Google   www kalachuvadu.com

சிறப்புப்பகுதி
குஜராத்: களங்கப்பட்டு நிற்கும் நடுத்தர வர்க்கம்
அஷிஸ் நந்தி
தமிழாக்கம்: தி. அ. ஸ்ரீனிவாஸன்

குஜராத் தேர்தல் முடிவுகள் பற்றிய பரபரப்பு இப்போது ஓய்ந்துவிட்டது; இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி தோல்வியடைந்திருந்தாலும், அதனால் குஜராத்தின் அரசியல் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்காது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மோடி தனது பணியை ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். அந்த மாநிலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பெரும்பகுதி, மதவாதத்திலும் குறுங்குழு வாதத்திலும் தொடர்ந்து சிக்குண்டுதான் இருந்திருக்கும். விஹெச்பியும் பஜ்ரங்தள்ளும் இம்மாநிலத்தின் அரசியல் போக்கைத் தொடர்ந்து தீர்மானித்துக்கொண்டுதான் இருந்திருக்கும். நாற்பது ஆண்டுகாலமாக விடாமல் செய்யப்பட்ட பிரச்சாரத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது, தேர்தல் களத்திலும் சமூக அளவிலும்.

ஒருகாலத்தில் மொழியாலும் பண்பாட்டாலும் வணிகத்தாலும் ஒன்றுபட்டிருந்த இம்மாநிலத்தின் இந்துக்களும் முஸ்லிம்களும் இன்று சாவார்கர், ஜின்னா இருவரின் கோரிக்கைகளைச் செயல்படுத்துபவர்களாகி விட்டார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இன்று தங்களை இருவேறான தேசத்தினராகப் பார்க்கின்றனர். இந்தப் போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்துவரும் குறைந்த எண்ணிக்கையிலான குஜராத்தி சமூக, அரசியல் போராளிகள் கொள்கைரீதியான எதிர்ப்பாளர்களாகப் பார்க்கப்படாமல் துரோகிகளாகவும் குழப்பம் விளைவிப் பவர்களாகவும் கருதப்படுவதால், கண்காணிப்பு, தடை, நேரடியான வன்முறை இவற்றின் மூலமாக அவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. இதன் விளைவாகக் குஜராத் நகரங்கள் - குறிப்பாக அதன் கல்வி நிறுவனங்கள் - கலாச்சாரப் பாலைவனங்களாக மாறிக்கொண்டிருக் கின்றன. குஜராத் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கனவே புறமொதுக்கிவிட்டது. அரசு இயந்திரமும் இந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுவிட்டது,

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசில் இன்று வலு வான தலைவர்கள் இல்லை; குஜராத்தில் இன்று நிலவி வரும் அரசியல் கலாச்சாரத்துக்கு அது எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாகவும் இல்லை. ஜினாபய் தார்ஜி போன்ற அடிமட்ட மக்கள் தலைவர்கள் காங்கிரசில் இருந்தது ஒரு காலம். இன்றைய காங்கிரஸாரில் பெரும் பகுதியினர் இந்துத் தேசியவாதிகள்தான். 1984இல் காங்கிரஸ் நடந்து கொண்டவிதத்தால் 2002இல் குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்காக மோடியை எதிர்கொள்ளும் திராணி யற்றுப்போய்விட்டது அதன் தேசியத் தலைமை.

இடதுசாரிகள் குஜராத்தில் இல்லை என்றே சொல்லி விடலாம். அறிவுஜீவிகள், தொழிற்சங்கவாதிகள் மத்தி யில் தென்பட்ட இடதுசாரித்தனமும் இன்று மூட்டமான நினைவுகளாகிவிட்டது. இந்த மாநிலம் காந்தியையும் கைகழுவிவிட்டது. காந்திய அரசியல் குஜராத்தி நடுத்தர வர்க்கத்துக்கு ஏளனப் பொருளாகிவிட்டது. தீரம் குறையாத ஒரு சிலரைத் தவிர காந்தியவாதிகள் பலரும் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கி மனசாட்சியை நிம்மதி அடையச் செய்துவிட்டார்கள். காந்தியும் ஒரு முனிவராக இந்துத் தேசியவாதியின் அந்தஸ்து வழங்கப்பட்டுப் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுவிட்டார். காந்தி தொகுப்பு நூல்களின் குஜராத்தி மொழிபெயர்ப்புகள்கூட இந்துத் தேசியவாதிகளின் கொள்கைகளுக்குப் பொருந்திப் போகும்விதத்தில் தந்திரமாகத் திரித்து மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

