Google   www kalachuvadu.com

சிறப்புப்பகுதி
நினைவுகூரப்பட வேண்டிய நெருக்கடிகள்
தேவிபாரதி

1975இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலைப் பிரகடனம் குறித்த நினைவுகூரல்களோடு நாம் இந்தக் கூட்டத்தைத் தொடங்கலாம் என நினைக்கிறேன். இந்திய ஜனநாயகம் என்னும் கருத்துருவம் சார்ந்து சிவில் சமூகம் கொண்டிருந்த கற்பனைகளை முற்றாக அழித்த நிகழ்வு அது. 1951இல் பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தை வெற்றுத்தாளாக மாற்றியிருந்தது அதிகார வெறி கொண்ட இரும்புக்கரமொன்றின் கையொப்பம். ஜனநாயக அமைப்பின் தூண்கள் ஒரு நள்ளிரவில் தரைமட்டமாக்கப்பட்டன. ஒரு நள்ளிரவுக் கனவை மற்றொரு நள்ளிரவு கொடுங்கனவாக மாற்றியிருந்தது. தேசத்தின் விடுதலைக்குத் தம்மை அர்ப்பணித்ததாகக் கூறிக் கொண்ட ஒரு குடும்பத்தின் அடுத்து வந்த தலைமுறை தன் தியாகத்திற்கு ஜனநாயகத்தையே விலையாகக் கேட்டது. நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், ஊடகங்கள் முதலான ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் ஒன்று அதிகாரத்தின் நிழல் குடைகளாக மாற்றப்பட்டன அல்லது முடமாக்கப்பட்டுச் செயலற்றவையாக்கப்பட்டன.

சிவில் சமூகம் தன் வாழ்வுரிமையை வலியுறுத்துவதற்கு ஆதாரமாக இருந்த அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் போன்ற ஜனநாயக அமைப்புகள் கழுவேற்றப்பட்டு அவற்றின் தலைவர்கள் தனிமைச் சிறைகளுக்குள் அடைத்துவைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். சிவில் சமூகத்தின் பாதுகாவலன் என்னும் முகமூடியைக் கழற்றி வீசிவிட்டு அதிகாரவர்க்கத்தின் விசுவாசமான வேலைக்காரனாக மாறிய காவல் துறை என்னும் ஆயுதமேந்திய அமைப்பு, சிவில் சமூகத்திற்கு அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்தியிருந்த ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கியது.

