Google   www kalachuvadu.com

சிறப்புப்பகுதி
காலச்சுவடுக்குத் தடை
எதிர்வினைகள், அறிக்கைகள், மௌனங்கள்

2003 ஆம் ஆண்டில் தமிழகப் பொது நூலகத் துறை 'காலச்சுவடு' இதழ்களை நூலகங்களில் வாங்க அனுமதியளித்தது. ஒரு சில மாவட்டங்களில் மொத்தமாகச் சில நூறு பிரதிகள் வாங்கப்பட்டுவந்தன. ஓரளவு விழிப்புணர்வுடன் இருந்த மாவட்ட நூலகர்களுக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். 2006ஆம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்து மாற்று இதழ்கள், பதிப்பகங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நூலகத் துறையைச் சீரமைப்பது, மேம்படுத்துவது, சிங்கப்பூர் மையநூலகம்போல எல்லாத் தமிழ் நூல்களும் மற்றும் பற்பல வசதிகளும் அமைந்த ஒரு நூலக மையம் சென்னையில் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களை விவாதித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 2006 ஆகஸ்ட் மாதம் முதல் 'காலச்சுவடு' நூலகங்களில் 1500 பிரதிகள் வாங்கப்பட்டது. அதற்காகத் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

காமராசர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு அமைந்திருக்கும் சிறந்த கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு. இடைப்பட்ட காலத்தில் பள்ளிக் கல்வி இந்தியாவிலேயே மட்டமான தரத்திற்குச் சீரழிந்திருக்கிறது. இது இந்த ஆட்சியில் ஓரளவேனும் மேம்படும் என்ற நம்பிக்கைகொள்ள உரிய திட்டங்களை அமைச்சர் செயல்படுத்திவருகிறார். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் நூலகத் துறை மேம்பாட்டிற்கு உரிய பணிகள் குறிப்பிட்டத்தக்க அளவில் நடைபெறவில்லை.

நூலகத் துறை 'காலச்சுவ'டை வாங்கியது பொருளாதாரரீதியில் பெரிய ஆதரவாக இருந்தது. அத்தோடு மேலும் சுமார் 15,000 புதிய வாசகர்கள் 'காலச்சுவ'டைப் படிக்கக்கூடும் என்ற எண்ணம் பொறுப்புணர்வை அதிகப்படுத்தியது. அரசின் சாதகமான செயல்பாடுகளை அங்கீகரிக்கவும் எதிர்மறைகளைச் சுட்டிக்காட்டவும் 'காலச் சுவடு'க்கே உரிய நிதானத்துடனும் துணிச்சலுடனும் எங்களுடைய செயல்பாட்டைத் தொடர்ந்தோம்.

இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 'காலச்சுவடு' நூலகங்களில் வாங்கப்படவில்லை. விசாரித்ததில் 'காலச்சுவ'டைத் தடைசெய்து வாய்மொழி உத்தரவு மாவட்ட நூலகங்களுக்கு நூலக இயக்குநரிடமிருந்து வந்திருப்பதாகத் தெரிந்தது. இது நூலக இயக்குநரின் முடிவல்ல என்பதும் இது அரசியல் பின்னணி கொண்ட முடிவு என்பதும் உறுதியாகத் தெரிந்தது. மற்றபடி இவ்வுத்தரவின் ரிஷிமூலம் நதிமூலம் தேடி நாங்கள் புறப்படவில்லை. அதில் ஆர்வமும் இல்லை. இது பற்றிய கற்பனைகளை, சதித்திட்டங்களை உருவாக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. இவை பலவீனமான நிலையில் இருப்போரின் செயல்பாடுகள். 'காலச்சுவடு' பொருளாதார அடிப்படையில் வலுவற்றதாக இருக்கலாம். இருப்பினும் பண்பாட்டுத் தளத்தில் அதன் இடம் உறுதியானது. இன்று 'காலச்சுவடு'க்கு எதிராக உத்தரவிடும் குரல்கள் போன இடத்தில் புல் முளைத்த பிறகும் 'காலச்சுவடு' இங்கு உத்வேகத்துடன் இயங்கும் என்ற உறுதிப்பாடு எங்களிடம் உண்டு.

'காலச்சுவடு' இதழை நூலகங்களில் தடைசெய்யும் இந்த உத்தரவிற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவது என்று முடிவுசெய்திருக்கிறோம். இதனால் ஏற்பட இருக்கும் இழப்புகள் பற்றிய முழுமையான புரிதலுடனேயே இப்போராட்டத்தைத் துவங்கியிருக்கிறோம். முதல் கட்டமாக அமைச்சருக்கும் நூலக இயக்குநருக்கும் 'தமுஎச', 'கலை இலக்கியப் பெருமன்றம்' ஆகிய எழுத்தாளர் அமைப்புகளுக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'கருத்து' அமைப்பிற்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. கருத்து அமைப்பாளர்கள் கார்த்தி சிதம்பரம், கனிமொழி கருணாநிதி ஆகியோருக்கு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட திறந்த மின்னஞ்சல், பல எழுத்தாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் எதிர்வினையும் வேண்டப்பட்டது. பலர் எதிர்வினையாற்றினர். இம்மின்னஞ்சல் போக்குவரத்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'காலச்சுவடு' சார்பாக அனுப்பப்பட்ட கடிதங்களும், எதிர்வினைகளும் கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையும் கலை இலக்கியப் பெருமன்றம் வெளியிட்ட அறிக்கையும் இங்கு பிரசுரம் பெறுகின்றன. 'தினமணி' தமிழ்மணி வெளியிட்ட குறிப்பும் இடம்பெறுகிறது. இவ்விதழ் அச்சுக்குச் செல்லும்வரை கருத்து அமைப்பாளர் கனிமொழி கருணாநிதியிடமிருந்து அதிகாரப்பூர்வமான எதிர்வினை எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 'தமுஎச' அறிக்கை வெளியிடுவது பற்றி ஆலோசனை நடத்திவருவதாக அதன் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கண்ணன்

n

30.04.08

அன்பிற்குரிய கனிமொழி மற்றும் கார்த்தி அவர்களுக்கு,

கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஒரு பிரச்சினையை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்தத் திறந்த கடிதத்தை எழுதுகிறேன்.

