Google   www kalachuvadu.com

சிறப்புப்பகுதி
கருத்துச் சுதந்திரமும் கலைஞனின் சுதந்திரமும்: ஆறுதல் அளிக்கும் இரண்டு தீர்ப்புகள்
ஜி. குப்புசாமி

இரண்டு மாத இடைவெளியில், மே 8, ஜூலை 1 ஆகிய தேதிகளில் உண்மையான ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் மனித சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் இப்போதும் விடாப்பிடியாக நம்பிக்கைகொண்டிருக்கும் சொற்ப நபர்களுக்குப் பெரும் நம்பிக்கையும் ஆறுதலும் ஊட்டும்விதமாக இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. மிகை தேசிய வெறி, ஒரே கலாச்சார, ஒரே மத அரசியல் சக்திகள் தற்போது ஊக்கம் பெற்று நாட்டின் சகலத் துறைகளிலும் ஆக்கிரமித்துவரும் சூழலிலும்கூடச் சில நீதிமன்றங்களும் சில நீதிபதிகளும் நிதானமும் அறிவமைதியும் கொண்டு நடுநிலைமையிலான தீர்ப்புகள் தருவது நம்மிடம் மிச்சமிருக்கும் அதிர்ஷ்டங்களில் ஒன்று.

1

புகழ்பெற்ற அரசியல் மனோதத்துவ விமரிசகர் அஷிஸ் நந்தியின்மீது "மதவெறியை"த் தூண்டும் விதமாக எழுதியதற்காகக் குஜராத் காவல் துறையினரால் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. அவர் புரிந்த குற்றம் : குஜராத்தின் மத்திய வர்க்க இந்துக்கள் அம்மாநிலத்தின் மதவொற்றுமையைச் சீரழித்திருப்பதாகக் குற்றம்சாட்டி ஜனவரி மாதம் The Times of Indiaவில் அவர் எழுதிய ஒரு கட்டுரை (Blame the Middle Class). குஜராத் போலீசார் தம்மைக் கைதுசெய்வதிலிருந்து தற்காலிகப் பாதுகாப்பு தரத் தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட பின்பு நந்தி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அல்தமாஸ் கபீர் மற்றும் ஜி. எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட வெகேஷன் பெஞ்ச், அகமதாபாத் காவல்நிலையம் வெளியிட்ட சம்மன்களைத் தள்ளுபடிசெய்து ஜூலை 1ஆம் தேதி தீர்ப்பளித்தது. "இவ்வழக்கு தொடர்பாக இனிவரும் காலங்களில் திரு. நந்தியின் மீது எந்த வழக்குத் தொடரப்பட்டாலும் அது தள்ளுபடி செய்யப்படும்" என்று தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், "ஒரு பத்திரிகையாளரைத் துன்புறுத்துவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. அவர் நிம்மதியாக வாழட்டுமே! நீங்கள் (குஜராத்) அவரது கட்டுரைக்காக அவர்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறீர்கள். இவையெல்லாம் இந்நாட்டில் இப்போது நடந்துவருகிற மிக மோசமான விஷயங்களாகிவிட்டன. ஒரு பத்திரிகையாளர் எழுதக் கூடாதென்றால் வேறு யார் எழுதுவார்கள்? நீதிமன்றமும் அக்கட்டுரையைப் படித்துப் பார்த்தது. அதில் ஆட்சேபனைக்குரியதாக எதுவுமில்லை. நீங்கள் ஒரு சாதுவான இலக்கைத் தாக்குவதற்குக் காத்திருக்கிறீர்கள். இவர் (மனுதாரர்) 71 வயதுள்ள, அதிகாரமற்ற ஒரு பத்திரிகையாளர் என்பதால் எளிதான இலக்காகிவிட்டார். இதுவரை ஒரேயரு அரசியல்வாதியையோ ஒரு முனிசிபல் கவுன்சிலரையோகூட நீங்கள் குற்றம்சுமத்திப் பிடித்ததுண்டா?" என்று நீதிபதி கபீர், குஜராத்தின் அரசு வழக்கறிஞர் ஹேமந்திகா வாஹியைக் கேட்டிருக்கிறார்.

