|
கீழை மார்க்சியம் மற்றும் பிற கட்டுரைகள்

ஆசிரியர்:
எஸ். என். நாகராஜன்
பக். : 216 விலை: ரூ. 325
முதற்பதிப்பு: 2008
வெளியீடு
ஓடஸி பதிப்பகம்
உதகை, நீலகிரி |
அஷிஸ் நந்தி தன்னை மிகவும் கவர்ந்த இந்திய இடதுசாரிச் சிந்தனையாளர்கள் என்று
இருவரைக் குறிப்பிடுவதுண்டு. ஒருவர் எஸ். என். நாகராஜன். மற்றவர் சுனில் சஹஸ்ரபுத்தே
என்பவர். இந்த இருவரிடையே சில ஒற்றுமைகள் உண்டு. இந்த இருவரும் மார்க்சியத்தைக்
கடுமையான விமர்சனங்களோடு ஏற்றவர்கள் என்பதோடு வெறும் படிப்பாளிகள், சிந்தனையாளர்கள்
என்ற வரையறையைத் தாண்டிச் செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள். இருவருமே விஞ்ஞானத்தில் உயர்
கல்வி பெற்றவர்கள். அதில் பெரும் சாதனைகள் புரிவார்கள் என்று கருதப்பட்டவர்கள்.
மார்க்சியம், இடதுசாரி அரசியல் என்பவற்றால் ஈர்க்கப்பட்டு வழக்கமான தொழில் என்று
எதிலும் நிரந்தரமாக ஈடுபடாமல், சமூக மாற்றம், புதிய சிந்தனைகள் என்பவற்றில் தங்கள்
வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். இருவருமே சிறந்த வாக்மிகள். எழுத்தைவிடத் தங்கள்
பேச்சினாலேயே மற்றவர்களை ஈர்ப்பவர்கள். எப்போதும் நண்பர்கள், சீடர்கள் புடைசூழப்
புதுப்புதுக் கருத்துகளையும் விவாதங்களையும் முன்வைத்து மணிக்கணக்கில் பேச
வல்லவர்கள். இல்வாழ்க்கை, சாதாரண சுகபோகங்கள் என்பவற்றில் ஈடுபட்டாலும்,
அவற்றிலிருந்து ஓரளவு விலகியே இருப்பவர்கள். நவீனத் துறவிகள் என்றாலும் தகும்.
மார்க்சியம் இந்திய மண்ணுக்கு வந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலான போதிலும்,
இந்தியர்கள் மார்க்சிய அடிப்படைகளுக்குச் செய்துள்ள பங்களிப்பு என்று
குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே உண்மை. மார்க்சிய அடிப்படைகளை வளர்க்கவோ
நீட்டவோ மாற்றியமைக்கவோ பெரும் முயற்சிகள் எதுவும் இந்தியாவில் நடந்ததாகத்
தெரியவில்லை.
லத்தீன் அமெரிக்க, சீன, வியத்நாமிய மார்க்சியவாதிகளின் பங்களிப்பைப் பற்றிப்
படிக்கும்போதெல்லாம் நம்மை உறுத்தும் ஒரு விஷயம், ஏன் இந்திய மண்ணில் மார்க்சியம்
மறுவிளக்கம் அல்லது மறு ஆக்கம் பெறவில்லை? இந்த மறுவிளக்கமின்மை, ஆக்கமின்மை என்பது
வேறு பல அறிவு/ சிந்தனைத் துறைகளுக்கும் பொருந்தும்.
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ அறிஞராகக் கருதப்படும் வல்லியத்தான் சில
ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய சொற்பொழிவில் கூறியது நினைவுக்குவருகிறது. அவர்
சொன்னார்: "சரக சுஸ்ருதசம்ஹிதைகளை உலகுக்கு ஈந்த நம்மால் நவீன மருத்துவத்தில் ஒரு
புதிய கண்டுபிடிப்பையோ சாதனையையோ செய்ய முடியவில்லை." நவீன விஞ்ஞான,
தொழில்நுட்பங்களில் தேர்ந்த என் நண்பர்கள் பலரும் இதையே கூறுகிறார்கள். நவீன
விஞ்ஞானத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் நாம் இருப்பதாக அடிக்கடிக் குறிப்பிடுவது
வழக்கமாக இருந்தாலும், நவீனத் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக இல்லை
என்பதே விவரம் தெரிந்தவர்கள் கூறுவது. ஒரு ராமானுஜனையும் ஒரு சி. வி. ராமனையும்
எத்தனை ஆண்டுகள் உதாரணங்களாகக் காட்டப்போகிறோம் என்று தெரியவில்லை. கணினி
மென்பொருளாக்கத்தில் இந்தியாவுக்கு முதலிடம் என்பதும் கேள்விக்குரியதே.