2005இல் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டுக் 'கருத்து' அமைப்பு தொடங்கப்பட்டபோது, அதை உற்சாகத்தோடு ஆதரித்தோரில் நானும் ஒருவன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக நெருக்கடியான சூழல் இருந்தபோதும் நான் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவுக்கு வந்து கட்டுரை வாசித்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். 'கருத்'தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனப்படுத்தவே இதைச் சொல்கிறேன்; எனது ஆதரவினால் 'கருத்து' மேம்பட்டது என நான் கற்பனை செய்துகொள்ளவில்லை.

'கருத்து' எந்த நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோ அதே நோக்கத்தில் எனது பத்திரிகை 'காலச்சுவடு' முழுமையாகச் செயல்பட்டுவருகிறது என்று நான் சொல்லிக்கொள்ள முடியும். எங்களுக்கு விமர்சனப் பார்வை இருந்தாலும், நாங்கள் தனிமனித அவதூறுகளில் ஈடுபடுவ தில்லை.

2003இலிருந்து ஒரு சிறிய அளவில் 'காலச்சுவடு' இதழ் அரசு நூலகங்களில் சந்தாக்கள் மூலமாக வாங்கப்பட்டுவந்தது. மாற்று ஊடகங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதில் துறை அமைச்சருக்கு இருந்த ஆர்வம் காரணமாக 2006இலிருந்து தமிழக நூலகங்களுக்கு 1,500 'காலச்சுவடு' இதழ்களை அனுப்பிவந்தோம். ஆனால் இந்த வருடம் 'காலச்சுவடு' சந்தாவை நிறுத்தச் சொல்லி அரசு நூலகங்களுக்குப் பொது நூலக இயக்குநர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இயக்குநருக்குக் 'காலச்சுவடு' சார்பாகவோ எதிராகவோ எந்தக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர் தனது அரசியல் தலைவர்களின் உத்தரவுப்படி நடப்பதாகவே கருத வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்த அளவில் நூலகத் தேர்வுக் குழு முன்பு 'காலச்சுவடு' மீது எந்தப் புகாரும் வந்ததாகத் தெரியவில்லை.

2006இலிருந்து வெளிவந்த 'காலச்சுவடு' இதழ்களைக் கூர்ந்து கவனித்தீர்களானால் தற்போதைய அரசு குறித்த நடுநிலையான, சமநிலையான நிலைப்பாட்டையே 'காலச்சுவடு' எடுத்துவந்துள்ளது. தமிழக அரசின் பல முற்போக்கு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்ததோடு அதை எங்கள் தலையங்கங்களில், ஒருகால் மற்ற எந்தத் தமிழ் ஊடகத்தையும்விட அதிக சிரத்தையோடு, பாராட்டியும் வந்திருக்கிறோம். தேவைப்படும் போது நாங்கள் கடுமையான விமர்சனங்கள் செய்தாலும் எந்நிலையிலும் தனிமனித அவதூறுகளில் ஈடுபட்டதில்லை.

இந்நிலையில் 'காலச்சுவ'டின் சந்தாவை மட்டும் நிறுத்திவிட்டு மற்ற பத்திரிகைகளின் சந்தாக்களைத் தொடர்வது எங்கள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நூலகச் சந்தாக்கள் மற்றும் அரசு விளம்பரங்களை வைத்து ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்துவிடலாம் என்று அரசு நினைப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு விடப்பட்ட ஆபத்தான மிரட்டல். 'காலச்சுவடு' மக்கள் பணத்திலிருந்து வாங்கப்பட்டுவந்தது; தற்போது அரசு ஆதரித்து வரும் பத்திரிகைகளுக்கு எந்தவிதத்திலும் குறையாத அளவுக்குத் தமிழ்ப் பொது வாழ்வு மற்றும் கலாச்சாரத்துக்குக் 'காலச்சுவ'டின் பங்களிப்பு, சிறிய அளவில் இருந்தாலும், சிறப்பான அளவில் இருந்திருக்கிறது. 'காலச்சுவடு' போல ஒரு சிறிய எதிர்க்குரலைக்கூட இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது என்பது அரசின் சகிப்பற்றத் தன்மையையே காட்டுகிறது. ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக எமக்கு வாக்களிக்கப்பட்ட ஜனநாயகம் என்பது இதுதானா?

வாசகர்களின் எதிர்வினைகளை வைத்துப் பார்க்கும்போது 'காலச்சுவடு' பொது நூலகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்போது எங்களைப் பல வாசகர்கள் தொடர்புகொண்டு 'காலச்சுவடு' நூலகங்களுக்கு வராதது பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

'கருத்து' அமைப்பைத் தொடங்கியபோது வால்டேரின் பிரபல வரிகளை உங்களது அறிக்கையில் மேற்கோள் காட்டியிருந்தீர்கள். காலம் இப்போது ரொம்பவே மாறிவிட்டது. நீங்கள் இருவரும் இப்போது ஆளும் கூட்டணியின், பலம் பொருந்திய இளம் தலைவர்கள். இது நீங்கள் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு முக்கியமான பிரச்சினை இல்லையென்றாலும் அரசின் இந்தச் சர்வாதிகார முடிவுக்கு எதிராகக் கருத்து அமைப்பின் நிறுவனர்கள் என்ற முறையில் ஒரு அறிக்கை விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

கண்ணன்,
ஆசிரியர் - பதிப்பாளர்
'காலச்சுவடு'.