குற்றம்சுமத்தப்பட்ட கட்டுரையில் அஷிஸ் நந்தி குஜராத்தின் மதவெறி அரசியல்வாதிகளையல்ல, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களில் (NRI) நடுத்தர வர்க்கக் குஜராத்திகள் பாதுகாப்பான தொலைவில் இருந்துகொண்டு குஜராத்தின் தேசியவாத, இந்து மதவெறி, இஸ்லாமிய வெறுப்பு மனோநிலையைத் தூண்டி வளர்த்துவருகின்றனர் எனக் குற்றம்சுமத்தியிருக்கிறார்.

"குஜராத்தின் மத்திய வர்க்கத்தினரில் பலரும், அவர்கள்மீது வைக்கப்படும் எந்தவொரு விமரிசனமும் குஜராத்தின் மேல் தொடுக்கப்படும் ஒரு தாக்குதலாகவே நினைக்கின்றனர். அவர்களது பூஞ்சையான, செயற்கையாகப் பெருக்கவைக்கப்பட்டிருக்கும் சுயபிம்பத்தை விமரிசனம் அச்சுறுத்துகிறது. பல தலைமுறைகளாகக் குஜராத்தி இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சாரரீதியாக மிக நெருக்கமானவர்களாகவே இருந்துவந்திருக்கின்றனர். நெருக்கமாக இருக்கும் இரு சமூகத்தினரிடையே உறவு சீர்கெட்டால், அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெறியுணர்ச்சியைத் தூண்டிவிடுகிறது என்பதுதான் பல்வேறு இனப்படுகொலைகளை ஆராய்ந்ததில் கண்டறிந்த உண்மை. பிரிவினையின்போது பஞ்சாப்பில் இதுதான் நிகழ்ந்தது. முஸ்லிம்களும் சீக்கியர்களும் அந்நியோன்யமாக இருந்து வந்தனர். அந்த உறவு முறிந்ததும் நம்ப முடியாத அளவுக்கு வெறியாட்டம் நடந்தது. இந்தியாவில் வெற்றிகரமாக, பரவலான அளவில் நடந்த முதல் 'இனச்சுத்திகரிப்பு' அதுதான் எனலாம். மேற்குப் பஞ்சாப்பில் முஸ்லிமல்லாதோர் மக்கள்தொகையும் கிழக்குப் பஞ்சாப்பில் முஸ்லிம்களின் மக்கள்தொகையும் இருபத்தைந்திலிருந்து ஏறக்குறைய பூஜ்ய சதவீதத்திற்கு வந்திருக்கிறது. குஜராத்தைப் போன்ற மாநிலங்களுக்கு இது ஒரு பாடம்" என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் நந்தி, தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயம் செய்யும் ஜீsமீஜீலீஷீநீக்ஷீணீநீஹ்யாக இந்தியாவின் ஜனநாயகம் அழுகிக்கொண்டுவருகிறது என்கிறார். "மெஜாரிட்டியோடு இணங்காமல்போகும் எவரும் ஒரு துரோகி தான் என்னும் மனப்பான்மை அங்கே ஊறிவிட்டது. மதக்கலவரங்களை அரங்கேற்றித்தான் தேர்தலில் ஜெயிக்க வேண்டியிருக்கிறதா என்று யாராவது கேட்டால் அவர்கள் குஜராத்தின் எதிரி, இந்துக்களின் எதிரி. இந்த விளையாட்டு குஜராத்தில் 1969ஆம் வருடம் தொடங்கியது. மோடி இதை வலுப்படுத்தி இரண்டு தேர்தல்களில் வென்றிருக்கிறார். எதைச் செய்துவிட்டும் தன்னால் தப்பிச்சென்றுவிட முடியுமென்று இப்போது அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்."

தேசிய ஊடகங்களும் பெரும்பாலான படித்த வர்க்கத்தினரும் இந்து அடிப்படைவாதிகளின் தொடர்ந்த கவர்ச்சிப் பிரச்சாரத்தில் மயங்கி, அவர்களுக்குச் சார்பாகச் சாயத் தொடங்கியிருக்கும் இந்த அபாயகரமான காலகட்டத்தில் கபீர், சிங்வி போன்ற நீதிபதிகள் நரேந்திர மோடி போன்ற பாசிஸ்ட்டுகளின் கொட்டத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருப்பது ஆறுதலைத் தருகிறது.

