Google   www kalachuvadu.com

நாடகம்
பதிவு : கறுப்பு ஜூலை பற்றிய சேரனின் நாடகம்
What If the Rain Fails
க. நவம்

நான்கு மணிக் காட்சிக்கென்று அரங்கினுள் முதலில் அனுமதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நடுப்பகுதியில் வசதியான இருக்கை ஒன்றைப் பிடிக்கும் நோக்குடன் விரைகின்றேன். பார்வையாளர்களுக்கான இருக்கைகளின் முதல் வரிசையை அண்டி, மேடையின் முற்பகுதியில் குறுக்காகக் குரும்பசிட்டி இராசரத்தினம் நிற்கின்றார். புன்முறுவலுடன் அவரைக் கடந்து செல்கிறேன். முகமனுக்கு ஒரு சிறு பதில் முறுவல் தன்னிலும் அவரிடமிருந்து கிடைக்காத ஏமாற்றத்துடன் படியேறிச்சென்று இருக்கையன்றில் அமர்ந்துகொண்டேன்.

மேடையில் கனடிய தேசியக் கொடி காணப்படுகிறது. நயாகரா நீர்வீழ்ச்சி, ஒன்ராறியோ கடலேரி, சீஎன் கோபுரம் போன்ற சின்னங்கள் உட்பட, கனடாவின் அழகினைச் சித்திரிக்கும் காட்சிப் படங்கள் பல, திரையில் மாறி மாறித் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. கனடிய இயற்கைச் சூழலை மனத்தில் மீள் வலியுறுத்திக்கொள்ள உதவும் வகையிலான ஒலிச் சிதறல்கள் மெதுவாக மண்டபத்தினுள் மிதந்துகொண்டிருந்தன.

பார்வையாளர்கள் இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில், முன் மேடையில் நின்றுகொண்டிருந்த அவரை மீண்டும் அவதானிக்கின்றேன். இயல்புக்கொவ்வாத வகையில் 'சூற்' அணிந்திருக்கும் அவர், பத்திரங்கள் பலவற்றைக் கொண்ட ஃபைல் ஒன்றைத் தாங்கி நிற்கும் சிறிய மேசை ஒன்றுக்கு அருகாக, கைகளைப் பின்னால் கட்டியவாறு, சலனம் ஏதுமற்ற வராய், வருவோர் போவோரைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றார்.

சில நிமிடங்கள் அப்படியே கரைகின்றன.

அந்நியப்பட்டு நிற்பவர்போல, முக இறுக்கத்துடன் காணப்படும் அவர்மீது பொட்டொளி பாய்ச்சப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கனடிய குடிவரவுத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரது குரல் ஒலிக்கின்றது.

"எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாக உனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கும் நீ, இரத்தத்தைக் காணவில்லை என இப்போது கூறுகின்றாய். நீ உண்மையில் இரத்தத்தைக் காணவே இல்லையா?"

அதிகாரி குறுக்கு விசாரணை செய்கிறார்.

முதலில் தாம் இரத்தத்தைக் கண்டதாகவும் பின்னர் காணவில்லை என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறும் அவர், ஒருவேளை இரத்தத்தைப் பார்க்கத் தாம் மறுத்திருக்கக்கூடுமென்றும், இரத்தக் காட்சியைத் தம்மால் இரசிக்க முடியாது என்றும் அது பற்றிச் சிந்திப்பது தம்மை நோயாளி ஆக்குகின்றது என்றும் சொல்லி அழுகின்றார்.

மண்டபம் உறைந்துபோகின்றது!

"ஒரு துளி இரத்தத்தைத் தன்னிலும் நீ காணவில்லையா?' என்று அதிகாரி துருவித் துருவிக் கேட்கின்றார்.

இல்லை என மீண்டும் மறுதலிக்கும் அவர், "சிலவேளை மழை கழுவிக்கொண்டு போயிருக்கக்கூடும்" என்று தடுமாற்றத்துடன் வழங்கிய பதிலுடன் நாடகம் சூடுபிடிக்கின்றது!

