட இல்லாமல் இருந்தது. ஆனால் 1905இல் பூசாவில் பணியில் சேர்ந்ததும் என் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. தீர்வுகாண ஏராளமான பிரச்சினைகள், பணம், சுதந்திரம், எனக்கு வேண்டிய வண்ணம் பரிசோதனைகள் செய்து பார்க்க 75 ஏக்கர் நிலம். அப்போதுதான் வேளாண்மையில் என்னுடைய உண்மையான பயிற்சி ஆரம்பமானது.

இத்தனை சுதந்திரத்துடன் என்னால் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல பாடங்கள் பயின்று, உண்மையிலேயே மிக முக்கியமான திருப்புமுனைப் பணிகளைச் செய்ய முடிந்ததற்கு முக்கியக் காரணம் ஒன்றுண்டு. ஆரம்ப காலங்களில், பூசா நிறுவனம் இறுக்கமான அமைப்பாக இல்லாமல் இருந்தது. ஆனால், 1918க்குள் ஆராய்ச்சியின் ஆரோக்கியமான முன்னேற்றத்தை, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியே சிதைத்தது. இதன் காரணம், தீர்வுகாண வேண்டிய உண்மையான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொள்ளாமல், பிளவுண்ட (fragmented) நவீன அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். நோக்கத்தைவிடவும் அதை அடைவதற்கான கருவி முக்கியமாகிவிட்டது. இத்தகைய நிறுவனங்கள், தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் வழியைத்தான் பார்க்கும். இதனால்தான் நான் பூசாவிலிருந்து விலகி, ஆறாண்டு காலம் கழித்து 1924இல் "இந்தோர் நிறுவனம்" என்ற ஒரு புதிய நிலையத்தைச் சொந்தமாகத் தொடங்கினேன்."13

1915இல், ஜேம்ஸ் மெக்கென்னா என்பவரும் ஹோவார்டின் கருத்தையே எதிரொலித்தார். "20 ஆண்டுகள் மாகாணத் துறைகள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் மூலம் சில உண்மைகள் தெளிவாகியுள்ளன. இந்திய முறைகள் மிக மேன்மையானவை. நாம் இந்திய விவசாயிகளுக்குக் கற்றுத்தருவதைவிட, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்குத்தான் அதிகம் உள்ளது. இதுவரையில், கண்மூடித்தனமாக மேற்கத்திய / நவீன கருத்துகளை இந்திய விவசாயிகளின்மேல் திணிக்க முற்பட்டது ஒரு தவறான கருத்தாக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இனியாவது பாரம்பரிய ரக விதைகளைத் தேர்வுசெய்து மேம்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாட்டு ரக விதைகளை அறிமுகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாரம்பரிய வேளாண் முறைகளை மேம்படுத்த வேண்டும்."14

பணப்பயிர் ஆராய்ச்சி நிலையங்கள்

முந்தைய கட்டுரை ஒன்றில் விவசாயிகள் பணப் பயிருக்கு மாறிய கதையைப் படித்தோம். வருமானம் ஈட்டித்தந்த இந்தப் பயிர்களின் விளைச்சலை எப்படியெல்லாம் அதிகரிக்க முடியும் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதற்காகச் சர்க்கரை, புகையிலை, தேயிலை, பருத்தி ஆகியவற்றுக்கு ஆராய்ச்சி நிலையங்களும் செயற் குழுக்களும் உருவாகின. அதுவும் கைத்தொழில்களுக்குச் சற்றும் ஏற்றதல்லாத, பெரிய ஆலைகளுக்கு மட்டுமே ஏற்ற கெட்டியான கரும்பு, நீள ரகப் பருத்தி போன்ற அந்நிய ரகங்களைப் பற்றியே இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1947இல் நம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, மிசிகிஸி மாணவர்களுக்கு நல்கை (sநீலீஷீறீணீக்ஷீsலீவீஜீ) அளித்து, வெளிநாடுகளுக்குப் புகையிலை வளர்ப்புப் பற்றிய பயிற்சிக்காக அனுப்பிவைத்ததைப் பற்றிக் காந்தியடிகள் "இப்படியெல்லாம் செய்து நம் நாட்டை "இந்தியா லிமிடட்" என்ற கம்பெனியாக்கி, வெளிநாடுகளின் இலாபத்துக்காகச் சேவை செய்துகொண்டிருக்கிறோம்" என்று வருத்தத்துடன் எழுதினார்.15

வேளாண் இரசாயனங்கள்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இரசாயன உரங்களின் விளைவுகளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அவற்றை 'ஹரிஜன்' பத்திரிகையில் காந்தியடிகள் அவ்வப்போது வெளியிட்டுவந்தார்.

