|
மூன்றாவது இரவில் பனிபெய்ய ஆரம்பித்துவிட்டது கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்த
பிறகும் ஓடுகளின் சன்னமான இடைவெளி வழியாகப் பனி இறங்கி சிமெண்ட் பால் ஊற்றப்பட்டு
மொழுகிய தரையைச் சில்லிடவைத்திருந்தது. அங்கே கூடிக்கிடந்தவர்களின் கண்களில் ஒருவித
ஆர்வமும் பின் அர்த்தபூர்வமான சலிப்பும் மாறி மாறி வெளிப்பட்டபடியிருந்தன.
ராயப்பனின் சாவு மணிக்கணக்கில், அல்ல நொடிகளில் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. எந்த
மனிதனுக்கும் நேரக்கூடாத ஆனால் சொத்துக்கொண்ட பலருக்கும் ஏற்பட்டுவிடுகிற, பிறர் தன்
மரணத்துக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் அவலமிக்க நிலையில் அவரிருந்தார். முன்பு
அவரும் அவர் மனைவியும் கூடிக் கழித்த அறையில் வெற்றுடலில் அலட்சியமாகச்
சுற்றிவிடப்பட்டிருந்த பழைய வேட்டியோடு கிடந்தார். மர வேர்கள்போல அவரது கைகளில்
நரம்புகள் படர்ந்துகிடந்தன. குளிரில் மார்போடு ஒட்டிக்கிடக்கும் நரையோடிய ரோமங்கள்
அவரது வயோதிகத்தைக் காட்டின. தவளையின் கண்கள்போல விரியத் திறந்திறந்த அவரது கண்கள்
அர்த்தமற்று வெறித்தபடியிருந்தன. அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர் இந்த வீட்டை
வாங்கினார். தன் உடல் தொய்வடையத் தொடங்கியதையும் தனக்கு இன்னும் மிச்சமிருக்கும்
காலத்தையும் உள்ளுணர்வால் அறிந்துகொண்டவர், சற்றும் தாமதிக்காமல் மூன்று வயது
மகளுடன் தனித்திருக்கும் தன் கடைசி மகளுக்கு இந்த வீட்டைச் சாசனம் செய்து
தந்திருந்தார். மகன்களது கசப்பையும் மருமகள்களது நைச்சியத்தின் மூலவேரையும் அவர்
அறிவார். அவரது மனைவி சாவதற்கு முந்தைய இரவு அவரிடம் சொல்லிச் சென்றதை ஈடேற்றிய
நிம்மதி அவருக்கிருந்தது.
கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டிருந்த முத்துலட்சுமியை, நெருங்கிய உறவுக்காரர்
ஒருவரின் மங்கல காரியத்தின்போது ராயப்பன் கண்டார். பேதை போலச் சகல வேலைகளையும் அவள்
அங்கு செய்துகொண்டிருந்தாள். பொன்னு ஆசாரி செய்துதந்த மாங்கல்யத்தை அவளுக்குக்
கட்டியபோது அவருக்கு வயது இருபத்தி நாலு. அவளுக்குப் பதினேழு. மணமாகி ஒரு
வாரத்திலேயே அவள் அவ்வளவு பேதையல்ல என்பதை உணர்ந்துகொண்டார்.
ஒரு வாரத்திற்கு முன்பே வந்து சேர்ந்திருந்த இரண்டு மகள்களும் அவ்வப்போது வந்து
பார்த்துச் செல்லும் மகன்களும் மருமகள்களும் பேரன் பேத்திகளும் அவரது மூச்சின் ஏற்ற
இறக்கத்தை ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் கவனித்தபடியிருந்தனர். அந்த வீட்டின்
கலங்கலான குரல்களுக்கு நடுவே அவரது நினைவு மெதுவாகச் சரிந்துகொண்டிருந்தது.
நேற்று அவரது இரண்டாவது மகள் ருக்மணி மூடி இறுகிக்கிடந்த வாயினிடையில் சிறு
தேக்கரண்டியை விட்டு மெதுவாக அசைத்தாள். தாடையும் கன்ன எலும்புகளும்
நெகிழ்ந்துகொடுத்தன. அவரது ரத்த சொந்தங்கள் வரிசையாக நின்று சிறு அளவில்
திறந்திருந்த வாயில் பால் ஊற்றினார்கள். அதில் சிந்திய துளிகள் அவரது கழுத்தையும்
காதுப்புறத்தையும் சென்று தொட்டன.
அப்போது ருக்மணி பக்குவம் மிக்க செவிலி போலவும் மெய்யான அன்பு கொண்டவளாகவும்
நடந்துகொண்டாள். ஆனால் வந்ததிலிருந்து சொத்தில் தனது பங்கு பற்றியும் அம்மா
விட்டுச்சென்ற நகைகளில் எதைத் தெரிவுசெய்வது என்பது குறித்தும் அவளது மனம்
கணக்கிட்டுக்கொண்டிருந்தது. அவளது நச்சுப் புத்தி பற்றி அவரது கடைசி மகளான
மகேஸ்வரிக்குத் துல்லியமாகத் தெரியும். அவரது வாரிசுகளிலேயே ஒப்பீட்டளவில்
ருக்மணிதான் வசதிகொண்டவளாக இருந்தாள். அவற்றில் இங்கிருந்து சுரண்டிச் சென்றதுதான்
அதிகமும். வாசலில் பேச்சுக் குரல்கள் கேட்டதும் பக்கத்தில் நின்று, சேலைத் தலைப்பால்
வாயைப் பொத்தியபடியே தேம்பினாள். அவரது உடம்பைத் துடைத்துவிட்டாள். அவர்மீது
வந்தமர்ந்த ஈக்களை விசிறியவாறே இருந்தாள். அப்பாவைப் பற்றி அவர்களோடு அவள்தான்
நீட்டி நீட்டி அளந்தாள். அவர்கள் சென்றதும் அவரின் நிலையறியாது அவர்கள் வாங்கி
வந்திருந்த பழங்களில் பெரும் பாதியைத் தனக்கும் தன் குழந்தைகளுக்கும்
எடுத்துத்தந்தாள்.
பள்ளிவாசல் பாங்குச் சத்தம் கேட்டதும் மகேஸ்வரி படுத்திருந்தபடியே சன்னமாக
விசும்பினாள். அப்பா நடக்கக் கிளம்பும் நேரமிது. லௌகீக உலகின் ஆகிருதியாக ஊரே
மெச்சும்படி அவரது வளர்ச்சி இருந்தது. அக்காலங்களில் பொதுநிகழ்வுகளில் அவர்
பங்கேற்று மேடையைப் பகிர்ந்துகொள்ளும்போது அவரது பின்னணியை அறிந்திருந்த பழைய
செல்வந்தர்கள் உதாசீனமிக்க பார்வையாலும் இளக்காரமான புன்முறுவலாலும் அவரை
ஒதுக்கிவைத்தனர். அதே ஊரில் சொந்தமாக நகைக்கடையைத் தொடங்கி வேகமாகத் தாவி உச்சத்தை
அடைந்ததும் அதே நபர்கள் செயற்கையாக ஒட்டப்பட்ட சிரிப்போடு எவ்விதக் கூச்சமுமின்றி
வந்து அவரோடு கைகுலுக்கிக்கொண்டனர்.