2

தில்லி உயர் நீதிமன்றத்தின் வரலாற்றில் மகத்தான தீர்ப்பு ஒன்று மே 8ஆம் தேதி நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் அவர்களால் அளிக்கப்பட்டது. நவீன இந்தியாவின் மிகப் பிரபலமான, தொண்ணூறு வயதைத் தாண்டிய, ஓவியர் மக்பூல் ஃபைடா ஹ§சைன் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டிருந்த ஏழு குற்றச்சாட்டு வழக்குகளைத் தள்ளுபடிசெய்யக்கோரி மனு அளித்திருந்தார். அவர் புரிந்ததாகக் கூறப்பட்ட குற்றம், பொது நாகரிகத்தையும் நல்லறத்தையும் குலைக்கும் வகையில் அவரது ஓவியங்களில் நிர்வாணத்தையும் ஆபாசத்தையும் வரைந்தது. முக்கியமாக இந்துப் பெண் கடவுளர்களையும் 'பாரத மாதா'வையும். ஏழு வழக்குகளில் நான்கைத் தள்ளுபடி செய்து வழங்கப்பட்ட நீதிபதி கௌலின் தீர்ப்பு, வழக்கின் சட்ட நுணுக்கங்களைப் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துக்கொண்டாலும் இவ்வழக்கின் பொருள் குறித்த அவரது விசாலமான ஆழமான கருத்துரைகள் சிந்திக்கும் ஒவ்வொரு இந்தியனின் கவனத்திலும் பதிய வேண்டியவை.

வரலாற்றின் நீண்ட பக்கங்களில் இவரது முன்னோடிகள் பலரைப் போலவே எம். எஃப். ஹ¨சைனும் அவ்வப்போது நிர்வாணத்தைத் தீட்டியிருக்கிறார். கடவுள் முதன் முதலில் உலகத்தை எப்படிப் படைத்தாரோ அதை அப்படியே, மனிதர் உருவாக்கி அணிந்திருந்த தளைகளை ஊடுருவித் தாண்டிச் செல்கிறது ஓவியர்களின் பார்வை. காமத்தைத் தூண்டும் ஒரு போலியுருவ வழிபாடு என்பதைத் தாண்டி, நிர்வாணம் என்பது தூய்மையின் ஒரு வகைக் குறியீடாகவும் இவ்வுலகத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளி ஒருவனின் (அவள், அவன், அது, இயற்கை, டிஎன்ஏ, கடவுள் என்று நீங்கள் எப்படி அழைத்துக்கொண்டாலும் சரி) படைப்புத் திறமைக்கு ஒரு பாராட்டாகவும் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

பற்பல வருடங்களுக்கு முன்பு ஹ¨சைன் இந்தியாவை ஒரு முழுமையடையாத நிர்வாண உருவத்தில், தீபகற்பக் கூம்பாகக் கால்களைப் பின்னால் மடித்து, பக்கவாட்டில் அலைபாயும் கூந்தலாக இமய மலையை உருவகித்து, ஒரு வேதனையான பாவத்தில் தலையைப் பின்னுக்குச் சாய்த்து ஒரு கண்ணில் நீர் வடிவதுபோல் வரைந்திருந்தார்.

அவ்வோ வியத்தை வாங்கிய ஓவியச் சேகரிப்பாளர் ஒருவர் பல வருடங்கள் கழித்து அதற்கு 'பாரதமாதா' என்று பெயரிட்டார்.

பாஸிஸவாதிகளுக்கு இது போதுமானதாக இருந்தது. தமது தேசபக்தியையும் இந்தியப் பற்றையும் சூடேற்றிக் கொளுத்திக்கொண்டு ஹ¨சைனின் ஓவியங்களை எங்கே கண்டாலும் உடைத்துக் கிழித்து, ஓவியக் கண்காட்சிகளை நொறுக்கி, ஆர்ப்பாட்டத்தில் இறங்கி, நாடெங்கிலும் பல்வேறு மாநிலங்களின் நீதி மன்றங்களில் தாய்நாட்டின் மீதிருக்கும் இந்துக்களின் வழிபாட்டுணர்வை இந்த ஓவியத்தால் ஹ¨சைன் இழிவுபடுத்திவிட்டதாக ஏழு வழக்குகளை அவர்மீது தொடர்ந்தனர். விளைவு தன் தாய் நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும் முக்கியமாக இந்து மதத்தின் தொன்ம மரபையும் உளமார நேசித்துவந்த அம்முதிய கலைஞன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டி வந்தது.