தேய்ந்துபோனவையாயும் காலா வதியானவையாயும் தோற்றமளிக்கும் இவ்வர்ணனைகள் உண்மையில் ஒற்றர்களைப் போல நம் நினைவுகளைப் பின்தொடர்ந்து வந்து நம் வாழ்வுரிமைகளைப் பதற்றத்திற்குள்ளாக்கிக்கொண்டிருப்பதைப் பிந்தைய காலங்களின் வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட மக்கள் பிரிவினர் தம் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அடிப்படைத் தேவைகளை வலியுறுத் துவதற்காகவும் ஜனநாயகரீதியில் மேற்கொண்டுவரும் எந்தவொரு நடவடிக்கையையும் நம்முடைய ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் சகித்துக்கொள்வதில்லை. அறவழியிலான உண்ணாநோன்பும்கூட அரசுக்கு எதிரானதாகப் பார்க்கப்பட்டு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆட்சியாளர்களை விமர்சிக்கும் மேடைப் பேச்சோ கருத்தரங்க விவாதமோ சிறிய நடுத்தர இதழ்களிலோ வெகுசன ஊடகங்களிலோ முன்வைக்கப்படும் ஆய்வுரையோகூட ஆட்சியாளர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கும் மோசமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகப் புதிய தலைமுறை அவசர நிலைக் காலத்தை நற்செயல் சர்வாதிகாரத்தின் அடையாளமாகக்கூடக் கருத வாய்ப்பிருக்கிறது. அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய வரும் அவசரநிலைக்காலக் கொடுமைகளுக்குத் தலைமை தாங்கியவருமான ஒருவரால் இரண்டரையாண்டுகளுக்குள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததையும் அவருடைய கட்சி இன்றளவும் அதிகாரத்தில் இருக்க முடிவதையும் நாம் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வார இதழ் ஒன்று நடத்திய மக்களின் மனநிலை அறியும் கருத்துக் கணிப்பில் இந்திரா காந்தி சக்தி வாய்ந்த தலைவராக அங்கீகரிக்கப்பட்டதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாதவராக இந்திரா வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவசரநிலைக்கால ஒடுக்குமுறைச் சட்டங்கள் தடா, பொடா என்னும் வெவ்வேறு பெயர்களில் நீடித்துக் கொண்டிருக்கின்றன. தேசபக்தி, மக்கள் நலன் என்னும் புனிதப் போர்வை போர்த்திய வாக்கியங்களால் அரசியல் சாசனம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் உள்ளோரும் அரசியல் கட்சியினரும் அழித் தொழிப்பு நடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்திரா காந்தியின் படு கொலையைத் தொடர்ந்து 1984இல் சீக்கியர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்குக் காங்கிரஸ் கட்சிக்கு ஒரேயொரு உவமை போதுமானதாக இருந்தது. மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்து அரசியல்ரீதியில் பலவீனப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 1991இல் நடந்த ராஜீவ்காந்தி படுகொலை புத்துயிரூட்டியது. சர்வதேச அளவில் தமிழர்கள்மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கும் அந்தப் படு கொலையைப் பயன்படுத்திக்கொண்டது ஆளும் வர்க்கம். 2002இல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டது ஒரு சோகமான நிகழ்வு. ஆனால், இஸ்லாமியச் சமூகத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கான அரசியல் துருப்புச்சீட்டாக அடிப்படைவாதிகளால் அந்நிகழ்வு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 2002இன் குஜராத் படுகொலைகள் நடத்தப்பட்ட விதம் குறித்த தெஹல்கா இதழின் புலனாய்வு முடிவுகள் (அவை முழுமையாகத் தமிழில் பிரசுரம் பெற்றிருக்கின்றன) அதிர்ச்சிதாங்கிகள் பொருத்தப்பட்ட பொதுச் சமூகத்தின் மீது எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. தமிழ்ச் சமூகத்தில் அது 'ஒரு ஆயிரம் வாசகர்'களுக்கான 'இலக்கியப் பிரதி'யாகச் சிறுத்துப்போனது.

கடந்த 32 வருடங்களில் மனித உரிமையாளர்கள்மீதும் சூழலியலாளர்கள்மீதும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் வாழ்வுரிமைக்காகப் போராடுபவர்களின் மீதும் நடத்தப்பட்டுள்ள எல்லாத் தாக்குதல்களும் நமக்கு வெறும் 'இலக்கியப் பிரதிகள்'! தீவிர இதழ்கள், அறிவுஜீவிகள் விவாதிப்பதற்கான விஷயாதாரங்கள்!

நர்மதா அணைக்கட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகப் பரிந்து பேசிய மேதா பட்கர், அருந்ததிராய் முதலானவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிங்கூர், நந்திகிராம், ஆந்திரம், சத்தீஸ்கர்களில் தம் நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகப் போராடிய விவசாயிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் சொல்லொணாச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பழங்குடிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நக்ஸலைட்டுகள் என முத்திரைகுத்தப்பட்டுக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட தர்மபுரி, தேனி முதலான பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், மேலவளவுப் படுகொலைகள், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்களம் ஆகிய தலித் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்தவிடாமல் ஜனநாயகத்தை முடக்கிவைத்த சாதி அரசியல், திண்ணியத்தில் தலித்துகளை மலம் தின்னச் செய்த காட்டு மிராண்டித்தனம் உள்ளிட்ட பெரிதும் சிறிதுமான எல்லா நிகழ்வுகளும் தீவிர இதழ்களின் 'இலக்கியப் பிரதி'களாகத்தான் நம் நினைவுகளில் இடம்பெற முடிந்திருக்கின்றன. உண்மையில் தன் ஜனநாயக உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் எவரொருவருமுடைய அக்கறைகளுக்குமுரியவை இவை.

1975க்குப் பிறகு நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோமா? அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வது தொடர்பான பதற்றம் நம்மிடையே உருவானது உண்மைதான்.