ராயப்பன் பிறப்பதற்கு முன்பே அவனது வீடு ஏழ்மையின் கொடுமைகளை
அனுபவித்துக்கொண்டிருந்தது. தகரப் பெட்டி போன்ற அவனது வீட்டிற்குக் கதவு என்ற
ஒன்றில்லை. மறைப்பு மட்டுமேயிருந்தது. மழைக்காலங்களில் வீட்டினுள் பாத்திரங்களை
நகர்த்துவதும் நிரம்பியவற்றைக் கொட்டிவிட்டு மீண்டும் அவற்றைப் பழைய இடங்களில்
வைப்பதுமாகவே நேரங்கழியும். அதற்குள் தரைமுழுக்க ஈரம் பரவிவிடும். வீட்டுக் கூரையின்
பொத்தல்களைவிடப் பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
அது இரவாக இருக்கும் பட்சத்தில் அம்மா, பழைய சேலைகளை ஒன்றின் மேலொன்றாகக் கீழே
விரித்துத் தூங்கச் செய்வாள். இடிச் சத்தத்தில் போதையிலிருந்து எழுந்து மழையின்
மீதும் அம்மாவின் மீதும் வசவுகளைக் கொட்டிவிட்டு, தலைமாட்டிலிருக்கும் சாம்பல்
நிரம்பிய தேங்காய்ச் சிரட்டையில் கோழையைத் துப்பிவிட்டு எச்சிலைத் தலையணையில்
தேய்த்தவாறு ஏதேனும் உளறியபடியே இருப்பார் அப்பா. ஊரில் மந்தமாக விற்பனையாகும்
ஓட்டலொன்றில் அவர் சர்வராக இருந்தார். ஆணிக்கால் கொண்ட அவருக்கு வேறு வேலைகள் ஏதும்
வாய்க்கவில்லை. அங்கிருந்து மீந்துபோனதைக் கட்டிக்கொண்டுவந்து தருவார். அந்தப்
பட்சணங்களின் வாடையே குமட்டிக்கொண்டுவரும். அப்பாவின் அடிக்குப் பயந்து கண்ணை மூடி
மென்று விழுங்கி நீரைக் குடித்துப் படுத்ததும் வயிற்றிலிருந்து எழும் பல்வேறு
சத்தங்களை மறக்க முயன்றபடியே உறங்கிப்போவான். கிணற்றிலிருந்தும் குழாயடியிலிருந்தும்
நீர் கொண்டுசென்று வீடுகளுக்கு ஊற்றுவது அம்மாவின் அன்றாட வேலை. பசியால், சுருண்டு
படுக்கும் தன் மகனை நினைத்தவாறே குடங்களோடு ஊரைச் சுற்றிவந்தாள். அந்த ஊரிலிருக்கும்
ஆறேழு தெருக்களில் உள்ள எல்லா வீடுகளுக்குள்ளும் அவனது அம்மாவின் ஈரக் கால்கள்
தயக்கமின்றிப் புகுந்து வெளிவரும். அவர்கள் தரும் சொற்பக் காசுகளின் கனவில்
குதிகால்களின் வலியை மறக்க முயல்வாள்.
நான்காம் வகுப்பிலிருந்து ராயப்பனைத் திருப்பிக் கொண்டுவந்து பொன்னு ஆசாரியின்
வீட்டில் வேலைக்குச் சேர்த்தாள் அம்மா. அவர் கண்களை மூளையின் வழியிலும் கைகளை
மனத்தின் பாதையிலும் சஞ்சரிக்க விட்டு நகைகள் செய்வார். செய்நேர்த்தி மிக்க
நுணுக்கமான கல்வேலைப்பாடுகள் கொண்ட நகைகளால் ராயப்பனின் கீர்த்தி விரிந்து பரவப்
பொன்னு ஆசாரியிடமிருந்து கற்றவையே காரணம் எனத் தன் நகைக்கடைத் திறப்பின்போது அவரது
காலில் விழுந்து பலர் முன்னிலையிலும் கூறினார். அவனுக்குக் கீழே சிதறாமல் உமியைக்
குவித்து அடுக்கிவைக்கவே ஒருமாத காலம் ஆயிற்று. குழலால், அவன் வயிற்றை எக்கி
எக்கிக் கண்கள் சிவக்க நெருப்புக்காக ஊதிக்கொண்டிருந்ததைத் தண்ணீர் ஊற்ற வரும் அவன்
அம்மா கண்கள் பூரிக்கப் பார்த்து நிற்பாள். ஆசாரி வெளியூர் போய்வருகையில் அவரது
பைகளிலிருந்து வினோதமான மணம் வரும். "மீனாட்சி" என்றபடியே உள்ளறைக்குப் போவார்.
உடனே அவள் வெளிவந்து காய்கறி வாங்க அனுப்பிவைப்பாள். திரும்பி வந்ததும் வாசல்
படிகளுக்குக் கீழே மொடமொடப்பான எண்ணெய் தோய்ந்த காகிதங்கள் கசக்கி எறியப்பட்டி
ருக்கும். அதை எடுத்துக் கண்கள் மூடி முகர்ந்து பார்ப்பான். வயிறு ஒருமுறை சுருங்கி
விரியும். அவரது குந்தைகளின் வாயோரங்களில் துடைக்கப்படாமல் தின்பண்டங்களின்
துணுக்குகள் ஒட்டிக்கொண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்காக
முன்னிரவிலிருந்தே நாவில் நீர்வடியக் காத்திருப்பான். ஆட்டுக் கறியின் மணத்தை அவன்
தட்டில் விழும் துண்டுக் கறியை நினைத்தபடியே - வறண்ட உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு
வெற்று நாவை ருசித்துக்கிடப்பான். குழம்பு ஊற்றப்பட்டவுடன் கைகளால் வேகமாகக் கிளறி
எடுக்கையில் அது தக்காளியாக இருக்கும். யாரு மறியாமல் புறங்கையால் கண்ணீரைத்
துடைத்துச் சோற்றில் குழம்புச் சாற்றைக் குழைத்து அள்ளி அள்ளித் தின்பான்.
"ஏம்மா தாதா தூந்தீத்தே இருக்து"மகேஸ்வரியின் மகள் அவரருகே சென்று கட்டிலைப்
பற்றிக் குதிகாலால் உந்தி அவர் முகத்தைப் பார்த்து இன்னும் மாறாத மழலையில்
கேட்டாள்.
"லதா. . . வாய மூடிட்டு இங்க வாடி, பெரிய மனுஷின்னு நெனெப்பா" குழந்தை அப்படியே
நின்று மேலும் உற்றுப் பார்த்தபடியிருந்தது.
அவள் குரலை மாற்றி "பாப்பா. . . அங்கெல்லாம் போக் கூடாது. அம்மாட்ட வாடீ குஞ்சு"
என்றாள்.
ஒரு கணம் அவள் மனம் காலத்தை அறுத்து மனோகரனிடம் சென்றது. அவன்தான் வினோதமும்
அற்புதமும் கொண்ட செல்லப் பெயர்களால் மகளை அழைப்பான். "அம்புலிக்குட்டி"
என்றபடியேதான் அவன் தொட்டிலிலிருந்து அவளை அள்ளி எடுப்பான். அவன் குரல் கேட்டதும்
தொட்டிலில் கிடந்தபடியே கால்களை உதைக்கும்; இடது கையை வேகமாகத் தன்மேல்
அடித்துக்கொள்ளும்; அவன் தொடைமீது ஏறிநின்று வீட்டுக் கூரையைத் தொட முன்னுவதுபோலத்
துள்ளும். "சின்ன மகேஸ் எங்க?" என்பான். சிரித்தபடியே "ங்கூவ். . . ங்கூவ்" என
வாயிலிருந்து வழியும் அமிர்தத் தோடு அவன்மேல் விழும். கண்களின் ஈரத்தைத்
துடைத்துக்கொண்டே குழந்தையிடம் சென்றாள்.
வரமாட்டேன் என்பதுபோலத் தலையசைத்தது. "அவங்கப்பனோட புடிவாதம்" என்று மொனகியவாறு
இழுத்தாள். அவளது இழுப்புக்கு ஈடுகொடுத்து வீறிட்டு அழுதது. கட்டிலைக் கைவிரல்கள்
பற்றிக்கொண்டிருந்தன. அதன் உடம்பு கோபத்தில் நடுங்கியது.
"அது ஒண்ணுதான் இந்த வூட்ல ஆத்தாளும் மவளும் மிச்சம் வைச்சுருக்கறீங்க. அதையும்
முழுங்கீருங்க" என்றபடி ஆரஞ்சுச் சுளையை வாயினுள் திணித்துக் கொண்டாள் ருக்மணி.
