Google   www kalachuvadu.com

கடிதங்கள்

ஆகஸ்ட் இதழின் தலையங்கத்தில் ஒரு வாக்கியம். "இடதுசாரிகள் உண்மையிலேயே அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பதானால் அவர்கள் வேறு வகையில் போராட வேண்டும்." எதிர்ப்பினை உண்மை என்றே கொள்ள முடியும்; ஆனால் கூறப்படும் காரணம் பற்றிய தெளிவின்மை வேறுசில கேள்விகளை எழுப்புகின்றது. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மட்டும்தான் எதிர்க்கிறார்களா, ரஷ்யாவுடன் அணு உலை தொடர்பான ஒப்பந்தம் தேவை என்று கருதுகிறார்களா? அணுஆற்றல் தொழில்நுட்பத்தினால் இந்தியாவில் 'ஆக்கபூர்வமான தொழில் வளர்ச்சி' என்று ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்கிறார்களா மறுக்கிறார்களா . . . அணு உலைகளின் விபரீதமான விளைவுகள் (எதிர்காலத்திலேனும்) பற்றி இடதுசாரிகள் மற்றவர்களுடன் கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்களா?

மாற்று வழிகளில் மின் ஆற்றல் உற்பத்திக்குள்ள வாய்ப்புகள் பற்றிச் சூழலியலாளர்களும் சமூக அக்கறையுள்ள விஞ்ஞானிகளும் கூறுகின்ற கருத்துகளை இடதுசாரிகள் மதிக்கிறார்களா? 'இந்திய இறையாண்மை' என்பதையும் தாண்டி இந்த ஒப்பந்தத்தினை எதிர்க்க மக்கள் முன்வைக்க வேண்டிய வேறு பல முக்கியமான காரணங்களும் உண்டு அல்லவா . . . நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதீதம், இடதுசாரிகளின் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா. . . 'உலகமயமாக்கல்' என்ற தந்திரத்திற்கான மூலகாரணங்களில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மீதான மிகை மதிப்பீடு என்பதுவும் ஒன்று என்பது அவர்கள் அறியாத இருண்மைப் பகுதியா . . . ?

பசுமைப் புரட்சியின் நடைமுறைகளை, அதன் எதிர்மறை விளைவுகளை முறையான சமூகவியல் நோக்கில் ஆராயாமலிருந்ததன் வழியாக, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை இடதுசாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற சமூக ஆர்வலர்களின் விமர்சனத்தில் நியாயமில்லையா?

மதவாதத்தை விடவும் பசுமைப் புரட்சி பெரும் தீமையை விளைவித்திருக்கிறது என்று சொல்பவர்கள்மீது இடதுசாரிகளுக்குக் கோபம் வருகிறது தானே . . .! சுயவிமர்சனத்தின் தேவையைக் கோரி நிற்கிறது காலம்.

ஜனகப்ரியா
வ. புதுப்பட்டி

அரசியல் சதுரங்கத்தின் அனுபவமிக்க காய் நகர்த்தலைக் குறித்த தலையங்கம் சிறப்பாக இருந்தது. கருத்துரிமை மற்றும் வாழ்வுரிமை குறித்த பதிவுகளை உரிய காலத்தில் (சுதந்திர தினம்) இடம்பெறச் செய்தது இதழுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது. அஷிஸ் நந்தியின் கட்டுரை அரசியல் நோக்கங்களுக்காக இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் சிறுபான்மையினரின் அவல நிலையை எடுத்துரைக்கிறது. ஜி. குப்புசாமியின் கட்டுரை அருமை. ஒரு பத்திரிகையாளனுக்கும் ஒரு முதிய கலைஞனுக்கும் கிடைத்திருக்கின்ற தீர்ப்புகள் கருத்துரிமையின் சேதத்திற்குக் கிடைத்த சவுக்கடிகள் என்பதை ஒவ்வொரு மாநில அரசும் உணர்ந்திருக்கும். இதை உணர்ந்ததன் வெளிப்பாடாகக் காலச்சுவடுக்கான வாய்மொழித் தீர்ப்பும் திருத்தப்படும் என்றே நம்புவோம்.

