Google   www kalachuvadu.com

சிறப்புப்பகுதி
பாலியல் உரிமை
அனிருத்தன் வாசுதேவன்

"நாம் எப்படி வாழ்வது? -
என்னிடம் ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
நான் அதே கேள்வியைக் கேட்க நினைத்த
அதே நபர்.
எப்பொழுதும்போல, மேற்கண்டதுபோல,
அசட்டுத்தனமான கேள்விகளே
மிக அவசரமான கேள்விகளாக இருக்கின்றன."

விஸ்வாவா சிம்போர்ஸ்கா
போலிஷ் மொழிக் கவிஞர்

"எவருடைய வாழ்க்கை வாழ்க்கையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது? வாழ்வதற்கான உரிமை எவரெவருக்கு உண்டு? வாழ்க்கை எங்குத் தொடங்கி எங்கு முடிகின்றது என்பதை எப்படித் தீர்மானிக்கின்றோம்? பின் வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கைக்கு எதிரான விதத்தில் எப்படிச் சிந்திக்கின்றோம்?" ஜூடித் பட்லர், "Undoing Gender"

இன்று நான் முன்வைக்கவிருக்கும் ஒரு சில கருத்துகள் வாழ்க்கை பற்றிய இந்த இரு கேள்விகளுக்கு இடையில் இயங்குவனவாக இருக்கின்றன. இரண்டுமே சாரம், தன்மை பற்றிய கேள்விகள்தாம். ஆனால், இவை இரண்டிற்கும் இடையில் உள்ள கிட்டத்தட்ட பாதுகாப்பான பகுதியில் பலருடைய வாழ்க்கை தத்துவரீதியான பிரச்சினைகள் பெருமளவில் இல்லாமல் இயங்கிவிடுகின்றது. "யாருடைய வாழ்க்கையெல்லாம் வாழ்க்கை?" என்பதும் "எப்படி வாழ்வது?" என்பதுமான இரு கேள்விகளுமே மிக அவசரமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்விகள். இந்த அவசரத்திற்கு என்னிடம் குறைந்தது இரண்டு காரணங்கள் உண்டு.

(1) வாழ்வுரிமை என்பதைவிட அடிப்படையான கேள்வி "எது வாழ்வு?" என்பது. எது வாழ்க்கை என்பதும் அந்தத் தேர்வுக்கும் உரிமை வழங்கலுக்கும் உள்ள தொடர்பும் இவற்றைத் தீர்மானிப்பவர்கள் யார் என்ற கேள்வியும் மிக அவசரமான கேள்விகள். (2) "எப்படி வாழ்வது?" என்பது கவித்துவ அழகிற்காக அல்லது இருத்தல் சார்ந்த துன்பியல் நிலையிலிருந்து கேட்கப்படும் கேள்வியாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. "நான் எப்படி வாழ்ந்தால் அது வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, எனக்கு வாழ்வுரிமைகள் வழங்கப்படும்?" என்ற மிகவும் பயனுள்ள கேள்வியும் இதில் பொதிந்துள்ளது. எத்தனை வித் தியாசங்கள் இருப்பினும் இந்த இரு கேள்விகளும் ஒரு முக்கியக் கருத்தாக்கத்தை முன்வைக்கின்றன. வாழ்வுரிமைக்கு எல்லைக் கோடுகள் இருப்பதற்கான ஒரு முக்கியக் காரணம் "வாழ்வு" / "வாழ்க்கை" என்பதற்கும் எல்லைக் கோடுகள் இருப்பதே. உதாரணத்திற்கு, ஒரு பாலியல் தொழிலாளியைப் பார்த்துக் காறி உமிழ்ந்து "சீ! இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?" என்று ஒருவர் கூறும்பொழுது, அந்த வசைமொழிக்கு அடியில் "வாழ்க்கை" என்பது பற்றிய சில தீர்மானங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அவரை உடனே அருகில் உள்ள திண்ணையில் அமரச்செய்து, இளநீரோ தேநீரோ வாங்கிக் கொடுத்து "பின் கூறுங்கள். எதெல்லாம் வாழ்க்கை?" என்று அமைதியாகக் கேட்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன்.