சேலையில் தீப்பிடித்துக்கொண்டதுபோல மகேஸ்வரி பதறி எழுந்தாள்.
"இருக்கெற எடந்தெரியாம உறிஞ்சறதுக்கு நானொன் னும் உன்ன மாரி மூட்டைப் பூச்சி இல்ல"
என்றாள்.
எவ்விதத் தொய்வுமின்றி அந்த அடி சரியான இடத்தில் விழுந்தது. பல லட்சங்களில் ருக்மணி
கட்டிய வீடு இங்கிருந்து பிடுங்கியதில் கட்டியதுதான் என்பதையும் அவ்வப்போது
நகைகளும் செய்து எடுத்துச் செல்வதையும் மகேஸ்வரி மட்டுமே அறிவாள். ருக்மணி,
ஆனந்தனின் மாமனாரிடமும் கணிசமாகப் பணம் பெற்றிருந்தாள். மகேஸ்வரி எழவே முடியாது
போவதுபோல ருக்மணி வசவொன்றைத் தேடினாள். வெளியே செருப்புகள் கழற்றிவிடப்படும் சத்தம்
கேட்டதும் ஆவேசம் தணிந்து பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்டாள். "ஓடுகாலி முண்ட"
என்று வாயினுள் கூறியபடியே "வாங்கண்ணா" என வந்தவர்களுக்கு நாற்காலிகளை இழுத்துக்
கட்டிலருகே போட்டாள்.
ராயப்பனுக்குப் போதை வஸ்துகள் எவற்றிலுமே பழக்கமிருந்ததில்லை. அனைத்திற்கும் ஈடாக
அவர் பெண்களின் மேல் மையல் கொண்டவராயிருந்தார். அவரது வலக்கையாக இருந்த கனகுவைத்
தவிர வேறு எந்த நபருக்கும் இந்த ரகசியங்கள் போய்ச் சேராமல் பார்த்துக்கொண்டார்.
நான்கு குழந்தைகளுக்குப் பின் ஆபரேஷனாலும் மருந்துகளாலும் உட்கார்ந்தால் எழவே
சுவரின் உதவி தேவைப்படும் அளவிற்கு முத்துலட்சுமியின் உடல் ஊதிப்போயிருந்தது.
அவரைப் பற்றி வெளியே கேள்விப்பட்ட எதையும் அவள் நம்பத்தலைப்படவில்லை.
தென்னந்தோப்போடு கூடிய வீட்டிலேயே அவர் அந்தக் கூத்துகளை வைத்துக்கொள்வார்.
கச்சிதமான உடற்கட்டு கொண்ட பெண்களைவிடச் சதை அதிகம் இல்லாத ஒல்லிப் பெண்களையே
அவருக்குப் பிடிக்கும். "ஒத்த நாடியத் தொட்டாப் போதும்டா கனகு. . . பிணையல்
போட்டுடுவாளுகோ. பின்ன அவளுகளா வுட்டாத்தான்டா ஆச்சு" என்பார். புணர்ச்சியில் அவரை
ஆளும் பெண்களையே மீண்டும் மீண்டும் அவர் கூட விழைவார். பணம் கொண்டிருந்தால் சகலமும்
தன்னை நோக்கி விழும் என நம்பியிருந்தார். ராதாவிடம் அது பலிக்கவேயில்லை. எவ்வளவு
முயன்றும் அவளை மசியவைக்க முடியவில்லை. உடம்பின் வெப்பத்தைக் குளிர்வந்து கவ்விய
பலகீனமான குளிர்கால இரவொன்றில் ராதாவை அவர் முகர்ந்து ஆட்கொண்டார். பின் எப்போதும்
அவரை அவளால் விலக்கிட முடிந்ததேயில்லை. பெண்களை மயக்குவதில் ராயப்பனைக் கில்லாடி
எனக் கூற முடியாது. அவர் தொட்டு, விட்டுச் சென்ற பல பெண்களிடம் கனகுவிற்குக்
கடைசிவரை தொடர்பிருந்தது, கனகு வாய்ப்பேச்சில் சூரன். பிறர் உடல் மொழியைப்
பாவனையைக் குரலின் அதே ஏற்ற இறக்கத்தோடு செய்துகாட்டுவான். பெண்களிடம் அவனால்
அப்படித்தான் நுழைய முடிந்தது.
ராதா சூல்கொண்டபோது அதனைக் கலைக்க ராயப்பன் கொண்ட முயற்சிகள் பலவற்றையும்
அவருக்குத் தெரியாமல் கனகுதான் முறியடித்தான். கனகுக்கு அவள் தூரத்து உறவுமுறை.
வாய் நிறைய "மாமா" என்றே அழைப்பாள். தாழிடப்பட்ட அறையில் ஒரு நாள் ராயப்பன் தன்
வாழ்வில் முதன்முறையாக ஒரு பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சினார். கண்ணீரோடு அவள்
அதை நிராகரித்தபோது மிரட்ட ஆரம்பித்தார். கனகு மூலம் ராதா, தன் அண்ணனுக்குச் சேதி
அனுப்பினாள்.
n
வாடகைப் பணத்தைப் பீரோவின் உள்ளே வைத்துப் பூட்டிச் சாவியைச் சக்தி தன்னுடனேயே
வைத்துக் கொண்டான். அவரது மூத்த மகனான சக்திவேல்தான் சகலக் கணக்குகளையும் அசையாச்
சொத்துகளையும் ஒரு பட்டுத்துணியைப் போல அவ்வளவு கவனத்துடன் கையில் வைத்திருந்தான்.
இப்போது அது கால்வாசியாகக் குறைந்தபின் அவன் முகத்தில் கடுகடுப்பும் ஒருவித
எரிச்சலும் வந்து ஒட்டிக்கொண்டன. அவனது தோற்றம் பஞ்சத்திலிருந்து மீண்டவனைப் போல
இருக்கும். அப்பாவிடம் இல்லாத கருமித்தனம் அவனிடம் பிறர் காறித் துப்புமளவிற்கு
இருந்தது.
"நோட்டா இருந்தான்னா. . . சிலுவானமா இருந்தான்னாப் பணங்கறது லட்சுமி. அவளப் போக
உட்டுட்டம்னா அப்பறந் தொறத்தணும். மறுபடியும் புடிச்சிட்டம்னா தேவல. முடியலீன்னா?
அதுக்குள்ள நம்மளவிட ஒஸ்தியா ஒருத்தங் கிடைச்சான்னா அவங் கைக்குள்ளாற போயிருவா! ஏஞ்
செலவு செய்வானே, இந்தத் தும்பத்துக்கெல்லாம் ஆளாவான்னேன்?"
"உடாமா எப்புடிப் புடிப்ப?"
"அடக் கூறுகெட்டவனே. . . அதுனாலதான்டா நீ எங்கிட்ட வாடகைக்கிருக்கற. ஒன்ன வுட்டா
அது ரெண்டாத் திரும்பி நம்மகிட்டயே வரணும்டா சுப்பா. பத்துவூட்டக் கட்டி வாடகைக்கு
வுடறதுன்னா சும்மாவா"
"என்னருந்தாலும் உங்கப்பா சொத்துதானே, உந்தம்பிக்கும் சமதையாக் கொடுக்கோனும்லா?"
"அந்தக் குடிகார நாயோட நாயத்தை எங்கிட்ட எடுக்காத" என்றவாறே முகத்தைத் துடைத்துக்
கொண்டான்.
"அவிநாசியப்பனுக்கு எல்லாம் தெரியும். பாத்துட்டே தானே இருக்கான் கணக்குச் சரியாப்
போச்சு. நீ ஆக்கற, அவன் அழிக்கறான்."
சக்தியின் முகம் வெளிறிற்று. அடுத்த வார்த்தை கிடைக்காமல் மனம் அல்லாடியது.
"மூட்றா நீயி, வாடக குடுக்க வக்கில்ல கூடப் படிச்சவன்னு வூட்டவுட்டா நீ ஏம்
பேசமாட்டே?"