பார்வையாளரை உள்ளே அனுமதிக்கத் தொடங்கிய கையோடு நாடகமும் ஆரம்பமாகிவிட்டது என்பதையும் முன் மேடையில் நின்றுகொண்டிருந்தவர், கனடாவில் அகதிநிலை கோரி, விசாரணைக்காகக் காத்திருக்கும் கதிரிப்பிள்ளை கதிர்காமத்தம்பி என்ற ஈழத் தமிழன்தான் என்பதையும் உணர அதிக நேரம் பிடிக்கவில்லை!

கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடவடிக்கைகளை நினைவுகூருமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக, "What If the Rain Fails" என்ற இந்த ஆங்கில நாடகம் ஜூலை மாதம் 26ஆம் நாள் சனிக்கிழமை கனடா, ரொறொன்ரோ நகரிலுள்ள Young Centre for the Performing Arts நாடக அரங்கில் மேடையேற்றப்பட்டது.

பிற்பகல் 1, 4, 6 மணிக் காட்சிகள் என ஒரே நாளில் 3 காட்சிகள் இடம்பெற்றன.

சமகாலக் கவிதையுலகில் புகழ்பெற்ற கவிஞர் சேரன் இந்த நாடகத்தை எழுதியிருக்கின்றார். 7 கவிதை நூல்களின் ஆசிரியரான இவர் எழுதிய பல தமிழ் நாடகங்கள் இலங்கை, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் மேடையேற்றப்பட்டுள்ள போதிலும், இதுவே இவரது முதலாவது ஆங்கில நாடகமாகும். இதனை நெறிப்படுத்தியிருக்கும் துஷி ஞானப்பிரகாசம், ஈழத்திலும் கனடாவிலும் 15 வருடங்களுக்கு மேலாக நாடகத் துறையில் ஈடுபட்டு வருபவர். கடந்த 5 வருடங்களாக மனவெளி கலையாற்றுக் குழுவின் அரங்காடல் நாடக விழாக்களில் தொடர்ந்து இவர் நெறிப்படுத்தி வழங்கிய நாடகங்களுள், ஹரொல்டு பின்ரர், மறியோ ஃபிறற்ரி, இவான் ரேர்கனேவ், மறே ஷிஸ்கல் போன்ற உலகப் பெயர் பெற்ற நாடகாசிரியர்களது நாடகங்களும் அடங்கும்.

இலங்கையில் கறுப்பு ஜூலை இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. அந்தச் சோக நிகழ்வுகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் விளைவுகளையும் அவற்றால் எழுந்த அவலங்களையும் மிகப் பெருந்தொகையான தமிழ் மக்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இன்றுவரை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் கறுப்பு ஜூலைப் படுகொலைகளின் கொடூரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும்வரும் ஆபத்தும் கூடவே நிகழ்ந்துவருகின்றது.

கறுப்பு ஜூலையின் துயரங்களை மீண்டும் நினைவூட்டிக்கொள்வதற்கும் எமது புதிய தலைமுறையினர், வேற்றின மக்கள் போன்றோருக்குத் தெரியப்படுத்திக் கொள்வதற்குமென இந்த நாடகம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. மூன்று காட்சிகளுக்கும் மண்டபம் நிரம்பியிருந்ததால், நுழைவுச் சீட்டு இன்றிப் பலர் திரும்பிச் சென்றுள்ளனர். இது ஓர் ஆங்கில நாடகம் என்பதனால் பெருந்தொகையான எங்கள் இளம் தலைமுறையைச் சேர்ந்தோரும் வேற்று இனத்தவர்களும் நாட்டின் பிரதான ஊடகங்களைச் சார்ந்தோரும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் அன்று இடம்பெற்ற துயரமான சம்பவங்களின் தாக்கத்தைப் பற்றிய தெளிவை ஓரளவுக்கேனும் பெற்றுக்கொள்ள இந்த நாடகம் உதவியிருக்கின்றது. ஈழத் தமிழனின் துயர்தோய்ந்த வாழ்வு பற்றிய கணிப்பைக் கனமற்ற நடையில் இந்த நாடகம் வெளிப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் சிங்கள இனவாதிகளால் தமிழ் மக்கள் எவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது இந்த நாடகத்தின் வழியாகக் காண்பிக்கப்படும் முதலாவது பிரதான விடயமாகும். சொந்த நாட்டில் உயிர்களையும் உறவுகளையும் உடமைகளையும் உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு, ஏதிலிகளாக வந்துநின்று அகதிநிலை கோரும் மக்களின் பிரச்சினைகளைக் கனடிய குடிவரவுத் திணைக்களம் எவ்வளவு மேம்போக்காக நோக்கி, சிறுமைப்படுத்துகின்றது என்பது அடுத்தது. இச்செய்திகளை வெளிப்படுத்துவதற்கென நாடகாசிரியர் பேச்சு மொழியையும் கவிதை மொழியையும் நாடக மொழியையும் ஒருங்கே இதில் பயன்படுத்தியிருக்கின்றார்.