எங்களுக்கு விஞ்ஞானத்தைவிட மெய்ஞானமே முக்கியம் என்று கூறலாம். ஆனால், அதிலும்
கடந்த நூற்றாண்டில் பெரும் சாதனைகள் எதையும் நாம் செய்யவில்லை. மரபு வழிவந்த
இந்தியத் தத்துவங்கள் உறைந்துபோய்விட்டதாகத் தோற்றம் தருகின்றன. மேலைத் தத்துவங்கள¢
பலவற்றை நாம் அறிந்து அரவணைத்துள்ளோம் என்றாலும், அவற்றில் நம் பங்களிப்பு என்று
எதுவுமில்லை. சமூகவியல், பொருளாதாரம் போன்ற சமூக விஞ்ஞானங்களைப் பற்றிக்கூறத்
தேவையில்லை. அமெரிக்க ஐரோப்பியப் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்து, அவற்றைப்
புரிந்தோ புரியாமலோ அங்கும் இங்கும் உமிழ்வதுதான் நம்முடைய பங்களிப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் நவீனச் சிந்தனைத் துறைகளில் இந்தியாவின் முத்திரை எதுவும்
பதிக்கப்படவில்லை. உதாரணமாக, ஷேக்ஸ்பியரை எடுத்துக்கொள்வோம். அவரைக் கரைத்துக்
குடித்தவர்கள் என்று இந்தியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தாலும், உலக அளவில்
ஷேக்ஸ்பியர் அறிஞர்கள், விமர்சகர்கள் என்ற பட்டியலில் ஒரு இந்தியர்கூட
இடம்பெறமாட்டார் என்பதுதான் உண்மை. மேற்கிலிருந்து வரும் எல்லா 'இஸங்களை'யும் நாம்
ஆர்வத்துடன் அரவணைத்துக்கொண்டாலும் அவற்றை நம் பார்வையிலிருந்து விமர்சனத்துக்கு
ஆட்படுத்துவதில்லை. அவற்றின் மீதான விமர்சனங்களையும் நாம் மேற்கிலிருந்தே
பெறுகிறோம். அவற்றை நம்மில் யார் நன்றாக மேற்கோள் காட்டுகிறார்கள்,யார் சரியாக
ஒலிபரப்புகிறார்கள் என்பதுதான் இங்குள்ள போட்டி. இந்தப் போக்கிற்குப் பல காரணங்கள்
உண்டு என்றாலும் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நாம் கடனாகப் பெற்றவை நம்மால் சரியாக
ஜீரணிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றை மிகவும் பக்தியுடனும் கொஞ்சம் பயத்துடனும்
அணுகுகிறோம். நம் தேவைக்கேற்ப அவற்றைப் பிரித்து, பிளந்து, உடைத்து, பகுத்துப்
பார்க்கத் துணிச்சலும் திறனும் அற்றவர்களாக இருக்கிறோம்.