"ஆமா இத்துனூன்டு வூட்டுக்கு எட்நூறுரூவா வாடக வச்சா எப்படிக் குடுக்கறது? இருக்கற
பொழப்புத் தந்தனக்கு."
"மறுபேச்சு பேசக் கூடாது. அடுத்த நடைக்குப் பணம் வர்லீன்னா சட்டிபானையெல்லாம்
ரோட்டுக்குப் போயிரும் ஆமா."
அடுத்துப் பேசுவதற்குள் சுப்புவின் மனைவி வசந்தா வெளியே வந்தாள். சக்தியின் கண்கள்
அவள் உடலைத் தொட்டு நின்றன. ஆடையைச் சரிப்படுத்திக்கொள்ளாமல் சக்தியை இளநகையோடு
பார்த்தபடியே "உள்ள வா மாமா" எனச் சுப்புவை அழைத்துச் சென்றாள். அவளது பழைய ஜாடைப்
பேச்சுகள் நினைவுக்குவந்தன. டிவிஎஸ் மொப்பட்டைக் கிளப்பி அங்கிருந்து சென்றான்.
சக்தியின் மனம் ஆனந்தனைச் சுற்றிவந்தது. திட்டித் தீர்த்தாகிவிட்டது. அடித்தும்
பார்த்தாகிவிட்டது. சோறுபோடாமலும் இருந்தாகிவிட்டது. அவன் மனைவி அவனைச் சற்றுத்
தள்ளியே வைத்திருக்கிறாள். எதற்கும் அவன் மசியவில்லை. காசு கொடுக்காமல் அலைக்கழித்த
போது ஊர் முழுக்க அப்பாவின் பேரைச் சொல்லிப் பணம் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.
ஒருமுறை அப்பா கூப்பிட்டு, "அவங் கேக்கறதக் குடுத்துத் தொலை, வெளியில தலைகாட்ட
முடியல்ல. எவனெவனோ நல்லாயிருக்கீங்களான்னு கேட்டுக்கிட்டே பக்கத்துல வந்து நேத்து
உங்க சின்னப் பையன் பணம் வாங்கீட்டுப் போனான்னு இழுக்கறானுங்க . . . சம்பாரிச்ச
பேரெல்லாம் காத்துல போயிரும்போல இருக்குடா . . . அவனுக்குக் கொடுத்துத் தொலைடா"
என்றார். போதையின்றி ஆனந்தனை நினைப்பது சிரமமாக இருந்தது. அவனுக்கு இரட்டை ஆண்
குழந்தைகள் பிறந்த சேதி கேட்டு மிகத் துலக்கமும் தெளிவும் கொண்ட நெற்றியைத்
திருநீறு மறைத்திருக்கக் கண்ட முகங்களுக்கெல்லாம் ஓடி ஓடிக் கல்கண்டு கொடுத்தான்.
அதே இரவில் அமளியும் எச்சில் தெறித்த சிரிப்புமாக மாறிப்போனான். ஏற்கனவே இரண்டு
வீட்டு வாடகையை அவன் வாங்கிப் போயிருந்தான். மனம் அப்படியே நின்று தன்னை நோக்கித்
திரும்பிற்று. ஒரே மகள் அப்படியென்றால் இந்தச் சொத்துகளும் சேமிப்புகளும் முகம்
தெரியாத வனுக்காகவா? முதுகுக்குப் பின்னாலிருந்து இதே பல்லவியை வசூலின்போது பலரும்
முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறான். ஆனந்தன் எவ்வளவு ரகளை செய்திருக்கிறான்.
அப்படியிருந்தும் அம்மாவுக்கு ஆனந்தன்மீதுதான் ப்ரியம் அதிகம். அம்மா
சாகும்வரைக்கும் அவன் கேட்கும்போதெல்லாம் பணம் தந்துகொண்டிருந்தாள். ஆனந்தனுக்கு
நேர்மாறானவள் அவன் மனைவி வடிவு. எவரிடமும் ஒட்டாமல் விலகி, குறைவாகவே பேசுபவள்.
மிகச் சுத்தமான ஆடையுடன் எப்போதும் நளினமாக இருந்துகொண்டிருப்பாள். "கர்வம்
புடிச்சவோ" என்பாள் அம்மா. "பொறக்கீலயே சொத்துப்பத்தோட பொறந்தவளாச்சே பின்ன
இருக்காதா?" என வக்காலத்து வாங்குவாள் ருக்மணி அக்கா.
அப்பாவைப் பார்த்தான். வாய்க்குள்ளிருந்து குறட்டை வருவதுபோலச் சப்தம்
வந்துகொண்டிருந்தது.
n
சிரிப்பில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என இரவில் படுத்தபடியே யோசித்தபோது
மகேஸ்வரிக்கு உறுதியாயிற்று. எவ்வளவு ஆண்கள் தினமும் பார்வையில் படுகிறார்கள்,
நகர்கிறார்கள், மறைந்தும் போகிறார்கள். ஏன் மனோகரனைச் சுற்றியே மனம்
வலைபின்னுகிறது? அவனை ஒரு வார காலம் காணாமலிருந்த சமயம் அது. அவள் மட்டும்
தனித்திருந்த பேருந்தினுள் புன்னகைத்தபடியே நெருங்கிவந்து டிக்கெட் கொடுக்கும்
மனோகரனைக் கனவில் கண்டாள். பெரும் மக்கள் பிரவாகத்தினிடையே நகர்ந்துகொண்டிருந்தவனை
மறைந்து நின்று அவன் சட்டையைப் பற்றி இழுப்பது போல அக்கனவு அடுத்த நாளில் பரிணாமம்
கொண்டது. அவன் நினைவு அவளுக்குள் நடுக்கத்தையும் பரவசத்தையும் ஒருசேரத்
தந்துகொண்டிருந்தது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான அழகனல்ல அவன்.
அவளது வழக்கமான வழித்தடத்தில் அவன் நடத்துநராக இருந்தான். அனாவசியமாகப் பிறரைச்
சிரிக்கவைப்பதில் வல்லவன் அவன். பேருந்தில் அவள் இருக்கும்போது தாளம் அதிகம் இல்லாத
அன்றைய மனநிலையைக் கூறும்படியான காதல் பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து ஒலிக்கவிடுவான்.
மகேஸ்வரி அவனை உதாசீனப்படுத்தும்படியாக ஜன்னலின் வழியே வெறித்துப் பார்த்தபடி
மனத்தைப் பாடலில் லயிக்கவிட்டு அமர்ந்திருப்பாள். "இனி நானென்பது நீயல்லவோ தேவ
தேவி" என்ற பாட்டு ஒலித்த அன்றுதான் அவள் பின்னாலேயே ஓடிச்சென்று அவள் நோட்டுப்
புத்தகத்தைப் பிடுங்கி அதற்குள் கடிதத்தை வைத்துவிட்டு ஓடினான் மனோகரன்.
வேண்டுமென்றே இரண்டு நாள்கள் கண்களால் சீண்டி, கோபமான உடல் அசைவுகளைக் காட்டி
அலைக்கழித்துப் பிறகு ஏற்றுக்கொண்டாள். அப்போதும் அவள் வெறுத்து வந்த அப்பாவைப்
பற்றிய அச்சம் கொண்டிருக்கவில்லை. அம்மாவின் நினைவுதான் படுத்திக்கொண்டிருந்தது.
மூன்றாம் ஆண்டு முடிந்ததும் நண்பர்கள் புடைசூழ முருகன் கோவிலில் மாலை மாற்றி மணம்
முடித்துக்கொண்டாள்.
அரசல்புரசலாக அப்பா ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். அவளுக்கென வைத்திருந்த நகைகளையோ
பணத்தையோ அவள் எடுத்துச் சென்றிருக்கவில்லை. மனோகரனும் அதை விரும்பவில்லை.
மகேஸ்வரியைத் தேடிப் பல ஊர்களிலும் கார்கள் அலையும் செய்தி அவளுக்கு எட்டியது.