ஒரு பொருளை உணர்த்துவதில் பேச்சு மொழிக்கில்லாத வலிமையைக் கவிதை மொழியும் கவிதை மொழிக்கில்லாத வலிமையை நாடக மொழியும் கொண்டிருக்கும். பேச்சு மொழி ஒரு செய்தியைச் செய்தியாகவே சொல்லும். அதில் சொல்லவந்த செய்தி அனைத்தும் அடங்காமலும் போகலாம். கவிதை மொழி செய்தியை அழகாகச் சொல்வதோடு உணர்த்தியும் விடுகின்றது. நாடக மொழியோ இவை இரண்டுக்கும் மேலாக அழகிய காட்சிப் படிமங்கள் ஊடாக, தூல வடிவில் கருத்துகளை உணர்த்துகின்றன. இதனால்தான் நாடக மொழி, ஏனையவற்றைவிட வீரியம் மிக்கது என்பது மட்டுமன்றி, எந்த மொழி பேசுபவர்களுக்கும் இலகுவில் உண்மைகளைத் தெளிவாக்கியும் விடக்கூடியது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த நாடகம் பார்வையாளனின் உணர்வையும் சிந்தனையையும் தூண்டும் வகையில் அவதானமாகத் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டிருக்கின்றது.

ஜூலை இனப்படுகொலையின்போது கொழும்பு நகர வீதிகளிலும் சிறைச்சாலைகளிலும் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களும் இம்சைகளும் காடையர்களின் வெறியாட்டங்களும் பார்வையாளர்களது மனத்திரையில் கொண்டுவரப்பட்டன. யாழ்ப்பாணம் திண்ணைவேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் பின்விளைவாகப் பாடசாலைச் சிறுவர்கள் படுகொலைசெய்யப்பட்ட கொடூரச் சம்பவங்களும் 'கூலிக்கு மாரடிக்கும்' இராணுவத்தினரின் இரக்கமற்ற அடக்குமுறைகளும் வான்குண்டுத் தாக்குதல்களும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இவற்றினால் மக்கள் அனுபவித்த அவலங்களின் துயரமான பக்கங்களும் பார்ப்போரது நெஞ்சில் ஓங்கி உதைக்கும் வகையில் உருவகிக்கப்பட்டிருந்தன. மேடையில் தோன்றிய பாத்திரங்கள் கண்ணீர் சிந்தியபோதும் கதறியழுதபோதும் கோபத்தில் கொதித்தெழுந்தபோதும் பார்வையாளர்களும் இதே உணர்வலைகளுக்குள் சிக்கித் தவித்தனர். இந்த வகையிலான வலிமை மிகுந்த தாக்கத்தினை இதில் பயன்படுத்தப்பட்ட நாடகமொழியே ஏற்படுத்தியிருந்தது.