ஆபாசம், மத / தேசாபிமானத்தைப் புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் நம் நாட்டிலுள்ள சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் அனைத்தையும் தொகுத்து ஹ¨சைனின் படைப்பின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கோடு பொருத்திப் பார்த்து, அபாரமான சட்ட விளக்கங்களோடு ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி கௌல். கனாய்ஸியர் எனப்படும் கலாரசிகராகவோ விமரிசகராகவோ அறியப்பட்டிராத நீதிபதி கௌல் எல்லாவிதமான கலைப் படைப்புகளும் வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு விதங்களில் எவ்வாறெல்லாம் பார்க்கப்பட்டு வருகிறதென்றும் சர்ச்சைக்குள்ளான அவ்வோவியத்தில் கலைஞனின் உள்ளுலக அக்கறைகளுக்குள் அசாதாரணமான நுண்ணறிவையும் ஒன்றுணர்ச்சியையும் (மீனீஜீணீtலீஹ்) செலுத்தி, நிர்வாணத்தை ஒரு படைப்பு உச்சமாக ஹ¨சைன் அவ்வோவியத்தில் எட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

"வேதனையிலும் கடுந்துயரிலும் உழலும் நம் தேசத்தின் சோகமும் வாட்டமுமாகச் சோர்ந்துபோயிருக்கும் முகத்தை இந்த ஓவியத்தில் கண்ணீரும் கலைந்திருக்கும் கூந்தலுமாக அந்தப் பெண்ணை உருவகிப்பதில் கலைஞனின் படைப்பாளுமை புலப்படுகிறது. அந்தப் பெண் கண்களை மூடிக்கொண்டு, ஒரு கையை முகத்திற்கு மேல் உயர்த்தியபடி, விழியிலிருந்து கண்ணீர்த் துளி வழியப்படுத்திருப்பதில் ஒரு பெண்ணின் சோகம் சித்தரிக்கப்படுகிறது. அந்தப் பெண்ணை நிர்வாணமாக வரைந் திருப்பதன் நோக்கமும் இவ்வுணர்ச்சி பாவத்தை வெளிப்படுத்துதலின் ஒரு பகுதியே ஒழிய, பார்வையாளனின் மன அரிப்பைத் தூண்டிவிடுவதற்கல்ல. மாறாகப் பார்வையாளனின் மனசாட்சியை உலுக்கி எழுப்பி அவனுக்குள் இந்தியாவிற்கான ஒன்றுணர்ச்சியையும் நாட்டைச் சீரழித்த கயவர்கள்மீது வெறுப்புணர்ச்சியையும் எழுப்புவதற்காகவே."

இந்தியக் கலாச்சார மரபில் பாலுணர்வு குறித்து எத்தகையதோர் ஆரோக்கியமான பார்வை இருந்து வந்திருக்கிறது என்பதை நீதிபதி கௌல் விளக்கிச் சொல்கிறார். "காம சூத்திரத்தைப் படைத்த தேசத்தில் இருந்துகொண்டு அந்தப் பெயரைக் கேட்டாலே ஏன் கூசி ஒதுங்கிச் செல்கிறீர்கள்?" என ஆச்சரியத்துடன் வினவுகிறார். "அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் இருக்கிறது என்பதைப் போலவேதான் ஆபாசமும் . . . இந்திய மரபில் செக்ஸ் என்பது ஒரு முழுமையான, நிறைவான வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவே அரவணைக்கப்பட்டு வந்தது. கலாச்சாரப் பரிசுத்தம் என்ற பெயரில் இந்தியாவின் புதிய 'கடும் தூய்மைக் கொள்கை' அறியாமையால் பீடிக்கப்பட்ட மனிதர்களால் வரிக்கப்பட்டு, கலைப் பொருள்களைச் சீரழிப்பதிலும் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட காலத்திற்கு நம்மைத் தள்ளிச் செல்வதிலும் ஈடுபட்டு வருவது துரதிருஷ்டவசமானது."