n
நாகராஜன் கடந்த அரை நூற்றாண்டாக மார்க்சியச் சிந்தனையாளர் என அறியப்பட்டவர். இந்திய
மார்க்சியவாதிகள் பலரிடமும் இல்லாத சில பண்புகளை உடையவர். அவர் மார்க்சியத்தை
அணுகியதே கொஞ்சம் வித்தியாசமான பாதையிலிருந்து. மார்க்சின் 'பொருளாதார மற்றும்
தத்துவக் குறிப்பேடுகள்' என்ற ஆரம்பகால எழுத்துக்களால் கவரப்பட்டவர். 'அந்நியமாதல்'
என்ற மார்க்சின் கருத்தாக்கமே அதிமுக்கியமான பங்களிப்பு என்று உணர்ந்தவர். மனித
விடுதலையே மார்க்சியத்தின் ஆதாரம் என்று உறுதியாக நம்பியவர். மார்க்சின் மனித
விடுதலை பற்றிய கருத்துக்கும் பல இந்தியத் தத்துவங்களுக்கும் இடையே உள்ள
ஒற்றுமையைச் சிலாகித்தவர். மார்க்சின் பொருளாதாரக் கருத்துகளைவிட 'விடுதலை',
'அந்நியமாதல்' போன்ற கருத்தாக்கங்களே முக்கியமானவை என்று கருதியவர்.
ஜோஸப் நீதாம் போன்ற மார்க்சிய அறிஞர்களைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்தவர். நவீன
விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பன மனித விடுதலைக்காக, முன்னேற்றத்திற்காக என்று
எழுந்த கோஷங்களை அப்படியே மறுத்தவர். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்பவற்றை
நம்மூர் முற்போக்குகள் கண்மூடித்தனமாக ஆதரித்த அந்தக் காலத்திலேயே அவற்றைக்
கடுமையாக விமர்சித்தவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைவளம் பேணல், காடுகள்
பராமரிப்பு என்பன நம்மை ஏழைகளாக வைத்திருக்கப் பணக்கார நாடுகள் செய்யும் சூழ்ச்சி
என்று நம் முற்போக்குவாதிகள் கூறியவற்றை அபத்தம் என்று கண்டித்தவர்.
பொருள்முதல்வாதத்தைக் 'காசேதான் கடவுள்' என்பதாகக் கொச்சைப்படுத்தலாகாது என்றும்
பொருள்மீதுள்ள பற்றுதான் நம் அடிமைத்தனத்துக்குக் காரணம் என்றும் விளக்கியவர்.
வறட்டுத்தனமான நாத்திகவாதம் தமிழ்நாட்டில் கோலோச்சிய அந்த நாள்களில்
கருத்துமுதல்வாதமும் உண்மையான ஆத்திகமும் வறட்டு நாத்திகத்தைவிட மேலானவை என்று
துணிந்து கூறியவர்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலுள்ள பல விஷயங்கள் நாகராஜன் கடந்த பல ஆண்டுகளாக மீண்டும்
மீண்டும் விளக்கிவந்துள்ளவையே. நான் அவரை அறிந்த எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கருத்துகளைத் திகட்டத் திகட்ட அவரிடமிருந்து கேட்டு
மகிழ்ந்துள்ளேன். அவருடைய சிந்தனைகள் ஆங்கில நூல் வடிவம் பெற வேண்டும் எனப் பல
நண்பர்கள் விரும்பியும் அது நிறைவேற இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது
கொஞ்சம் வருத்தத்திற்குரியது. இவ்வளவு காலம் தாழ்த்தியதற்கான முக்கியப் பொறுப்பை
அவரது நண்பர்களும் சீடர்களும் ஏற்க வேண்டுமென்றாலும் நாகராஜனுக்கும் அதில் கணிசமான
பங்குண்டு!