n

01.05.08

அன்பு கருத்து நண்பர்களுக்கு,

வணக்கம். 'காலச்சுவ'டைப் பொது நூலகங்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பாக நீங்கள் தலையிட வேண்டும் என்று 'காலச்சுவடு' கண்ணன் எழுதிய கடிதம் சற்று முன்னர் கிடைத்தது. நான் அவரது கருத்தோடு உடன்படுகிறேன். பொது நூலக வாசகர்களுக்குக் 'காலச் சுவடு' போன்ற ஒரு இதழின் வாசிப்பைத் தடைசெய்யக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இது போன்ற நூலகங்களின் முக்கியத்துவத்தை நான் அறிவேன். என்னுடைய கிராமத்திலுள்ள ஒரு சிறிய நூலகத்தில் தான் மாணவனாக நான் நிறைய வாசித்திருக்கிறேன். ஆளும் கட்சியுடன் ஒத்துப்போகாத ஒரு கருத்தை வெளியிட்டதற்காக ஒரு இதழ் இப்படிப் பழிவாங்கப்படக் கூடாது என்றும் நான் நினைக்கிறேன். கண்ணனின் கடிதத்தைத் தீவிரமாகப் பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

எஸ். தியடோர் பாஸ்கரன்

n

02.05.08

அன்பிற்குரிய கனிமொழி மற்றும் கார்த்தி,

எனது பெயர் மலர்மன்னன். ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் ஒரு பத்திரிகையாளர். 45 ஆண்டுகால அனுபவமுள்ள ஒரு எழுத்தாளர்.

திரு. கருணாநிதி அவர்களுடனும் 70களில் என்னுடன் மிக நெருக்கமாக இருந்த திரு. சிதம்பரத்துடனும் எனக்கு நல்ல நட்பு இருந்தது. திரு. கருணாநிதி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என்னை மறந்திருக்கலாம். ஆனால் திரு. சிதம்பரம் என்னை மறந்திருக்கமாட்டார்.

இத்தனை வருடங்களில் அவர்களிடம் என் சுய லாபம் பொருட்டு எந்த விஷயத்துக்காகவும் நான் அணுகியதில்லை. பல பொது விஷயங்களுக்காக அவர்களைப் பாராட்டியும் விமர்சித்தும் எழுதிவந்திருக்கிறேன்.

திருமதி கனிமொழி, உங்கள் பாட்டி அஞ்சுகம் அம்மாளின் கைகளிலிருந்து நான் பலமுறை உணவருந்தியிருக்கிறேன். அவருக்குப் பழங்கள் கொடுத்திருக்கிறேன். திரு. கார்த்தி, உங்கள் அம்மா நளினி சிதம்பரமிடமோ திரு. சிதம்பரமிடமோ கேட்டால் என்னைப் பற்றிச் சொல்வார்கள்.

இந்தப் பின்னணியில் எனக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள் உள்ளது.

தமிழின் விழிப்புணர்வுப் பத்திரிகையான 'காலச்சுவ'டின் வாசகர்களில் நானும் ஒருவன். அவர்களது கருத்துகளில் எனக்குக் கடுமையான முரண்பாடுகள் இருந்தாலும் வால்டேரின் வார்த்தைகளை எழுத்திலும் செயலிலும் பின்பற்றுபவன் என்ற முறையில் நான் அந்தப் பத்திரிகையின் நலன் விரும்பிகளில் ஒருவன்.

தற்போது தமிழகப் பொது நூலகத் துறை அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காகத் தங்களுக்குக் கீழ்வரும் தமிழக அளவிலுள்ள எல்லா அரசு நூலகங்களிலும் 'காலச்சுவடு' சந்தாக்களை ரத்துசெய்து விட்டது என்று அறிகிறேன். பொது நூலக வாசகர்களின் தரமான வாசிப்பைத் தடை செய்யும் முயற்சி இது. பொது நூலகங்களுக்குத் தொடர்ந்து 'காலச்சுவடு' சந்தாக்களை வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்குத் தாங்கள் ஒரு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் ஜனநாயகப் பாதையிலேயே இருக்கிறது என்பதற்கு அது ஒரு சான்றாக அமையும்.

ஒரு மூத்த இதழியலாளர், எழுத்தாளர் மற்றும் உங்கள் தந்தைகளின் நண்பரான எனதிந்த வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்

மலர்மன்னன்

n

01.05.08

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்.

கருத்துகளைச் சுதந்திரமாகவும் தடையில்லாமலும் விவாதிக்கக்கூடிய ஒரு தளமாகச் செயல்படக்கூடிய 'கருத்து' அமைப்பைத் தாங்கள் நிறுவியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பிரச்சினையின் பல்வேறு பார்வைகளை முன்வைப்பதன் மூலம் மக்கள் அது பற்றி அலசி ஆராயவும் ஒரு முடிவுக்கு வரவும் 'கருத்து' போன்ற ஊடகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

தங்களுக்கென நூலகங்கள் வைத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மையான மக்கள் வாழும் இந்தச் சமூகத்தில் அத்தரப்பு மக்களுக்கும் எல்லாவிதமான நூல்களும் பத்திரிகைகளும் கிடைத்திட வழிசெய்ய வேண்டுமென்ற கொள்கையோடு நிறுவப்பட்டவை பொது நூலகங்கள். பல நிலைகளிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் இந்த நூலகங்களில் இடம்பெறுவது முக்கியம்.

பல பார்வைகளுக்கு இடமளிக்கும் 'காலச்சுவடு' மாத இதழ், தனது செயல்பாடுகளிலும் வெளிப்படையாகவே இருந்திருக்கிறது. பிரச்சினைகளை ஆராய்ந்து, விமர்சனப்பூர்வமான முடிவுகளுக்கு வந்து அதை வெளிப்படுத்தவும் வாசகர்களுக்குக் 'காலச்சுவடு' இடமளிக்கிறது.