குஜராத்தி முஸ்லிம்களும் இந்தப் புதிய சூழலுக்குத் தங்களை "இணக்கப்படுத்திக்" கொண்டுவருகின்றனர். நீதியும் போதிய நிவாரணமும் மறுக்கப்பட்டுத் தங்கள் சொந்த மாநிலத்திலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்ட அவர்கள் , தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் இவற்றைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிவாரணம் அளிக்க அரசாங்கம் மறுத்துவிட்டதால் அந்த இடத்தை அடிப்படைவாதச் சார்புகொண்ட தன்னார்வ அமைப்பு கள் பூர்த்திசெய்துள்ளன. அவை உதவிவருகின்றன என்பது உண்மைதான்; ஆனால், அவை குஜராத்தி மொழியை விடுத்து உருதுவைக் கைக்கொள்ளவும் பர்தா அணியும்படியும் குழந்தைகளை மதரசாக்களுக்கு அனுப்பும்படியும் வற்புறுத்துகின்றன. வாலி குஜராத்தி யின் சமாதியைக் களங்கப்படுத்தியது போன்ற சம்பவங் களால் இந்தியாவின் கலாச்சாரச் செழுமைமிக்க, பன்முகத்தன்மை வாய்ந்த, உள்ளூர் அம்சங்களை உள்வாங்கிக்கொண்ட இஸ்லாமியப் பண்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. சீக்கியத் தீவிரவாதம் தலைத்தூக்குவதற்கு ராஜீவ்காந்தியும் அவரது கூட்டாளிகளும் ஆற்றிய பெரும் பங்கை இன்றைய தலைமுறையினர் நினைத்துப்பார்ப்பதைப் போல, இனிவரும் தலைமுறையினர் இந்தியாவில் தீவிரவாத இஸ்லாமின் வளர்ச்சிக்கு சங்க் பரிவார் ஆற்றிய பங்கை நன்றியுடன் நினைவுகூருவார்கள்.

சங்க் பரிவாருக்கு எதிராகப் போராடும் பலரது மதச்சார்ப்பின்மைக் கொள்கையும் பெரிய அளவுக்கு உதவுவதாக இல்லை. மதச்சார்பற்ற கொள்கை கொண்ட வழக்கறிஞர்கள், சமூகப் போராளிகள் இவர்களின் உதவியைப் பெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலரும்கூட மதச்சார்பின்மையை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். மதச்சார்பின்மை பற்றிய புரிதலோ அதன்மீது மதிப்போ அவர்களுக்கு இல்லை. பாதிக்கப்பட்டோரில் பலரும் தங்களது மதத்திலேயே ஆறுதலைத் தேடுகின்றனர். தாக்கப்படும்போதெல்லாம் மத நம்பிக்கையை மேலும் இறுகப் பற்றிக்கொள்கின்றனர். உண்மையில், வெற்று மதச்சார்ப்பின்மைச் சித்தாந் தங்கள் ஒரே நேரத்தில் காந்தியத்தின் முதுகெலும்பை முறித்ததோடு, ஏழை எளிய மக்களின் துன்பத்துக்காகக் குரல்கொடுத்து அம்மக்களின் வாழ்க்கைமுறை சார்ந்த பொருத்தமான தீர்வுகளைத் தந்த அலி ஷரியாதி, டெஸ்மண்ட் டுட்டு, தலாய் லாமா போன்ற ஆளுமைகள் உருவாவதையும் தடுத்துவிட்டன.