அ. மத்தீன், ஹைதராபாத்

இன்னும் சில மாதங்கள் மட்டுமே நீடித்திருக்கக்கூடிய தற்போதைய நாடாளுமன்றத்தின் மிக நீண்ட தாழ்வாரங்களின் நிழலில் இலவு காத்த கிளிகளைப் போல இறுக்கமான முகங்களுடன் இருக்கும் இடதுசாரிகளின் இன்றைய நிலைக்கு ஏற்ற தலையங்கம். மீடியாக்களில் வந்துபோவது மட்டுமே காரத்தின் முழு நேர வேலையாக உள்ளது.

மக்கள் பிரச்சினைகள்மீது நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கரிசனமான அரசுகளல்ல நம்முடையவை. கடல் வாழ்க்கையின் எதார்த்தங்கள் அதிகாரிகளுக்குப் புரியவில்லை. வறீதையா கான்ஸ்தந்தின் 'சிக்கல்களின் பெருமுடிச்சு' கட்டுரை இன்றைய மீனவர்களின் அவல நிலையைத் திறம்பட விளக்கியுள்ளது.

'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' சிறப்புப் பகுதி நன்று. நினைவுகூரப்பட வேண்டிய நெருக்கடிகள், குஜராத் களங்கப்பட்டு நிற்கும் நடுத்தர வர்க்கம் கட்டுரைகள் முக்கியமானவை. இதிகாசத்திற்கு உழைத்தவனுக்கு நாம் நல்ல மரியாதை வழங்கியுள்ளோம். நாட்டைவிட்டுத் துரத்தியுள்ளோம். எம். எஃப். ஹ§சைனின் நேர்காணல் சிறப்பு.

எம். சிவபாரதி, தென்காசி

"இலவு காத்த கிளிகளா இடதுசாரிகள்" தலையங்கம் பொருள்பொதிந்துள்ளது. 275 - 256 பெரியதாக்கம் ஏற்படுத்தியது யானை பார்த்த ஐந்து பார்வையற்றவர்கள் சொன்ன கதையாகிப் போனது. இன்றைய சூழலில் சிந்தனைகளைத் தூண்டும் நல்ல தலையங்கம். பா. செயப்பிரகாசத்தின் "படைப்பாளிகளும் சாதியும் சில கேள்விகள்" கட்டுரை நிதர்சனமானது. தொண்ணூறு வயதைத் தாண்டிய ஓவியர் ஹ§சைனின் நேர்காணல், அவரது ஓவியம் நன்றாக இருந்தன. இவர்மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, இன்னும் நிலுவையிலுள்ள வழக்குகள் பற்றிய கட்டுரை நினைவில் சேகரித்து வைக்கப்பட வேண்டியவை. அவர் வரைந்த பாரத மாதா, சிவபார்வதி ஓவியங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த என் ஆவலைக் காலச்சுவடுதான் நிறைவேற்றியுள்ளது. சமீபத்திய நிகழ்வாகக் கருதாவிடினும் நூலகங்களில் 'காலச் சுவடுக்குத் தடை' போட்ட நல்லவர்களை எண்ணும்போது வள்ளுவம் படித்துப் பறைசாற்றுபவர்களை என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது எனத் தோன்றியது. 'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' சிறப்புப் பகுதியில் வெளியான எட்டுக் கட்டுரைகளும் நன்றாகக் கட்டமைக்கப்பட்டிருந்தன. எஸ். செந்தில்குமாரின் சிறுகதை எதார்த்தமாக நல்ல நடையைக் கொண்டிருந்தது. மார்கெரித் துராஸ் சாதனைகள் போற்றப்பட வேண்டியவைதான்.

குரு. ராதாகிருஷ்ணன்
நெல்லிக்குப்பம்

அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பிரச்சினையில் இடதுசாரிகள் எடுத்த நிலைப்பாட்டில் தவறில்லை. இதற்கு அடுத்த கட்டத்தில்தான் மாயாவதியுடன் கைகோத்து இடதுசாரிகள் தம்மீதே களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். செய்தி ஊடகங்கள் அரசின் விளம்பரத்தைக் கருத்தில்கொண்டு அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகத்தான் செயல்படுகின்றன. அரசும் இந்த விஷயத்தில் அந்தக் கால மன்னர்களைப் போல் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றது. இந்திய அரசியல் சாசனத்தை மீறுவதில் மத்திய மாநில அரசுகள் அப்பட்டமாக ஈடுபடுகின்றன. இதழியல் சுதந்திரத்திற்கு எதிரான இச்செயல்களை அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே அணியில் இருந்து போராடி நமது உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.

படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட சாதியத் தலைவர்களுடன் கைகோப்பது மிகவும் பிற்போக்கானது. கருத்துச் சுதந்திரத்தை அடகுவைக்கும் போக்கு மிகவும் வருந்தத்தக்கது.

வலம்புரி நாகராஜன், ஈரோடு

பாராளுமன்ற அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக மன்மோகன் சிங் அரசையும் இடதுசாரிகளையும் தலையங்கத்தில் சிறப்பாக விமர்சித்துள்ளீர்கள். சந்தர்ப்பவாதக் கூட்டணி, பதவியைக் காட்டி இடதுசாரிகள் செய்தது பரிசீலிக்க வேண்டியது. நாட்டில் ஆளும் கட்சி பல கோடிகளைக் கொடுத்து, தண்டனை பெற்றவர்களை மந்திரி பதவி தருவதாகச் சொல்லி வாக்களிக்கவைத்தது நாட்டிற்கே மாபெரும் அவமானம். காலச்சுவடு பத்திரிகையை நூலகங்களுக்கு வாங்குவதில் பிரச்சினை என்பது அரசியல்வாதிகளின் குணத்தைக் காட்டுகிறது. அரசியல்வாதிகளின் குள்ளநரித் தனத்தைத் திருத்த முடியாது. கருத்துரிமையும் வாழ்வுரிமையும் கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. நியாயத்தைத் தெளிவாகப் பேசியுள்ளார்கள். காலச் சுவடு தடையைக் கண்டித்துப் பல நண்பர்கள் எழுதியுள்ள கடிதங்கள் பரிசீலனைக்குரியவை.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

இடதுசாரிகளின் செயல்பாடுகள் குறித்த தலையங்கம் சிறப்பு. அவர்களின் வழிமுறைகள் பரிசீலனைக்குரியவைதான். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிகளின் பிரதானக் கொள்கை, மதவாதிகளை ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்வது. அதற்காக எவரோடும் கூட்டணி அமைத்துச் செயல்படுவது. மதவாதிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. இவர்கள் சனநாயகத் தன்மையற்றவர்களோடும் பதவி மோகம் கொண்டவர்களோடும் கூட்டணி அமைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

'கருத்துரிமையும் வாழ்வுரிமையும் சார்ந்த கட்டுரைகள் சிறப்பாக வந்துள்ளன.

சா. மணிவில்லன், பெரம்பலூர்

இடதுசாரிகளின் கண்மூடித்தனமான வெறுப்புணர்ச்சியைத் தலையங்கம் எடுத்துக்காட்டுகிறது. மாயாவதிக்குப் பிரதமர் பதவி என்று ஆசைகாட்டி இன்னும்கூடத் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள முயலாத பலவீனம் அவர்களது! பகைமையும் வெறுப்பும் அவர்களை "தற்போதைய நாடாளுமன்றத்தின் மிக நீண்ட தாழ்வாரங்களின் நிழலில் இலவு காத்த கிளிகளைப் போல இறுக்கமான முகங்களுடன் உட்கார்ந்தபடி" இருக்கச் செய்துவிட்டன.

அணு ஒப்பந்தத்திற்கு 'இஸ்லாமிய'ச் சாயம் பூசும் அளவிற்குப் பொதுவுடைமைத் தோழர்கள் இறங்கிவிட்டனர். மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியவர்கள் பி.ஜே.பி.யுடன் சேர்ந்து கணக்குப்போடத் துணிந்துவிட்டனர்.

முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை வறீதையா கான்ஸ்தந்தின் கட்டுரை தெளிவாக்கியது. கச்சத்தீவைத் தாரை வார்த்த ஆட்சியாளர்களின் செயலால், இன்று பாதிக்கப்படுபவன் தமிழக மீனவனே என்பதை எப்படிப் புரியவைப்பது? எம். எஃப். ஹ§சைனுடனான நேர்காணலில், 'பெரிய படைப்பு வரையும் முன் பிள்ளையாரைத்தான் வரைவேன்' என்ற வரிகள் அவருக்கு எதிரானவர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தியிருக்கும்.