தமிழக அரசைச் சேர்ந்த ஒரு அதிகாரி பொது நூலகங்களுக்குக் 'காலச்சுவடு' வழங்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு நம்புவதாகச் சொல்லும் ஜனநாயகத்தன்மைக்கும் கருத்துரிமைக்கும் எதிராக இந்தச் செயல் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் 'கருத்து' அமைப்பு தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

எஸ். எஸ். ராஜகோபாலன்
கல்வியாளர்

n

03.05.08

அன்பிற்குரிய கனிமொழி மற்றும் கார்த்தி,

'காலச்சுவடு' சந்தாக்களை நிறுத்தச் சொல்லி அரசு நூலகங்களுக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் வாய்மொழி உத்தரவைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும் அங்கு பிறந்த முற்போக்கான அரசியல் இயக்கங்களுக்கும் முரணாக இந்தச் செயல் இருக்கிறது. கண்ணன் சொல்வதுபோல இப்படியரு செயல், இந்த ஆட்சிக்கும் முந்தைய ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற முடிவுக்கே தமிழக மக்களை இட்டுச் செல்லும்.

கடந்த காலங்களில் பல தருணங்களில் சாதிக்கட்டமைப்பைத் தகர்ப்பது, பெண்ணுரிமையைப் போற்றுவது, கலைகளை வளர்ப்பது, மாறுபட்ட திரைப்படங்களைத் தருவது போன்ற பல விஷயங்களில் தமிழகம், நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தைத் தடைசெய்தும் தணிக்கை செய்தும் வெளியிடும் மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களின் சகிப்பின்மையையும் குறுகிய மனப்பான்மையையும் பின்பற்ற வேண்டிய மோசமான நிலையா தமிழகத்தில் இருக்கிறது? அப்படி இருக்காது என்று நம்புகிறேன்.

இந்த ஆகச் சிறந்த பத்திரிகையைத் தமிழக மக்கள் சுதந்திரமாக மீண்டும் படிக்கும் வண்ணம் உங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

ராமச்சந்திர குஹா

n

05.05.08

அன்புக்குரிய கனிமொழி,

நான் மலையாள எழுத்தாளர் சக்கரியா. கடைசியாக நாம் பிராங்க்பர்ட்டில் சந்தித்தோம். தமிழ்நாடு அரசு 'காலச்சுவ'டைத் தடைசெய்திருப்பது குறித்துக் கண்ணன் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறார். திமுக போன்ற முற்போக்கான ஒரு கட்சி நடத்தும் ஒரு ஆட்சியில் 'காலச்சுவடு' போன்ற ஜனநாயகப்பூர்வமான, மதச் சார்பற்ற ஒரு இலக்கிய இதழ் (நூலகங்களில்) தடை செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று நான் சொல்ல விரும்புகிறேன். 'காலச்சுவ'டின் விமர்சகர்கள் கூடத் தற்காலத் தமிழிலக்கியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் 'காலச்சுவ'டின் பங்களிப்பையும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு அது முன்னிற்பதையும் மறுக்கமாட்டார்கள். தவிர, நவீனத்தின், மாற்றத்தின் வலிமையான குரலாகக் 'காலச்சுவடு' இருக்கிறது. இந்த ஜனநாயக விரோத முடிவுக்குக் காரணம் எதாவது அதிகாரியாக இருக்கக்கூடும் என்றும் உங்கள் தந்தைக்கு இது பற்றித் தெரிந்திருக்காது என்றும் நான் நம்புகிறேன். எங்கு தவறு நடந்திருக்கிறது. அதைக் கண்டறிந்து தலையிடுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

அன்புடன்

பால் சக்கரியா

n

03.05.08

அன்பிற்குரிய கனிமொழி மற்றும் கார்த்தி,

உங்களைப் போன்ற இளம் அறிவாளிகள் அரசியலில் முக்கியப் பங்கு பெறுவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் எண்ணற்றோர்களில் நானும் ஒருவன்.

தமிழக அரசு பொது நூலகங்களுக்குக் 'காலச்சுவ'டை வாங்குவதை நிறுத்திவிட்டது என்பதை அறிந்து வருந்தும் 'காலச்சுவ'டின் வாசகர்களில் நானும் ஒருவன். தமிழில் மாற்று இதழ்களின் முன்னோடியாகத் திகழும் 'காலச் சுவடு' மீண்டும் பொது மக்களுக்குப் பொது நூலகங்கள் வழியாகப் போய்ச் சேர வேண்டும். உங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினைகள் இருக்கும் என்பதை அறிவேன், இருப்பினும் 'கருத்து' மூலம் இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நேரத்துக்கு நன்றி.

அன்புடன்

மு. ராமநாதன்
ஹாங்காங்

n

06.05.08

அன்பிற்குரிய கருத்து அமைப்பைச் சேர்ந்த கனிமொழி மற்றும் கார்த்தி,

'காலச்சுவடு' சந்தாக்களை நிறுத்தும் பொது நூலக இயக்குநரின் தன்னிச்சையான முடிவு குறித்த என் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ளவே இதை நான் எழுதுகிறேன். 1,500 நூலகங்களுக்குக் 'காலச்சுவடு' வழங்கப்படாதது இழப்பு என்பதோடு, கலாச்சாரரீதியாகத் தங்களை வளப்படுத்திக்கொள்ளப் பொது நூலகங்களை மட்டுமே நம்பியிருக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கு இது பெரும் இழப்பு. தமிழில் சிறந்த பத்திரிகைகள் அருகி வரும் இந்தக் காலகட்டத்தில் 'காலச்சுவடு' மிகச் சிறந்த பத்திரிகையாகச் செயல்பட்டுவருகிறது. தமிழர் உணவு, கணினித்தமிழ், குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை, மொழிபெயர்ப்பு, அரசியல் மற்றும் காந்தியைப் பற்றிய மறுபார்வை உள்ளிட்ட 'காலச்சுவடு' சிறப்பிதழ்கள் எந்தச் சமரசமும் இல்லாமல் சிறப்பான கட்டுரைகளைக் கொண்டிருந்தன. எந்தவொரு சர்வதேசப் பத்திரிகைக்கும் சற்றும் குறைவில்லாத தரத்தில் கட்டுரைகள் இருந்தன.

