|
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மனித உரிமையை மதிக்காத சங்கப் பரிவாரங் களைச்
சார்ந்தவர்கள், வன்மையாகக் கண்டிக்கத்தக்கவர்கள். கற்காலத்தைச் சார்ந்த
இவர்களுக்குத் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கௌல் தந்த தீர்ப்பு நல்ல
சாட்டையடி. அனிருத்தன் வாசுதேவன் நமது அடிப்படை நம்பிக்கைகளையே ஆட்டம் காண
வைக்கிறார். அவர் தரப்பு வாதங்களைப் படித்தபின் நமது சிந்தனையை மறு பரிசீலனைக்கு
உட்படுத்துவது அவசியம். சுஜாதா: ஒரு முரண்நோக்கு கட்டுரையில் கண்ணன் தந்த தகவல்கள்
எந்த மறுப்பும் தெரிவிக்க இயலாத வகையில் இருக்கின்றன. மிகவும் வலுவாகத்
தொகுத்திருக்கிறார். 1983 இனப்படு கொலை, எரியும் நினைவுகள் மறக்க இயலாமல் மனத்தில்
என்றும் சுழலும்.
வலம்புரி நாகராஜன்,
ஈரோடு
ஓவியர் எம்.எப். ஹ§சைன்மீது இந்துத் துவ அடிப்படைவாதிகளால் தொடரப் பட்ட வழக்கு
பற்றியும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு பற்றியும் தங்களின் தலையங்கம்
எடுத்துரைத்தது. ஊடகங் களும் கலைஞர்களும் இத்தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை. 1983
ஜூலை இலங்கை இனப்படுகொலை பற்றிய படங்களைப் பார்த்ததும் காட்டு மிருகங்களைவிடப்
பகுத்தறிவுள்ள மனிதர்களின் கொடூரம் தெரிந்தது. இப்படிக் கொடூரமான கொலைகளை
வழிநடத்தியவர்கள் எவருமே தண்டிக் கப்படவில்லை என்பதைப் படித்த போது துயரம்
கவிழ்கிறது.
ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
சுதந்திர தேவியின் படம் நிர்வாண மாக வரையப்பட்டதைப் பெரிதும் பிரபலப்படுத்தி
நெருப்பில் குளிர் காய பிஜேபியினர் துடிக்கின்றார்கள். நிர்வாணமான சிறு குழந்தையைப்
பார்த்து யாருக்காவது காமப் பார்வை வருமா? இது பார்க்கின்றவர்களின் மனோநிலையைப்
பொறுத்தது. 1983இல் இலங்கையில் நடந்த இனப்படு கொலைகள் பற்றிய சிறப்புப் பகுதி
இனப்படுகொலையின் வெறித்தனத்தை உணர்த்தியது. உத்தப்புரம் பற்றி அறிவுடை நம்பி
எழுதியிருப்பது, ஓரளவு நம்ப வைக்கிறது. ஸ்டாலின் கட்டுரை யில் சிவப்புத் துண்டுகளை
வித்தியாச மாக விமர்சனம் செய்துள்ளார். ஜாதிக் கொடுமையை எதிர்த்து இயக்கம் நடத்திய
கம்யூனிஸ்ட்களை வரலாறு தெரியாமல் பேசுவது சரியானதல்ல.
இரா. சண்முகவேல்
கீழக்கலங்கல்
நமது நாடு விடுதலை பெற்று அறுபதாண்டுகள் ஆகின்ற சூழ்நிலை யிலும் எழுத்துச்
சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது
கொடுமையானதுதான். ஆனால், இந்தத் தீர்ப்பினை ஊடகங்கள் புறக்கணித்ததன் காரணம்
விளங்கிக் கொள்ள முடியாததாக உள்ளது. 'எரியும் நினைவுகள்' ஆவணப்படம் குறித்து அம்ஷன்
குமாரின் விமர்சனக் கட்டுரை நடுநிலையோடு அமைந்திருக்கிறது.
ஈழத்துக் கவிதைகள் பெரும் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை.
கே. ரவிச்சந்திரன்,
ஈரோடு
மைக்கல் றொபேர்ட்ஸ் கட்டுரை இனப் படுகொலைகளை விலாவாரியாகச் சொல்லிச்செல்கிறது.