ஜே. சி. குமரப்பா, இயற்கை உரங்களை நல்ல சத்துள்ள உணவுடனும் இரசாயன உரங்களை உடனடியாகச் சக்தி தரும் ஸ்டீராய்ட் மருந்துடனும் ஒப்பிட்டுக் காட்டினார். ஸ்டீராய்ட் உட்கொண்டால் உடனடியாக, இயற்கைக்கு மீறிய சக்தி கிடைத்து வேலைசெய்ய முடிந்தாலும், அதற்குப் பக்க விளைவுகள் உள்ளன; நல்ல சத்தான உணவிலிருந்து கிடைக்கும் சக்திக்கு இது ஈடாகாது.16 அமெரிக்காவின் மிசூரி வேளாண் துறை நிகழ்த்திய பரிசோதனைகளில், செயற்கை உரங்களில் விளைந்த கீரைகளும் காய்கறிகளும் பெரிதாக இருந்தாலும், அவற்றின் சுவையும் ஊட்டச்சத்தும் மிகவும் குறைந்திருந்ததாக வெளியிட்டிருந்தது. மண் விஞ்ஞானிகள் பலரும் செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை மாற்றியமைத்து, நாளடைவில் அதன் வளத்தைக் குறைத்துவிடும் என்பதால், இயற்கை உரமே மேலானது என்றனர்.17 DDT பெரிய அளவில் 1945இல் பூச்சிக்கொல்லியாகப் புழக்கத்திற்கு வந்தபோது, எட்வார்ட் வே டீல் எனும் அமெரிக்கர், "புரட்சி எப்படி சமூகப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்குமோ அதேபோல DDTஇன் தெளிப்பு இயற்கையின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும். பூச்சிகளில் 90% பயிர்களுக்கு நன்மை செய்பவை. அவை இறந்துபோனால், உடனடியாகப் பெரும் பிரச்சினை ஏற்படும்!" என்று எச்சரித்தார்.18

நவீன விவசாயக் கருவிகள்

இரும்பு ஏர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டன. டிராக்டர்கள் மர ஏரால் உழுது விவசாயம் மேற்கொண்ட பெரும்பான்மை விவசாயிகளை இடப் பெயர்ச்சி செய்வதோடு, மேல்மண்ணைச் சிதைத்து அரித்துப்போவதற்கு வழிவகுத்தது. அது மட்டுமல்ல. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பெட்ரோலை மிகவும் சார்ந்திருக்க வேண்டியிருந்ததாலும் பல இந்தியத் தலைவர்கள் இதை எதிர்த்தார்கள். "மாடு பண்ணைக் கழிவுகளை உண்டுவிட்டு மண்ணை வளப்படுத்தும் சாணத்தைக் கொடுத்து, நிலத்தை உழுதும் கொடுக்கிறது. உங்கள் டிராக்டர் சாணம் போடுமா?" என்று காந்தியடிகள் அடிக்கடி கேட்பாராம். ஆனால், சில தரிசு நிலங்களில் ஆழமான வேர் அமைப்புகள் கொண்ட புற்களைக் கிளறிவிட்டு, நிலத்தை விவசாயத்துக்கு ஏற்றதாக மாற்றியமைக்க மட்டும் இந்த இயந்திரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மீராபென் உட்படச் சிலர் நம்பினர்.19

நவீன கருவிகளைப் பற்றி வாலஸ் பொதுவாகக் கூறும்போது "என் அனுபவத்தில், தனக்குப் பலனளிக்கக்கூடிய எந்த யோசனை யையும் ஒரு விவசாயி ஒருபோதும் நிராகரிக்கமாட்டார். அதே சமயத்தில் ஒரு திட்டம் அவரது சூழ்நிலைக்குப் பொருந்தாததாக இருந்தால் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியை மௌனமாக அலட்சியப்படுத்திவிடுவார். அதற்கான காரணங்களைக் கூறுவதற்குக்கூட மெனக் கெடமாட்டார். அந்தத் திட்டம், திட்ட அளவில் - நடைமுறை நிலவரம் பற்றி அறியாதவர்களுக்கு - நடைமுறை சாத்தியமானதாகத் தோன்றலாம்" என்று கூறியிருக்கிறார்.20

n

1. http://www.livinghistoryfarm.org/farminginthe40s/crops_04.html as on 21.08.2008

2. http://www.bayer.com/en/History.aspx as on 21.08.2008

3. http://www.livinghistoryfarm.org/farminginthe40s/pests_01.html

4,6,9,10,14,20. Randhawa, M.S., A History of Agriculture in India - Volume 3, 1757-1947, ICAR, New Delhi, 1983, p.253, 176, 182, 270, 191, 255.

5. Economy of Permanence, Maganwadi, Wardha, 1948.

7,8,11,12. Voelcker, John Augustus, Report on the Improvement of Indian Agriculture, 1893, p.370, 372, 380, 390-91.

13. Howard, Albert, An Agricultural Testament, 1940, Chapter-11.

15, 17. Gandhi.M.K., Harijan, 21.04.1946, 13.04.1947.

16. J.C.Kumarappa, Harijan, 2.3.47.

18. http://www.nrdc.org/health/pesticides/hcarson.asp as on 21.8.2008

19. Mirabehn, Harijan, 29.09.1946.

உள்ளடக்கம்