ஆழ்ந்த ஜனநாயகக் கொள்கைகள் கொண்ட வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாக இந்தியா பார்க்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் - மாறுபட்ட கருத்துகளை விவாதிப்பதற்கான உரிமை மற்றும் பலதரப்பட்ட சிந்தனைகள். கேள்விகள் எழுப்புவது, சந்தேகம் கொள்வது, விசாரணை செய்வது எல்லாமே ஜனநாயகத்தின் அங்கங்கள். இது போன்ற கேள்விகளால் சஞ்சலம் கொள்பவர்கள் செய்ய வேண்டிய நாகரிகமான விஷயம் பதில்கள் சொல்வதும் நேர்மையாக எதிர்கொள்வதும்தானே தவிர, பத்திரிகையைத் தணிக்கைசெய்வது அல்ல. இந்தப் பத்திரிகையைத் தணிக்கைசெய்வது எது மாதிரியான இந்தியாவை முன்னிறுத்துகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது - ஒரு திறந்த நாட்டையா அல்லது அடக்கியாளப்படும் நாட்டையா? 'காலச்சுவ'டில் வெளி வந்த சில கட்டுரைகள் ஆளும்கட்சிக்கு உவப்பானதாக இல்லை என்பது பத்திரிகையைத் தணிக்கை செய்வதற்கான போதிய காரணமாக இல்லை. நாகரிகச் சமூகத்தின் அடையாளமும் அது இல்லை. இந்த முடிவை மாற்றுவது இந்தியாவின் ஜனநாயகத் தன்மையின் மீதுள்ள நம்பிக்கைக்கு முக்கியக் காரணமாக இருக்கும். ஒருவர் தணிக்கை செய்யத் தொடங்கும்போது அது எங்கு போய் முடியும் என்பதுதான் பிரச்சினை. 19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலச் சமூகச் சீர்திருத்தவாதியான ஜெரமி பெந்தமின் வார்த்தைகள்தான் எனக்கு நினைவுக்குவருகின்றன. "தணிக்கை செய்யப்படுவதன் காரணமாக எழும் இன்னல்களை அளப்பது முடியாத காரியம், ஏனென்றால் அது எங்கு முடியும் என்று சொல்வது முடியாத காரியம்."

கருத்துச் சுதந்திரம் என்ற கொள்கைக்காக முன்னிற்கும் 'கருத்து' அமைப்பைச் சார்ந்த தாங்கள் இந்தத் தணிக்கை முடிவை மாற்ற உங்களால் இயன்றதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

பேராசிரியர் ஆர். எஸ். சுகிர்தராஜா
வரலாற்றுக் கல்வித் துறை
பிர்மிங்ஹம் பல்கலைக்கழகம்
யுனைடட் கிங்டம்

n

01.05.08

எல்லோருக்கும் வணக்கம்.

'காலச்சுவடு' பொது நூலகங்களில் தடைசெய்யப்பட்ட செய்தி என்னை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கியது. தமிழ் அறிவுலகச் சூழலில் 'காலச்சுவடு' முன்னோடி என்பதோடு அந்தத் தளத்தில் அதன் பங்கும் அளப்பரியது. மற்ற மொழிகளிலுள்ள மாற்று இதழ்களுக்கு நிகராகப் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளையும் அறிவுலகின் பல்வேறு தன்மைகளையும் தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டுவரும் 'காலச்சுவடு' நமக்குப் பெருமை சேர்க்கக்கூடியது.

பல பொதுத்தளங்களில், குறிப்பாகச் சமூகம் மற்றும் கலாச்சாரத் தளங்களில் அறிவுலகின் கவலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இதழ் 'காலச்சுவடு'. இந்த இதழில் வெளியாகும் கருத்துகளை எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் ஒருவர் நுண்ணுணர்வுடன் செயல்பட வேண்டும்; கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கே முக்கியமான விஷயம். அதிகாரத்தில் உள்ளவர்களிடம் பேசி 'காலச்சுவடு' தடையை மறுபரிசீலனைசெய்ய, சம்பந்தப்பட்டவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உள்பட எல்லா முற்போக்கு இயக்கங்களும் கருத்து வேறுபாடுகளால் உருவானவை. தமிழில் அறிவியக்கம் மேலும் வளர்ச்சியடைவதற்கு, கருத்துச் சுதந்திரம் அதிகாரத்தில் இருப்பவர்களால், குறிப்பாகத் தமிழக அரசால், மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று நம்புகிறேன். தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாட்டின் அறிவுலக வளர்ச்சியை மனத்தில்கொண்டு 'காலச்சுவ'டை மீண்டும் பொது நூலகங்களில் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றியுடன்

கே. நாச்சிமுத்து
தமிழ்ப் பேராசிரியர்
இந்திய மொழிகளின் மையம்
மொழி, இலக்கிய மற்றும் கலாச்சாரக் கல்வித்துறை
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
புது தில்லி

n

09.05.08

அன்புள்ள கண்ணன்,

'கருத்து' அமைப்பாளர்களுக்கு உங்களது கடிதம் கண்டு வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

தமிழ் அறிவுலகில் மதிக்கத்தக்க பத்திரிகையாகக் 'காலச்சுவடு' தன்னை நிறுவிக்கொண்டுள்ளது. சமீபகாலங்களில் அது தீவிரமான இலக்கியத்துக்கு அளித்துவரும் பங்களிப்பு யாருக்கும் குறைந்ததல்ல. தமிழ்நாட்டில் ஒரு அறிவுப்பூர்வமான சூழலை உருவாக்குவதற்கும் தொடரச் செய்வதற்கும் 'காலச்சுவடு' போன்ற இதழ்கள் அவசியம். தீவிரமான பல வாசகர்களை உருவாக்கியுள்ளது 'காலச்சுவடு'. அவர்களில் பெரும்பான்மையானோர் 'காலச்சுவ'டை நூலகங்கள் வாயிலாகவே பெற்றுவந்தார்கள். சகிப்புத்தன்மையற்ற, குறுகிய பார்வை கொண்ட ஒரு அதிகார மையத்தின் காரணமாக அவர்களுக்குக் 'காலச்சுவடு' படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது பரிதாபத்துக்குரியது.