அற்புதமான வாசகங்கள்தாம். ஆனால், யு. எஸ். ஸில் இருப்பதைப்போல இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்குப் பரிபூரண உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 19(2), "இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் அயல் நாடுகளுடனான நட்புறவுக்கும் பொது ஒழுங்கிற்கும் நாகரிகம் அல்லது நீதிமுறைமைக்கும் குந்தகம் ஏற்படாதிருப்பதற்காகவும் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றமிழைக்கத் தூண்டுதல் போன்றவற்றிற்காகவும் பேச்சுச் சுதந்திரத்தை நியாயமான தடைக் கட்டுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்" எனச் சொல்கிறது. வேறு வார்த்தை களில் சொன்னால், வேறுமாதிரியான மனப்பான்மை கொண்டுள்ள ஒரு நீதிபதி 'பொது ஒழுங்கு, நாகரிகம், நீதிமுறைமை' பற்றிக் கூறும் வாக்கியங்களுக்குக் குறுகிய அர்த்தத்தை எடுத்துக்கொண்டு வேறுவிதமான தீர்ப்பையும் வழங்கியிருக்கக்கூடும்.

"காம உணர்வைத் தூண்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, குற்றம்சாட்டுபவரின் காலடியிலேயே இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுவிட்டு நீதிபதி கௌல், "இந்தியாவின் மத மற்றும் மதச்சார்பற்ற இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே பாலியல் மறை குறிப்புகளும் பாலியல் குறியீடுகளும் வெளிப்படையான காமக் கிளர்ச்சிச் சித்தரிப்புகளும் உலக இலக்கியங்கள் எதிலும் காணக் கிடைக்காதளவுக்கு நிறைந்திருக்கின்றன" என்கிறார்.

இந்துத்துவத்தைப் பற்றிப் பேசும்போது அதன் வெறிபிடித்த, அடிப்படைவாதப் பற்றாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்: "உலகின் மிகப் பழமையான மத மரபாக இருக்கும் இந்துத்துவம் எல்லா வகையான நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் எந்தவொன்றையும் தேர்ந்தெடுத்தோ விலக்கவோ செய்யாமல் உள்ளிட்டமைக்கிறது. தெய்வீகத்தை அனைத்து வெளிப்பாடுகளிலும் அது எதுவாக இருப்பினும் கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அதை வணங்குவதில் ஒரு இந்துவுக்குத் தயக்கமிருந்ததில்லை. ஒரு இந்து, தான் இந்துவாக இருப்பதைவிட்டு விலகாமலேகூட, இந்துவல்லாத வேறொரு நம்பிக்கையை வரிக்கலாம். வேறுவகையான வழிபாடுகளையும் வினோதமான கடவுளர்களையும் வேற்றுமைப்பட்டுள்ள கோட்பாடுகளையும் தவறு என்றோ ஆட்சேபனைக்கு உரியதென்றோ கருதாமல் பகுத்தாய்ந்து சிந்திக்க இந்து மதம் அவனை அனுமதிப்பதால், மகத்தான தெய்வீக சக்திகள் அனைத்தும் உலக, மானுட நலங்களுக்காக ஒன்றிற்கொன்று இசைவுற்றிருக்குமென்றே அவன் நம்ப முனைகிறான்."