கோவிலில் வைத்து, ஓயாது அழுதபடி இருந்த அம்மாவிடம் அவள் மனம்விட்டுப் பேசினாள்.
அப்பா அவளைத் தலைமுழுகிய செய்தியைச் சுப்பு வந்துசொன்னான். அவளது தாம்பத்தியத்தின்
மொக்குகள் மலர்ந்து பூத்துக்கொண்டிருந்த வசந்த காலம் அது. மகிழ்ச்சியின் நுரை
ஏறிவந்து மனத்தை நிறைத்தபடி இருந்த நாள்கள் அவை.
மகேஸ்வரி எவ்வளவு கூறியும் கேட்காமல் ஐந்தாவது முறையாக மனோகரன் இருமுடி கட்டி
மலைக்குச் செல்ல ஆயத்தமாகக் கோவிலுக்கு வெளியில் வந்துநின்றான். கூட்டத்தின்
கசகசப்பில் வீறிட்டு அழுத கைக்குழந்தையை வாங்கி முத்தம் தந்து வேனுக்குள்
ஏறிக்கொண்டான். பதைபதைப்பான கண்களுடன் நின்றிருந்த மனைவியைப் பார்த்துக் கைகூப்பி
"சாமி சரணம்" என்றான்.
அம்மாவுக்குக் குழந்தைகளைப் படிக்கவைத்து அதிகாரிகளாக மாற்றிப் பார்க்கும் கனவு
இருந்தது. அப்போது ராயப்பன் வெற்றியின் அடுத்தடுத்த படிக்கட்டுகளைத்
தாண்டிக்கொண்டிருந்தார். சகல வசதிகளோடும் வளர்ந்துவந்த குழந்தைகளுக்குப் பள்ளியின்
கண்டிப்பும் கண்காணிப்பும் ஒருவித விலக்கத்தையும் வெறுப்பையுமே அளித்தன.
பள்ளியிலிருந்த கணங்கள் கசப்பேறியவையாக இருந்ததால் அவர்களின் தலையில் எதுவும்
ஏறவில்லை. நின்றுகேட்க நேரமின்றி, இருப்பதை இரட்டிப்பாக்க அப்பா
ஓடிக்கொண்டிருந்தார். அம்மாவின் பேச்சுக்கு அவர் எப்போதுமே அவளை அவமானப்படுத்தும்
வார்த்தைகளிலேயே பதில்சொல்வார். அம்மாவின் நியாயமான குறுக்கீட்டைக்கூட அவர்
பொருட்படுத்துவதில்லை.
"எந்தக் கொழம்பு வைக்கறதுன்னு கேட்கறதோட உன்னோட யோசனையை நிறுத்திக்க" என்பார்.
மகேஸ்வரிக்கு மெச்சும்படியான படிப்பாற்றல் இருந்தது. அப்பாவின் போலியான
மிடுக்கையும் டாம்பீகத்தையும் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அப்பாவுடனான
அவள் உறவு வெறித்த பார்வைகளினாலேயே முடிந்துவிடக்கூடியது. கந்து வட்டிக்குள்ளும்
அவர் இறங்கினபோது அவர் மீதிருந்த மிச்சமான மரியாதையையும் துடைத்தெறிந்தாள்.
கடைச்சாவியோடு மஞ்சள் பையில் பணம் கொண்டு திரும்பி உள்ளறையில் வைத்துப் பூட்டிச்
சாவியைத் தலையணைக்கடியில் வைத்த பின்பே கண் அயர்வார். மகேஸ்வரியை வைத்து அப்பாவின்
பயமும் கோபமும் வசவுகளாக மாறிக்கொண்டிருந்தன.
"பொட்டச்சிக படிச்சா வூட்டுக்கு அடங்க மாட்டாளுக. அப்புறம் குடும்பம்
நடுத்தெருவுக்கு வந்துரும்" எனப் பொரிந்து தள்ளியபடியிருந்தார். அம்மாவின்
விடாப்பிடியான பிடிவாதம்தான் மகேஸ்வரியைக் கல்லூரிவரை கொண்டுபோயிற்று .
n
சக்தி தனக்கு மட்டுமே என நம்பியிருந்த வீடு விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம்
வந்தபோது தன் கௌரவத்தை எண்ணியபடியே அப்பா நீட்டிய காகிதங்களிளெல்லாம்
கையெழுத்துப்போட்டார். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நிரந்தரமாக அவரது முகத்தில் இருள் நிலைக்க ஆரம்பித்தது. ஒன்பது அறைகள் கொண்ட பல
நிறத்தினாலான பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட, சுற்றிலும் தென்னந்தோப்புகள் சூழ
இருந்த வீடு அவருக்கிருந்தது. கண்ணேறு கழிக்க இருபத்தியேழு கெடாய்களை வெட்டி ஊர்
முழுக்க விருந்துவைத்தார். அது இன்றும் பல்வேறு மிகைப்படுத்தல்களுடன் ஊரைச்
சுற்றிவந்துகொண்டிருந்தது. அவர் முத்துலட்சுமியுடன் ஐந்தாறு வருடங்கள் ஒண்டுக்
குடித்தனத்தில் வசித்து முதலிரண்டு குழந்தைகளைப் பெற்றபின் துளசிமாடம் கொண்ட
அய்யாசாமியின் வீட்டை வாங்கிக் குடியேறினார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு
இந்தப் புதிய வீடு விலைக்கு வரும் செய்தி அவருக்கு எட்டியது. தாமதிக்காமல் வீட்டை
வாங்கிப் பல லட்சங்களை இறைத்து மராமத்து வேலைகள் செய்து, புணரமைத்து ஊரையே
திரும்பிப் பார்க்கவைத்தார். எதிலும் நிதானம் கொண்டவரான அப்பா, தனது பழைய நண்பரான
பனியன் கம்பெனி அதிபருக்கு வங்கிக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்திட்டார். அதற்கு
கமிஷனாக ஒரு தொகையைக் கறாராகப் பெற்றுக்கொண்டது பின்னாளில் தெரியவந்தது.
தாமதமாகத் தயாரானதாலும் அவற்றில் மிகப் பெரும்பகுதி தரக்குறைவு என்னும் காரணத்தைக்
காட்டி நிராகரிக்கப்பட்டதாலும் சரக்குகள் தேங்கிநின்றன. கழுத்தை நெரிக்கும் அளவு
நெருக்கடிக்குள்ளான முதலாளி இரண்டே நாளில் தலைமறைவானார். வங்கி அனுப்பிய
நோட்டீஸ்கள் பெற்றுக்கொள்ள ஆளின்றித் திரும்பிவந்தன. எல்லா பீஸ்களையும் நான்கில்
ஒரு பங்கு விலைக்கு விற்றும் கடனில் கால்வீதமே குறைந்தது. வேறெந்த வழியும்
இல்லாதபோது அந்தத் தென்னந்தோப்போடு கூடிய பங்களாவும் நகைக் கடையும் ஏலத்துக்கு
வந்தன.
தம்ளர் கீழே விழும் ஒலியில் சக்தியின் நினைவு கலைந்தது. மீண்டும் அதை எடுத்து
மகேஸ்வரியின் குழந்தை வாயின் மேல் வைத்து மூச்சை உள்ளே இழுத்தது. இப்போது
தம்ளருக்குள் குழந்தையின் வாய் இருக்க, தம்ளர் அப்படியே அந்தரத்தில் நின்றது. சில
வினாடிகளில் கீழே விழுந்து உருண்டோடியது. திரும்பவும் அதைத் தொட நீண்ட லதாவின் கையை
மகேஸ்வரி 'பட்'டென்று தட்டி இழுத்து மடியில் போட்டுக்கொண்டாள். சக்தி அவளைப்
பார்த்துச் சிரிக்க முயன்றான். மகேஸ்வரியின் முகம் இறுக்கமடைந்து அப்பாவைப்
பார்க்கத் திரும்பிக்கொண்டது. அவன் ஒரு சேர வெறுப்பும் எச்சரிக்கையும் கொண்டவனாக
அவளுக்குத் தன்னைக் காட்டிக்கொண்டான்.