காலச்சுவடு இதழை நூலகங்களில் தடைசெய்யும் அரசின் முயற்சி அதிர்ச்சி அளிப்பதாகவும் அதேசமயம் பல எழுத்தாளர்களின் ஆதரவுக் குரல் ஆறுதலாகவும் இருந்தது. விவாதம் பகுதியில் ஓரினப்புணர்ச்சி குறித்து முகம்மது ஷ§ஐப் எழுதியவை அனிருத்தன் வாசுதேவனின் கருத்தோடு ஒன்றியே அமைந்திருந்தது.

தென்றல் கோ. சண்முகசுந்தரம்
நத்தக்காடையூர்

வெறும் 1,500 நூலகப் பிரதிகளுக்குத் தாங்கள் மெனக்கெடுவதைப் பார்த்து, நீர்த்துப்போன தமிழ்ச் சமுதாயத்தை நினைத்து வேதனைப்படுகிறேன். கண்ட குப்பைகள் எல்லாம் லட்சக்கணக்கில் விற்கும்போது உன்னதங்களுக்கு இங்கு மதிப்பில்லை. காலச்சுவடின் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த உழைப்புடனும் கவனமாகவும் தரமாகவும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய தடைகள் காலச்சுவடு குழுவிற்கு மேலும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

கேசவரவி, சென்னை

ஒரு மொழியின் சிறப்புகள் அம்மொழியின் இலக்கியம் வழியாகத்தான் வெளிப்படும். கோடிக்கணக்கானோர் அம்மொழியைப் பேசிவிட்டால் மட்டும் வளர்ச்சி அடைந்துவிடாது. பலதரப்பட்ட மொழி பேசும் மக்கள் கலந்து வாழும் காலகட்டத்தில், எந்த மொழியின் அதன் தனித்தன்மையும் சிதையவே செய்யும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அம்மொழியில் உள்ள இலக்கியங்களைத் தீவிரமாக விவாதிப்பதும் புதிய இலக்கியங்களைப் படைப்பதன் வாயிலாகவே அம்மொழி வளர்ச்சி அடையும். தற்போதைய நிலையில் தமிழ் இலக்கிய இதழ்களின் வளர்ச்சியே தமிழ் மொழியின் வளர்ச்சியாக இருக்கும். மேடையில் பேசுவதால் அல்ல! அந்த வகையில் தமிழ் வளர்ச்சிக்குக் 'காலச்சுவடு' இதழ் அபரிமிதமான பங்களிப்பைச் செய்து வருகிறது.

சாருமதி, கிளாக்குளம்

'காலச்சுவடு' இதழில் அரசின் நிறைகுறைகளை விமர்சித்துப் பத்திரிகை தர்மத்தை முறையாக, நேர்மையாகக் கடைபிடித்தமைக்காக நூலகங்களுக்கு வாங்கப்பட்ட 1,500 படிகள் திடீரென்று நிறுத்தப்பட்டதும் அதற்குத் தாங்களும் சக படைப்பாளிகளும் காட்டிய வேண்டுகோளுடன் கூடிய எதிர்வினையும் அறிந்தேன். வீரவசனங்களை வாரி வழங்கும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு எத்தகைய இடையூறு செய்கிறார்கள் என எண்ணும்போது வெட்கமாக இருக்கிறது. நாட்டைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைச் சுதந்திரம் என்பது இதுதானா? என்ன செய்தாலும் 'ஜால்ரா' தட்டுபவர்களுக்குத்தான் எல்லாச் சலுகைகளுமா? இன்றேல் இப்படித்தான் காலடியில் போட்டு நசுக்குவார்களா? என்ன காட்டுமிராண்டித்தனம்? விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என இவ்வுலகில் எது உண்டு? அறநூலான திருக்குறளும் பெண்ணியத்திற்குக் கேடு செய்கிறது என்ற குரல் எழுகிறதே! அரசு இத்தகைய அநாகரிகப் போக்கைக் கைவிட வேண்டும். நல்ல புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற வேண்டியது பிச்சை அல்ல, உரிமை. இதற்கு வாசகர்களாகிய நாங்களும் ஒரு இயக்கமாகச் செயல்பட வேண்டும். முன் முயற்சியாக ஒவ்வொரு வாசகரும் அஞ்சலட்டை எழுதலாம். யாருக்கு முதல்வருக்கா, கல்வி அமைச்சருக்கா, நூலக இயக்குநருக்கா? வழிகாட்டுங்கள் எழுதுகிறோம்.