இத்தொகுப்பிலுள்ள 22 கட்டுரைகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மார்க்சிய
அடிப்படைகள் பற்றி ஏழு கட்டுரைகளும் கீழை மார்க்சியம் குறித்து ஐந்து கட்டுரைகளும்
இடம்பெற்றுள்ளன. தவிர, நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பாக ஆறு கட்டுரைகளும்
நவகாலனியம் குறித்து நான்கு கட்டுரைகளும் உள்ளன. கட்டுரைகளின் அளவு ஒரே சீராக
இல்லை. இரண்டு பக்கங்களையுடைய கட்டுரைகள், மூன்று - நான்கு பக்கங்கள், பத்துப்
பதினைந்து பக்கங்கள் என்று வேறுபடுகின்றன. பெரும்பாலான கட்டுரைகள் பல விஷயங்களைத்
திரும்பத் திரும்ப, சலிப்புத் தோன்றும் அளவுக்குச் சொல்கின்றன. நேர்ப்பேச்சில்
கூறும்போது நன்றாகத் தோன்றுபவை எழுத்தில் வார்க்கப்படும்போது சுவையற்றதாகவும்
எரிச்சலூட்டுவனவாகவும் இருப்பதுண்டு. நாகராஜனின் சில கட்டுரைகள் அத்தகையவை என்றால்
தவறல்ல. ஒரு கருத்திலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவது நேர்ப்பேச்சில் தவிர்க்க
முடியாததோடு பேச்சுக்கு மெருகேற்றவும் செய்யும். ஆனால், புத்தக வடிவில் அவை
கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
நாகராஜனின் முக்கியமான பங்களிப்பென்று அவருடைய கீழை மார்க்சியம் என்ற
கருத்தாக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். மார்க்சியம் பற்றிய அவருடைய கருத்துகள், கீழை
மார்க்சியம் என்பதில்தான் குவிகின்றன. நாகராஜன் மாவோவின் மார்க்சியத்தைத்தான் கீழை
மார்க்சியம் என்று காண்கிறார். இந்தியாவின் பக்தி அல்லது அன்புவழித் தத்துவங்களைப்
பற்றி நிறையவே கூறியுள்ளார் என்றாலும் அவை மார்க்சியம் ஆகாது என்பது தெளிவு. அவை
மார்க்சியத்துக்கு முந்தியவை என்ற எளியதர்க்கமே போதும் அவற்றைக் கீழை
மார்க்சியமென்று பார்க்க முடியாது என்பதைக் காட்ட. மாவோவின் மார்க்சியம் அல்லது
மாவோயிசம் ஏன் கீழைமார்க்சியமாகப் பார்க்கப்படுகிறது என்பதற்கு அது
கீழைத்தேயத்தினது என்பது காரணமாக இருக்கலாகாது. மாவோ மார்க்சியத்தை அதன் முக்கியமான
பகுதியில் மாற்றியமைத்தார் என்பதுதான் காரணம். நாகராஜனும் அப்படித் தான்
வாதிடுகிறார். மாவோ 'மக்கள் யுத்தம்' என்ற கருத்தாக்கத்தை வார்த்தெடுக்கும்போது
மார்க்சிய மெய்காண்முறையில் ஒரு புரட்சியைச் செய்துள்ளதாக நாகராஜன் வாதிடுகிறார்.
அதாவது உண்மைகளை இரண்டு விதமாகப் பகுத்து, அவற்றைக் கண்டறியும் முறைகள் வெவ்வேறானவை
என்று மாவோ கூறுகிறார் என்பது நாகராஜனின் வாதம்.
ஸ்டாலினும் அவரது சீடர்களும் எங்கே தன்னைத் திரிபுவாதியென்று முத்திரைகுத்தி
ஒதுக்கிவிடுவார்களோ என்று அஞ்சி, தான் கண்ட உண்மையை மாவோ மறைமுகமாகத் தான்
வெளிப்படுத்தினார் என்கிறார் நாகராஜன். லெனின் மிகவும் மூர்க்கமாக எதிர்த்த
கருத்தொன்றை மாவோ மறைமுகமாகத் தூக்கிப் பிடித்தார் என்று காட்டுகிறார் நாகராஜன்.
அது என்ன? ஜடப்பொருள்களைக் கண்டறிவதும் உயிருள்ளவற்றை, மக்கள் சமூகத்தைக்
கண்டறிவதும் வெவ்வேறானவை என்பதுதான் அது. மனித சமூகத்தை, வர்க்க முரண்பாடுகளைக்
கண்டறிய வெறும் பகுத்தறிவு போதாது, அன்பு வழியிலான அணுகுமுறை தேவை என்று மாவோ
உணர்ந்ததாகக் கூறுகிறார். புரட்சிக்குப் பின்பு வர்க்கப் போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்கையில் கம்யூனிசக் கட்சியினர் செய்ய வேண்டியதைக் கூறும்
மாவோவின் உபதேச மொழிகளை உதாரணம் காட்டுகிறார்.மாவோ கூறினார்: "மக்களை நேசி.
