|
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
10.12.1980
அன்புள்ள திரு. பொன்னம்பலம் அவர்கட்கு,
உங்கள் 18.11.80 கடிதம் கிடைக்கப் பெற்றேன். பதில் எழுதச் சிறிது பிந்திவிட்டது.
மன்னிக்கவும்.
மு. தளையசிங்கத்தின் புத்தகத்திலிருந்தும், அதன் பின்னர் 'அலை' சஞ்சிகையில் படித்த
கட்டுரைகள் மூலமும் உங்களைத் தெரிந்துகொள்ள நேர்ந்தது. திரு.பொன். சுந்தரலிங்கம்
அவர்களைச் சந்தித்தபோது உங்களைப் பற்றி விசாரித்தேன். திரு. பத்மநாபன் அவர்களுடனும்
எனக்குச் சமீப காலமாகக் கடிதத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரிடத்திலும்
தளையசிங்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை வெளிப் படுத்தியதின்
மூலமாக நீங்கள் என்னிடம் தொடர்புகொள்ள நேர்ந்திருப்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.
தளையசிங்கத்துக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள உறவு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும்
சுருக்கமாக இங்கு கூறுகிறேன்:
1977இல் எனக்கு மு.த.வின் இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. 'போர்ப் பறை', 'மெய்யுள்.'
அப்போது எனக்கிருந்த அலுவல் காரணமாகவோ அல்லது மனநிலை காரணமாகவோ அல்லது எனக்குத்
தெரிய வந்திருந்த ஈழத்து எழுத்தாளரிடம் நான் அடைந்திருந்த ஏமாற்றத்தின் காரணமாகவோ
தளையசிங்கத்தின் புத்தகங்களைச் சிரத்தையுடன் படிக்க நான் முற்படவில்லை. 1978இல் மே
அல்லது ஜூன் மாதம் நான் நோய்வாய்ப்பட்டு ஒரு வாரம்வரையிலும் படுக்கையில் இருக்க
நேர்ந்தது. இதற்குள் எனக்கு 'ஒரு புதுயுகம் பிறக்கிறது' கதைத் தொகுதியும்
கிடைத்திருந்தது. இந்த மூன்று புத்தகங்களையும் அப்போது நான் சிரத்தையுடன் படித்தேன்.
லேசான மனநிலையில் படிக்க ஆரம்பித்து எழுத்தின் குண பாதிப்பால் ஆர்வத்துடன் ஆழ்ந்து
படித்தேன். விஞ்ஞானம், ஆத்மீகம், லோகாயதம் இவற்றின் வரலாறையும் வளர்ச்சியையும்
இன்றைய நிலைகளையும் தக்கவைத்துக்கொண்டு, இத்துறை சார்ந்த பிரச்சாரங்களில் சரிய
மறுத்து, இன்றைய பிரச்சினையை அவர் எதிர்கொண்டுள்ள முறை என் மனத்தை வெகுவாகக்
கவர்ந்தது. விருப்பு வெறுப்பு அற்ற மனநிலைதாண்டி இயங்கும்போது பெற ஏதுவாகும்
தளத்தில் வெகு சுதந்திரமாக அவர் இயங்குவதாக உணர்ந்தேன். இவ்வகை எழுத்தைத் தமிழில்
இன்றுவரையிலும் இவரிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து என் இலக்கிய
நண்பர்களிடம் தக்க நேரங்களில் இவரைப் பற்றி எளிய அறிமுகங்கள் செய்துவருகிறேன். எனது
மனோபாவங்களை ஓங்கி அறையாமல், அக்கறைகொள்ள வேண்டிய அளவு சொல்லி, புத்தகங்கள் மூலம்
தன்னுணர்வாக அவர்கள் பாதிப்புப் பெறும் வகையிலேயே சொல்லிவருகிறேன்.
1977 டிசம்பர் மாதம் முதல் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒவ்வொரு மாதமும் கடைசி
ஞாயிற்றுக்கிழமை கூட்டங்கள் நடத்திவருகிறோம். இன்றுவரையிலும் இடைவெளியின்றித்
தொடர்ந்துவருகிறது. 'காகங்கள்' என்று பெயர். சங்கங்களுக்குரிய சம்பிரதாயங்கள்
எதுவும் கிடையா. இக்கூட்டங்களில் எனக்குக் கிடைத்த நண்பர்களிடத்திலும் தளையசிங்கம்
பற்றிச் சொல்லிவந்தேன். இதில் எனது பழைய நண்பர்கள் பேராசிரியர் காக்கும் பெருமாள்
அவர்களும் (தமிழ்), பேராசிரியர் பத்மநாபன் அவர்களும் (ஆங்கிலம்) தளையசிங்கத்தின்
மீது மிகப் பெரிய ஆர்வம் கொண்டார்கள். பத்மநாபன் அதிக உற்சாகமடைந்து மிகையான
எண்ணங்களுக்கு ஆளாகிவிட்டாரோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. நவீனத் தமிழில்
தொடர்ந்து பெற்றுவரும் ஏமாற்றங்களுக்கு முன்னால் பத்மநாபனைப் போன்ற ஒரு உற்சாகிக்கு
தளையசிங்கத்தைப் பற்றி அதீத எண்ணங்கள் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
'காகங்கள்' கூட்டத்தில் கலந்துகொள்ளும் பல அன்பர்கள் தளையசிங்கத்தை இப்போது படிக்க
முன்வந்துள்ளார்கள்.
