Google   www kalachuvadu.com

திரை
தொடரும் துரோக நிழல்
கே.முரளிதரன்

படம்:
சுப்ரமணியபுரம்

நடிகர்கள்:
சசி, ஜெய்,
கஞ்சா கருப்பு, ஸ்வாதி,
மாரி, சமுத்திரக் கனி
இயக்கம்:
எம். சசிக்குமார்

தான் இயக்கிய ஹே ராம் படத்தின் சிறப்புக் காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் கமல்ஹாசன். "ஹே ராம் கலைப் படமா இல்லையா?" என்றார் ஒரு பெண் பத்திரிகையாளர். அவருக்கு சினிமாத் துறை புதிது. அதற்குள்ளேயே இந்த வார்த்தைகளெல்லாம் பழகியிருந்தார். கமல் அவரைத் திரும்பிப் பார்த்து முறைத்தார். "இந்தப் படம் வர்த்தகரீதியாக வெல்லுமா?" என்றார் பத்திரிகையாளர். "அப்படிக் கேளுங்கள். உலகத்தில் நல்ல படம், மீடியாக்கரான படம், மோசமான படம் என்றுதான் பிரிவினை உண்டே தவிர, கலைப் படம், கலை அல்லாத படம் என்றெல்லாம் கிடையாது" என்றார் கமல். ஹே ராம் வர்த்தகரீதியாக வெற்றிபெற முடியாத கூறுகளையெல்லாம் கொண்டிருந்ததால், அந்தப் படத்தைக் கலைப் படம் என்று எழுத முடிவுசெய்திருந்த பத்திரிகையாளர், குழப்பத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.

காதல், பருத்தி வீரன், வெயில் போன்ற படங்கள் தமிழ்த் திரைப்படங்களின் முகத்தையே மாற்றியிருக்கின்றன. கச்சிதமான, விறுவிறுப்பான திரைக்கதையுடன் தமிழ் வாழ்வை அதன் முரண்பாடுகளுடன் முடிந்த அளவு நெருக்கமாகச் சொல்லும் இந்தப் படங்களின் வரிசையில் சுப்ரமணியபுரத்தையும் வைக்கலாம்.

80களின் மதுரை. வேலைவெட்டியில்லாமல் எப்போதும் ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் அழகர் (ஜெய்), பரமன் (சசி), காசி (கஞ்சா கருப்பு), டும்கன்(மாரி). இவர்களை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்கிறான் அரசியல்வாதி கனகு. அவனுக்காக ஒரு கொலையைச் செய்கிறது இந்தக் குழு. கொலைக்குப் பிறகு இவர்களை அரசியல்வாதி கைகழுவிவிட, அவனைப் போட்டுத்தள்ள நேரம் பார்க்கிறார்கள் அழகரும் பரமனும். இதற்கிடையில் கனகுவின் அண்ணன் மகளைக் காதலிக்கிறான் அழகர். கனகுவும் இவர்களைப் போட்டுத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான். காதலியே இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்துவிட, வெட்டுப்பட்டுச் சாகிறான் அழகர். வெகுண்டுபோய்க் கனகுவைக் கொல்கிறான் பரமன். அவனைக் காட்டிக்கொடுக்கிறான் காசி.

கேட்கும்போது பழிவாங்கும் கதையைப் போலத் தோன்றினாலும் உண்மையில் துரோகத்தின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும் படமாகவே இது அமைந்திருக்கிறது. நம்பியிருப்பவர்கள் செய்யும் துரோகம், காதலித் தவள் செய்யும் துரோகம், பல வருடங்கள் உடனிருந்த நண்பர்கள் செய்யும் துரோகம் என அடர்ந்த கருமேகத்தைப் போல இந்தப் பாத்திரங்களின் மீது கவிழ்ந்திருக்கிறது துரோகம். ஆனால், படத்தில் யாரும் இந்த வார்த்தையை உச்சரிப்பதில்லை. காதல், நட்பு, பாசத்தைப் போலவே துரோகமும் மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று என்பதாகவே படத்தில் வரும் எல்லோரிடமும் புழங்குகிறது துரோகம்.