மகேஸ்வரியின் பெயருக்குத் துளசிமாடம் கொண்ட இந்த வீடு மாற்றப்பட்டபோது உண்டான
வெறுப்பு அது. கடனிலிருந்து மீளவே முடியாமலிருந்த அய்யாசாமி அது தன் குடும்பத்தையே
அழித்துவிடும் என்ற நிலை வந்தபோது அந்தக் குடும்பமே கண்ணீர்விட்டுக் கதற வீட்டை
விற்றுவிட்டு வெகுதொலைவு சென்றார். அவர்கள் வளர்த்துவந்த நாய் எந்த ஆகாரமும் உண்ண
மறுத்து அடுத்த ஒரு மாதத்தில் இறந்துபோயிற்று. இந்த வீட்டிற்குக் குடியேறி மேலும்
மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு இருந்தபடியே தனதிடத்திற்குப் பணத்தை வரவழைக்கும்
சாமர்த்தியத்தை எச்சரிக்கையுணர்வோடு செயல்படுத்தத் தொடங்கினார். செல்வங்கள் அப்பாவை
நோக்கித் தயக்கமின்றி ஓடிவந்துகொண்டிருந்த காலம். ஆனந்தனைச் சுகப் பிரசவத்தில்
பெற்றெடுத்திருப்பினும் அம்மாவின் பலம் பாதியாகக் குறைந்துபோயிருந்தது கூடவே
கர்ப்பத்தடை ஆபரேஷனும் செய்துகொண்டாள். உடம்பு பலவீனமும் வலியுமாக ஆகியது.
அம்மாவின் சித்தி பெண் ராதாவுக்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் சேவூருக்கு
மாற்றலாகியிருந்தது. அன்னூரிலிருந்து தினமும் வந்து போய்க்கொண்டிருந்தாள். அவளது
ரேஷன் கடை வேலைதான் அந்தக் குடும்பத்திற்கே அச்சாணியாக இருந்தது. அம்மா சொன்னவுடன்
மறுபேச்சில்லாமல் இங்கிருந்து வேலைக்குப் போகத் தொடங்கினாள். மூன்று மாதத்திற்குப்
பின் ராதாச் சித்தி கருவுற்றாள். ஒருவருக்கும் காரணத்தை விளக்க வேண்டிய
தேவையிருக்கவில்லை. தெருவே கூடி நிற்க ராதாவின் அண்ணன் பெரிய ரகளை கிளப்ப ஆள்களோடு
வந்திருந்தான். புளித்த கள் வீச்சம் அவர்களிடமிருந்து வந்தது.
"ஏன்டா சொத்துப்பத்து இருந்து மயிரா பண்றது? மனுசனுக்கு மானம் ஈனம் வேணும்டா. . ."
அவன் தன் நெஞ்சின் மீது ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டான்.
பக்கத்திலிருந்த ஒருவர், "எதார்ந்தாலும் சித்த அமைதியா பேசு ராசு" என்றபடி அருகில்
வந்தார்.
"உன்ற அக்காத் தங்கச்சிகிட்ட இந்த மாரி ஒரு புழுத்தி கோவணத்தை அவுத்திருந்தா
நீயென்னா மூடீட்டா நிப்ப . .?"
பிறகு அந்த ஆளைக் காணோம்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டு இதே வீட்டின் உள் அறையில் தாழிட்டபடி எல்லோரையும்
மடியில் போட்டுத் தூங்கவைத்து ஓயாமல் அம்மா விசும்பிக்கொண்டேயிருந்தாள்.
வெளியில் வந்த அப்பா தங்கராசுவைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துப் போனார். "கைய
எடுடா . . . கைய எடுடா" எனப் பயத்துடன் கத்தியபடியே இருந்தான். ஆள்களும் உடன்வர
முயன்றனர்.
"வெளிவே நில்லுங்கடா . . . ஒரு பய கால உள்ள வைக்கக் கூடாது சொல்லிட்டேன்."
அவரது கூர்மையான கண்களையும் சதை திரண்ட கைகளையும் கண்டு அவர்கள் பின்வாங்கினார்கள்.
அவருக்குத் தெரியாமல் தங்கராசு அறையைச் சுற்றிலும் பார்த்தான்.
"ராசு ஆனது ஆயிப் போச்சு . . . ராதாவ நானே கட்டிக்கிறன்."
"அப்ப நீயி ஊர்ல இருக்கிற பொம்பளீங்ககிட்டயெல்லாம் இதே மாதரிப் பண்ணிட்டு . . .
கட்டிக்கறேன்னா சும்மா வுட்டுறுவமா? உன்னையெல்லாம் எங்க சொல்லனுமோ அங்க சொல்லி
முட்டிய ஒடைக்கச் சொல்றேன்டா . . ."
உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டார். போலீஸிடம் போவதென்றால் அவன் இங்கு
வந்திருக்கவேமாட்டான். அவனது எதிர்பார்ப்பு அவருக்குச் சுலபமாகப் புரிந்துபோயிற்று.
"இதப் பாரு . . . சும்மா காச்சுமூச்சுன்னு கத்திப் பிரயோசனமில்லை. உனக்குச் சரியா
வேலை வெட்டியும் கெடைக்கிறதில்ல . . . கோயில்ல கம்பஞ் சாட்டோனும் இல்லாட்டி
கட்சிக்காரங்கீது மீட்டிங் போடோணும். அப்பத்தான் நீ பாக்கற எலக்ரீசன் வேலைக்கு
பொழப்ப ஓட்ட முடியும். இந்தா, இதுல இருபதாயிரம் ரூவா இருக்கு ஊர்ப்பக்கம் மளிகைக்
கடை வெச்சு உருப்படற வழியப் பாரு, ராசு உனக்கும் குழந்தை குட்டி இருக்குதுல்ல?"
என்றார்.
ராசுவுக்குக் கிடைத்திருப்பது தங்க முட்டை இடும் வாத்து. அவன் அதை
இழக்கப்போவதில்லை. உள்ளுக்குள் மனம் எம்பிக் குதித்தது.
"அதுக்கில்லீங்க மச்சான். . . ."
"அன்னியத்துலயா இப்புடி ஆயிப்போச்சு? ஒரே சாதிசனம் தாண்டா, அப்பிடிக் கீது
ஆயிருந்தா தலய அறுத்து உங்கைல கொடுக்கிற மொத ஆளா நாந்தான் இருந்திருப்பேன்
தெரியுமா?"
பேச்சற்றுத் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நோட்டுக் கட்டுக்களை எடுத்துக்கொண்டு
தரையில் கால்பாவாமல் நடந்துபோனான்.
நாள் செல்லச் செல்ல ராதா சித்திமேல் அம்மாவுக்கு இருந்த கசப்பு வளர்ந்து
வெறுப்பாகி, அவள் தொட்ட எந்த ஒன்றையும் தொட முகம் சுளித்தாள். அப்பாவோடு பேச்சை
அறுத்துக்கொண்டாள். எண்ணற்ற துக்ககரமான நாள்களுக்குப் பின் சித்தி மகேஸ்வரியைப்
பெற்றெடுத்தாள். விடாமலிருந்த ரத்தப்போக்கால் சருகுபோல ஆனாள் அவள்.
படுக்கையிலிருந்து அவள் மீள முடியாமலேயே போய்விட்டது. குற்றவுணர்ச்சியில் அம்மா
தீவிரமான மன அலைக்கழிப்பிற்கு உள்ளானாள். அதற்குப் பிராயச்சித்தம்போல் தன் சொந்தக்
குழந்தைகளைக் காட்டிலும் மகேஸ்வரியின் மீது அளவற்ற பிரியமும் வாஞ்சையும் கொண்டு தன்
சிறகின் அணைப்பிலேயே எப்போதும் வைத்துக்கொண்டாள்.