கருணாகரனின் காயங்களிலிருந்து பிறந்த ஒளி கலவரங் களிடையேயும் ஈழத்துத் தமிழ்
இலக்கியங்கள் பிறந்த கதைகளை, படைப்பாளிகளை வீறுகொண்டு எழச் செய்த நிகழ்வுகளை
விவரித்திருப்பது நன்று. அம்ஷன் குமாரின் கட்டுரை நெகிழவைத்தது. சோமிதரனின் நேர்
காணல் பல பொய்களைக் கட்டு டைத்து உண்மை நிலவரத்தை விளக்கு கிறது. பதினோறு ஈழத்துக்
கவிதைகள் நெகிழ வைக்கின்றன. அமரர் விஜய் டெண்டுல் கரின் நாடக சாதனைகள், இலக்கு,
லட்சியம் ஆகியவற்றை இ.பா., தொகுத்து அளித்த கட்டுரை நன்று. 'படிகள்' சிற்றிதழின்
ஆறு ஆண்டுகள் பங்களிப்பு மலைக்கவைக்கிறது.
குரு. ராதாகிருஷ்ணன்
நெல்லிக்குப்பம்
கால ஓட்டம் நெஞ்சையுலுக்கும் பல நிகழ்வுகளை நினைவெல்லைக்கப்பால்
இட்டுச்சென்றுவிடுகிறது. துயரங் களைவிட மகிழ்ச்சியான தருணங்கள் விரைவில்
மறந்துபோகின்றன. ஆனால், இலங்கையில் தொடர்ந்துகொண்டி ருக்கும் துயர நிகழ்வை
மறந்துபோக நம்மால் எவ்வாறு சாத்தியப்பட்டது.
இழப்பு சோகமானது. தன் இருப்பிடம் மற்றும் உடைமையிழந்து அகதியாக்கப்படுவது உயிர்
நீத்தலுக்கு நிகரானது. வரலாற்றில், பல இலட்சம் அகதிகளை உருவாக்கிய நிகழ்வு 1983
இலங்கை இனப்படுகொலை. ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என்னைப் பாதித்துத்
துயரமுறச் செய்த அச்சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத் தையே உணர்ச்சிக் கொந்தளிப்புக்
குள்ளாக்கியது. இனப்படுகொலையோடு ஆரம்பித்த ஈழ மக்களின் துயரம் முடிவுறுவதற்கான
சாத்தியக் கூறுகளற்ற ஒரு தளத்தில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களை
யும் ஏதாவது ஒருவிதத்தில் பெரும் பாதிப்பிற்குள்ளாக்கிக்கொண்டிருக்கும் நிகழ்கால
வரலாற்றுச் சோகம் அது. அந்தக் காலகட்டத்தில் பெரும் பான்மையினரால் நியாயம் என்று
கருதப்பட்ட ஒரு இலக்கை நோக்கித் தீவிரமாய் நடைபோட்ட ஈழப் போராட்டம், பல்வேறு அக
மற்றும் புறக் காரணிகளால் திக்குத்தெரியாது நிலைகுலைந்து நிற்கிறது. போராளிக்
குழுக்களின் இலக்கை அடையத் துடிக்கும் முனைப்பிற்கும் வெளிவேடம் போடும் இனவெறி
அரசுக்கும் இடையில் பந்தாடப்படும் சாதாரண மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு
வாழப் பழகிவிட்டார்கள். இது ஆறுதலான விஷயமல்ல.
இன்றைக்குத் தமிழகத்தில் இலங்கை இனச்சிக்கல் பற்றிச் சிந்திக்க ஆளில்லை. அப்படி
ஒன்று இருப்பதாகக்கூட யாருக்கும் தோன்றவில்லை. தின வெடுத்த அரசியல்வாதிகளுக்குத்
தீனிபோடும் ஒன்றாகவே அது மாறிப்போனது.
இனம் சார்ந்து அல்ல, நியாயம் சார்ந்து சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை.
அதுவே ஒரு பிரச்சினையை அதன் தீர்வெல்லைக்கு இட்டுச் செல்லும். சிங்கள இனவெறி அரசின்
நரித்தந்திரம் பலமுறை நிரூபிக் கப்பட்டுவிட்டது. இந்நிலையில், இனச்சிக்கலின்
நியாயம் குறித்துச் சிந்தித்து விவாதிக்கத் தமிழர்கள் முன்வர வேண்டும். அதை
விடுத்து, பாராமுகமா யிருப்பது சிக்கலை அதன் தொடக்கப் புள்ளிக்கு இட்டுச் செல்லவே
வழிவகுக்கும்.