அவர்களுக்குத் தொண்டு செய். அகந்தையை ஒழி." சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும்
மக்களுக்குமிடையேயான முரண்பாடு பகைமையற்ற முரண்பாடு என்று கண்ட மாவோ, அவற்றைக்
களைவதற்கான வழிமுறையை மேற்சொன்ன உபதேசத்தில் தந்துள்ளதாக நாகராஜன்
குறிப்பிடுகிறார்.
மேலைமார்க்சியம் தோல்விகண்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பி அதற்கான காரணங்கள் என்று
ஒரு பட்டியலையே தருகிறார். மேலைமார்க்சியத்தின் தோல்விக்கான தலையாய காரணம் என்று
அவர் குறிப்பிடுவது அதன் மெய்காண்முறையில் அன்புக்கு அதற்குரிய இடம் தரப்படவில்லை
என்ப தாகும். அறிதலில், ஆக்கத்தில் மற்றும் விடுதலையில் அன்புக்குரிய பங்கை
மேலைத்தத்துவங்கள் உணரவில்லை என்பதுதான் நாகராஜனின் tலீமீsவீs என்றால் தவறல்ல.
கீழைத்தத்துவங்களில் மிகவும் சாதாரணமாக ஏற்கப்படும் இந்த உண்மையை மேலைமார்க்சியம்
அறியாததால் பல விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்கிறார். இந்தியத்
தத்துவங்களில் வைணவத்தை அதிலும் தென்கலை வைணவத்தை முக்கியப்படுத்துகிறார்.
ஆழ்வார்கள் தொடங்கி ராமானுஜர் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த மரபில் அன்பும்
தொண்டும் உண்மையைக் காட்டும் வழிகளாகக் கருதப்பட்டன என்பது நாகராஜனின் வாதம்.
தென்கலையின் கைங்கர்ய மார்க்கம் ஆதிசங்கரரின் ஞானமார்க்கத்தைவிடச் சிறந்தது என்றும்
வாதிடுகிறார்.
முக்குறும்புகளான ஞானச் செருக்கு, செல்வச் செருக்கு மற்றும் ஜாதிச் செருக்கை
வென்றெடுத்தால்தான் உண்மையை அறிய முடியும் என்று காட்டிய தென்கலை வைணவம், சங்கரரின்
ஞானமார்க்கத்தைவிடப் பல படிகள் உயர்ந்தது என்கிறார். மேலும், எல்லாமே ஒன்றுதான்,
அதே சமயம் இரண்டும் வெவ் வேறானவையும்தான் என்று காட்டிய வைணவம் மார்க்சிய
இயங்கியலுக்கு மிகவும் நெருக்கமானது என்று காட்டுகிறார். பொருளைக் கண்டு
வெறுக்காமல் அதே சமயம் அதற்கு முற்றிலும் அடிமைப்படாமல் அதைக் கடப்பதுதான் உண்மையான
விடுதலை என்று காட்டிய கீழைத்தத்துவங்கள் மேலைமார்க்சியத்தைவிடப் பன்மடங்கு
உயர்ந்தவை என்று கூறுகிறார்.
நாகராஜனின் கீழைமார்க்சியம் என்ற கருத்தாக்கத்தோடு எனக்குப் பெரிய முரண்பாடு
எதுவும் இல்லை என்று கூறும்போதே சில கேள்விகளையும் எழுப்ப விரும்புகிறேன். மாவோவின்
மார்க்சியம் மேலை மார்க்சியத்திலிருந்து வேறுபட்டது என்பதை ஏற்கலாம் என்றாலும் அது
நடைமுறையில் எந்த அளவுக்குச் சிறந்தது என்பது தெரியவில்லை. உதாரணமாக, ஸ்டாலின் மேலை
மார்க்சியத்தை ஆதாரமாகக் கொண்டு (வர்க்க முரண்பாடுகளைப் பகைமையுள்ளதாகவே)
லட்சக்கணக்கில் விவசாயிகளைக் கொன்றான் என்றால், மாவோவும் கீழைமார்க்சியத்தைக்
(வர்க்க முரண்பாடுகளைப் பகையற்றதாக) கொண்டு சுமார் அறுபது லட்சம் மக்களைக்
கொன்றதாகக் கூறப்படுகிறது. 'மக்களை நேசி, அவர்களுக்குத் தொண்டு செய். அகந்தையை ஒழி'
என்ற மகாவாக்கியங்கள் முடிவில் மக்களின் படுகொலையில்தான் முடிந்ததாகத் தெரிகிறதே,
ஏன்?
