Google   www kalachuvadu.com

கண்ணோட்டம்
புணர்ச்சி அரசியல்
கண்ணன்
மலேசியாவின் சமீப கால நிகழ்வுகள் பற்றி இந்திய ஊடகங்களுக்கு இருக்கும் ஆர்வமின்மை கவலையளிக்கக்கூடியது. ஐரோப்பிய, அமெரிக்க ஊடகங்கள் கொண்டுள்ள கவனம்கூடத் தெற்காசிய நாடான, பல்லாயிரம் இந்தியக் குடிமக்களும் வம்சாவளியினரும் வசிக்கும் மலேசியா பற்றி இந்திய ஊடகங்களில் பொதுவாக இல்லை.

மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அன்வர் இப்ராஹிம் ஓரினப் புணர்ச்சிக்காகக் கைதுசெய்யப்படுவது இது முதல்முறை அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்னர் (1998இல்) துணைப் பிரதமராக, மஹாத்திரின் அமைச்சரவையில் இருந்தபோது அதிகாரப் போட்டி ஏற்பட்டதை அடுத்து இக்குற்றச்சாட்டில் பதவி விலக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் இக்குற்றச்சாட்டிலிருந்து அவரை 2004இல் விடுவித்தது. ஆனால் ஊழல் நடவடிக்கைகளுக்காக (Corrupt Practices) அவர் தேர்தலில் போட்டியிடுவது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக, மூன்றில் ஒரு பங்குத் தொகுதிகளைப் பெறுமளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும் நீதிமன்றத் தடை காரணமாகத் தேர்தலில் அவர் நேரடியாகப் போட்டியிட முடியவில்லை. அவர் தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவியார் நீதிமன்றத் தடை இவ்வருடம் ஏப்ரல் மாதத்துடன் நீங்கியதும் தான் ராஜினாமா செய்து அன்வர் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தே தேர்தலில் பங்கேற்றார். வெற்றியும் பெற்றார்.

அவர் பாராளுமன்றத்தில் பங்கேற்க இருப்பது பற்றி மலேசிய அரசு பதற்றம் கொண்டிருந்த சூழ்நிலையில் ஓரினப் புணர்ச்சிக்காக மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளமை பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1998இல் தன்னைத் தாக்கிக் காயப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் எதிர்ப்புத் துறையில் சாட்சியம் அளித்துவிட்டுத் திரும்பும்போது அவர் கைதுசெய்யப்பட்டார். முதலில் அன்வர் துருக்கித் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். மலேசிய அரசு அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும்வரை வெளியே வரமாட்டேன் என அறிவித்தார். ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு செய்ய நேர்வது மலேசிய ஜனநாயகத்தின் லட்சணத்தை உலகிற்குப் புரியவைத்துள்ளது.

இதில் முக்கியமாக விவாதத்திற்குரிய செய்தி வயதுக்கு வந்தவர்களிடையிலான ஓரினப் புணர்ச்சி மலேசியச் சட்டப்படி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உரியதாக இருப்பது. இந்தியாவில் ஓரினப் புணர்ச்சியைக் குற்றமாகக் கருதும் காலனியாதிக்கக் காலகட்டத்துச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பலத்த கோரிக்கையும் போராட்டங்களும் நடைபெற்றுவரும் காலம் இது. மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று இப்போது கோரிக்கை வைத்துள்ளார். உலகின் பல நாடுகள் ஓரினத் திருமணத்தை அங்கீகரித்துவருகின்றன. எனவே இச்சட்டமே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது. இதன் அடிப்படையில் ஒரு தேசிய அரசியலே நடைபெறுவது வெட்கக்கேடானது.

அன்வருக்கு அமெரிக்கத் தலைவர் அல் கோர் ஆதரவு தெரிவித்தார். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால் இந்தியா எதிர்வினையாற்றவில்லை. அரசும் வெகுஜன ஊடகங்களும் மட்டுமல்ல, நமது கலகக்காரர்கள், மாற்றுப் பாலியலுக்காகக் குரல்கொடுத்தவர்களில் சிலர், இன்று மதவாத, குறுங்குழுவாத அரசியலுக்கு விலைபோய்விட்ட சூழலில், தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களால் மட்டுமல்ல மாற்றுப் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டுவரும் இப்பிரச்சினை கவலைக்கும் கவனத்திற்கும் விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.

உள்ளடக்கம்