தன் இதழியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் காலச்சுவடு பல்வேறு சந்திப்புகளையும்
கூட்டங்களையும் நடத்திவருவதையும் இக்கூட்டங்களில் கலை இலக்கியம் சார்ந்து
மட்டுமல்லாமல் சமூக வாழ்வின் அக்கறைக்குரிய பல்வேறு கூறுகள் சார்ந்தும் விரிவான
விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுவருவதையும் வாசகர்கள் அறிவர். ஒரு தீவிர இதழ் ஆற்ற
வேண்டிய சமூகக் கடமைகளில் ஒன்றாகவே காலச்சுவடு இத்தகைய கூட்டங்களையும்
சந்திப்புகளையும் கருதிச் செயல்பட்டுவருகிறது. கடந்த 14.06.2008 அன்று சென்னை புக்
பாயிண்ட் அரங்கில் காலச்சுவடு நடத்திய 'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' என்னும்
தலைப்பிலான கருத்தரங்கும் அந்த வகையில் முக்கியமானது.
ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் தொடர்ந்து சோதனைகளுக்குள்ளாகிவரும்
கருத்துரிமை, வாழ்வுரிமை சார்ந்த பிரச்சினைகளில் அக்கறையோடு இயங்கிவரும்
படைப்பிலக்கியவாதிகள், இதழியலாளர்கள், மனித உரிமைப் போராளிகள் பங்குபெற்ற
இக்கருத்தரங்கிற்குத் திரளான வாசகர்கள் வந்திருந்தனர். பிற்பகல் 5.30 மணிக்குக்
காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதியின் கட்டுரையோடு நிகழ்வு தொடங்கியது.
தொடர்ந்து எழுத்தாளர் ராஜேந்திர சோழன், தியாகு, அனிருத்தன் வாசுதேவன், பேராசிரியர்
கல்யாணி, ஓவியா, சதானந்த் மேனன், கிருஷ்ணானந்த், பா. செயப்பிரகாசம் ஆகியோர்
கலந்துகொண்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகள் மனித உரிமைகள் சார்ந்து
கடைபிடித்துவந்துள்ள கொள்கைகளின் அரசியலைக் குறித்துத் தம் கருத்துகளை விரிவாகப்
பதிவுசெய்தனர். கருத்துரிமை சார்ந்த விவாதங்களைத் தொடர்ந்து நடத்துவதும் எதிர்ப்பு
நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதும் இன்றைய தேவை என்பதை அனைவரும்
வலியுறுத்தினர். தீவிர இதழ் தளத்தில் இயங்கிவரும் பத்திரிகையாளர்களுக்கும்
எழுத்தாளர்களுக்கும் கருத்துரிமையைப் பாதுகாப்பதில் முக்கியப் பொறுப்புள்ளது
என்பதும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கியமான கருத்து.
காலச்சுவடு ஆசிரியரும் பதிப்பாளருமான கண்ணன் நன்றி கூறினார். கருத்தரங்கில்
வாசிக்கப்பட்ட தேவிபாரதி, அனிருத்தன் வாசுதேவன் ஆகியோரது கட்டுரைகள் இங்கு
பிரசுரிக்கப்படுகின்றன. கருத்துரிமை சார்ந்த விவாதங்களை விரிவுபடுத்தும் விதத்தில்
ஜி.குப்புசாமி, கவிதா, அஷிஸ் நந்தி, சக்கரியா ஆகியோரது கட்டுரைகளும் ஓவியர் எம். எப்.
ஹ§சைனின் நேர்காணலும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
பொறுப்பாசிரியர்
|