கலை, ஆபாசம் போன்ற விஷயங்களில் தாராள மனப்பான்மையோடு இருப்பதென்பது தனிச்சலுகை பெற்றிருக்கும் ஒரு சிறுபான்மையினரின் மனச்சார்பைப் பிரதிபலிப்பதாகவும் இவரது தீர்ப்பில் நியாயப்படுத்திச் சொல்லும் இத்தகைய ஓவிய வகைமைகளால் பெரும்பாலான இந்தியர்கள் புண்பட்டிருப்பார்களென்றும் தன்மீது குற்றச்சாட்டு எழலாம் என்பதையும் நீதிபதி கௌல் அறிந்தே இருக்கிறார். "பெரும்பான்மைத் தன்மை என்பதைத் தாண்டி விரிவான அறச் சார்புத் தாத்பரியம் ஜனநாயகத்திற்கு இருக்கிறது. செப்பமுறாத ஒரு பார்வையில் ஜனநாயகத்தைப் பார்ப்பது ஒரு சிதைவுற்ற சித்திரத்தைத் தருகிறது. உண்மையான ஜனநாயகம் என்பதில் சிறுபான்மையோரின் உரிமைகளை மதிப்பதற்குச் சார்பாகவே பெரும்பான்மையோர் செலுத்தும் அதிகாரம் இருக்கும். பன்முகத்தன்மை என்பதுதான் ஜனநாயகத்தின் ஆன்மா. நாம் கேட்க விரும்பாத, வெறுக்கின்ற கருத்துகளும் வெளி வருவதற்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். பேச்சிற்குப் பிறகு சுதந்திரம் இல்லாவிட்டால் பேச்சுச் சுதந்திரத்திற்கு அர்த்தமே இல்லை."

இந்த வார்த்தைகள் எம்.எஃப். ஹ¨சைனுக்கு மட்டுமல்ல, மிகையாக உணர்ச்சிவசப்பட்ட பற்றாளர்களால் சமீபகாலமாக நாடெங்கும் பாதிக்கப்பட்டிருந்த கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பெறும் ஆறுதல் அளித்திருக்கும். "சகிப்பின்மை என்பது ஜனநாயக மதிப்பீடுகளுக்குச் சற்றும் பொருத்தமில்லாதது. இத்தகைய மனப்பான்மை இந்திய மனத்திற்கும் மரபிற்கும் முரணானது."

நாகரிகச் சமுதாயம் தொடர்ந்து அடிக்கோடிட்டுவரும் மற்றொரு பாஸிஸச் சூழ்ச்சியைப் பற்றி நீதிபதி கௌல் குறிப்பிடுகிறார். "ஒரு கலைப் படைப்பின் மீது எழுகின்ற எல்லா விதமான ஆட்சேபனைகளையும் வெளிப்படுத்தக் குற்றவியல் நீதியமைப்பை சௌகரியமான ஒரு புகலிடமாகப் பயன்படுத்துவதையும் எதைச் செய்யவும் துணிந்த கரங்கள் கலைஞர்களின் உரிமையைச் சீர் குலைக்கும் கருவியாக உபயோகப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்" என்ற நீதிபதி கௌல், "ஒவ்வொரு வழக்கையும் ஒரு மாஜிஸ்ட்ரேட் நுணுக்கமாக ஆராய்ந்து, எரிச்சலூட்டுகிற அற்பத்தனமான வழக்குகள் தொடுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். தேசம் முழுக்கப் பரவியிருக்கும் பல்வேறு நீதிமன்றங்களில் இவர்களது எதிரிக்கு எவ்வளவு முடியுமோ, அந்தளவுக்கு அலைக் கழிப்பையும் தொல்லைகளையும் தருவதற்காகவும் சுலபமான பிர பலத்திற்காகவும் வழக்குகளைத் தொடுப்பது நீதிமன்றச் செயல்பாட்டையே துஷ்பிரயோகம் செய்வதாகும். துரதிருஷ்டவசமாக இப்போதெல்லாம் சிலர் சுலபத்தில் பற்றிக்கொண்டு சூரியனுக்குக் கீழிருக்கும் எதற்கெதிராகவும் ஒரு புத்தகமோ ஓவியமோ திரைப்படமோ அவர்களது மதவுணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக ஆக்ரோஷமாகப் போர்தொடுக்கும் மனநிலையிலேயே நிரந்தரமாக இருந்துவருகின்றனர்.

