Google   www kalachuvadu.com

கண்ணோட்டம்
அரசும் ஊடகங்களும்
கண்ணன்

இந்திய அரசியல் சாசனப்படி ஊடகங்களைக் கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகளுக்கு உரிமையில்லை. ஆனால், ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என்பது உலகின் அனைத்து ஜனநாயக அரசுகளும் மறைமுகமாக ஈடுபட்டுவரும் செயல்பாடு. அதன் வெற்றி தோல்வி ஊடகங்களின் சுதந்திர வேட்கையைப் பொறுத்தது. செப். 11க்குப் பிறகு ஒசாமா பின்லாடனின் செய்தி ஒளிப்பேழைகளை ஒளிபரப்ப வேண்டாம் என அமெரிக்க அதிபர் புஷ் கேட்டுக்கொண்டதும், அமெரிக்க ஊடகங்கள் பணிந்தன. இதே கோரிக்கையைப் பிரதம மந்திரி பிளேர் முன்வைத்ததும் மீண்டும் ஒருமுறை ஒசாமாவின் செய்தியை ஒளிபரப்பி எதிர்ப்புத் தெரிவித்தன இங்கிலாந்து ஊடகங்கள்.

நமது தமிழக ஊடகங்களின் நிலை இந்த விஷயத்தில் பெருமைப்படக்கூடியதாக இல்லை. சுதந்திரமான, நடுநிலையான ஊடகங்களைத் தேடித்தான் பிடிக்க வேண்டியுள்ளது. இரட்டை வருமானம் கொண்ட பத்திரிகையாளர்களே இங்கு அதிகம். பல செய்திகளின் மூலம், களத்திலிருந்து அல்ல உளவுத் துறையிலிருந்து புறப்படுகிறது. இதுபோக செய்தித் துறை, விளம்பரத் துறை, நூலகத் துறை எனப் பல முனைகளிலிருந்து அரசின் ஊடகக் கட்டுப்பாட்டு முயற்சிகள் நடை பெறுகின்றன. அன்றாடச் செய்திகளில் தலையிடும் அளவிற்கு இன்று இந்தத் தலையீடு விரிவடைந்துவருகிறது. நிலத்திற்கும் வீட்டிற்கும் 'நன்கொடை'க்கும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் பின்னால் சுற்றும் ஊடகவியலாளர்களிடம் கருத்துச் சுதந்திரத்திற்கான வேட்கையை எதிர்பார்க்க முடியாது. நமது பத்திரிகையாளர்கள் அரசிடமிருந்து பெற்றிருக்கும் பெற்றுவரும் ஆதாயங்கள் பற்றி ஒரு தனிப் புலனாய்வே நடத்த வேண்டும்.

தமிழக அரசியல்வாதிகள் மன்னர் பண்பாட்டின் வாரிசுகள். அவர்களின் அடைமொழிகளும் அரியணைகளும் ஆடம்பரங்களும் வாரிசுகளும் இதை வெளிப் படையாக அறிவிப்பவை. இவர்கள் மக்கள் வரிப் பணத்தில் கொள்ளை அடித்தது போக மேற்கொள்ளும் சமூக நலத் திட்டங்களைத் தமது சொந்த நல்கைகளாக மாற்றியுள்ளார்கள். மன்னர்களையும் வள்ளல்களையும் போலத் தம்மை இந்திரன், சந்திரன் என்றும் புகழும் அடிவருடிகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குகின்றனர். மக்கள் உழைப்பில் ஒட்டுண்ணிகளாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அரசின் வரிப் பணத்தைத் தமது பரம்பரைச் சொத்து போல விருப்பப்படி செலவு செய்ய, விழிப்புணர்வற்ற நமது குடிமக்கள் சமுதாயம் அனுமதித்துவருகிறது.

தமிழக அரசியல்வாதிகள்போலத் தமது வாழ்நாளிலேயே தம்மைப் புகழக் கேட்கும் இன்னொரு இனம் இப்பூவுலகில் இன்று இருக்கும் எனத் தோன்றவில்லை. அவ்வாறு புகழக் கேட்ட மனிதர்கள் சகிப்பின்மையின் இலக்கணம்போலத் திகழ்வதிலும் வியப்பில்லை. தம்மையும் தமது அரசையும் விமர்சிக்கும் இதழ்களுக்கும் நாளிதழ்களுக்கும் நூலகங்களில் தடை. அரசின் விளம்பரங்களுக்குத் தடை. அது இன்றைய ஆட்சியில் மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சியின் நடைமுறையும்கூட. முக்கிய வேறுபாடு ஜெயலலிதா ஆட்சியின் அராஜகத்திற்கு எதிராக ஆட்சிக்குவந்த 'ஜனநாயக அரசு' இது என்பது. நமது ஊடகங்கள் இத்தகைய சகிப்பின்மையைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்கின்றன. விருப்பம்போலக் காரண காரியங்கள் இன்றி அரசு செயல்படுவது பிழை என்பதை அவை சுட்டிக்காட்டுவதில்லை. விளம்பரம் தருவதில் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடாமல் அரசையும் அரசரையும் அரசியையும் புகழ்ந்து எழுதி அவர்கள் மனம் கோணாமல் செயல்பட்டு அரசு விளம்பரத்தை அனுபவிக்க வேண்டும் என்று திட்டமிடுகின்றன. இதற்காக இதழியல் சுதந்திரத்தை அரசுக்குப் பணயம் வைக்கவும் அவை தயங்குவதில்லை. மாறாக அரசை விமர்சிக்கும் செய்திகளை வெளியிடும் இதழ்கள் தாக்குதல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகின்றன.

அரசாங்கம் எந்த நல்கையையும் தன் மனம்போன போக்கில் அளிக்க முடியாது. அது நியாயமானதாக, நியதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதேபோலத் தன் மனம்போனபோக்கில் நல்கைகளைத் தடைசெய்யவும் முடியாது. நியதிகளுக்கு உட்படாத, விருப்பு வெறுப்பு அடிப்படையிலான முடிவுகள் சட்ட விரோதமானவை. Ramana Dayaram Shetty vs Airport Authority of India (1979) வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசின் நல்கைகள் நியதிகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

இப்போது 'தினகரன்' நாளிதழ் தனக்கு விளம்பரம் வழங்க மறுக்கும் தமிழக அரசு முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருக்கிறது. நாளிதழின் விற்பனை அடிப்படையில் அரசின் விளம்பர முன்னுரிமை அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. 'தினகர'னை நடத்தும் சன் குழுமத்திற்கு, திமுக அரசோடு சமரசத்திற்கு இனி இடமில்லை என்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்தைக் காப்பதற்குப் பேர்போன குழுமம் அல்ல சன் குழுமம் என்றபோதிலும் அதன் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது. அரசு விளம்பரம் வழங்குவதிலும் நூலகங்களுக்கு இதழ்களைத் தருவிப்பதிலும் தெளிவாக வகுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பேண வேண்டும். இதற்கு இந்த வழக்கு வழிவகுக்கும் எனில் அரசு -ஊடக உறவில் அது ஒரு திருப்புமுனையாக அமையும்.

உள்ளடக்கம்