கருத்துச் சுதந்திரத்தில் எந்தச் சமரசமும் மேற்கொள்ளாமல் நேர்மையையும் நாகரிகச் செயல்பாடுகளையும் முன்னிறுத்திச் செயல்பட்டுவந்தது 'காலச்சுவடு'. ஆட்சிகளின் சகிப்பற்றதன்மைக்குக் கருத்துச் சுதந்திரத்திற்காகப் பாடுபடுபவர்கள் பலியாவது ஜனநாயக நாடுகளின் வரலாறுகளில் அடிக்கடி நடந்துள்ளது.

பொது நிதியைக் கையாளும்போது அரசு குறுகிய விருப்பு வெறுப்புகளால் வழிநடத்தப்படக் கூடாது. விரிவான பார்வைகள்தான் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும். துடிப்புமிக்க ஒரு சமூகத்தின் நரம்பாகப் பொது நூலகங்கள் விளங்குகின்றன. அங்குதான் பொறுப்புமிக்க, முற்போக்கான நடவடிக்கைகளுக்கான விதைகள் விதைக்கப்படுகின்றன. 'காலச்சுவடு' இல்லாத நமது பொது நூலகங்கள் அந்தளவுக்கு ஏழ்மைப்பட்டிருக்கும்.

தமிழ் மொழியின் நலன்களைப் பேணுவதிலும் இது சிறந்த வழி அல்ல.

தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனைசெய்து 'காலச்சுவடு' பொது நூலகங்களில் கிடைக்க வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.

வசந்தி தேவி
முன்னாள் துணைவேந்தர்
நகல்: கார்த்தி சிதம்பரம், கனிமொழி கருணாநிதி

n

11.03.08

அன்பின் கனிமொழி மற்றும் கார்த்தி,

வணக்கம்.

'காலச்சுவடு' தமிழக நூல்நிலையங்களில் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

எந்தப் பத்திரிகையையும் பொருளாதாரரீதியில் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று.

பொருளாதாரப் பாதிப்பினையும் தாண்டி, தமிழகத்தின் பெயர் தெரியாத கிராமங்களில் வசிக்கும் வாசகனொருவனை ஒரு பத்திரிகை - இலக்கியப் பத்திரிகை இழப்பது என்பது அந்தப் பத்திரிகைக்கான இழப்பு மட்டுமில்லை என்பதை தாங்கள் உணர்ந்தே இருக்கக் கூடும்.

தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

வா. மணிகண்டன்

n

இந்த வாரம் - கலாரசிகன்

'காலச்சுவடு' பதிப்பாளர் கண்ணனைச் சந்திக்க நேர்ந்தது. 'கணையாழி', 'தீபம்', 'கலைமகள்', 'அமுதசுரபி' வழியில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அற்புதமான பங்களிப்பைச் செய்துவரும் இலக்கிய இதழ் 'காலச்சுவடு' என்பதில் சந்தேகம் யாருக்கும் இருக்க முடியாது. தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் அழுத்தமாகத் தனது கால்சுவடுகளைப் பதிப்பித்திருக்கும் இந்த இதழுக்கு ஏற்படும் பின்னடைவு, தமிழுக்கு ஏற்படும் பின்னடைவாகத்தான் இருக்கும்.

'காலச்சுவடு', 'தமிழினி', 'உயிர்மை', 'கதைசொல்லி' போன்ற இலக்கிய இதழ்கள் அரசின் ஆதரவை விளம்பரங்கள் மூலம் பெறாவிட்டாலும், நூலகச் சந்தாக்களின் மூலமாவது நிச்சயம் ஆதரிக்கப்பட வேண்டும். பல இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்கள் இது போன்ற இலக்கிய இதழ்களை நூலகங்களில் போட்டிபோட்டுப் படிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை. கருத்து வேறுபாடுகளுக்காக ஜனரஞ்சகப் பத்திரிகைகளை ஆளுங்கட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்பதால் நூலகங்களில் வாங்காமல் புறக்கணிக்கும் போக்கு கடந்த பல ஆண்டுகளாகவே தொடங்கிவிட்டது. அதுவே ஜனநாயக விரோதம். இப்போது இலக்கிய இதழ்களும் அதே அளவுகோல் மூலம் எடைபோடப்படுகின்றன என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

செம்மொழி மையத்துக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாபெரும் குற்றத்திற்காகக் 'காலச்சுவடு' தண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டபோது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும்விடச் சிரிப்புத்தான் வந்தது. சங்கம் வைத்து இருவேறு கருத்துகளை விவாதித்த மரபுக்குரிய தமிழை, மாற்றுக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் செம்மொழி மையம் வைத்து வளர்க்க நினைக்கிறார்களே, இது என்ன சோதனை?

நூலகங்களுக்குப் புத்தகங்களைத் தேர்வுசெய்யும் முறை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் நமது இலக்கியவாதிகள் தங்களது நெற்றியில் கட்சி முத்திரை குத்திக்கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். விஷயத்துக்கு வருவோம். 'காலச்சுவடு' உள்ளிட்ட இலக்கிய இதழ்கள் அனைத்தும் நூலகங்களுக்கு வாங்கப்பட வேண்டும். அதற்கு என்ன வழி?

தினமணி
25.5.2008

n

1.5.2008

பெருமதிப்பிற்குரிய அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு,

வணக்கம்.

ஏப்ரல் மாதம் 'காலச்சுவடு' 100வது இதழை எட்டியது. இந்தச் சாதனைக்குத் தமிழக அரசின் பரிசாகக் 'காலச்சுவடு' இதழுக்கு நூலக ஆணை தவிர்க்கப்பட்டுள்ள செய்தியும் கிடைக்கப்பெற்றோம்.

