|
ஒரு சராசரிக் குடிமகனைப் பொறுத்தவரை, சாதாரணகதியில் கருத்துச் சுதந்திரம் ஒரு
கேள்விக்குறியாவதில்லை. அப்படியொன்று
இருக்கிறதா என்றுகூட அவன் வியப்படையலாம். ஏனெனில், உலகிலுள்ள சாதாரண விஷயங்கள்
பற்றிக் கருத்துச் சொல்ல அவனுக்குப்
பிரத்தியேகமான சுதந்திரத்தை எழுதி வைக்க வேண்டியதில்லை. அது இப்போதும் அங்கே
இருக்கிறது. யாரும் அதைக்
கேள்விக்குட்படுத்துவதில்லை. ஆனால், அவன் தலித்தாகவோ பிற்படுத்தப்பட்டவனாகவோ
இருக்கிறான் என்று வைத்துக்
கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உயர்சாதியினருக்குச் செல்வாக்குள்ள ஒரு பஞ்சாயத்துக்
கூட்டத்தில் அவன் கருத்துச் சொல்கிறான்
என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவனுடைய கருத்தின்மீது இரும்பு உலக்கை
விழுவதைப் பார்க்கலாம். அவனை வாயை
மூடும்படி சிலர் சொல்லலாம். சிலர் சாடியெழுந்து அவனை அச்சுறுத்தலாம்;
துன்புறுத்தலாம். கேரளப் புரட்சியாளர்கள் மத்தியிலும் இது
போன்ற சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால், அதன் அடிப்படை உயர்சாதி- கீழ்ச்சாதிப்
பதவியாக இராது. கட்சிகளின் பலத்தை
நிறுவுவதாக இருக்கும்.
ஆக, கருத்து அபாயகரமானதாக மாறுவதும் கருத்தை உருவாக்கிக் கொள்ளவும்
வெளிப்படுத்தவுமான சுதந்திரம்
கேள்விக்குட்படுத்தப்படுவதும் அதிகாரவலிமையின் முன்னால்தான். அதிகாரம் என்
கையிலிருக்கிறது. எனவே, என்னுடைய
அபிப்பிராயம் மட்டுமே செலாவணியாகும் என்ற நிலைப்பாட்டின் முன்னால் அதிகாரமற்றவனின்
கருத்து தரையில் தேய்த்து
மிதிக்கப்படுகிறது. அதிகார சக்தி குடும்பத் தலைவனுடையதாக இருக்கலாம்; சாதித்
தலைவனுடையதாக இருக்கலாம்; மதப்
பிரமுகருடையதாக இருக்கலாம்; அரசியல் தலைவருடையதாக இருக்கலாம்; அறிவுஜீவுகளுடையதாக
இருக்கலாம்; நில
உடைமையாளருடையதாக இருக்கலாம்; தொழிலதிபருடையதாக இருக்கலாம்; ஊடக உரிமையாளருடையதாக
இருக்கலாம்.
எதேச்சாதிகாரமும் அதை ஏற்றுக்கொள்ளும் பெரும்பான்மையினரின் இசைவும் நில உடைமைச்
சமூகங்களின் அடையாளங்கள்.
இந்தியாவைப் போன்று நில உடைமைக் குணங்களிலிருந்து விடுபடாச் சமூகத்தில் கருத்துச்
சுதந்திரத்தை அரசியலமைப்புச் சட்டத்தில்
எழுதிவைத்தவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஏட்டுப் பசு புல்லைத்
தின்னாது - சரிதான். ஆனால் ஏட்டிலாவது
அந்த உரிமை எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே. எப்போதாவது ஒருமுறை கருத்துரிமையை
உயர்த்திக்காட்டி ஒரு தீர்ப்பெழுத
அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள அந்தச் சின்ன வாக்கியம் உதவுகிறதே.
கருத்துச் சொல்ல அரசியல்வாதிகளுக்கு அவர்களுடைய மேடைகளும் சட்டப் பேரவையும் உள்ளன.
மத அதிகாரிகளுக்குத்
தேவாலயங்கள் உள்ளன. சாதிப் பிரமுகர்களுக்கு அவர்களுடைய கூட்டங்கள் உள்ளன.
செல்வந்தர்களுக்கு அவர்களுடைய செல்வாக்கு
வட்டங்கள் உள்ளன. அறிவுஜீவிகளுக்கு ஊடகங்கள் உள்ளன. சராசரிக் குடிமகன் இவர்களின்
கருத்துகளைக் கேட்பவன் மட்டுமே.
அவனுடைய கருத்துகளைக் கேட்க யாருமில்லை. அதிகாரங்களைக் கையாளுபவர்களின்
கருத்துகளுக்கு இரையாக இருப்பது தான்
அவன் விதி. அதையும் கடந்த பயங்கரங்களை அனுபவிக்கும் குடி மக்களும் இருக்கிறார்கள்.
காஷ்மீர்க் குடிமக்களுக்கு வாழ்வதற்கான
உரிமையே இல்லாமலாகியிருக்கிறது. சித்திரவதை முகாம்களில் இளைஞர்களும் இளம்பெண்களும்
என்றென்றைக்குமாகக்
காணாமற்போகிறார்கள். நாளை யார் பேருக்குச் சீட்டு விழும் என்று காஷ்மீரிலுள்ள
யாருக்கும் தெரியாது. அந்த எதேச் சாதிகாரத்துடன்
மோதுவது அரசியல் தீவிரவாதிகளின் அதிகாரம்; மதத் தீவிரவாதிகளின் அதிகாரம். அவர்கள்
தமது கருத்துகளின் இரும்புலக்கையைத்
திணிப்பது, எடுத்துக்காட்டாக, பர்தா அணியாத பெண்களை அவமானப்படுத்துவதன் மூலமும்
கொன்று குவிப்பதன் மூலமுந்தான்.