இப்படத்தை இந்த வருடத்தின் முக்கியமான படமாகக்கொள்ள பல்வேறு காரணங்கள் உள்ளன. 80களின் தொடக்கத்தில் வெளிவந்த பல சினிமாக்கள் இயல்பாகக்கூடப் பதிவுசெய்யாமல்விட்ட தமிழ் வாழ்வின் பல கூறுகளை இந்தப் படம் கவனத்துடன் பதிவுசெய்கிறது. குறிப்பாக அப்போது மதுரை போன்ற நகரங்களில் சினிமா என்பது மிகுந்த ஆதிக்கம் மிகுந்த சக்தியாக விளங்கியது. வயதானவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் பாகுபாடின்றி சினிமாவை நேசித்தார்கள். கோவில்களைப் போல சினிமாவும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. அதை இந்தப் படம் போகிறபோக்கில் பதிவுசெய்கிறது. அதேபோல, அந்தக் காலகட்டத்து இளைஞர்களைப் பெரிதாக ஈர்த்த இன்னொரு விஷயம், சினிமாப் பாடல்கள். இதனால், ஏதாவது ஒரு சாக்கைவைத்துத் தெரு முழுக்கச் சத்தமாகப் பாடல்களை ஒலிபரப்புவது 80களில் மதுரையின் தேசியக் குணமாக இருந்தது. அதனால், தெருவுக்குத் தெரு ரேடியோ சர்வீஸ்கள் இருந்தன. அங்கே எப்போதும் சில இளைஞர்கள் இருந்தார்கள். அப்படிச் சில இளைஞர்கள்தான் இந்தப் படத்தின் மையம்.

சுவரில் இருக்கும் அரசு சிறுசேமிப்புப் பிரச்சாரம், ரேடியோவில் ஒலிக்கும் சரோஜ் நாராயண் சுவாமியின் குரல், லாம்பி ஸ்கூட்டர், சைக்கிளுக்கு நடுவில் உள்ள முக்கோண விளம்பரம், பாதசாரிகளைப் பிரியத்துடன் அழைக்கும் "பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய" கே.ஏ.எஸ் சேகரின் விளம்பர வாகனம், பணக்கார வீடுகளில் இருக்கும் வயர் பின்னப்பட்ட இருக்கைகள் என அக்காலத்திய மதுரையின் ஒவ்வொரு அம்சமும் கலை இயக்குநர் ராம்போனின் கவனத்தால் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மதுரைச் சுவர்களுக்கே உரிய வெளிர் பச்சை நிறமும் கொட்டுச் சத்தமும் ஒவ்வொரு ஃப்ரேமிற்கும் உயிரூட்டுகின்றன.

இந்திய சினிமாவின் பாடல் காட்சிகள் நம் தமிழ் விமர்சகர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்திருக்கின்றன. ஆனால், இந்தப் பாடல்களை நம்முடைய இயக்குநர்கள் படத்துடன் பயன்படுத்தும் விதம் பெருமளவு மாறிவந்திருப்பதை யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. சசி பாடல்களைப் பயன்படுத்தும் விதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். குறிப்பாக, "சுப்ரமணியபுரம் எங்கள் தலைநகரம்" என்ற பாடல். பணத்தைச் செலவழித்துச் சந்தோஷமாக இருக்கும் இளைஞர்களின் கொண்டாட்ட மனநிலையை வேறு எப்படியும் பதிவுசெய்திருக்க முடியாது. இந்தக் கொண்டாட்டத்தை மௌனமோ வசனங்களோ வேறு எந்தவிதமாகவும் பதிலீடு செய்திருக்க முடியாது.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பது மற்றொரு பலம். படத்தின் குறைகளையும் பட்டியலிடலாம். ஆனால், அவற்றையும் மீறித் தமிழ் சினிமாவிற்கான புதிய பாதையைக் காட்டுகிறது சுப்ரமணியபுரம்.

உள்ளடக்கம்