'காகங்க'ளின் நவம்பர் மாதக் கூட்டத்தில் 'மு.தளையசிங்கம் - ஓர் அறிமுகம்' என்ற
தலைப்பில் பத்மநாபனும் காக்கும் பெருமாளும் சேர்ந்து எழுதிய கட்டுரையைப்
படித்தார்கள். அன்றைய கூட்டத்தில் ஆழமான சர்ச்சைகள் எழவில்லை. விளக்கங்கள் கேட்டுக்
கேள்விகள் எழ, அவற்றிற்குக் கட்டுரையாளர்கள் பதில் சொன்னார்கள். ஜெயகாந்தனைப்
பற்றிய தளையசிங்கத்தின் மதிப்பீட்டைக் கட்டுரையாளர்கள் நிராகரித்ததற்கு ஒரு சிலர்
மறுப்புத் தெரிவித்துத் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.
பத்மநாபனும் காக்கும் பெருமாளும் தங்கள் கட்டுரையை மேலும் விரிவுபடுத்தி எழுத
ஆர்வம் கொண்டுள்ளனர். தளையசிங்கத்தை அறிமுகப்படுத்தி பத்மநாபனுக்கு ஆங்கிலத்தில்
ஒரு துண்டுப் பிரசுரமும் காக்கும் பெருமாளுக்குத் தமிழில் ஒரு துண்டுப் பிரசுரமும்
எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இவை எழுதப்பட்டால் நாங்களே பிரசுரம் செய்யலாம்
என்று இருக்கிறோம்.
இங்கு தளையசிங்கத்தின் புத்தகப் பிரதிகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. என்
பிந்திய புத்தகங்களை வெளியிட்டிருக்கும் 'க்ரியா' ராமகிருஷ்ணனுக்குத்
தளையசிங்கத்தின் புத்தகங்களிலிருந்து சிறந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு
அந்தாலஜி வெளியிடலாம் என்ற யோசனை இருக்கிறது. இது வெளிவரும்போது இன்னும் சிலர்
தளையசிங்கத்தைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
'க்ரியா' ராமகிருஷ்ணன், புத்தக மதிப்பீடுகளுக்காகவே ஒரு பத்திரிகை கொண்டுவருவதாக
இருக்கிறார். இதன் முதல் இதழ் '81 ஜனவரியில் வெளிவரக்கூடும். இதில் இதழ்தோறும்
ஈழத்தைச் சார்ந்த ஒரு புத்தகம் மதிப்புரை செய்யப்படும். இது அவர் ஏற்றுக்கொண்டுள்ள
என் யோசனை. தளையசிங்கத்தின் மூன்று புத்தகங்களைப் பற்றிய மதிப்புரைகளும் அவரது
பார்வையை விளக்கும் தனிக் கட்டுரை ஒன்றும் வெளியிட முயல வேண்டும் என்று நான்
ராமகிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டுள்ளதற்கு உற்சாகத்தோடு அவர் அதை வரவேற்றிருக்கிறார்.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் பெயர்களே இங்கு தெரியவந்தனவாக இருக்கின்றன.
முற்போக்கு விமர்சனங்களின் தேர்வுகளை அனுசரித்துப் படிக்கும்போது ஏமாற்றமே
ஏற்படுகிறது. இந்த ஏமாற்றம் ஈழத்து இலக்கியத்தைப் பற்றித் தவறான எண்ணத்தை
ஏற்படுத்திவிடக் கூடியது. இந்த எண்ணம் எனக்கு ஏற்படாது இருந்திருந்தால், மு.த.வை
நான் முன்பே கவனித்திருக்க முடியும். இந்நிலை பற்றி நான் பத்மநாபனுக்கு எழுத, அவர்
ஈழத்தைச் சார்ந்த 15 நூல்களை எனக்கு அனுப்பி உதவியுள்ளார். இந்நூல்களை அந்தந்தத்
துறையில் ஈடுபாடுள்ள தமிழக மதிப்புரையாளர்களிடம் தந்து, மதிப்புரைக் கட்டுரைகள்
பெற்று புத்தக வடிவில் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதற்கான
முயற்சியை ஜனவரியில் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
தளையசிங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது.
ஆனால், அதற்கு அதிக அளவில் என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். '81 மத்திய
மாதங்களில் இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.
உங்களிடம் ஒரு சில உதவிகள் நான் எதிர்பார்க்கலாமா? என்னிடம் இருக்கும் மூன்று
புத்தகங்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவை தவிர வேறு புத்தகங்கள் மு.த. எழுதியவை
உள்ளனவா? தெரிவியுங்கள். 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்ற தலைப்பில் அவர்
எழுதியுள்ள இலக்கிய விமர்சனம் வெளிவரவிருப்பதை பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரைப் பற்றி அவருடைய புத்தகங்களின் பின்னட்டையில் அச்சாகியுள்ள
குறிப்பும் உள்ளே அச்சாகியுள்ள வாழ்க்கைக் குறிப்பும் போதுமானதாக இல்லை. அவர்
வாழ்க்கையைப் பற்றித் தெரிவிக்கும் வேறு குறிப்புக்கள் உண்டா?
ஒரு ஆரம்ப அறிமுகக் கடிதமாக இதை எழுதுகிறேன். 'ஜே.ஜே: சில குறிப்புகள்' என்ற
தலைப்பில் ஒரு நாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். டிசம்பர்/ஜனவரியில் இந்த வேலை
முடிவடையக்கூடும். அதன்பின் அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்கி தளையசிங்கத்திலிருந்து
ஆரம்பித்து ஈழத்து எழுத்தை நிறைவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
அவ்வாறான முயற்சியை மேற்கொள்ளும்போது தகவல் கேட்டும் சந்தேக நிவர்த்தியாகவும்
உங்கள் பார்வையைத் தெரிந்துகொள்ளும் பொருட்டும் நான் எழுதினால்
|