Google   www kalachuvadu.com

நாவல்
கா
நாவலிலிருந்து ஒரு பகுதி
ராபர்ட்டோ களஸ்ஸோ
தமிழாக்கம்: ஆனந்த் - ரவி

சிவன் செவ்வகில் மரக்காட்டை நோக்கிக் கடுமையாக முயன்று மலையேறிக்கொண்டிருந்தார். தனக்கு முன்பாகச் சென்றிருந்த பயணிகளின் சுவடுகளை எப்போதாவதுதான் கண்டார். தன் விழிப்பு நிலையில் வேகவேகமாகச் சென்றுகொண்டிருந்தவருக்கு இயற்கை முகமன் கூறிற்று. கடந்து செல்லும் ஒருவருக்குச் சரணா லயமொன்றுக்குப் போகும்போது வழியைத் தவறவிட்ட ஒரு யாத்ரிகனைப் போலவோ அல்லது ஒரு பிச்சைக்காரனைப் போலவோ தோன்றியிருப்பார் அல்லது தன் பாதங்களில் இருந்து கண்களை உயர்த்தி இருந்தால், மலையில் ஒளிந்துகொள்ளப்போகும் கொள்ளைக்காரனைப் போல் தெரிந்திருப்பார். உலகத்திற்குள் இருந்து கொண்டு உலகத்தைப் புறக்கணித்தபடி இருக்கும் ஒரு இடத்தை, தானே தனக்குப் போதுமானதாக இருக்கும் அந்த ஒரு இடத்தை, அவர் தேடிக்கொண்டிருந்தார். சிலவேளைகளில் புதரிலிருந்து ஒரு மான் வெளிவந்து, அவர் வழங்கும் இலைகளை உண்பதற்காகத் தன் பின்னங்கால்களை ஊன்றி, சிவனின் கைகளை நோக்கித் தனது முகவாயை நீட்டும். அவர்கள் கண்கள் சந்தித்து, அடையாளம் கண்டுவிட்ட ஒரு தெறிப்பும் உண்டாகும். அந்தக் கணத்தில் அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிந்த ஒரே உயிரினம் அதுதான்.

செவ்வகில் மரக்காட்டில் வாழ்வு அமைதியாக, அநேகமாக எந்த இயக்கமும் அற்று இருந்தது. சமூகத்துடனான பிணைப்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டவர்கள் அங்கே ஒரு சமூகமாக வாழ்ந்தார்கள். உயரமான மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையில், மரக்குச்சிகளாலான செப்பமில்லாத குடிசைகள் ஒன்றுக்கொன்று இடைவெளிவிட்டு, ஆனால் ஒன்றின் பார்வையில் மற்றது உள்ளதாக, அங்கங்கே அமைந்திருந்தன. ஒரு நிலையான ஓசை: நீரோட்டத்தின் ஓசை - சில சமயங்களில் அது காற்றின் வலிமையான சலசலப்போடு ஒன்றி ஒலித்தது. இங்கே ரிஷிகளும் அவர்கள் பத்தினிகளும் வாழ்ந்தனர். சந்தையில்லை, வண்டிகளில்லை, படைவீரர்களில்லை, ஒரு சமுதாயத்தை உருவாக்கக்கூடிய இவை எதுவும் அங்கே இல்லை. இருந்தும் அங்கு வாழ்பவர்கள் சிந்தனையையும் செயல்பாட்டின் ஒவ்வொரு விதியையும் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய பேசிக்கொள்ளப்படாத ஒப்பந்தம் அவ்வாறாக இருந்ததால், அந்த இடம் ஒரு கடினமான, தெள்ளத் தெளிவான பாறையைப் போல இருந்தது. அற்புதமான, பெருமிதம் கொண்ட தனித்த பெண்கள் காட்டு வழிகளில் நடந்தனர். தண்ணீர் எடுத்துவர, குளிக்க, அல்லது உற்றவர்களைப் பார்க்க வென்று போய்க்கொண்டிருந்தார்கள். ரிஷிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று கேட்பது அர்த்த மற்றது: அவர்கள் தவம் செய்துகொண்டிருந்தார்கள். இதுதான் முழுமையா? அல்லது வெறுமையா? அது மனச்சோர்வா? விடுதலையா? அது நினைவா? துறவா அல்லது மகிழ்ச்சியா? யாரும் எந்தவொரு நிச்சயத்தோடும் அதை நிறுவியதில்லை. அந்த அசைவற்ற நிலையில் உடன் குடியிருந்தது ஐயம்.