ஏ. அழகிய நம்பி
திருவான்மியூர்
கண்ணணின் 'சுஜாதா: ஒரு முரண்நோக்கு கட்டுரை' படித்தேன்! கண்ணன் அவர்களின் எழுத்து
நடை எனக்குப் பிடிக்கும் என்பதுபோல 'சுஜாதா' அவர்களின் கதை சொல்லும் பாணியும்
எனக்கு மிகவும் பிடிக்கும்! அவர் வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த
எழுத்தாளராகயிருக்கலாம்! எப்படி எழுதினால் வாசகர்களின் உள்ளத்தை ஆக்கிரமிக்கலாம்
என்பதை மறைந்த எழுத்தாளர் 'சுஜாதா' நன்கு தெரிந்துவைத்திருந்தார். இலக்கியக்
கண்ணாடி மூலம் பார்த்தால் அவர் எவ்வளவு தேறுவார் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க
வேண்டும்.
கே.எஸ். பட்டாம்பி ராமையா
பாண்டிச்சேரி
'சுஜாதா: ஒரு முரண்நோக்கு' கட்டுரையில் சுஜாதா தன் சாதிச் சங்கங்களுடன் கொண்டிருந்த
உறவை அவரே பதிவு செய்திருப்பதாகக் கூறி, அவர் புறக்கணித்து ஒதுக்கிய 1991
காலச்சுவடு ஆண்டு மலரில் அவரைக் கவர்ந்த சில படைப்புகளில் 'ராமஜன்ம பூமி: ஓர்
இந்தியப் பார்வை' என்ற என் கட்டுரையும் ஒன்று என்று கூறுவதன் மூலம், மறைமுகமாக என்
மீதும் 'பழி' சுமத்துகிறீர்கள். என் கட்டுரை சுஜாதாவைக் கவர்ந்ததன் காரணம் அது
படிப்பதற்கு எளிமையாக, தெளிவான நடையில் இருந்தது என்று அவர் எழுதியதாக நினைவு. 1991
ஆண்டு மலரில் என் கட்டுரையை வெளியிட்டு, சு.ரா அவர்களே எழுதியுள்ள விமர்சனக்
கருத்துகளைத் தவிர இதுவரை காலச்சுவடு இதழில் என் கட்டுரை மீதான விமர்சனம் எதுவும்
எழுதப்படவில்லை என்றே நினைக்கிறேன். பெரிய விவாதம் ஒன்றை எழுப்பும் நோக்கத்தில்தான்
நான் அந்தக் கட்டுரையை அவ்வளவு விரிவாக எழுதினேன். ஆனால், 1992இல் பாபர் மசூதி
இடிக்கப்பட்ட பிறகுதான் அக்கட்டுரை பலருடைய கவனத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. ஒரு
சிலர் மேடைகளில் அக்கட்டுரையைக் குறிப்பிட்டுத் தாக்கியதாகக் கேள்விப் பட்டேன்.
கோவையில் ஒருகூட்டத்தில் நான் கலந்துகொண்டபோது என்னிடம் அக்கட்டுரை பற்றிச் சிலர்
கேள்வியெழுப்பினர். அது தவிர எங்கும் யாரும் அக்கட்டுரையை விரிவாக
விமர்சித்ததில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்த காலச்சுவடு கூட்டத்தில் என்
கட்டுரையைக் குறிப்பிட்டு ஒருவர் பேசியதாகத் தெரிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக
என் கட்டுரை குறிப்பிடப்படும் போதெல்லாம் 'மகிழ்ச்சி'யாக இருந்தாலும்,
அக்கட்டுரைமீதான விரிவான விமர்சனம் ஒன்றுக்குப் பதில் எழுத நான் இன்னும்
காத்துக்கொண்டு இருக்கிறேன் எனக் கூற விரும்புகிறேன்.
ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்
பெங்களூர்
சுஜாதா, கணினி பற்றிய உண்மைகளைக் கன்னித் தமிழுக்குக் கொண்டு வந்தவர். அறிவியல்
தமிழின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியவர். ஜூலை 1983 இனப்படுகொலை
புத்தபிரானின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட மண்ணில் இரத்தக் காட்டேரிகள் உலாவரும்
அலங்கோல நிலையைக் காட்டுகிறது. காலம் ஒருநாள் நிச்சயம் மாறும். காமுகர்கள் கசக்கித்
தூக்கி எறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஈழத்துக் கவிதைகள் இதயத்தின்
ஈரத்தைத் தொட்டன. நட்சத்திர சந்நியாசிகளைத் தலையில் வைத்து ஆடும் ஊடகங்களும் காவல்
துறையும் போலியின் பிரதிபலிப்புகள் என்ற வாதத்தில் அர்த்தம் உள்ளது.
