|
ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது. அந்த உரிமை
சட்டத்தால் பாதுகாக்கப்படும். ஒருவருடைய உயிரைத் தன்னிச்சையாகப் பறிக்கும் உரிமை
யாருக்கும் கிடையாது.
- சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்,
பிரிவு 6.1
எந்த மனிதனுடைய உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் சட்டத்தால் வகுக்கப்பட்ட
விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு யாரும் எடுத்துவிட முடியாது.
- இந்திய அரசியல் சட்டம்,
பிரிவு 21
வாழ்வுரிமை அருகிவரும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே சிலர்
எந்தக் கேள்வியும் எழுப்பாமல் எந்த உரிமையும் கோராமல் காவல் துறையினரின்
விருப்புவெறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் துப்பாக்கிகளுக்குப்
பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.
கொல்லப்படுபவர்கள்மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காவல் துறையினர்
சொன்னாலும் அவற்றைப் பற்றி எந்த விசாரணையும் இல்லாமல் அவர்கள் மோதல் கொலைகள் மூலமாக
மிக எளிதாக அழிக்கப்படுகிறார்கள். சமயங்களில் அவர்கள்மீது இருக்கும் குற்றங்கள்
நிரூபிக்கப்படாதவையாகவே இருக்கின்றன. தங்கள்மீது சுமத்தப்படும் குற்றங்களிலிருந்து
தங்களைத்தற்காத்துக்கொள்ளவோ விளக்கமளிக்கவோ சட்டரீதியாக அவர்களுக்கு உரிமை
இருந்தாலும் அந்த உரிமைகள் மறுக்கப்பட்டுச் சட் டத்தைக் காக்க வேண்டியவர்களின்
கைகளாலேயே வாழ்வோர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
மோதல் கொலைகள் பற்றித் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள் எழுப்பிவரும் கேள்விகளும்
சர்ச்சைகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றன.
n
கடந்த இரண்டு வருடங்களில் தமிழகக் காவல் துறையினர் நடத்திய மோதல் கொலைகளில்
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 16. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 68 என்று
மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். தப்பிக்க முயன்றபோது அல்லது காவல்
துறையினரைத் தாக்க முயன்றபோது தற்காப்புக்காக அவர்களைக் கொல்ல வேண்டியிருந்ததாகக்
காவல் துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை நடந்த மோதல் கொலைகளில்
ஒருமுறைகூடக் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர்கூடக் கொல்லப்பட்டதாகத் தகவல் இல்லை.
இதன் காரணமாகவே என்கவுண்டர் கொலைகள் எனப்படும் மோதல் கொலைகள் காவல் துறையினர்
தரப்பில் நடத்தப்படும் போலி மோதல்கள் என்கிற மனித உரிமை அமைப்புகளின் வாதங்கள்
வலுப்பெறுகின்றன.
மோதல் கொலைகளில் ஈடுபடும் காவல் துறையினர் சட்டத்தை மீறுவதை மிக இயல்பாகச்
செய்கிறார்கள். சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு
வாழும் உரிமையையும் அவன் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களிலிருந்து
தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் அவர்கள் மறுக்கிறார்கள். அதனாலேயே மோதல் கொலைகளை
மனித உரிமை மீறல் பிரச்சினையாக மனித உரிமை அமைப்புகள் பார்க்கின்றன. தவிர, தேசிய
மனித உரிமை ஆணையம் ஒரு மோதல் கொலையைக் கையாள்வது குறித்துப் பல வழி காட்டுதல்களைக்
கொடுத்திருக்கிறது. அதன்படி மோதல் கொலைகளில் ஈடுபடும் அதிகாரிகள்மீது புகார்களின்
அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மோதல் கொலைகளின் பொருட்டு அவர்களுக்குப்
பதவி உயர்வுகளோ விருதுகளோ கொடுக்கப்படக் கூடாது. இந்த வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு
ஏற்றுக்கொண்டு அதைத் தமிழகத்தில் கடந்த ஆண்டு மறு அறிவிப்பும் செய்திருக்கிறது.
ஆனால், இந்த வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது நிதர்சனம்.
n
மனித உரிமை அமைப்புகளுக்கு அப்பால் மோதல் கொலைகள் பற்றிப் பொது மக்களின் பார்வை
எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டியது அவசியம். பொதுவாக மோதல் கொலைகள் போலி
மோதல்களின் அடிப்படையில் நிகழ்பவை என்பது பொதுமக்களின் பார்வையாக இருக்கிறது.
சினிமா போன்ற ஊடகங்களின் சித்தரிப்புகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். தமிழகத்தில்
பொதுவாக மோதல் கொலைகள் பற்றிய மக்களின் மனநிலை இரண்டே நிகழ்வுகளில்தான்
வெளிப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெங்கடேசப் பண்ணையார் மோதல்
கொலையில் கொல்லப்பட்டபோது அது அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த மோதல்
கொலைக்கு எதிராகப் பேசிய திமுக, அவரது மனைவி ராதிகா செல்விக்குத் தேர்தலில்
போட்டியிட வாய்ப்பு அளித்தது. கைக்குழந்தையோடு பிரச்சாரம் மேற்கொண்ட ராதிகா செல்வி
தேர்தலில் பெற்ற வெற்றியை மோதல் கொலைக்கு எதிராகப் பெற்ற வெற்றி என்றும் சொல்லலாம்.