உரிமைகளின் எல்லைகளே, உரிமைகளின் மறுப்பே அந்த உரிமைகளைப் பற்றியும் அதை வழங்குபவர்கள் பற்றியும் அதைப் பெறுபவர்கள் பற்றியும் நமக்குக் கூறுகின்றன. அது மட்டுமின்றி இந்தத் தீர்மானங்களைச் செய்பவர்கள் எந்தக் காரணங்களுக்காகச் சில உரிமைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் கண்டறியலாம். வேலியின் உயரம் வெளியில் இருப்பவனின் தாண்டும் திறன் பற்றி ஏதோ கூறுகின்றது. அந்தத் தாண்டலைத் தவிர்க்க நினைக்கும் பயத்தைப் பற்றியும் ஏதோ கூறுகின்றது. இந் தியக் குற்றவியல் சட்டம் 377 ஓரினச் சேர்க்கையை - அதனால் ஓரினப் பாலீர்ப்பு கொண்டவர்களைத் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும்போது அது சட்டமியற்றும், அதைப் பேணிப் போற்றும் ஆதிக்கங்களின் பாலியல் சிந்தனைகளை, பயங்களை, வெட் கங்களை நமக்குக் காட்டுகின்றது. ஆனால், அதோடு நின்றுவிடாமல், பாலியல் சார்ந்த இந்தச் சிந்தனைகளும் பயங்களும் தீர்மானங்களும் வெட்கங்களும் விதிகளும் இந்த ஆதிக்கக் கட்டமைப்புகளின் ஒவ்வொரு கல்லிலும் ஊடுருவிய மையமாய் இரு ப்பதையும் காட்டுகின்றது. உங்களுக்கும் எனக்கும் சில உரிமைகளை வேண்டா வெறுப்போடு வழங்கிவிட்டு எப்போதும்போல ஆட்சியும் வாழ்க்கையும் நடக்கும் கட்டமைப்புகள் அல்ல இவை. ஒவ்வொருமுறையும் இவற்றின் எல்லைகளில் மாற்றம் நிகழும்போது இவற்றின் மையங்கள் நகர வேண்டியிருக்கின்றன. இந்த மையங்களோ அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவி இருக்கின்றன. எங்கோ ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருக் கும் நூலைப் பிடித்து இழுக்கையில் மொத்தத் து ணியும் அவிழ்ந்துவிடுகிறது.

இந்தப் புலம்பல்களையும் தாண்டி, எல்லைகளிலோ வெளியிலோ நிற்பவர்களின் துன்பியல் நிலைகள் என்னென்ன என்று திட்டவட்டமாக என்னால் கூற இயலாது. நரம்புகள் புடைத்துத் தெறிக்கும் அளவிலான சுயசிந்தனையும் சுயவிசாரணையும் இதில் உண்டு. என் அக வாழ்க்கை சார்ந்த விழைவுகளையும் காதல்களையும் காமங்களையும் புணர்ச்சிகளையும் பொதுவான புறவெளியில் தண் டனைக்கென இழுத்துவராதீர்கள் என்று கூறுவதற்கு நான் புறவெளிக்கு வர வேண்டும். இது ஒரு வேதனையான முரண்பாடு. என் வாழ்வு ரிமை, அதன் மறுப்பு பற்றிய என் புலம்பல்களை முன்வைப்பதற்கான கருத்துரிமை உண்டா என்பது இப்பொழுது முக்கியக் கேள்வியாகிறது. "நான் காதலிப்பவர் ஆணா பெண்ணா என்பதை நான் தீர்மானிக்கின்றேன்" என்பது என் கருத்து. அதை இங்கு வெளிப்ப டுத்துவதற்கான உரிமை எனக்குண்டு. அழைப்பிதழில் என் பெயரிருப்பதால் இதை இன்னும் நிச்சயமாகவே கூற முடியும். ஆனால், இதை ஒழுங்கு செய்திருக்கும் காலச்சுவடு இதழின் கருத்துகளுக்கு அரசு நூலகங்களில் இடமில்லை.

எனவே, இது காலச்சுவடு இதழ் அரசு நூலகங்களில் ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. அதில் இடம்பெறும் கருத்துகளும் அவற்றின் அரசியல்களும் அரசால் முடக்கப்படும் அது உண்மை. காலச்சுவடின் இதழ்வெளியில் இடம்பெறும் கருத்துகளுக்கும் அரசுக்கும் உள்ள உறவைப் பற்றிய பிரச்சினை.

n

14. 06. 08 அன்று சென்னை 'புக் பாயிண்ட்' அரங்கில் நடைபெற்ற 'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

உள்ளடக்கம்