நாகராஜன் மேலைமார்க்சியத்தின் தோல்விக்கு அதன் மெய்காண்முறையிலுள்ள குறையைச்
சுட்டுகிறார். ஒரு தத்துவத்தின் மெய்காண்முறை என்பது அதன் உயிர் அல்லது ஆன்மாவைப்
போன்றது. அதிலேயே பெரும் குறை இருக்குமானால் அந்தத் தத்துவத்தைப் புறக்கணிப்பதுதான்
நல்லது. நாகராஜன் ஏன் தன்னை மார்க்சியவாதியாகவே கருதிவருகிறார் என்பது என் கேள்வி.
மேலும், மார்க்சின் பொருள்முதல்வாதம் என்பதை நாகராஜன் பெரிதாகக் கருதுவதில்லை என்றே
நினைக்கிறேன். காரணம், பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாட்டைக்கூட
நாகராஜன் சரியானதாகக் கருதமாட்டார் என்பது என் கணிப்பு.
18, 19ஆம் நூற்றாண்டுகளில் மேற்கிலிருந்து வளர்ந்துவந்த தத்துவங்கள் எல்லாம் மனித
சமூக வளர்ச்சி என்பது ஒரே நேர்கோட்டில் படிப்படியாக நிகழ்வதாகவே கருதின. இந்த
வளர்ச்சியில் விஞ்ஞானத்தின் பங்கு அதிமுக்கியமாகக் காணப்பட்டது. நாகராஜனோ நவீன
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனித முன்னேற்றத்தையே தருகின்றன என்பதை ஏற்க
மறுக்கிறார். காந்தியையும் ஜே. சி. குமரப்பாவையும் முக்கியமாகக் கொள்பவர் எவரும்
நவீன விஞ்ஞானத்தையோ தொழில் நுட்பத்தையோ கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது. தவிரப்
பொருள் வளர்ச்சியும் அதைத் தொடர்ந்துவரும் பொருள் நுகர்ச்சியும் தங்கு தடையின்றி
நடக்கலாம் என்றோ அதுதான் மனித வளர்ச்சிக்கான அளவுகோல் என்றோ நாகராஜன் கருதுவதில்லை.
தேவைகளைக் குறைத்துக்கொண்டு வாழ்வது ஒருவகையில் சிறந்தது என்பதோடு இன்றைய உலகில்
அதுவே இயற்கையையும் மற்ற உயிரினங்களையும் காப்பதற்கான வழியென்றும் கருதுகிறார்.
சமணர்களின் 'அபரிக்ரஹம்' என்பது உற்பத்திப் பெருக்கம், தேவைகளின் பெருக்கம்
என்பதற்கு மாற்றான வழிமுறை எனப் பரிந்துரைக்கிறார். பெரும் தொழிற்சாலைகள்,
நகரமயமாதல், இயந்திரமயமாதல், இயற்கையை வென்றெடுப்பது என்ற மேலைநாடுகளின் வளர்ச்சிப்
போக்கையும் அவற்றை ஏற்றுக்கொண்டு மேலைமார்க்சியத்தையும் நாகராஜன் கடுமையாகத்
தாக்குகிறார். லெனின் ஏற்றுக்கொண்ட நடைமுறைப்படுத்திய கட்சியின் மேலாண்மை
என்பதையும் தனியுடைமைகளை வன்முறை மூலம் பறிமுதல் செய்வது தவறல்ல என்பதையும்
மார்க்சியத்தின் தோல்விக்கான காரணங்களில் சேர்த்துக்கொள்கிறார். மொத்தத்தில் இதுவரை
பலர் மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்பவை எல்லாவற்றையும் நாகராஜன் நிராகரிக்கிறார்
என்பதுதான் உண்மை. அப்படியென்றால் நாகராஜன் எந்த அர்த்தத்தில் மார்க்சியவாதி என்ற
கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு நாகராஜன் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
|