கா. ஞானம், புதுச்சேரி

பா. செயப்பிரகாசம் கட்டுரையில் சாதியும் அரசியலும் பற்றிச் சில எதிர்மறைச் செய்திகளை நினைவுகூர்ந்திருந்தார். அபூர்வமாக நிகழ்ந்த சில உடன்பாட்டு நிகழ்வுகளை நினைவுகூர்வது பொருத்தமாகும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவை, அன்று சேடப்பட்டித் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராகத் தி.மு.க. சார்பில் நின்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் சாதிய அடிப்படையில் நாடியபோது, "நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் மக்களே ஆதரித்துவிடுவார்கள்; இதில் நான் என்ன பரிந்துரைசெய்வது" என்று சொல்லி அனுப்பிவிட்டார். திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். தொகுதி முழுவதிலும் கட்சி வேட்பாளர் என்ற முறையில் அவரை அறிமுகம் செய்து பேசிய எம்.ஜி.ஆர் அவர்கள் "தம்பி மாயன்" என்று மட்டுமே பேசி அறிமுகம் செய்தார். சாதிப் பெயரைச் சொல்வதை அவர் தவிர்த்தார்.

மு. பழனி இராகுலதாசன்
தேவகோட்டை

'சிக்கல்களின் பெருமுடிச்சு' என்ற பகுதி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்த செயலானது, அரசியல்வாதிகள் எந்தப் பிரச்சினைகளிலும் தற்காலிகத் தீர்வுகளையே கையாள்கிறார்கள், அதைப் பற்றிய முடிவுகள் எடுக்கும்பொழுது பிரச்சினைகளிலிருந்து விளையும் பின்விளைவுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்வதில்லை என்பதையே காட்டுகிறது. தீர்வுகளைக் கையாண்டதன் பலன்தான் இன்று நமது மீனவர்களின் வாழ்வும் அதையட்டிய உரிமைகளும் வாழ்வாதாரங்களும் மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலை.

இந்தப் பிரச்சினையில் நமது மாநில அரசும் நடுவண் அரசும் எடுக்கும் நிலைப்பாடுகளையும் நமது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் பார்க்கும்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான பாதையைக் காண முடியாத ஊசலாட்ட மனோபாவத்தைத்தான் காண முடிந்தது.

பா. செயப்பிரகாசம் இன்றைய தமிழின் படைப்பாளர்கள் சாதி சார்ந்த இலக்கிய அமைப்புகளைத் தோற்றுவித்து, செயல்பட்டுவருவது குறித்துத் தன்னுடைய சில கேள்விகளை முன்வைத்துள்ளார். நமது தமிழ் மொழியின் படைப்புத் தளங்களில் அழுத்தமான தடங்களைப் பதிவுசெய்த கவிஞர்களும் சிறுகதை ஆசிரியர்களும் சாதியத்தில் சிக்கிக்கிடப்பது வேதனையளிக்கிறது.

தமிழக நூலகத் துறை, காலச்சுவடு இதழ்களை வாங்குவதற்கு அனுமதியளித்துவிட்டு இப்பொழுது, இந்த இதழ் அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு விமர்சித்ததற்குப் பரிசாக அனுமதி ஆணையை விலக்கிக்கொண்டிருக்கிறது. இது காலச்சுவடின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் எனக்குள் கவலையும் அதே சமயத்தில் கோப உணர்வும் எழும்பியது.

இன்றைய பொதுவாழ்வின் சகல தளங்களிலும் விமரிசனங்களைச் சகித்துக்கொள்ள இயலாத போக்குகள்தாம் மேலோங்கிவருகின்றன என்பதைத்தான் இது தெரிவிக்கிறது.