கா. இர. குப்புதாசு,
செஞ்சி
அம்பேத்கர் பிறந்த தினம் ஒரு இழிதினமா? த. ஸ்டாலின் எதிர்வினை படித்தேன். எந்தத்
தலைவரின் பிறந்த நாளையும் இழிதினமாக இடதுசாரி இயக்கங்கள் கருதவில்லை. சாதிப்
பிடிமானத்துக்கும் சாதியற்று மனித இனம் ஓர் இனமாக வாழவும் சித்தாந்த ரீதியிலான
வேறுபாடுகள் அதிகமுண்டு. எதை எடுத்தாலும் சாதியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்
ஸ்டாலின் போன்ற வர்களுக்குக் கட்டுரையின் சாரம் புரிந்தாலும், அவர்கள் ஒரு உளியில்
தொங்கிக்கொண்டு எதிர்மறைக் கருத்தைத் திணிக்க முயல்கிறார்கள் என்பதே உண்மை.
ஒடுக்கப்பட்ட இனத்துக்கான உரிமைக் குரலை இந்திய, தமிழக மண்ணில் தங்கள்
இன்னுயிரையும் ஈந்துகாத்த வரலாறு செங்கொடி இயக்கத்துக்கு உண்டு.
ஆரிசன்,
கீழ்க்கொடுங்காலூர்
"ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு" கட்டுரை பற்றி, பின் காலனிய நாடான
இந்தியாவுக்கு எதிராக அந்நிய சக்திகள் ஒன்று திரண்டும் தனித்தும் தீட்டிவரும் சாதி
வலைப் பின்னலைப் பற்றிய விழிப்புணர்வு சிறிதுகூட இருப்பதாகத் தெரியவில்லை. நமது
வறுமையை உலக அளவில் ஒரு காரணமாகக் காட்டி உள்நாட்டில் தனது அரசியலை விரிவுபடுத்த
பணத்தின் தேவையை மட்டும் குறியாகக் கொண்டு 'உலகமயமாக்கல்' என்கிற தாரக மந்திரம்
முன்மொழியும் அம்சத்தோடு இந்தியாவை முதலாளித்துவ இயக்கத் தீவிர முனைப்பின் ஆதரவு
நிழலில் கரைக்க வெளிநாட்டு ஆதிக்கவெறிகொண்ட தீய சக்திகளைத்தான் நமது உண்மையான
ஆட்சியாளர்களாக ஏற்றுவருகிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜன
நாயகரீதியில் நாம் அமரச் செய்த நமது ஆட்சியாளர்கள் அத்தீயசக்திகளின் கைப்பாவைகளாக
விளங்கும் கொடுமையால் உருவானதுதான் இந்த 'ஐ.பி.எல் கிரிகெட்'.
காசிருந்தால் மட்டுமே வாய்ப்புக்கான கதவு திறக்கப்படும் என்கிற பாரபட்சப் போக்கு
எதிர்கால கிரிக்கெட்டைப் பற்றிப் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கும் என்பது
உறுதியாவதோடு நம்மைத் தலை குனிவுக்கு உள்ளாக்குவதில் வேதனையே மிஞ்சுகிறது.
பா. செல்வவிநாயகம்,
சென்னை
ஜூன் இதழில் வெளிவந்த "உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்" குறித்த சு. வெங்கடேசனின்
கட்டுரை வேறெந்த செய்தியிதழ்களாலும் ஊடகங்களாலும் வெளியிடப்படாத, மூடிமறைக்கப்பட்ட
பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், ஆதிக்கவெறி, அரசியல் சதி, அதிகார
வர்க்கத்தின் ஒரு சார்பான போக்கு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் சாதிரீதியான
ஒற்றுமை இவற்றைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. கட்டுரையாளர்,
இத்தீண்டாமைச் சுவர் எழுப்பியதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து எழுதியதோடு
மட்டுமல்லாமல், 'தீண்டாமை'க்கு அரசும் அதிகாரவர்க்கமும் துணைபோனதைத் துணிச்சலோடு
எடுத்துக் கூறியுள்ளார்.
