Google   www kalachuvadu.com

விவாதம்
மனித உடற்கூறின் இன்னொரு பக்கம்

ஜூலை 2008 இதழில் அனிருத்தன் வாசுதேவன் எழுதிய 'பெயர் சொல்லத் தொடங்கும் காதல்கள்' குறித்து:

உலகின் ஆதித் தொழிலான பாலியல் தொழிலுக்கு, எத்தகைய நீண்ட தொன்மையும் வரலாறும் உண்டோ, அதே அளவு தொன்மை 'ஓரினப் புணர்ச்சி (Homo Sexual)க்கும் உண்டு. ஏனெனில், மனிதர்களின் உடல் சார்ந்த காம இச்சைகள் எந்தக் காலத்திலும் ஒன்றுபோல்தான் இருக்கும். காரணம் உணவுக்கு அடுத்தபடியாக, மனிதனின் அடிப்படைத் தேவையாகக் காமமே உள்ளது.

ஓரினப் புணர்ச்சி குறித்து திருக்குர் - ஆன் இரண்டு இடங்களில் கூறுகிறது:

1. "மெய்யாக நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக்கொள்ள வருகிறீர்கள்: நிச்சயம் நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தவராகவே இருக்கின்றீர்கள். (7:81)

2. நீங்கள் பெண்களை விட்டுவிட்டு மோகங்கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகின்றீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள். (27:55)

எனவே, மத அடிப்படையிலும் சரி, மனித ஒழுக்க விதிகளின்படியும் சரி, ஓரினப் புணர்ச்சி என்பது கூடாத செயல்தான். பாவமான காரியம்தான். நவீன மருத்துவக் கண்டு பிடிப்புகளின்படி இது மிகமிக ஆபத்தான பழக்கமும்கூட. ஏனெனில் 'எய்ட்ஸ்' போன்ற 'உயிர் விழுங்கி' நோய்களுக்கும்கூட இதுதான் அடிப்படை. எனவே, இது இறைவனுக்கு எதிரான குற்றமும்கூட.

நான் இதை எழுதுவது ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்கவோ அதை ஆதரித்து எழுதவோ அல்ல; மாறாக மனித உடல்கூற்றின் இன்னொரு பக்கத்தை விளக்கவே. எல்லாவற்றிற்கும் மாற்றுமுகம் உள்ளதைப் போலவே, காமத்திற்கும் உள்ளது. ஓரினப் புணர்ச்சி தவறு தான் என்பதில் சந்தேகமில்லை; அதேசமயம் அது இயற்கைக்கு முரணானது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில், மனதளவில் இந்த ரகசியமான ஆசை இல்லாதவர்கள் மனிதர்களில் மிகக் குறைவு அல்லது சந்தர்ப்பம் இன்மையால் தம்மைத் தூய்மைவாதிகளாகக் காட்டிக்கொள்வோர் அதிகம். இதுதான் பரவலான உண்மை.

'கலாச்சாரத்தின் வன்முறை' என்ற தனது நூலில் அ. மார்க்ஸ் இவ்வாறு எழுதுகின்றார்:

. . .வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மனிதர்களில் பாதிப்பேர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது பல சந்தர்ப்பங்களில், ஒருபால் உறவுகொண்டவர்கள்தாம். ஆம், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு அடுத்த நபரும் ஒருபால் உறவு அனுபவம் உடையவர்தான். அது உங்கள் ஆசிரியராக, நண்பராக, பக்கத்து வீட்டுக்காரராக, சகோதரராக, ஏன் உங்கள் மகன் அல்லது மகளாகக்கூட இருக்கலாம். (பக். 57)

இப்படி மனிதர்களில் பெரும்பாலோரைத் தனது ரகசியப்பிடிக்குள் வைத்திருக்கும் ஓரினப் புணர்ச்சியை இயற்கைக்கு முரணானது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு அழகான இளம் பெண்ணைக் கண்டால், நம் உள்ளம் எப்படிக் கிளர்ச்சி அடைகிறதோ அதேபோல ஒரு அழகான ஆணைக் காணும்போதும் பலரது மனத்தில் இன்ன தென்று சொல்ல முடியாத - ஒரு 'கவனம்' தோன்றுவது நிஜம்தான்!

இது போன்ற எண்ணம் ஏற்பட உள்ளார்ந்த ஆசை ஒரு காரணம் எனில், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளும் ஒருவனை ஓரினப் புணர்ச்சியாளனாக மாற்றிவிடுகின்றன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மைதான். மாணவ, மாணவியர் தங்கிப் படிக் கும் விடுதிகள், வேலை பார்ப்பவர் களின் விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற இடங்கள் இப்பழக்கத்தின் உறைவிடங்களாக உள்ளன. இட நெருக்கடியாலோ அவசியம் கருதியோ நெருக்கமாகப் படுத்துறங்கும் ஆண்கள் அல்லது பெண்களிடம் இப்பழக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தபடியாக, பலரது கவனத்திலும் வராத ஒரு விஷயம், மத்திய கிழக்கு நாடுகளில் (அரபு தேசங்கள்) வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் பற்றியது.