மனித உரிமைகள் தொடர்பான விவாதங்களும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் இயக்கப் பூர்வமான நடவடிக்கைகளும் கூர்மை பெற்றது அதற்குப் பின்னர் தான். சில ஆங்கில ஊடகங்கள் ஆட்சியாளர்களின் ஊழல்களை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதில் உறுதியாக நின்றன. சிதம்பரம் அண்ணா மலை நகரில் காவல் துறையினரின் பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினிக்காக நீதிகேட்டுப் போராடிய மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் செயல்பாடுகள் போன்றவை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு நம்பிக்கையூட்டுபவை. வீரப்பன் தேடுதல் வேட்டையில் சித்திரவதைக்குள்ளான மக்களுக்கு நீதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், அரவானிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் என ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள், டைட்டானியம் தொழிற்சாலைக்கு உருவான எதிர்ப்பு போன்ற நம்பிக்கை தரும் பல உதாரணங்கள் இருக்கின்றன. சில வெற்றிகளையும்கூட சிவில் சமூகம் பெற்றிருக்கிறது.

ஆனால், அவநம்பிக்கை தரும் உதாரணங்களே அதிகம். அவசர நிலையால் அதிகம் பாதிப்புக்குள்ளான திமுகழகம் இரண்டரையாண்டுகளுக்குள் நிலையான ஆட்சிதர நேருவின் மகளை அழைத்த கதை, தேர்தல் ஆதாயங்களுக்காக பிஜேபியுடன் தோள் சேர்ந்த கதை, ஜெயலலிதாவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் பொடாச் சட்டத்தில் 500 நாட்களுக்கும் மேலாகச் சிறைவாசம் இருந்த 'புரட்சிப்புயல்' இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்காகப் போயஸ் தோட்டத்திற்குள் சரண்புகுந்த கதை, தம் உரிமைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களில் மூன்றரை லட்சம் பேர்களை எவ்விதமான சட்ட, தார்மீக நெறிகளையும் பின்பற்றாமல் இரவோடு இரவாகப் பணிநீக்கம் செய்த கதை, முன்னாள் முதல்வரை நள்ளிரவில் கைதுசெய்து தெருவில் இழுத்துவந்த கதை எனப் பல பெருங்கதையாடல்களும் குறுங் கதையாடல்களும் நம் அண்மைக் காலத்திய சரித்திரப் பக்கங்களில் அவநம்பிக்கையூட்டும் உதாரணங்களாக நிறைந்து கிடக்கின்றன. தமிழின் பெரிய ஊடகங்கள் பலவும் இந்தச் சரித்திரங்களுக்குப் பக்கங்களை ஒதுக்கியதில்லை. விவாதங்களும் மாற்றுப் பார்வைகளுமற்ற பரபரப்புச் செய்திகளாகச் சுருக்கப்பட்டு இச்சரித்திரங்கள் தமிழ் வெகு மக்கள் ஊடகங்களில் இடம்பெற்றதை அறிவோம். இது போன்ற சூழலில் தமிழ் மாற்று இதழ்கள் ஆற்றியுள்ள, ஆற்றிவரும் எதிர்வினைகள் சார்ந்தே நாம் நமது நம்பிக்கைகளை வலுவூட்டிக்கொள்ள முடியும். கடந்த பல பத்தாண்டுகளாகத் தமிழில் செயல்பட்டுவரும் மாற்று இதழ் இயக்கம் மேற்குறிப்பிட்ட எல்லாவற்றுக்குமான வெளியாக இருந்துவந்துள்ளதை நினைவுகூர்வதோடு சிவில் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியில் தன் இருபதாண்டுகாலப் பயணத்தில் காலச்சுவடு ஒரு இதழாகவும் இயக்கமாகவும் அளித்துவந்துள்ள ஏராளமான பங்களிப்புகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

