Google   www kalachuvadu.com

தலையங்கம்
இலவு காத்த கிளிகளா இடதுசாரிகள்?

ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அரசை ஆதரித்து 275 வாக்குகளும் அரசுக்கு எதிராக 256 வாக்குகளும் பதிவாகியுள்ளன. தம் ஆதரவு இல்லாமல், அரசு பதவியில் நீடிக்க முடியாது என நம்பிக்கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகளுக்கு இது பெரிய தோல்வி. மன்மோகன் அரசை அப்புறப்படுத்தியே தீருவது எனக் கடந்த 20 நாள்களாக வரிந்துகட்டிக்கொண்டு செயல்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்துக்குப் பூசிமெழுகி அந்தத் தோல்வியை மறைக்கக்கூட முடியவில்லை. வாக்கெடுப்பு முடிந்தவுடன் ஜூலை 22ஆம் தேதியை நாடாளுமன்ற வரலாற்றின் ஒரு கருப்பு நாளாக வர்ணித்தபொழுது காரத்தின் முகம் இறுகியிருந்தது. அரசுக்கு எதிரான வாக்குகள் குறித்த தன் மனக்கணக்குகள் பொய்த்துப்போனது மட்டும் அவரது இறுக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. அந்தத் தருணத்தில் கம்யூனிஸ்ட் என்ற ரீதியில் கட்சி இழைத்த தவறுகள் குறித்த சுயவிமர்சனத்தை அவர் மிக அந்தரங்கமாக நிகழ்த்திக்கொண்டிருந்திருக்கலாம்.

நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது எனக் காரணம் காட்டித் தொடக்கம் முதலே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துவரும் இடதுசாரிகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் மன்மோகன் அரசு காட்டிய மூர்க்கத்தைத் தொடர்ந்து தம் ஆதரவை விலக்கிக்கொண்டது அரசியல்ரீதியில் சரியான முடிவுதான். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசைத் தோற்கடிப்பதற்கு, இடதுசாரிகள் மேற்கொண்ட வழிமுறைகள் பரிசீலனைக்குரியவை. அரசைக் கவிழ்ப்பதற்கான எண்ணிக்கை பலம் இல்லாத நிலையில், மாயாவதியுடனும் வேறு சில உதிரிக் கட்சிகளுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி ஒன்றுக்கு அவசர அவசரமாக முயன்றது இடதுசாரி அணி. தெலுங்கு தேசம் உள்ளிட்ட மூன்றாம் அணித் தலைவர்களுடன் சேர்ந்து மாயாவதிக்கு பிரதமர் ஆசைகாட்டி அவரது ஆதரவைப் பெறுவதில் இடதுசாரிகள் வெற்றிபெற்றிருந்தாலும் அவர்களால் காங்கிரசின் அதிகார பலத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை.

பலம் பொருந்திய பாஜகவின் நான்கு உறுப்பினர்கள் உள்பட மொத்தம் ஏழு உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதிலும் பத்து உறுப்பினர்களை வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கச்செய்வதிலும் இது போன்ற 'அரசியல்' நடவடிக்கைகளில் தேர்ந்த 'கை'யான காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் சிபு சோரனுடன் வெளிப்படையான பேரங்களை நிகழ்த்துவதற்கு அக்கட்சி கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. பேரங்கள் திறந்தவெளியிலேயே நிகழ்த்தப்பட்டன. உறுப்பினர்களுக்கு 25கோடியிலிருந்து 100கோடி வரை கொடுக்கப்படுவதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைப் பொருட்படுத்தக்கூட யாருமில்லை. மன்மோகனுக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கனவுகளுடன் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டுக்கொண்டிருந்த பாஜகவுக்கு மாயாவதியை மையப்படுத்தி உருவான புதிய அணிச் சேர்க்கை பேரதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும். அரசியல்ரீதியில் எந்தவொரு நிச்சயமான நிலையையும் மேற்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்த பாஜகவுக்குக் கடைசியில் தன் சொந்த மக்களவை உறுப்பினர்களைத் தக்க வைத்துக்கொள்வதே பெரும்பாடாகிவிட்டது. எவ்வித மாற்றுத் திட்டங்களுமில்லாமல் ஒப்பந்தம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்னும் ஒற்றைவரியைத் திரும்பத் திரும்பச் சொல்லி வெறுமனே புலம்பிக்கொண்டிருந்த எதிரணியைக் காங்கிரஸ் பொருட்படுத்தவே இல்லை. தேவைப்படும் எண்ணிக்கையை 'எப்படியும்' பெற்றுவிட முடியும் என்பதில் தொடக்கம் முதலே மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது காங்கிரஸ்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியலின் சக்திவாய்ந்த ஒரு முகமாகத் தென்பட்ட இடதுசாரிகள் செய்த தவறு என்ன? ஒப்பந்தம் குறித்த சர்ச்சை தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டாண்டுகளில் ஒப்பந்தத்திற்கெதிரான தம் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் எந்தவொரு பொருட்படுத்தத்தக்க முயற்சியையும் இடதுசாரிகள் மேற்கொள்ளவில்லை. ஆளும் தரப்போடு அது நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளின் விவரங்களும் வெளியிடப்படவில்லை. இடதுசாரிகளின் வெளிப்படைத் தன்மையற்ற இந்தப் போக்கு ஜனநாயகவாதிகளிடமிருந்து அவர்களை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தியிருந்தது என்பதைக்கூட இடதுசாரிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்தைக் காங்கிரஸ் உடனடியாகக் கொண்டுவந்தபொழுது அவர்கள் திகைத்துப்போய்விட்டார்கள். எதிரணியினருக்கு 'மரபான' வழிமுறைகளைத் தவிர செய்வதற்கு வேறு எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. காங்கிரசின் பரம வைரியும் எதிர்க்கட்சியுமான பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்னும் நம்பிக்கையில் அந்தக் கட்சியின் எண்ணிக்கையையும் தம் கணக்கில் சேர்த்துக்கொண்டனர் இடதுசாரிகள்.