இறுதியாகக் குஜராத்தின் அதிவேக வளர்ச்சி அங்கு நாகரிகம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதை மறைத்துவிட்டது. அதிவேக வளர்ச்சி எப்போதுமே அதிகாரக்குவிப்பைக் கொண்டுவரும் என்ற உண்மை நம் காலத்தில் மறைக்கப்பட்டுவரும் ரகசியங்களில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஆசியாவும் வளர்ச்சி சார்ந்த கொடுங்கோன்மை, உரிமைத்தடைகள், கண்காணிப்பு, சிந்தனைக் கட்டுப்பாடு போன்றவற்றோடு உறவாடிவந்துள்ளது. கிழக்காசியப்புலிகள் அதிகமும் மனிதமாமிசம் கேட்பவை. குஜராத்தும் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துகொண்டுவிட்டது. இந்த மாநிலத்தின் அறம்சாராப் போக்கு, சுதந்திரக் கட்டுப்பாடு, சமூக மதிப்பீடுகளின் வீழ்ச்சி போன்றவற்றுக்கு மாற்றாக இம்மாநிலத்தின் வளர்ச்சி முன்னிறுத்தப்படுகிறது.

மோடிக்குப் பின்னரும் வாழ்க்கை இருக்குமா? 1969இல் தொடங்கி 2002இல் முடிவுற்ற 35 ஆண்டுகாலக் கலவரங்களைத் தாண்டி விஷயங்களைப் பார்ப்பது சாத்தியமா? "இல்லை" என்பதே இன்றைய சூழலில் பதிலாக இருக்கும். என்றேனும் ஒரு தலைமுறை தோன்ற லாம். சுயநலம் சார்ந்தோ அல்லது பகைமை வாழ்க்கை யில் வெறுத்துப்போயோ அந்தத் தலைமுறை பரஸ்பரம் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளும். அதுவரையிலும் நாம் பொறுமையுடன், ஆனால் வாளாவிராமல், மதிப்பீடு களைக் கைவிட்டுவிடாமல், காத்திருக்க வேண்டியிருக் கும். ஏதோ ஒரு கட்டத்தில் ஓரளவேனும் மனமாறுதல் ஏற்பட்டு, தவறுகளுக்காகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற தேடல் தோன்றும், இந்த மாநிலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கலாச்சாரத்தைக் குஜராத்திப் பாரம்பரியம் இறுதியாக வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

குஜராத்தை அதன் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திட மிருந்து மீட்பது அத்தனை எளிதல்ல. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் வங்காள பாபுக்களும் மகாராஷ்டிர பிராமணர்களும் காஷ்மீரி முஸ்லிம்களும் வன்முறையைத் தீர்வாகத் தேடிச்சென்றதுபோல, இந்த நடுத்தர வர்க்கமும் மூர்க்கமான மத தேசியவாதத்தில் ஒரு புதிய சுயமதிப்பையும் போர்க்குணம் கொண்ட இனம் என்ற புதியதோர் அரூபமான அடையாளத்தையும் கண்டுகொண்டுள்ளது. குஜராத்தில் இந்த வர்க்கம் இரத்த ருசி கண்டுவிட்டது; அது நேரடியாகக் கொலையில் இறங்க வேண்டியதில்லை; கொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதற்கான நிதியுதவியை அளித்து, மாட்டிக்கொள்ளாமல் செயல்களை ஒருங்கிணைத்தால்போதும். கொலைகளை நிறைவேற்றும் பணியைச் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ளவர்கள் - அதிகமும் பழங்குடியினரும் தலித்துகளும் - செய்வார்கள். சமீப காலமாக வெறுப்பை உற்பத்திசெய்யும் தொழிற்கூடங்களாக மாறியுள்ள ஊடகங்களும் கல்வியமைப்புகளும் இந்த நடுத்தர வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த வர்க்கத்துக்கு வெளிநாட்டில் வாழும் பெரும்பான்மையான இந்தியர்களின் ஆதரவும் கிடைத்துவருகிறது. இந்தியாவிலிருந்து மிகப் பாதுகாப்பான தொலைவில், அதிதேசியவாதிகளாகவும் ரத்ததாகம் கொண்டவர்களாகவும் உள்ள இவர்கள் இங்கு நடைபெறுபவற்றிற்குப் பொறுப்பேற்காமல் வாழும் வசதியைப் பெற்றிருக்கின்றனர்.

நன்றி: Ashis Nandy, Blame the Middle Class,
Times of India, 08.01.08.

உள்ளடக்கம்