"தமிழ் வாழ்வின் சகல பரிமாணங்கள்மீதும் இருள் கவிந்துகொண்டிருக்கும் பொழுதில் நம்முடைய புகைபடிந்த குரல்களைத் துலக்கிப் புதுப்பிக்க வேண்டியவர்களாகிறோம், நிலைக் கண்ணாடிமுன் நின்று நம் பிம்பங்களுக்குச் சூட்டிய மாலைகள் கருகிக்கொண்டிருக்கின்றன. தீவிர விழிப்பினூடாக நமது மௌனங் களையும் மர்மங்களையும் கலைந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வெகுஜன வணிக நடவடிக்கைகள் நம் வாழ்வு, சிந்தனை மற்றும் ரசனையின் புல்வெளிகளையும் நீர் நிலைகளையும் நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன. பண்பாட்டுச் சூழலில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் தங்குதடையற்ற வன்முறைகளுக்கும் நாச வேலைகளுக்கும் மத்தியில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள மாற்றுக் குரல்கள், உயரிய மதிப்பீடுகளுக்கான குரல்கள் தொடர்ந்து போராடிவருகின்றன. அக்குரல்கள் சமூகத்தால் பாதாள அறைகளுக்கு அனுப்பப்பட்டுத் தனிமையில் வைக்கப்படுகின்றன. மிகவும் பலவீனமான நிலையிலிருக்கும் மாற்றுக் கலாச்சாரத்திற்கான நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது பிரக்ஞையின் தளத்தில் இயங்கும் ஒவ்வொரு வரது பொறுப்பாகிறது, நமது சமூகத்தில் நமக்கான இயங்கும் வெளியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்."  

அக்டோபர் 1994இல் இரண்டாவதுமுறையாக வெளிவந்த தருணத்தில் காலச்சுவடு இதழ் 9இன் தலையங்க வரிகள் இவை. இவ்வரிகள் குறித்த கவனத்தோடு அது தன் படைப்புப் பக்கங்களைத் தயாரித்து வந்துள்ளதை அதன் வாசகர்கள் அறிவர். தமிழ்ப் படைப்புலகில் தீவிரக் கவனம் பெற்றுவந்த தலித் சிந்தனைகள் சார்ந்த அவற்றின் தாக்கத்தினால் உருப்பெற்ற ஏராளமான சிறு கதைகளைக் காலச்சுவடு தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது. பெண்ணியம் சார்ந்து வெளிவந்த ஏராளமான சிறுகதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கெதிரான காலச்சுவடின் மனோபாவத்திற்குச் சான்றுகள். ஈழ எழுத்தாளர்களின் எண்ணற்ற படைப்புகளுக்குத் தொடர்ந்து அதிகப் பக்கங்களை ஒதுக்கிவந்துள்ள காலச்சுவடு அவர்களுடைய துயரங்களையும் கோபங்களையும் விரிவாகப் பதிவுசெய்துள்ளது. அதுபோல் மனித உரிமை சார்ந்த காலச்சுவடின் அக்கறைகளுக்குப் பல பதிவுகளை உதாரணமாகச் சொல்ல முடியும். தன் சிறப்புப் பகுதிகளின் வாயிலாகவும் பல பதிவுகளை விரிவாக மேற் கொண்டுள்ளது.

கோத்ரா நிகழ்வுகளைத் தொடர்ந்து நரேந்திர மோடியால் இஸ்லாமியர்கள்மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் குறித்துக் காலச்சுவடு (இதழ் 41, 42) வெளியிட்ட 'மிருக வெளி' என்னும் சிறப்புப் பகுதி தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற முக்கியமான பகுதிகளில் ஒன்று. ஈழத் தமிழர்களின் மீதான தாக்குதல்களைக் கவனப்படுத்தும் எண்ணற்ற பதிவுகளைக் கட்டுரைகளாகவும் இலக்கியப் படைப்புகளாகவும் 1988இல் வெளிவந்த சு. ரா.வின் காலச்சுவடு இதழ் 2இல் இடம்பெற்றுள்ள நா.அமுதசாகரனின் 'சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்' என்னும் 'இந்திய அமைதிப்படை'யினர் நிகழ்த்திய வன்கொடுமைகளை அம்பலப்படுத்தும் கட்டுரைத் தொடங்கி இன்றுவரையிலும் காலச்சுவடு வெளியிட்டுவந்துள்ளது. புலம் பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைக் கவனப்படுத்தும் சிறப்புப் பகுதி இவ்வகையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஈழத் தமிழர்களின் படைப்புகளை விரிவாக வெளியிட்டு வரும் இதழ் எனப் பெருமிதத்தோடு கூறிக் கொள்ளும் அளவுக்குக் காலச்சுவடு ஈழத் தமிழ் படைப்புகளுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. கோவைக் கலவரம் குறித்த மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற உண்மை அறியும் குழுவின் அறிக்கையை முழுமையாக வெளியிட்டுள்ள ஒரே தீவிர இதழ் காலச்சுவடு தான் என்பதையும் இங்கே சுட்டிக் காட்டலாம்.