அவர் இப்போது மத்திய அமைச்சர்.
அதே ஆட்சிக் காலத்தில் மோதல் கொலையில் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனின்
மனைவி முத்துலட்சுமிக்கும் ராதிகா செல்வி போல அரசியலில் பிரகாசிக்க வாய்ப்பு
இருந்தது. அவர் அதைத் தற்போதைக்கு நிராகரித்திருக்கிறார். ஆனால், வீரப்பனுக்கு
அந்தப் பகுதி மக்கள் கோவில் கட்டியிருப்பது, அவரைக் கொன்ற காவல் துறையினருக்கு
எதிரான மன வெளிப்பாடு. வீரப்பனை உயிரோடு பிடித்திருந்தால் அவர் கொடுக்கக்கூடிய
வாக்கு மூலங்கள் பல அரசியல்வாதிகளுக்கு எதிராக அமையும் என்ற பேச்சு அப்போது பரவலாக
இருந்தது. வீரப்பன் விஷம் கொடுத்துத்தான் கொல்லப்பட்டார் என்றொரு சர்ச்சையும்
அப்போது இருந்தது. தவிர, வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்த காவல்
துறையினர் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட உரிமை மீறல்களை அந்த மக்களும் மறந்துவிடத்
தயாராக இல்லை.
எந்த நாடகம் என்று நினைவில்லை. அந்த வசனத்துக்குப் பார்வையாளர்களிடமிருந்து பலத்த
வரவேற்பு இருந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. வசனம் இதுதான்: "போலிசுக்கும்
ரவுடிக்கும் வித்தியாசம் என்ன? யுனிபார்ம்தான்."
மக்களின் மனநிலையும் கிட்டத்தட்ட இதுதான்.
n
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை, தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி காவல்
துறையைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிச்
செய்தியை வெளியிட்டிருக்கிறது. குற்றவாளிகளிடம் தயவு தாட்சண்யம் பார்க்க
வேண்டாமென்றும் மனித உரிமை அமைப்புகள் கொடுக்கக்கூடிய அழுத்தங்களைப் பொருட்படுத்த
வேண்டாமென்றும் அந்த அரசியல் தலைவர் அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்தச் செய்தி வெளியான இரண்டு நாள்களில் சென்னைக் காவல் துறையினரால் பாபா சுரேஷ்
என்கிற ரவுடி மோதல் கொலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். துப்பாக்கியைப்
பயன்படுத்துவதில் உள்ள சட்டம் மற்றும் உளவியல் ரீதியான தயக்கங்களைக்கூட அரசியல்
தலைமை தகர்த்திருக்கும் பட்சத்தில் நாம் இன்னும் சில மோதல் கொலைகளை விரைவில்
எதிர்பார்க்கலாம்.
n
"எல்லா விலங்குகளும் சமமானவை; ஆனால், சில விலங்குகள் மற்ற விலங்குகளைவிட மேலும்
சமமானவை"
- 'அனிமல் பார்ம்'
நாவலில் ஜார்ஜ் ஆர்வெல்
தேவிக்கு வயது 20களில் இருக்கலாம். மஞ்சள் பூசிய முகம், வளையல்கள் சிணுங்கும்
கைகள், மடியில் இரண்டு மாதக் குழந்தையோடு இருக்கும் அவரது மெலிந்த தோற்றம்
கண்ணீராலும் கவலைகளாலும் ஆனது போலக் காட்சியளிக்கிறது. உயர் நீதிமன்றக்
கட்டடங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத தோற்றம் அது. அவரும் மிகச் சமீப
காலமாய்த்தான் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் பழகியிருந்தார். "என்
கணவர் கொல்லப்படுவதற்குக் கொஞ்ச நாள்களுக்கு முன்புதான் காவல் துறையினர் எங்களைத்
தொடர்ந்து விசாரித்துவந்தார்கள். தன்னைத் தேடுகிறார்கள் என்று தெரிந்து அவர்
தானாகச் சென்று சரணடையும் போதுகூட அவரை இப்படிக் கொல்வார்கள் என்று நினைக்கவில்லை.
அவர்கள் சொல்வது போல, அவர் தப்பிக்க முயன்றிருந்தால் ஏன் சரணடைய வேண்டும்? இனி
இந்தக் குழந்தையும் ஒன்றரை வயதான எனது இன்னொரு குழந்தையும் அவரது சாவின் கோர
நிழலிலேயே வளர வேண்டியிருக்கும்."
பாபா சுரேஷின் மனைவிதான் தேவி. தன்னைப் பற்றியும் தன் கணவரைப் பற்றியும் ஊடகங்களில்
உலாவரும் புனைகதைகளை அவர் அறியாமல் இல்லை. ஆனால், இப் போதைக்கு அவருக்கு அவருடைய
இரண்டு குழந்தைகளை அவமானத்தின் நிழல் படாமல் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு
இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார். அது மிகச் சவாலான விஷயம் என்பதையும்.
ஆனால், சில வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே நிலைமையில் இருந்த ராதிகா செல்வி
பற்றியும் இப்போதைய அவரது பதவி பற்றியும் தேவிக்குத் தெரியாது.
|