கடந்த இரண்டாண்டுகளாகக் 'காலச்சுவடு' மாத இதழுக்கு நூலகத் துறையின் ஆதரவை வழங்கியதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாற்று இதழ்களை நூலகங்களில் வாங்கும் உங்கள் முடிவைத் தமிழ் மொழிமீதும் பண்பாட்டின் மீதும் இந்த அரசுக்கும் உங்களுக்கும் இருக்கும் பற்றுதலின் சான்றாகவே எடுத்துக்கொண்டோம்.

இப்போது 'காலச்சுவடு' மாத இதழைத் தமிழக அரசு நூலகங்களுக்கு வாங்குவது பெருமளவிற்குத் தவிர்க்கப்பட்டுள்ளதற்கான காரணம் எதுவும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. தமிழக நூலக ஆணைக் குழுவின் முன்னர் 'காலச்சுவடு' பற்றிய புகார் எதுவும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை.

'காலச்சுவடு' மக்கள் வரிப்பணத்தில் நூலகங்களுக்கு வாங்கப்பட்டது. அந்த வரியைச் செலுத்திய தமிழ்ச் சமூகத்திற்கு நேர்மையாக நடந்துகொள்வதே ஒரு தீவிர இதழின் கடமை. அந்தக் கடமை உணர்வோடு தமிழக அரசின் எல்லா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் கவனித்து, மதிப்பிட்டிருக்கிறோம். பாராட்டியிருக்கிறோம். ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அடையாளம் கண்டு விமர்சிக்கவும் தயங்கியதில்லை. இந்த நேர்மைதான் இன்று 'காலச்சுவடு' அரசு ஒடுக்குமுறைக்கு உள்ளாவதன் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசு நூலகங்களில் வாங்கப்படும் இதழ், அரசுக்கு விமர்சனமற்ற ஆதரவை வழங்க வேண்டும் என்பது தான் சட்டமா? ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே ஒரு ஜனநாயக அரசின் கடமை.

'காலச்சுவடு' இதழுக்கு நூலக ஆணையைத் தொடர்வதோடு, எங்களின் சிறந்த பண்பாட்டுப் பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாக வாங்கப்படும் இதழ்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மிகுந்த மரியாதையுடன்

கண்ணன்
ஆசிரியர் - பதிப்பாளர்
'காலச்சுவடு'

n

11.06.08

நூலக இயக்குநர்
பொது நூலகத் துறை
சென்னை.

அன்புடையீர்,

பொருள் : 'காலச்சுவடு' மாத இதழ் நூலக ஆணை.

வணக்கம்.

'காலச்சுவடு' மாத இதழை 2006ஆம் ஆண்டு முதல் பொது நூலகத் துறை 1500க்கு மேற்பட்ட பிரதிகள் வாங்கிவந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிகப் பெரும்பான்மையான மாவட்ட நூலகர்கள் தங்கள் ஆணையைப் புதுப்பிக்கவில்லை. தங்களுடைய வாய்மொழி உத்தரவு காரணமாகவே 'காலச்சுவடு' இப்போது வாங்கப்படவில்லை என அறிகிறோம். அரசை விமர்சித்துக் 'காலச்சுவ'டில் வெளிவந்த கருத்துகளே இன்று பொது நூலகத் துறை நூலகங்களில் 'காலச்சுவடு' உங்களால் தடைசெய்யப்பட்டிருப்பதன் காரணம் என்று நம்புகிறோம்.

'காலச்சுவடு' 1988ஆம் ஆண்டு முதல் தமிழுக்குப் பங்களிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. வணிக நோக்கமற்றுச் சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட்டு வரும் 'காலச்சுவடு' இதழுக்கு நூலக ஆணை வழங்கப்பட வேண்டியது மிக அவசியம். சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் ஒரு இதழ் அரசை விமர்சிப்பது தவிர்க்க முடியாதது. அரசை விமர்சிக்கும் இதழை நூலகங்களில் வாங்க மறுப்பதற்கு உரிய சட்டம் எதுவும் இல்லை. 'காலச்சுவடு' இதழை நூலகங்களில் வாங்குவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைத் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். உரிய காரணங்களை அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவுசெய்வது சட்ட பூர்வமானது அல்ல என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

2008 - 09 ஆண்டிற்குக் 'காலச்சுவடு' இதழுக்குரிய நூலக ஆணையைப் புதுப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களன்புள்ள

கண்ணன்
பதிப்பாளர் - ஆசிரியர்
'காலச்சுவடு'

n

அரசு நூலகங்களில் காலச்சுவடு இதழுக்குத் தடை கூடாது!
கார்த்தி ப. சிதம்பரம் கோரிக்கை

'காலச்சுவடு' இதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான திரு. ஷி.ஸி. சுந்தரம் (கண்ணன்) அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

அரசு நூலகங்களில் 'காலச்சுவடு' இதழ் வாங்குவது வாய்மொழி உத்தரவின் மூலம் தடைசெய்யப்பட்டிருப்பதாகவும், மாநில அரசை விமர்சித்த காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இச்செயல் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் அவர் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். எனவே கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் நூலகங்களில் அவ்விதழ் வாங்குவதைத் தடைசெய்யப்பட்டு இருப்பதை நீக்கக்கோரி என்னை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

கண்ணன் அவர்களின் மின்னஞ்சலைத் தொடர்ந்து எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், எழுத்தாளர் இராமச்சந்திர குஹா, மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா, எழுத்தாளர் மலர்மன்னன், ஹாங்ஹாங் எழுத்தாளர் மு. ராமநாதன், முன்னாள் துணைவேந்தர் திருமதி வசந்திதேவி, கவிஞர் வா. மணிகண்டன். கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஆர். எஸ். சுகிர்த ராஜா (Birmingham University) ஆகியோருடன் மற்றும் பலரும் 'காலச்சுவ'டின் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக, அரசு நூலகங்களில் 'காலச்சுவடு' தொடர்ந்து வாங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து மின்னஞ்சல்களை எனக்கு அனுப்பியிருந்தனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நானும், கவிஞர் கனிமொழி அவர்களும் இணைந்து 'கருத்து' என்கிற அமைப்பை உருவாக்கித் தொடர்ந்து அதன் வாயிலாகக் கூட்டங்கள் நடத்திவருவது அனைவரும் அறிந்ததே. 'காலச்சுவடு' இதழில் வெளியிட்ட கருத்துகளில் முரண்பாடுகள் இருக்குமேயானால் அதனை வெளிப்படையாக அறிவித்துச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசு நூலகங்களில் 'காலச்சுவடு' இதழ் வாங்குவதைத் தடைசெய்யக் கூடாது.

எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களின் எண்ணங்களையட்டி 'காலச்சுவடு' இதழ் தொடர்ந்து அரசு நூலகங்களில் வாங்கப்பட வேண்டும் என்று தமிழக நூலக இயக்குநர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கார்த்தி ப. சிதம்பரம்
நன்றி: மாலை முரசு,
(சென்னைப் பதிப்பு) 22.05.2008

n

பொன்னீலன் ரவீந்திரபாரதி ச. தமிழ்ச்செல்வன்
தலைவர் பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர்
கலை இலக்கியப் பெருமன்றம் கலை இலக்கியப் பெருமன்றம் த. மு. எ. ச

வணக்கம்.

'காலச்சுவடு' மாத இதழைத் தமிழக அரசு இந்த வருடம் ஏப்ரல் முதல் பொதுத் துறை நூலகங்களில் வாங்குவதை வாய்மொழியாகத் தடைசெய்துள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் தமிழக நூலகங்களில் சிறிய அளவில் வாங்கப்பட்டு வந்த 'காலச்சுவடு', ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குவந்த பிறகு மாற்று இதழ்களையும் பதிப்பகங்களையும் ஊக்கப்படுத்தும் உயரிய நோக்கம் கொண்ட பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் முயற்சியில் கணிசமான பிரதிகள் வாங்கப்பட்டுவந்தது. இவ்வாட்சியின் சாதனைகளைத் தொடர்ந்து 'காலச்சுவடு' தலையங்கம் எழுதிக் கவனப்படுத்திவந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதே நேரம் மதுரை 'தினகரன்' ஊழியர் படுகொலை போன்றவற்றைக் கண்டிக்கவும் தயங்கியதில்லை. அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு ஆதரவாக, கனிமொழி எம். பி. பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. 2008 மார்ச் மாதம் 'காலச்சுவடு' தலையங்கம் தமிழகத்தில் தமிழ் சார்ந்த உயர்கல்விச் சீரழிவைச் சுட்டிக்காட்டி, செம்மொழி மையத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையான அமைப்பாக நிறுவக் கோரியது. இத்தகைய செயல்பாடுகளே 'காலச்சுவடு' நூலகங்களில் தடைசெய்யப்பட்டிருப்பதற்கான காரணம் எனத் தெரிகிறது.

சமூகவியல், இலக்கியம், அரசியல் போன்ற பல தளங்களில் தீவிரமான எழுத்துக்களை வெளியிட்டு வரும் 'காலச்சுவடு', அரசு நூலகங்களில் வாங்கப்படுவதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம். கருத்து வேறுபாடுகளைத் தாண்டிக் 'காலச்சுவ'டின் பங்களிப்பை அங்கீகரிக்கும் பரந்துபட்ட பார்வை உங்களிடம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

விளம்பரம், நூலகக் கொள்முதல் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. காரணங்களை அறிவிக்காமல் யதேச்சாதி காரமாக எடுக்கப்படும் அரசு முடிவுகள் சட்டத்திற்கு விரோதமானவை.

எழுத்தாளர்களின், ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த அரசு நடவடிக்கையைக் கண்டித்துக் 'காலச்சுவடு'க்கு ஆதரவாகக் கலை இலக்கியப் பெருமன்றம்/ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கண்ணன்
ஆசிரியர் - பதிப்பாளர்
காலச்சுவடு

n

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற அறிக்கை

02.07.08

மாண்புமிகு அமைச்சர் தென்னரசு அவர்கள்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு அரசு கோட்டை
சென்னை - 600 005.

மாண்புமிகு தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் அமைச்சகத்தின் பொறுப்பில் இயங்கும் நூலக ஆணைக்குழு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 'காலச்சுவடு' மாத இதழ் வாங்குவதை வாய் மொழியாகத் தடைசெய்திருக்கிறது என அறிகிறோம்.

பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் ஆதாரத் தூண்களில் ஒன்று என்பதும் எழுத்துச் சுதந்திரம் ஜனநாயக அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதும் மறக்கக் கூடாத உண்மைகள். 'காலச்சுவடு' இதழ் சமீப காலங்களில் நம் நாட்டில் நடந்துவரும் சம்ப வங்களை அவர்கள் கோணத்தில் விமர்சித்திருப்பதைச் சகிக்க முடியாமல்தான் பள்ளிக் கல்வித் துறை நூலக ஆணைக்குழுவுக்கு வாய்மொழியாக இப்படி அறிவுறுத்தி, நடைமுறைப்படுத்தியிருக்கிறது எனப் பரவலாகப் பேசப்படுகிறது.

தமிழக அரசின் முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஒரு கவிஞர், எழுத்தாளர், நல்ல நூல்களையும் இதழ்களையும் பெரிதும் நேசிக்கின்றவர். நூலகத் துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் தொடர்ந்து முயல்கின்றவர். இப்படிப்பட்டவரின் ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறை அவருக்கு நேர்மாறாக இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கருதுகின்றது. இம்மாதிரியான நடை முறைகளை உடனே கைவிட்டு, 'காலச்சுவடு' மற்றும் நல்லிலக்கிய இதழ்களை வாங்கிட உரியவர்களுக்கு வழிகாட்டிட வேண்டுமெனத் தங்களைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்ளுகிறது.

அன்புடன் அன்புடன்

பொன்னீலன் ரவீந்திர பாரதி
தலைவர் பொதுச்செயலாளர்

உள்ளடக்கம்