நல்ல நாடகம் ஒன்றுக்குக் கவிதையும் சிறந்த ஆயுதம்தான் என்பதைச் சேரன், பஸில் பெர்னான்டோ, ஊர்வசி ஆகியோரது கவிதைகள் நிரூபித்தன. பொருத்தமான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்த ரஞ்சகுமாரின் 'கோசலை' என்ற சிறுகதையின் ஒரு பகுதியும் இந்த நாடகத்திற்கு வலுவூட்டியிருந்தது. தரமான நடிப்புடன் இதில் காணப்பட்ட நாடகத்தன்மையும் விறுவிறுப்பான சம்பவக் கோர்வைகளும் மேடை உத்திகளும் காட்சிப் படிமங்களும் கையாளப்பட்ட நடைமுறைகளும் பார்வையாளர்களது உணர்வையும் சிந்தனையையும் தூண்டின.

தமிழ் மக்களுக்கு எற்பட்ட துயரச் சம்பவங்களால் விளைந்த அனுபவங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து, தமது கருத்துகளைக் கற்பனை கலந்த படிமங்களாக மிகுந்த கவித்துவத்துடன் கவிஞர் சேரன் இந்த நாடகத்தை எழுதியிருக்கின்றார். ஆயினும் அவரது எழுத்து வடிவம் அப்படியே நாடகமாக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. இதன் இயக்குநரும் தமது படைப்பாற்றலைப் பயன்படுத்தி இதனை வலுவுள்ள ஒரு கலைப் படைப்பாக உருவாக்கியிருக்கின்றார். நவீன நாடகம் என்ற பெயரில் பொருத்தமற்ற உத்திமுறைகளைக் கையாள்வதால் பெரும்பாலான நாடகங்கள் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிப்பனவாக அமைந்துவிடுவதுண்டு. அவ்வாறான குறைபாட்டுக்கு இடமில்லாத வகையில் அளவான, மிகப் பொருத்தமான, எளிமையான உத்திகளைப் பயன்படுத்தி இயக்குநர் இந்த நாடகத்தை நகர்த்தியிருக்கின்றார்.

நாடகத்தின் ஆரம்பத்தில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் மக்கள் குழு ஒன்றின் நடுவே சோகத்துடன் அந்நியப்பட்டு நிற்கும் ஒரு மனிதன், தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதில் இராணுவத்தினர் ஒருபுறம் வெறியுடனும் மறுபுறம் மிகுந்த இரசனையுடனும் நிகழ்த்திய தாள லய அசைவுகள், விசாரணையின்போது அதிகாரியையும் அகதி விண்ணப்பதாரியையும் மேடையின் இருவேறு பகுதிகளில் உயர வித்தியாசத்தில் அமர்த்தப்பட்டிருந்தமை, யாழ்ப்பாணத்தவரின் தேசிய வாகனமாகக் கருதப்படும் சயிக்கிள் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த வாலிபன் ஒருவன், மகனைக் காணாது தவித்துக்கொண்டிருந்த தாயிடம் 'அவன் இனித் திரும்பி வரமாட்டான்' என்ற சோகச் செய்தியைச் சொல்லாமல் சொல்லி ஓடி மறைந்தமை போன்ற பல குறியீடுகளும் உத்திமுறைகளும் இந்த நாடகத்துக்கு வலுவூட்டியிருந்தன.

இதில் சுமார் பதினைந்து பேர் மேடையில் தோன்றி திருப்தியாகவே நடித்திருக்கின்றனர். இவர்களுள் அநேகர் 83ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத்திலும் கனடாவிலும் பிறந்தவர்கள் என்பது கவனிப்புக்குரியது! ஒரு சராசரி ஈழத்துத் தாயாக வந்த விமலேஸ்வரி விஸ்வலிங்கத்தின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. இதே போன்று, குடிவரவுத் துறை அதிகாரியாகத் தோன்றிய ஷரீன் ஐக்கின் ஒரு கனேடியப் பெண்மணியாக இருந்தமை அவரது இயல்பான நடிப்புக்கு மெருகூட்டியது. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று, அகதியாக நடித்த குரும்பசிட்டி இராசரத்தினம் தமது பங்கினைச் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார். கறுப்பு ஜூலை இன அழிப்பு நடவடிக்கையின்போது கொழும்பு நகரில் உயிர் தப்பிப் பிழைத்த இவர், உணர்வுகளை மொழியாலும் முகபாவத்தாலும் உடலசைவுகளாலும் கச்சிதமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார். இந்த நாடகத்தின் வெற்றியில் இவரது நடிப்பு பெரும் பங்காற்றி இருக்கின்றது என்பது பொய்யல்ல.