இந்நாடுகளில் பாலியல்ரீதியான கண்காணிப்பு மிக அதிகம். அதே சமயம், மனிதனின் பாலியல் கிளர்ச்சிகளுக்குத் தீனி போடக்கூடிய 'நீலப்பட' ங்களின் உபயோகமும் மிக அதிகம். ஒரு முறையேனும் இதைப் பார்க்காதவர் யாரும் அங்கு இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் பிழைப்புக்காகக் குடும்பத்தைப் பிரிந்து வருடக்கணக்கில் இருப்பவர்கள் நாளடைவில் இப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். ஒரு மாற்றுப் பழக்கமாக - ஒரு சந்தர்ப்ப சூழ் நிலையில் இதற்குப் பழக்கமாவோர் காலம் செல்லச் செல்ல இதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

"ஆசைகளில் ஒருபால் ஆசை, மாற்றுபால் ஆசை என்றெல்லாம் தனித்தனியாகக் கிடையாது. மாற்று உடல்மீதான ஆசையாகத்தான் முதலில் அது உருப்பெறுகிறது. உருப்பெற்ற ஆசை ஒரு குறிப்பிட்ட தன்மையைப் பெறுமென்பதை வாழ்கிற கலாச்சாரம்தான் தீர்மானிக்கிறது. மாற்றுப் பாலியல் ஆசைதான் இயற்கையானது என்கிற கருத்து பதியப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் அத்தகைய நிலையை எடுக்க நேரிடுகிறது என்பதுதான் உண்மை." (பக். 57)

என்று பெண்ணியச் சிந்தனை யாளர் ஜெஃப்சி வீக்ஸ் சொல்வதை அ. மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.

பெண்களிடம் தகாத உறவு வைத்திருப்பவர்களும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படுத்திவிடுகின்றனர். ஆனால், ஒருபால் புணர்ச்சி உள்ளவர்கள் தங்களை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்வது கிடையாது. என்ன இருந்தாலும், பெண் உறவு என்பது இயற்கையானது, ஆண் உறவு (அதாவது ஒருபால் உறவு) இயற்கைக்கு முரணானது என்ற கருத்து நிலையே இதற்குக் காரணம். அதுவும் ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி (ளிக்ஷீணீறீ ஷிமீஜ்) என்பவைதான் ஒருபால் உறவின் வழிமுறை. இதை வெளிப்படச் சொல்லும் தைரியம் யாருக்கும்வராமல் போவதில் ஆச்சரியம்கொள்ள எதுவுமில்லை. தங்களுக்குள் அதிகமாகக் குலாவும் ஆண்களிடமோ அல்லது பெண்களிடமோ ஒரு சதவீதமாவது இது போன்ற எண்ணம் இருக்க வாய்ப்புள்ளது. நமது தமிழ்ச் சமூகத்தில் ஒருபால் உறவு பற்றிய தங்களின் அனுபவங்களை வெளிப்படையாக எழுதியவர்கள் இரண்டே பேர். ஒருவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். இன்னொருவர் நடிகவேள் எம்.ஆர். ராதா.

'ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' என்ற புத்தகத்தில் ஒருபால் உறவு எண்ணத்தோடு தன்னை அணுகிய ஒரு நபரைத்தான் கன்னத்தில் அறைந்ததாக ஜெயகாந்தன் எழுதுகிறார்.

எம்.ஆர். ராதா தனது இளவயது பாய்ஸ் நாடகக் கம்பெனி அனுபவத்தில் இப்படியான அனுபவம் தனக்கேற்பட்டதை ஒளிவுமறைவின்றி எழுதுகிறார். எல்லா இடங்களிலும் இது போன்ற அனுபவங்கள் யாராவது ஒருவருக்கோ அல்லது பலருக்கோ ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன.

இந்நிலையில் வெளிநாடுகளில் பல அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் எனப் பலரும் தங்களை 'ஒருபால் புணர்ச்சி' விருப்பம் உடையவர்கள் எனப் பகிரங்கமாக அறிவித்துக்கொள்கின்றனர்.

அந்த நிலை இந்தியாவிலும் மெள்ள மெள்ளத் தோன்றுகிறதோ என்னவோ, அதன் ஒரு சிறிய வெளிப்பாடுதான் அனிருத்தன் வாசுதேவன் போன்றவர்களின் கட்டுரையாக இருக்கக்கூடுமோ!

கே. எஸ். முகம்மத் ஷ§ஐப்
காயல்பட்டினம்

துணை நூல்கள் :

1. திருக்குர் - ஆன் (தமிழ் மொழி பெயர்ப்பு) - ஆறாம் பதிப்பு 1990. (ஹாஜி முகமது ஜான் லிட்டரரி சாரிட்டபிள் டிரஸ்ட், சென்னை.

2. கலாச்சாரத்தின் வன்முறை - அ. மார்க்ஸ், 'அடையாளம்' பதிப்பகம் - கருப்பூர் ரோடு, புத்தாநத்தம், கரூர் மாவட்டம்.

உள்ளடக்கம்