நா. சுப்புராயலு
அருப்புக்கோட்டை

ஆகஸ்ட் 2008 காலச்சுவடு இதழில் வெளியான 'நினைவுகூரப்பட வேண்டிய நெருக்கடிகள்' தேவிபாரதியின் கட்டுரை குறித்து, அடக்குமுறைச் சட்டங்கள், வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வடிவங்களில் உருமாறும் தன்மை கொண்டது. ஜனநாயகத்தின் குரல்வளையைக் குதறித் தள்ளும் குரூர மிருகத்தின் சாயலைக் கொண்டுள்ள கோர முகங்களோடு இங்கே சனநாயகக் காவலர்கள் இயங்கிவருகின்றார்கள். 1975 நெருக்கடி நிலைக் காலத்தை எண்ணிப் பார்க்கவே மனம் நடுங்குகின்றது. நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் உயிர்ப் பலிகளுக்கும் உரிமம் வழங்குவதாக விளங்கியது. திமுகவைச் சேர்ந்த எண்ணற்றோர் கொடுஞ்சிறையில் வாடினர். சிட்டிபாபு போன்றோர் உயிர் நீத்தனர். ஆனால் என்ன பயன்? அதுவெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக அல்லவோ ஆனது?

ஆனாலும் காலச்சுவடு முதலான இதழ்களும் அதற்கு முற்பகுதியில், சில இதழ்களும், பா.செ., பேரா. கல்யாணி போன்றோர்களின் செயல்பாடுகளுக்கும் மனித உரிமையைக் காக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான தாக்குதலைக் கண்டு-குரல் கொடுப்பவர்களாக/ கொடுப்பனவாக இன்றும் இருக்கின்றது/இருக்கின்றார்கள். இத்தகையை குரல்கள் சிறுபான்மையாக இருப்பினும், வலிமையாக ஒலிப்பதைப் பொறுத்துக்கொள்ளாத அதிகார வர்க்கம், மீண்டும் மீண்டும் தனது நலன்களைக் காத்திடச் செயல்படுகின்றது. தேவிபாரதியின் இக்கட்டுரை, புதிய உத்வேகத்தினை, வாசகச் சமூகத்துக்கு வழங்கும் என்பது திண்ணம்.

கே. ரவிச்சந்திரன், ஈரோடு

ஆகஸ்டு காலச்சுவடு இதழ் கண்டேன். நூலகங்களில் மீண்டும் செப்டம்பர் மாதக் காலச்சுவடு இடம்பெறும் என்று நம்புகிறேன். இல்லையேல் அதற்கான போராட்டத் தில் நானும் இணைந்துகொள்வேன்.

'படைப்பாளிகளும் சாதியும்: சில கேள்விகள்' என்ற தலைப்பில் பா. செ. எழுதிய கட்டுரை விவாதமாக மாற்றப்பட்டு செயல்நிலை நோக்கி எடுத்துச்செல்லப்பட வேண்டியதாகும். அரசியலை விமர்சிக்கும் தகுதி படைப்பாளியின் முதன்மையான தகுதி. ஆனால் இன்று படைப்பாளிகள் சாதி அரசியலுக்குள் முகம் நுழைப்பது ஏன்?

இன்று படைப்பாளிகள் எனச் சொல்லிக்கொள்பவர்களால் மக்களோடு கலக்க முடியவில்லை. பெரும்பாலான படைப்பாளிகள் கைநிறையச் சம்பளம் வாங்குவோராகவும் நட்சத்திர ஓட்டல்களில் - நண்பர்கள் உபயத்தில் உட்கார்ந்து பொழுது போக்காகச் சிந்திப்போர்களாகவுமே உள்ளனர். அந்நிய மொழிப் புத்தகங்களிலிருந்து உருவி எடுத்தும் இணைய தளத்திலிருந்து இறக்குமதி செய்தும் விடுகின்றனர்.