க. கண்ணன்,
மதுரை
தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்ட 1989இல் தேனி மாவட்டம் போடியில் ஆரம்பமானது சாதிக்
கலவரம். பிள்ளைமார் சாதிக்கும் பள்ளர் சாதிக்குமான பிரச்சினையில் பள்ளர் சாதிமேல்
மாறாப் பகை உணர்வு உள்ள தேவர் சாதி ஊடுருவிக் கலவரத்தைப் பெரிதுபடுத்திவிட்டது.
அகமுடைநம்பி கூற்றைப் போல எல்லா ஊர்களிலும் சாதிக்கொரு பள்ளிக்கூடம், கோவில்,
குடிநீர்த்தொட்டி என்று ஆரம்பித்தால் இந்த நாடு தாங்குமா? அதுவும் அந்தச் சாக்கடைக்
கழிவுநீரைத் தாழ்த்தப்பட்டோர் தெருவில் விட்டால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா?
உத்தப்புரம் பிள்ளைமார்கள் வசதி படைத்தவர்கள். இவர்களைப் போலத் தாழ்த்தப்பட்டோர்
வாழும் மற்ற கிராமங்களிலும் மற்ற சாதிக்காரர்களும் ஆரம்பிக்க வேண்டும் என்று
விரும்புகிறாரா அகமுடைநம்பி. தாழ்த்தப்பட்டோர் என்பவர் ஆயுளுக்கும் அடிமைகளாக
இருக்க வேண்டும் அதுதான் ஊர்க்கட்டுப்பாடு என்கிறாரா?
அகமுடைநம்பி போல ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும், இந்த நாடே ஜனநாயகக் குடியரசு
நாடுதான் என்பதற்கு அவர் எழுதிய கடிதமே சிறந்த சான்று.
அ. சுப்பையன்
மேக்கிழார்பட்டி
ஓவியர் எம். எப். ஹ§சைன்மீது இந்துத்துவவாதிகள் தொடுத்த வழக்குகளில், வந்துள்ள
சிறப்பு மிக்க தீர்ப்பைப் பாராட்டிச் சரியான நேரத்தில் தலையங்கம்
எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மரபின் பெருமையை, உண்மைத் தன்மையை அறியாத
அடிப்படைவாதிகள் போடும் கூச்சல் அருவருக்கத்தக்கது. கலை, பண்பாடு, நாகரிகத்தில்
சிறந்து விளங்கும் நமது நாட்டு மரபினையும் பெருமையையும் சிதறடித்துவிடுகிற
சக்திகள்தாம் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கின்றன. நடுநிலையோடு எழுதப்பட்டுள்ள
தலையங்கம் பாராட்டப்பட வேண்டியது. இத்தகைய தீர்ப்பின் சிறப்பைக் கண்டுகொள்ளாத
ஊடகங்களின் திட்டமிட்ட புறக்கணிப்பைச் சாடியிருப்பதும் சரியே.
'இனப்படுகொலை எரியும் நினைவுகள்' வேதனை ததும்பும் சிறப்புப் பகுதி. பேரினவாதம்
எத்தகைய ஆபத்து வாய்ந்தது என்பதை இக்கலவரங்கள் காட்டுகின்றன. சிங்களர்களும்
மனிதர்கள்தானே. அவர்களில் ஒன்றிரண்டு மனித நேயர்கள் தங்களால் முடிந்த அளவு
தமிழர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் எண்ணிக்கையில்
மிகமிகச் சொற்பம்தானே! மொழி, பண்பாடு, நாகரிகத்தால் ரத்தத் தொடர்புள்ளது தமிழகம்.
தமிழக அரசும் மக்களும் மத்திய அரசுக்கு வலியுறுத்தி அரசியல் தீர்வுகாண வேண்டியது
உடனடித் தேவை. இதில் இந்தியாவின் பங்கு மகத்தானது.
சு.ரா. பக்கங்கள் 'பாலைவனத்தில் பசுஞ்சோலைத் திட்டுபோல்' அமைந்திருக்கிறது. ஆ.
சிவசுப்பிரமணியனின் கட்டுரை வரலாற்றுணர்வோடு இலக்கிய நயத்தையும் ஊட்டுகிறது.
இரவீந்திர பாரதி
அரூர் |