இத்தகைய அபாயகரமான மனப்பான்மைகள் நிச்சயமாக அடக்கப்பட வேண்டும் . . . அவ்வளவு எளிதாக நீங்கள் புண்பட்டுவிடுவீர்களென்றால் அந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள், அந்த ஓவியத்தைப் பார்க்காதீர்கள், உங்களைப் புண்படுத்தும் இணையதளத்தைத் திறக்காதீர்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை அந்தக் கலைஞனோ எழுத்தாளனோ துய்ப்பதைத் தடுக்காதீர்கள்." இந்துத்துவப் போராளிகள் தனக்கு ஒரு 'போலி மதச்சார்பின்மையாளர்' என்று பட்டம் சுமத்திவிடுவர் என்று நன்கு தெரிந்திருப்பதால் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நீதிபதி கௌல் அரணாகப் பயன்படுத்துகிறார். "நமது சொந்த மனோவுலகின் எல்லைகளுக்குள்ளேயே எல்லோரையும் குறுக்கிவைத்து, நமது சொந்த ஒழுக்கவியல் கோட்பாடுகளையும் அறநெறிகளையும் கடமையுணர்வையும் நமது பயன்பாட்டுணர்வையும் கூடச் சிறப்புரிமை கொண்டாடத் தொடங்கிவிடுகிறோம். மற்றவர்களை மதிப்பிடும் இந்த மனப்பாங்கிலிருந்துதான் எல்லா மதப் பூசல்களும் எழுகின்றன. அப்படி நாம் மதிப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றிருந்தால், அது அவனது சொந்தக் கருத்தியல்களுக்குட்பட்டு இருக்க வேண்டுமே யழிய வேறு யாருடையதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. எனவே, மற்றவர்களின் கடமையை அவர்களுடைய கண்களின் வழியாகப் பார்ப்பதற்கும் மற்றவர்களின் வழமைகளையும் கடைபிடித்தல்களையும் நமது சொந்த மதிப்பீடுகளின் மூலம் பார்க்காதிருப்பதற்கும் நாம் கற்றுக்கொள்ளுதல் அவசியம்."

அப்படியானால் நீதிபதி சஞ்சய் கிஷன் கௌலின் சரித்திரப் புகழ்பெற்ற இத்தீர்ப்பு எதனைச் சாதிக்கப் போகிறது? நம் அரசியல் உலகிற்குள் உள்ள மூச்சடைக்கவைக்கும் பிற மதவெறுப்பையும் கருத்து வேறுபாட்டுப் போராட்டங்களையும் ஒரு முடிவிற்குக் கொண்டுவந்துவிடுமா? அப்படியெல்லாம் நம்பவே முடியாது. ஆனால், வரலாற்றுத் திரட்சியின் சுமையை நிச்சயமாக ஏந்திச்சென்று, முஸ்லிம் என்பதாலேயே ஹ¨சைனுக்கெதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட கொடும் தாக்குதல்களைப் போல இனி யாருக்காவது நிகழுமானால், இத்தீர்ப்பு முன்னுதாரணமாக நின்று அதற்குத் தடைவிதிக்கும் என்று நம்பலாம். இவரது வார்த்தைகள் கவனத்தில்கொள்ளப்பட்டு, ஹ¨சைனுக்கெதிராக இன்னமும் நிலுவையிலிருக்கும் மூன்று வழக்குகளும் விரைவில் தள்ளுபடிசெய்யப்படும் என்று நம்பலாம். நீதிபதி கௌலின் தீர்ப்பு இந்தியாவின் கலைச் சுதந்திரத்திற்கான தனிச் சிறப்பிற்குரிய ஒரு பட்டயம். இத்தீர்ப்பை முடிக்கும்போது அவர் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு விசாலமான சிந்தனையையும் மகத்தான சகிப்புத்தன்மையையும் படைப்புத் துறையின் மீது காட்டுவதற்கு ஒரு பாயிரமாக அமைய வேண்டுமென்ற ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு இத்தீர்ப்பை எழுதியிருக்கிறேன்." கருத்துச் சுதந்திரத்திலும் கலைஞனின் சுதந்திரத்திலும் அக்கறை கொண்ட சிந்திக்கும் ஒவ்வொரு இந்தியனும் எழுந்து நின்று ஒன்றாகச் சேர்ந்து கைதட்டுவோம்.

n

ஆதாரங்கள்

1. Ashis Nandy, Blame the Middle Class, Times of India, 08.01.08.
2. Shashi Tharoor, Be More Tolerant towards Creative Fields, Times of India, 01.06.08.
3. The Hindu, 02.07.08.
4. Out Look, 30.06.08.
5. Badri Raina's Z Space Page - The Republic Needs More Like Him.

உள்ளடக்கம்