ஆள் பிடிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியதால் ஒப்பந்தத்தின் சாதகபாதகங்கள் குறித்து விவாதிப்பதற்கு யாருக்குமே அவகாசம் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கேகூட இந்த ஒப்பந்தம் புரியவில்லை. எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதை ªளிப்படையாகச் சொல்லுமளவுக்குத் 'துணிச்ச'லுடையவராயிருந்தார். ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்கு முன்னால் அது பற்றி முன்னாள் குடியரசுத் தலைவரிடம் ஆலோசனை கேட்டதாகச் சொல்லும் சமாஜ்வாடிக் கட்சியின் அமர்சிங், ஒப்பந்தம் பற்றித் தனக்கோ தன் கட்சிக்கோ அதுவரை எதுவும் தெரியாது எனத் தெஹல்காவுக்கு அளித்த பேட்டியில் ஒத்துக்கொண்டார். ஒப்பந்தம் செயல்படுத்தப்படாவிட்டால் நாட்டின் எதிர்காலமே இருண்டுபோய்விடும் என்பன போன்ற கட்டுக்கதைகளை எதிர்கொள்வதற்கு எதிரணிகளில் யாருமே இல்லாததுதான் சோகம். கடைசியில் ஒப்பந்தம் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரானது என ஒரு அஸ்த்திரத்தைப் பிரயோகித்தனர் இடதுசாரிகள். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டித் தம் பக்கம் இழுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அமெரிக்காவின்பால் இஸ்லாமிய சமூகம்கொண்டுள்ள பதற்றம் அதன் வெளியுறவுக் கொள்கைகள் சார்ந்தது. அமெரிக்காவின் சமூக அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவை நேரடியாகப் பாதிக்கக்கூடியவை. அது இந்திய இஸ்லாமிய சமூகத்தை மட்டும் பாதிக்கக்கூடியது என்னும் ஒரு கருத்தைக் கட்டமைப்பது அபாயகரமானது. இப்படியரு வாதத்தை முன்வைத்ததன் மூலம் இடதுசாரிக் கட்சிகள் இஸ்லாமியர்களை மைய நீரோட்ட அரசியலிலிருந்து தனிமைப்படுத்துகின்றன. அப்படியானால் இந்த ஒப்பந்தம் இந்துக்களுக்குச் சாதகமானதா என்னும் கேள்வி எழுகிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் தனிக் குடியரசாகவா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்? 'செகுலாரிஸ்டு'களான இடதுசாரிகளின் இத்தகைய மதவாத அரசியலைப் பார்த்து பாஜகவே திகைத்துப்போயிருக்கும்.

இடதுசாரிகள் உண்மையிலேயே அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பதானால் அவர்கள் வேறு வகையில் போராட வேண்டும். அவர்கள் மக்களிடம் செல்ல வேண்டும். ஒப்பந்தம் தொடர்பான திரைமறைவு விவாதங்களைக் குறித்த உண்மைகளை மக்களுக்குச் சொல்ல அவர்கள் முன்வர வேண்டும். ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் உண்மையான தீவிரம் காட்டிவரும் அறிவுஜீவிகள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள், போர் எதிர்ப்பாளர்கள் எனப் பலரது கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் ஜனநாயகப் பண்பு அவர்களுக்கு வர வேண்டும். இன்னும் சில மாதங்கள் மட்டுமே நீடித்திருக்கக்கூடிய தற்போதைய நாடாளுமன்றத்தின் மிக நீண்ட தாழ்வாரங்களின் நிழலில் இலவு காத்த கிளிகளைப் போல இறுக்கமான முகங்களுடன் உட்கார்ந்தபடி எண்ணிக்கை சார்ந்த மனக் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருப்பதைவிட அது எவ்வளவோ பயனளிக்கக்கூடியது.

உள்ளடக்கம்