எழுத்தாளரும் தலித் சிந்தனையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ரவிக்குமார் தன் பத்திகளிலும் கட்டுரைகளிலும் விளிம்புநிலை மக்களின் பறிபோகும் வாழ்வியல் உரிமைகளைப் பற்றி விரிவான உரையாடல்களை நிகழ்த்திவந்துள்ளார்.

ஓவியர் எம். எப். உசேன், எழுத்தாளர்கள் அருந்ததிராய், தஸ்லிமா நஸ்ரின், ரவிக்குமார் போன்றோர் தாக்குதலுக்குள்ளானபோது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளது காலச்சுவடு.

காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்ட ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் என்னும் மலையாள மொழியாக்க நூல் அவசரநிலைக் காலத்தில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட கேரள மாணவர் ராஜனின் தந்தையால் எழுதப்பட்டது. மனித உரிமை சார்ந்த மிக முக்கியமான புத்தகம் இது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கேரள மலையின மக்கள் உரிமைப் போராளி சி. கே. ஜானு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நளினி ஜமீலா போன்றோரது சுயசரிதங்கள் மனித உரிமைகளின் பால் காலச்சுவடு கொண்டுள்ள அக்கறைக்கு வலுவான சான்றுகள்.

இந்துத்துவ இயக்கங்களின் பாசிசப் போக்கைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் காலச்சுவடு, குஜராத் படுகொலைகளைக் கண்டித்து 2002 ஜூன் 6ஆம் தேதி சென்னைத் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இதழியலாளர்கள் பங்குபெற்ற கண்டனக் கூட்டம் ஒன்றினை நடத்தியதோடு வன்முறையால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு உதவ நிவாரணநிதி திரட்டும் விதத்தில் பல்வேறு கலைஞர்களின் ஒத்துழைப்புடன் ஓவியக் காட்சி ஒன்றை நடத்தியது. தூரிகைகளுடனும் வண்ணங்களுடனும் திரண்ட ஓவியக்கலைஞர்கள் குஜராத் துயரங்களை ஓவியங்களாகத் தீட்டி அக் கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். வாசகர்களும் சமூக ஆர்வலர்களும் அளித்த நிவாரணநிதி ரூ.1,04,800/- பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து அடிப்படைவாதிகளைத் தன் பக்கங்களில் கடுமையாக விமர்சித்து வந்துள்ள காலச்சுவடு மனித உரிமை சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டுவந்துள்ளதை வாசகர்கள் அறிவர்.

2004இல் பெண் கவிஞர்களின் மீதான கருத்தியல் வன்முறையைக் கண்டித்துத் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடத்திய கண்டனக் கூட்டத்தையும் இத்துடன் சேர்த்துக் குறிப்பிடலாம். சமகாலத்திய சமூக அரசியல் நிகழ்வுகள்மீது காலச்சுவடு செலுத்திய அக்கறைகளுக்குச் சில உதாரணங்கள்: நந்தி கிராம் படுகொலைகள் தொடர்பான தலையங்கம் மற்றும் அது சார்ந்த எதிர்வினைகள், சிங்கூர் விவசாய நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் குறித்த உண்மை சார்ந்த பதிவுகள், டைட்டானியம் தொழிற்சாலை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், இந்திய அமெரிக்க சிவில் அணு ஒப்பந்தத்தின் தீமைகள், சேதுக் கால்வாய்த் திட்டத்தின் சூழலியல் சார்ந்த பாதிப்புகள், மதுரைத் தினகரன் ஊழியர்கள் எரிப்பு என எண்ணற்ற மனித உரிமை, வாழ்வுரிமை சார்ந்த விவாதங்களைத் தன் பக்கங்களில் நிகழ்த்திவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இப்பொழுது இங்கே இந்தக் கருத்தரங்கமும் நடை பெறுகிறது. ஜனநாயகத்துக்கு ஆதாரமான இப்பொருள் குறித்த விவாதங்களை மேலெடுத்துச் செல்வதில் வாசகர்களும் எழுத்தாளர்களும் இதழியலாளர்களும் பங்களிப்பாளர்கள் என நம்புகிறோம்.

n

'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை யின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.

உள்ளடக்கம்