இரண்டு எதேச்சாதிகாரங்களின் கத்திமுனைகளுக்கிடையில் வாழும் வாழ்க்கையைப் பற்றி
யோசித்துப் பாருங்கள். அந்த உலகத்தில்
கருத்துச் சுதந்திரத்துக்கும் வாழ்வுரிமைக்கும் என்ன பொருள்? நரேந்திர மோடியின்
குஜராத்தில் மூன்று நாள்கள் நடந்த நர
வேட்டையில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கு என்ன பொருள்?
குரலற்றவர்களின் குரல் என்ற வாதத்தை முன்வைத்துத்தான் ஊடகங்கள் கருத்துரிமையை ஊடகச்
சுதந்திரமாக மாற்றின.
அரசியலமைப்பு குடிமகனுக்கு வழங்கியுள்ள கருத்துரிமையைத்தான் ஊடகங்கள் தமது அதிகார
சக்திக்கு முன்னால்
உயர்த்திக்காட்டுகின்றன. குடிமகனின் நாக்கு நாங்களே என்று சொல்கின்றன.
குடியுரிமையின் காவலர்கள் நாங்களே என்று
பாராட்டிக்கொள்கின்றன. 'ஃபோர்த் எஸ்டேட்' - ஜனநாயகத்தின் நான்காவது தூண்-என்று
தாங்கள் அழைக்கப்படுவதாக ஊடகங்கள்
பெருமைகொண்டாடுகின்றன. ஆனால், ஒருவேளை கேரளத்தில் மட்டுமாக இருக்கலாம், கருத்துச்
சுதந்திரத்தை மிகவும் இரக்கமற்ற
முறையில் துர் உபயோகப்படுத்தும் பிரதான சக்திகள் ஊடகங்கள்தாம். அரசியல்வாதிகளோ
மதங்களோ சாதிகளோ ஊடகங்கள்
அளவுக்குக் கருத்துச் சுதந்திரத்தை மலினப்படுத்தவில்லை என்றே சொல்லுவேன். ஏனெனில்,
அவர்களுடைய நோக்கங்களின் மையம்
கருத்துரிமையல்ல - வேறு பல. ஆனால், ஊடகங்களின் ஆத்மாவும் பரமாத்மாவும் கருத்துச்
சுதந்திரமே. அதே சமயம், செய்திகளை
இருட்டடிப்புச் செய்வது, திரிப்பது, அரை உண்மைகளைப் பிரச்சாரம் செய்வது ஆகியவற்றின்
மூலம் அரசியல் - சாதி - மத
அமைப்புகளின் நசிவு களுக்குத் துணைபோகிறார்கள். அவற்றை மூடிமறைக்கிறார்கள். அதன்
மூலம் களங்கமற்றவர்களைச்
செய்திகளினூடே வேட்டையாடுகிறார்கள். மூடநம்பிக்கைகளையும் பொருந்தாச் சடங்குகளையும்
ஊக்குவிக்கிறார்கள். குடிமகனுக்காகவே
தாங்கள் இவற்றை உயர்த்திக் காட்டுவதாகச் சொல்லிக் கருத்துச் சுதந்திரத்தை விபச்சாரம்
செய்கிறார்கள்.
கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகக் கேரளத்தின் ஜனநாயக, மதச்சார்பற்ற
செயல்பாடுகளுக்கும் முற்போக்குச் சிந்தனைகளுக்கும்
மிகப் பெரும் ஊறுவிளைவித்தவை, மலையாளத்திலுள்ள பொது நீரோட்டப் பத்திரிகைகளாகவே
இருக்கும். அரசியல் கட்சிகளும் மத,
சாதிப் பிரமுகர்களும் ஊடகங்களைச் சார்ந்துதான் தமது மாசுபடுத்தலையும் நசிவையும்
செய்திருக்கிறார்கள். ஊடகங்கள் அவர்களுக்கு
ஆதரவாகவும் நிழலாகவும் இருக்கின்றன. பத்திரிகைகள் உருவாக்கிவைத்த அந்த நசிவு மரபைத்
தொலைக் காட்சிகளில் பணியாற்றும்
பக்குவமற்ற, இலட்சிய உணர்வில்லாத புதிய தலைமுறை ஊடகப் பணியாளர்கள் அழுகலின்
ஆழத்துக்குக் கொண்டு செல்லுகிறார்கள்.
இதற்கான திடுக்கிடச் செய்யும் உதாரணங்கள் இந்தக் கட்டுரையின் எல்லைக்குள்
அடங்குபவையல்ல.
அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்துரிமை எழுதிவைக்கப்பட்டிருப்பது சரிதானென்றாலும்,
சராசரிக் குடிமகனைப் பொறுத்தவரை அது
வெறும் கானல்நீர் மட்டுமே. கருத்துரிமையின் குத்தகையை ஏற்றிருப்பவர்கள் அதை வரும்
தலைமுறைகளைப் பாதிக்கும் பெரும்
சாபமாக மாற்றிக் கொண்டிருக்கும் காட்சியே இன்று - கேரளத்தில் மட்டுமேனும் -
தெரிகிறது.
|