ஆட்டோ சத்தம் மெதுவாக அடங்கி வீட்டுவாசலில் நின்றது. ஆளுயர டிபன் கேரியரைத்
தூக்கிக்கொண்டு ஆனந்தனும் ஆள்களும் சுமக்க முடியாமல் வருவதைக் கண்டதும் சக்தியும்
மகேஸ்வரியும் ஓடிப்போய் ஆளுக்கொரு கைகொடுத்து எடுத்துவந்தனர். ருக்மணி
உட்கார்ந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள். எவ்விதச் சலனமுமின்றி வெறுமை நிரம்பிய
கண்களால் பல வருடங்களாக இருந்துவரும் மூத்த அக்காவை ஆனந்தன் கூட்டிக்கொண்டு வந்து
இலையில் உட்காரச்செய்தான். இருவரின் நிழலையும் மிதித்தபடியே பெரிய கொட்டாவியோடு
மாமாவும் வந்து சேர்ந்தார். பெரிய அக்காவுக்குக் குழந்தை இல்லை. காதும் மந்தம்.
முழுபலத்தையும் தந்து உரத்துப் பேசினாலொழிய அவளிடம் பதில் வாங்க முடியாது. அதுவும்
வாய்வழியாக மூச்சுவிட்டுக்கொண்டு சன்னமாகப் பேசுவாள். அவளுடன் பேசிப் பேசியே
மாமாவின் கழுத்து நரம்புகள் புடைத்துப்போயிருக்கும். சொல்லிவைத்தாற்போலத் தன் மனைவி
மகளைக் கூட்டிக்கொண்டு வருவதைக் கண்டதும் சக்திக்கு நிம்மதி பிறந்தது. மகேஸ்வரி
மட்டும் தன் அப்பாவைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
இலையிலிருந்த கத்திரிக்காய்த் துவயலைக் கண்டதும் வேட்டியின் இறுக்கத்தைத்
தளர்த்திவிட்டுக்கொண்டே அப்பா அதை உண்ணும் காட்சி மனத்தில் வந்தது. ரசத்தைத்
தீர்த்தம்போலக் கையிலேந்திக் குடிப்பதையே விரும்புவார், குறிப்பாக மிளகு ரசம். கடன்
வசூலிக்கச் செல்கையில் அவர் நடந்துகொண்ட கடுமையும் விருந்துகளுக்கு என்றால் அவர்
காட்டிய கம்பீரமும் பெரும்பாதிச் சொத்துகள் கைவிட்டுச் சென்ற அன்று
ஒன்றுமேயில்லாமல் போனது. அப்போதுதான் அது அவரது இயல்பல்ல வரவழைத்துக்கொண்டது என்பது
சக்திக்குப் புரிந்தது. சகுனங்களை அவர் தனது மற்றொரு உடல் உறுப்புப் போல எண்ணினார்.
எதிரில் எண்ணெய் கொண்டு வருபவர்கள், விறகு வெட்டி எடுத்துவருபவர்கள், காலிக்
குடங்களோடு எதிர்ப்படுபவர்களையெல்லாம் கண்டால் மீண்டும் வீட்டுக்குத்
திரும்பிவிடுவார். விதவைகளைக் கண்டுவிட்டால் "பாழாப்போன முண்டைக" என்றபடி நுழைந்து
செம்பு நீரைக் குடித்துவிட்டே கிளம்பிப்போவார்.
அந்தத் தோப்பு வீடு கைவிட்டுப் போனதற்கு மறுவாரம் மனோகரனின் மரணச் செய்தி அவர்
காதுக்கு எட்டியது. அவன் பிணம் வீட்டிற்கு வந்த மறுநாள் காலை, மலைக்குச்
சென்றவர்கள் திரும்ப வேண்டிய தினம். பெயர் தெரியாத கேரளக் கிராமமொன்றில்
ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் கும்பலாகக் குளிக்க இறங்கினார்கள். எல்லோரும் கால்
மூட்டளவு தண்ணீரிலேயே முங்கி எழ, மனோகரனும் கணேசனும் நெடுந்தூரம்
நீந்திச்சென்றார்கள். திரும்பும் வழியில் கைதவறி வேறு திசையில் நீரை விலக்கி
முன்னேறியபோது மனோகரன் நீர்ச்சுழிக்குள் சிக்கிக்கொண்டான்.
அறையப்பட்ட ஆணிபோல வெறித்தபடி மகேஸ்வரி சுவரில் தலைசாய்த்து அலங்கோலமாக
அமர்ந்திருந்தாள். வெளித் திண்ணையில் அப்பாவும் சக்தியும் அமர்ந்துகொண்டனர்.
விளக்கின்றிக் கிடந்த அறைக்குள் ஆனந்தன்தான் அம்மாவை அழைத்துப்போனான். அம்மாவைக்
கண்டதும் சுவர்கள் அதிர அவள் போட்ட கூச்சலும் கத்தலும் அழுகையும் அதற்கு முன்
எந்தச் சமயத்திலும் அவளிடமிருந்து வந்ததில்லை. யாரும் அறியாமல் குலுங்கிக்
கண்ணாடியைச் சற்றே தூக்கிக் கண்களைத் துண்டால் ஒற்றிக்கொள்ளும் அப்பாவை வேறு
யாரோபோலச் சக்தி பார்த்தான். அவள் காலில் விழுந்து கட்டியழுது அம்மாதான் மகேஸ்வரியை
இந்த வீட்டிற்குக் கூட்டிவந்தாள். அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின் அம்மாவின்
நச்சரிப்பில் மகேஸ்வரியின் பேரில் வீடு மாறிற்று. மகளுக்குப் பிடித்தவராக ராயப்பன்
தன்னை மாற்றிக்கொண்டார். அவரது செயல்கள் அடுத்த நாள்களுக்கான கணக்குகளிலிருந்து
விலகி, எப்போதைக்குமுரிய உறவுகளின் சாளரங்களை நோக்க ஆரம்பித்தது. சக்தி
அவரிடமிருந்து விலகிக்கொண்டான். "கண்ணு போனொதுந்தே சூரியனப் பத்தி நெனப்பு
வந்திருக்கு இந்த மனுசனுக்கு" என்றாள் அம்மா. ஒருமுறை வீடு மாற்றலின்போது ருக்மணி
அக்காவின் ரகளை அப்பாவை ஒன்றுமே செய்யவில்லை. அம்மா இறந்த அன்று மகேஸ்வரியின்
அழுகையை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. "இப்புடி நாடகமாடி நாடகமாடித்தான்
எங்காத்தாக்காரி மனசையும் கலச்சிருப்பா" என்று ருக்மணி அக்கா வந்திருந்த
உறவுக்காரர்களிடம் பொறுமினாள்.
கைகழுவிக்கொண்டிருந்தபோது உள்ளேயிருந்து வந்த "அப்பா. . ." என்ற பெருங்குரலைக்
கேட்டுச் சக்தியும் பற்றவைத்த பீடியை எறிந்துவிட்டு ஆனந்தனும் ஓடினார்கள். காரையைக்
கரைத்து ஊற்றினால் உயிர்போயிடும் எனக் கேட்டுப் பின்பக்கமாக ருக்மணி
சென்றிருந்தாள். மகேஸ்வரி கொய்யாக்களைப் பிடுங்கித் தின்றபடி மகளுக்காக நான்கைந்தை
மடியில் கட்டிச் சொருகியபோது அந்தச் சத்தம் அவளை எட்டியது. தலை வலது தோள்பக்கம்
சாய்ந்திருந்தது. டாக்டர் பாலச்சந்தரைக் கூட்டிவர ஆனந்தன் வேகமாகச் சென்றான். நாடி
பிடித்துப் பார்த்து "போயாச்சு" என்று விட்டு அதே காரில் ஏறிச் சென்றார் அவர்.
அழுகையும் ஒப்பாரியுமாக வீடு இரண்டுபட்டது.
