Google   www kalachuvadu.com

தலையங்கம்

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வுரிமை

அண்மையில் மெக்ஸிகோவில் நடைபெற்ற 17வது சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஓரினச் சேர்க்கையாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் குற்றவாளிகள் என வரையறுக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலியல் தொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அக்கருத்தரங்கில் கோரியுள்ள அவர் எய்ட்ஸ் நோய்த் தாக்குதலுக்குள்ளாகும் பாதுகாப்பற்ற பிரிவினர்களாகப் பாலியல் தொழிலாளர்கள், அரவானிகள், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்பொழுது அமைச்சரின் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமைச்சரின் பேச்சு பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்துவோரின் வரவேற்பைப் பெற்றுள்ள அதே சமயத்தில், ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களது கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் எய்ட்ஸ் நோயைப் பரப்புபவர்கள் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார்கள் இவர்கள்.

ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், அரவானிகள் குறித்த சமூகத்தின் பார்வை பெரும் மாறுதல்களுக்குள்ளாகிவரும் இத்தருணத்தில் சுகாதார அமைச்சரின் பேச்சு விவாதத்திற்குள்ளாவது இயல்பானதுதான். ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், அரவானிகள், எய்ட்ஸ் தாக்குதலுக்குள்ளானோர் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த அக்கறைகள் சுகாதாரம், ஒழுக்கவியல் என்னும் எல்லைகளைத் தாண்டி விரிவடைந்துவருகின்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் அவர்களது வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை நடத்திவருகின்றன. அவர்களைக் குறித்துப் பொதுப் புத்தியில் நிலவிவரும் தவறான அபிப்ராயங்களை மாற்றுவதற்கும் மைய நீரோட்டப் போக்கினுள் அவர்களுக்கென ஒரு சிறு இடத்தை உருவாக்குவதற்கும் எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரவானிகளுக்கான நல வாரியம், அவர்களுக்குக் குடும்ப அட்டை போன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழக அரசு இதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சுஜாதா ரா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. 2006இல் அரசியல் சட்டத்தின் 377வது பிரிவுக்கு, மத்தியப் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சரான ரேணுகா சௌத்ரியால் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் திருத்த மசோதாவுக்குக் கடும்கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் சுஜாதா. பாலியல் தொழிலில் வாடிக்கையாளர்களாகச் செயல்படும் ஆண்களைக் கடுமையாகத் தண்டிக்க வகைசெய்கிறது இச்சட்டத் திருத்தம். 50ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்க வகை செய்யும் இச்சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாலியல் தொழில் ஒழிக்கப்படுவதற்கு மாறாகச் சட்ட விரோதச் செயலாகத் திரைமறைவில் தொடரும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் சுஜாதா.

பாலியல் தொழில் மிகப் புராதனமானது. எப்பொழுதுமே அதற்கான தேவை இருந்துகொண்டிருக்கிறது. சட்டங்கள் அதற்கு எதிரானவையாக இருந்தபோதும் அது நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஸ்வீடனில் பாலியல் தொழிலைத் தடைசெய்து கடுமையான சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்த முயன்றனர். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல பெண்கள் அரசின் சட்டங்களால் அண்டை நாடான நார்வே சென்று அங்கு தம் தொழிலைத் தொடர்ந்தனர். வாடிக்கையாளர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். பாலியல் தொழிலை ஒழிப்பது சாத்தியமற்ற ஒரு செயல் எனத் துணிச்சலாகத் தன் கருத்துகளை முன் வைத்துள்ள சுஜாதா அதைத் தடைசெய்வது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலையை மேலும் மோசமாக்கும், அவர்கள்மீதான சுரண்டலும் வன்முறையும் மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுக்கும் என்கிறார்.

இந்தியாவில் நேர்ந்துள்ள எய்ட்ஸ் பாதிப்புகளில் 86.7 விழுக்காடு எதிர்ப்பாலினத்தவரோடு கொண்ட பாதுகாப்பற்ற உறவுகளின் விளைவு என்கிறது ஒரு புள்ளிவிவரம். புனேயில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் 40 விழுக்காட்டினர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள். சுமார் 25 லட்சம் பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியா அவர்களைக் கையாளுவதில் மரபான ஒழுக்கப் பார்வையைப் பின்பற்றுவது அபாயகரமானது. சட்ட அங்கீகாரம், அவர்களைக் கண்காணித்து அவர்களது நிலையை மேம்படுத்துவதற்கு உதவும் என்கிறார் சுஜாதா. இதனால் அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளை அளிக்க முடியும். புறக்கணிப்புகளிலிருந்தும் அவமானங்களிலிருந்தும் அவர்களை விடுவிக்க முடியும். பாலியல் தரகர்கள், காவல் துறையினர் வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் உதவும்.

உலகத் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த மறுநாள், கடந்த மே மாதம் இரண்டாம் தேதி கொல்கத்தாவின் சோனாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 3,500 பாலியல் தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும் தங்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிக்கக் கோரியும் பேரணி ஒன்றினை நடத்தியிருக்கிறார்கள். ஞிவிஷிசி என்னும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் நலன்களுக்கான தொண்டு நிறுவனம் முன்னின்று நடத்திய இந்தப் பேரணியின் விளைவாகப் பாலியல் தொழிலாளர்களில் சுமார் 250 பேருக்கு ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளை வழங்கியுள்ளது எல்ஐசி. இதன் மூலம் இவர்கள் பொருளாதார அமைப்பின் மையங்களோடு தொடர்புகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாலியல் தொழிலாளர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்னும் காரணத்தைக் காட்டி கணக்குகள் வைத்துக்கொள்ள அவர்களை வங்கிகள் அனுமதிக்கவில்லை. இது பாலியல் தொழிலாளர்களின் 16 ஆண்டு காலப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி.

சுஜாதாவின் முன்முயற்சியால் Population services International என்னும் தன்னார்வ அமைப்பும் Star Health and Allied Insurance Company, Karnataka Network for Positive People ஆகிய அமைப்புகள் இணைந்து எய்ட்ஸ் பாதிப்புகளுக்குள்ளாகி உயிர்வாழும் 250 பேருக்கு ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளை வழங்கியிருக்கின்றன. இதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட இப்பிரிவினர் மனத்தில் நம்பிக்கையை விதைக்கவும் அவர்கள் தம் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறவும் முடியும். தில்லியிலிருந்து செயல்படும் Naz Foundation என்னும் ஒரு தன்னார்வ அமைப்பு, சட்டப் பிரிவு 377இன் கீழ் பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

ஆகஸ்ட் 16இல் தில்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், இருபால் உறவினர் ஆகிய மாற்றுப் பாலியல் நடைமுறை உடையவர்கள் தம் வாழ்வியல் மற்றும் குடிமையியல் உரிமைகளை வலியுறுத்தி மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தினர். 377வது பிரிவை நீக்க வேண்டும் என்னும் தம் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசின் சுகாதாரத் துறை ஆதரவு அளித்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் அப்பேரணியில் கலந்துகொண்ட மும்பையைச் சேர்ந்த அஞ்சால் டிரஸ்ட் என்னும் லெஸ்பியன்களுக்கான அமைப்பின் தலைவர் கீதா கும்மானா.

மத்தியத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ§ம் இதே கருத்தை வலியுறுத்தி 377வது பிரிவு நீக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார். அமைச்சர் அன்புமணியின் உரையின் வழி பா.ம.க.வின் தமிழ்ப் பண்பாடு பற்றிய புரிதல் நவீனத்துவப் பரப்புக்கு வளர்ந்துவந்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.

உள்ளடக்கம்