சிங்களக் காடையர்களாக வந்தவர்களது தோற்றங்களிலும் உடைகளிலும் கூடுதலான கவனம் செலுத்தியிருக்கலாம். அவர்களது குரலிலும் தொனியிலும் கொலை வெறிக் கோரத்தின் போதாமை தெரிந்தது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகளின் கண்களைத் தோண்டி எடுத்த சம்பவத்தை முன்னர் கேள்விப்பட்டிருக்காதவர்களுக்கு அந்தக் காட்சி சரிவரப் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. சில சமயங்களில் ஒளி சரியான தருணத்தில், சரியான விதத்தில் மேடையில் வந்து வீழத் தவறி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறாக ஆங்காங்கே சில குறைபாடுகளையும் இந்த நாடகத்தில் காண முடிந்தது.

இவை தவிர, பொதுவாக நாடகத்தின் ஒலி, ஒளி, இசை, மேடை அமைப்பு, காட்சி மாற்றங்களின் போதான செயல்பாடுகள் என்பன எளிமையாகவும் பொருத்தமாகவும் அமைந்திருந்தன. இவற்றுடன் நாடகத்தின் உள்ளடக்கம், உயிரோட்டம், காட்சிப்படுத்தல், நேர்த்தியான நெறியாள்கை என்பன பார்வையாளர்களையும் நடிகர்களையும் நேரடியாக ஆரம்பம் முதல் இறுதிவரை இறுகப் பிணைத்துவைத்திருந்தன.

பிரச்சாரகர்கள், பிழைப்புக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் கைகளில் ஒரு காலத்தில் அகப்பட்டுக்கிடந்து அல்லல்பட்ட நாடகக் கலையானது, படைப்புக் கலைஞர்களின் கைகளை வந்தடையும்போது ஒரு காத்திரமான புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது என்பதற்கு சேரன் எழுதி, துஷி ஞானப்பிரகாசம் நெறிப்படுத்தி, குரும்பசிட்டி இராசரத்தினம் பிரதான பாத்திரத்தில் நடித்த இந்த நாடகம் ஒரு நல்ல உதாரணம்.

நாடகத்தில் முடிவில் இம்மூவரும் மேடையில் தோன்றி, பார்வையாளர்களது கேள்விகளுக்கு விடையளித்தமை ஒரு பயன்மிக்க விடயம். வேற்றின மக்களும் ஊடகவியலாளர்களும் இந்த நாடகத்தினூடாக ஈழத் தமிழ் மக்களது துயரங்களின் உண்மையான பக்கத்தைச் சரிவர விளங்கிக்கொள்ள அது மேலும் உதவியது.

ஈழத்தில் எப்போது மழை விழும் என்பதைத் தீர்க்கமாகத் தெரிந்துவைத்திருக்கும் கனடிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், ஈழத்து மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் இன்னல்களின் அடிமுடி தெரியாதவர்கள் போலப் பாவனை செய்கிறார்களே என்ற ஆதங்கம் இந்த நாடகத்தின் உள்மொழியில் சிக்கித் தவிக்க, கனடிய தேசிய கீதத்துடன் அது முடிவடைகின்றது!

துயரக் கனவுகளுடனான 'அறிதுயில்' நீங்கி, உயிர்த் துடிப்புடன் கூடிய ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றவனாக, கனத்த இதயத்துடன் அரங்கத்தைவிட்டு வெளியேறினேன்!

உள்ளடக்கம்