சக்தி இரண்டாயிரம் ரூபாயை ஆனந்தனிடம் தந்து,
"தேர்ப்பாடை கட்டறதுக்குப் போய்ச் சொல்லிரு. இருநூறு ரூவாய்க்குப் பொடிச் சில்லரை
வாங்கிப் பொரியோட கலந்திரு . . . கூடவே பூவுக்கும் குழிமேட்டுக்கும் ஆள வுட்டுரு"
என்று இயல்பாகக் கூறிக்கொண்டிருந்தவன், "சட்டுன்னு வா. . . தண்ணீ கீது போட்டுட்டு
வந்தராத" என்றான் குரலில் கடுமையை ஏற்றி.
ஊர் முழுக்க ஆள்களுக்குச் சொல்ல செல்ல முத்துவையும் சுப்புவையும் அனுப்பினான்.
உறவுகளுக்குச் சொல்ல டெலிபோன் பூத்துக்கு அவனே சென்றான். அவர் உடலை மாலைகளே
மறைத்துவிட்டிருந்தன. அத்தெருவே அடைத்துக்கொள்ளும்படியான கூட்டம்
நின்றுகொண்டிருந்தது.
"போனவாரம் இன்னேரத்திக்கெல்லாம் மனுஷன் நடமாடிட்டுத்தானே இருக்கான்? என்னன்னு
சொல்றது? மண்ணுல எல்லாத்தையும் கண்டுபுடிக்கிற மனுஷனுக்கு இந்தச் சாகறதத்
தடுக்கறதுக்கு ஒரு மருந்தக் கண்டுபுடிக்க முடியலையே" வெளியே போடப்பட்டிருந்த
நாற்காலியிலிருந்தக் கதர் வேட்டி டீயை உறிஞ்சிக்கொண்டே பேசியது.
உள்ளே ஒப்பாரி நின்றபோது வடிவு "படுக்கைலே வுழுகறதுக்கு முந்தாநாள் நைட்டு என்னக்
கூப்பிட்டு ஆனந்தனுக்கு ஒன்னுந் தெரியாது குழந்தைகள நீதான் பாத்துக்கோணுமுன்னு
சொன்னாரே. . ." என்று இழுத்தாள். அவரைக் கிடத்தியிருந்த இடத்திலிருந்து வெகுதூரம்
தள்ளி அவள் அமர்ந்திருந்தாள்.
தெருவிலிருந்து ஒப்பாரிச் சத்தம் கேட்டதும் வீட்டினுள் அழுகை நின்று, வந்தவள்
முகத்தைக் கண்டதும் மீண்டும் பெருத்த குரலோடு தொடர்ந்தது.
எல்லோரது முன்னும் ருக்மணி அக்காதான் மூக்கைச் சிந்தியபடிய இருந்தாள். ருக்மணி
அழும்போது சேர்ந்து அழவும் நிறுத்தும்போது நிறுத்தவும் அவளருகாகவே சக்தியின் மனைவி
அமர்ந்துகொண்டாள். சக்தியின் யோசனை இது.
"எப்பவும் தாகம்னா எங்கிட்டத்தானே தண்ணி வாங்கிக் குடிப்பாரு . . . கெடைல
வுழுகறதுக்கு இரண்டு நாள் முன்ன எம் மவ மலருகிட்டச் சொம்பு நொம்ப வாங்கிக்
குடிச்சிட்டுத்தானே படுக்கப் போனாரு" என்றாள் சக்தியின் மனைவி.
"போயிருவோம்ன்னு தெரிஞ்சு வைச்சிருந்தயா என்ற அய்யாவே . . ." என ருக்மணி அக்கா
குரலை உச்சத்துக்குக் கொண்டுபோய்த் தேம்பியபடியே மெதுவாகக் கீழிறக்கினாள்.
ஆனந்தன் எட்டிப் பார்த்தான். மகேஸ்வரி அழுது மயங்கி, விசும்பியபடியே சுருண்டு
படுத்திருந்தாள். உள் அறையில் லதா தூங்கிக்கொண்டிருந்தது.
"மால நேரம் ஆயிட்டு வருது . . . டக்குன்னு எடுக்குற வழியப் பார்டா சக்தி" என்றவாறே
எம். எல். ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அருகில் வந்தார். அப்பாவிடம் தொழில் கற்று
மேலேறியவர்.
இவ்வளவு பேரும் குழிமேட்டுக்குப் போய்வந்த பின்னரும் இருந்தால் ஆகக்கூடிய சோற்றுச்
செலவை எண்ணி அவன் மனம் கணக்கிட்டுக்கொண்டிருந்தது.
"என்றா யோசன வேண்டிக் கிடக்குது?"
"ஒண்ணும்மில்லிங் . . ."
ஆளுக்கொரு கைப்பிடித்துத் தூக்கிவந்து கட்டிலில் கிடத்தினர். பெருத்த ஓலம் எழத்
தலையிலும் மார்பிலும் அடித்தபடி பெண்கள் பிலாக்கணம் வைத்தனர். குளியல் சடங்குகள்
கழிந்து பங்காளிகள் கோடித் துணியும் போட்டபின், சேவலின் கழுத்து, பாடையின் முன்
திருகப்பட்டு அதன் ரத்தம் ஒழுகப் பாடையைச் சுற்றிலும் கொண்டுவரப்பட்டது. சுற்றி
நின்றவர்கள் அவரைத் தூக்கிப் பாடையில் வைத்தனர்.
கொண்டையை முடிச்சிட்டு மூக்கை முந்தானையால் துடைத்துக்கொண்டே ருக்மணி வேகமாக வெளியே
வந்தாள்.
"என்னய என்ன நாதியத்தவோன்னு நெனச்சிட்டீங்களா? இந்த ஓடுகாலிக்கு இந்த ஓடு! உனக்கும்
அந்தக் குடிகார நாயிக்கும் பத்தூட்டையும் எழுதி வைச்சிட்டான். அப்ப நானு! ரோட்ல
போறவளா? வூட்ல இருக்கிற நகையெல்லாம் எனக்குந்தாஞ் சொந்தம் அதுக்கு ஒரு வழியப்
பண்ணிட்டுத் தூக்குங்க எங்கப்பனை. . ." என்றாள்.
சக்தி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. வந்ததிலிருந்து அவள் கொண்டிருந்த
மௌனத்தின் பொருள் அவனுக்கு விளங்கிற்று. அவன் மனைவி அதற்காக நீண்ட நாள்கள்
நச்சரித்துக்கொண்டேயிருந்தாள். ஆனந்தன் மனைவியும் அப்பாவிடம் மதிப்புடன்
நடந்துகொண்ட பின்னணியும் அதுதான் எனத் தோன்றிற்று. எட்டி உள்ளே பார்த்தான். அதே
இடத்தில் மகேஸ்வரி கிடந்தாள். ஆனந்தன் வெள்ளை வேட்டியோடு ருக்மணியைப் பார்த்து
நின்றிருந்தான்.
கூட்டத்திலிருந்து உறவுக்காரர் ஒருவர் விலகிவந்து, "அதெல்லாங் கேக்கறதுக்கு
நேரங்காலமே இல்லியா? காரியம் முடியிட்டும் எங்க போயிறப்போகுது . . . பதினாறு
முடிஞ்சொன்னையும் சாவகாசமாக உக்காந்து பேசிக்கலாம்" என்றார்.
"சும்மாரு மாமா அப்படியே வுட்டா இவுனுங்கெல்லாஞ் சேந்து எந்தலைல மொளகா
அரச்சுருவாணுக. பதில் சொல்லட்டும் முதல்ல."
கூட்டமே வாயடைத்து நின்றது. தொலைவில் நின்றிருந்தவர்களுக்கு மிகத் துரிதமாகத் தகவல்
இட்டுக்கட்டப்பட்ட பொய்களுடன் போய்ச்சேர்ந்தது.
வண்ணக் காகிதங்களாலும் ஜிகினாக்களாலும் மலர்ச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்
வண்டிக்குள் ராயப்பன் அப்படியே கிடந்தார்.
|