எனவே, படைப்புக்கான உழைப்பு ஏதும் இல்லை. படைப்புக்கான அனுபவமும் இல்லை. உட்கார்ந்த இடத்தில் எழுத்தாளர் பந்தா வந்து விடுகிறது. அடுத்து என்ன தேவை? செல்வாக்கு. மக்களிடம் இன்று ஊடகம் மூலமே செல்ல முடியும். ஊடகத்தை வளைத்துக்கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகளை வளைத்துக்கொண்டிருப்பது சாதி. பழமலையின் முதல் கவிதைத் தொகுதியே அவர் சாதி சனங்களைப் பற்றியதுதான். அவர் படைப்புக்கான விருதுகளை கோட்டா அடிப்படையில் கேட்டவர்தானே!

தலித் அரசியல் மூலம் ரவிக்குமார் சட்டப்பேரவைக்குள் வந்துவிட்டார். அப்புறம் வன்னிய சாதிப் படைப்பாளிகள் வர வேண்டாமா? ஆசை இருக்காதா?

இவர்களெல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்ற அரசியலையும் சாதியையும் எதிர்த்தவர்கள்தான்.

மக்களோடு பழகியபோது இல்லாத முகப்பொலிவு அரசியல்வாதிகளோடு பழகும்போது வந்ததுவிட்டதே ... இந்த அழகு முகத்தை மக்களிடம் காட்ட ஊடகம், சட்டப்பேரவை எல்லாம் தேவை. அப்புறம் சாதி மட்டும் தேவை இல்லாமல் போகுமா? பெரியாரியத்தை எவ்வளவு பலவீனப்படுத்த வேண்டுமோ அவ்வளவு பலவீனப்படுத்திவிட்டார்கள் இந்த முன்னாள் பெரியாரிஸ்டுகள்.

முனைவர் க. சேகர், புதுச்சேரி

இதழ் 103இல் "எரியும் நினைவுகள்" தலைப்பில் வெளிவந்த கட்டுரைகள், வரலாற்றில் 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடந்தேறிய வன்கொடுமை கள், தமிழரின் உடல்கள்மீதும் உடைமைகள்மீதும் காண்பிக்கப்பட்ட வன்மங்கள், கொலைவெறியில் ஆடிக் களித்த களியாட்டங்கள், தமிழரின் அடையாளத்தையும் அழிக்கும் முயற்சியில் எரிக்கப்பட்ட 97,000க்கும் மேலான புத்தகங்கள், அதனைத் தொடர்ந்து இன்னும் நடக்கும் தமிழர்மீதான வன்முறைத் தாக்குதல்கள் என்று தமிழினத்தின் மீதான வன்மத்தை வலியோடு உணரச்செய்தன.

ஜான்சன், சேகர், பூவிருந்தவல்லி

விளக்கம்

சிக்கல்களின் பெருமுடிச்சு

ஜூலை 2008இல் நாகப்பட்டினம் மீனவர்கள் இருவர் நடுக்கடலில் படுகொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் "சிக்கல்களின் பெரு முடிச்சு" என்னும் கட்டுரையை எழுதினேன். இலங்கைப் படைதான் இந்தப் படுகொலைக்கும் காரணம் என்று செய்தித்தாள்கள் குறிப்பிட்டிருந்தன. ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, இலங்கை அரசுத் தரப்பிலிருந்து செயற்கைக்கோள் படங்களுடன் 'மேற்சொன்ன படு கொலைகள் கடற்புலிகளால் நிகழ்த்தப்பட்டவை' என்ற விளக்கம் இந்து நாளேட்டில் வெளியானது. இந்தக் குறிப்பு காலச்சுவடு அலுவலகத்துக்கு அஞ்சல் செய்யப்படும் நாள்வரை (ஆகஸ்ட் 20, 2008) இலங்கை அரசின் செய்திக் குறிப்புக்கு மறுப்புச் செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

மார்ச் 29, 2007 சின்னத்துறை மீனவர்கள் படுகொலை குறித்து முதலில் இலங்கை அரசின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறு என்பதும் அந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள் கடற்புலிகளே என்பதும் தெளிவு. தமிழக மீனவர்களுக்கு இலங்கைப் படை, கடற்புலிகள், இந்தியக் கடலோரக் காவற்படை மூன்றுமே நெருக்கடி தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வறீதையா கான்ஸ்தந்தின்

உள்ளடக்கம்