செவ்வகில் மரக்காட்டு ரிஷிகளின் வாழ்வைக் குலைக்கச் சிவன் ஏன் விரும்பினார்? கைலாயத்தில் அவர் வாழ்ந்த வாழ்வுக்கு மிக நெருங்கியதாக அல்லவா இருந்தது அவர்கள் வாழ்வு? இடையறாத தவம் அல்லவா அது, மனத்தையும் காமத்தையும் கைவிட்ட தூய துறவல்லவா, அனைத்து உலகிலும் சிவனின் சுவாசத்துக்கு ஈடான ஒன்றல்லவா? தன் துணையோடு, ஒரு தபஸ்வினியோடு, தனிமையிலும் உள்வாங்கிய நிலையிலும் வாழ்வது, சதியின் பார்வையைத் தவிர வேறு யாருடைய பார்வையையும் சந்திக்காமல் சிவன் வாழ்ந்த அந்த மகிழ்ச்சியான காலம் மீண்டும் திரும்புவதுபோல் இல்லையா? அல்லது உண்மையில் அதுதான் சிவனின் வன்மத்தைத் தூண்டிவிட்டதா?

செவ்வகில் மரக்காட்டில் இருந்த ஒரு திருத்தப்பட்ட நிலத்திட்டில் பெண்களின் குழுவொன்று விறகுகளையும் பூக்களையும் சேகரித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நேரம். அவர்கள் அறியாத மனிதன் ஒருவன் ஒரு புதரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர். அவன் அரை நிர்வாணமாக இருந்தான், அவன் உடல் சாம்பல் பூசி வெளிறிய நிறத்தில் இருந்தது. ஆனால், அங்கங்கே தெரிந்த தோல் பொன்னென மின்னியது. அவன் தலைமுடி அடர்ந்து, கறுத்து, பின்னலிடப்பட்டிருந்தது. தன் கையில் ஒரு பாத்திரத்தை வைத்திருந்தான். ஒன்றும் பேசவில்லை. பெண்கள் அனைவரும் அவனைப் பார்ப்பதற்காகத் திரும்பினார்கள். அந்த அமைதியில் அவன் தனது பற்களைக் காட்டினான், அவை திகிலூட்டுபவையாக இருந்தன. பிறகு அவன் சிரிக்கத் தொடங்கினான். இதுவரை அவர்கள் கேட்டிராத ஒரு ஒலியுடன் சிரிக்கத் தொடங்கினான். ஒரு வட்டத்துக்குள் அவனை அடைத்துவிடுவதைப் போல் பெண்கள் அவனை நோக்கிச் சென்றனர். ஆனால் சிவன் அவர்களைக் கவனியாமல் அவர்களூடே நடந்துபோனார். அவர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பெண்கள் அவருக்குப் பின்னால் வரிசையாகத் தொடர்ந்தார்கள். அவர்கள் மிக மெதுவாகத் தங்களது தொடைகளை அசைக்கத் தொடங்கினார்கள். இப்போது சிவன் அமைதியாக இருக்க, அந்தப் பாம்பு போன்ற ஊர்வலத்தின் கூடவே சிரிப்பும் ஊர்ந்து சென்றது. அதே சமயத்தில், வீட்டு வேலைகளைச் செய்வதற்காகத் தங்கியிருந்த ரிஷிகளின் வீட்டுப் பெண்கள், தங்கள் வேலைகளை நிறுத்தினர். தாங்கள் செய்துகொண்டிருந்ததை மறந்தனர். ஏதோவொன்று அவர்களைச் சாளரங்களுக்கும் கதவுகளுக்கும் இழுத்தது. தங்கள் இரவு உடையிலேயே சிலர் வெளியே வந்தனர். மற்ற சிலர் அடுக்களையில் இருந்தோ ஒப்பனை மேடைகளில் இருந்தோ வந்தனர். அவர்களது மணிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்த வளையல்கள் விழுந்த இடத்திலேயே கிடந்தன. அந்தப் பெண்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஒருவர் பின் ஒருவராகச் சாலையில் நடக்கத் தொடங்கினர். அவர்கள் பாதங்கள் சிறிய நடன அசைவுகளை மேற்கொண்டன; இடுப்புகள் மிக லேசாக அசைந்தன. கடைசியில் உள்ள குடிசைகளை அடைந்தபோது, அந்தப் புதியவன் தங்களை நோக்கி வருவதைக்கண்டனர். தொடர்ந்துவந்த ஊர்வலத்தோடு இணைந்து, அவர்களும் மற்றவர்களோடு சேர்ந்து நடந்தனர்.

செவ்வகில் மரக்காட்டை அடைவதற்குச் சற்று முன்பாகச் சிவன், விஷ்ணுவை அழைத்து அவரை மோகினியின் உருவத்தை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தார். மோகினி அற்புதமான விண்ணுலகக் கணிகை. அவளுடைய மாயச் செயல்களுக்குக் கடவுளர் மிகப் பெரிய அளவில் கடமைப்பட்டிருந்தனர். அன்று மோகினி துணிக்கீற்றுகளாலும் ஆபரணங்களாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு தோன்றினாள். சாம்பலால் காய்ந்துபோயிருந்த சிவனின் கை, சந்தனத்தைலம் பூசியிருந்த மோகினியின் கையைப் பற்றிக்கொண்டது. இவ்வாறாகச் சகோதரனும் சகோதரியும்போல் அவர்கள் ஒன்றாகச் சிறிது நேரம் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். பிறகு வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றனர்.

ரிஷிகள் அமைதி இழந்திருந்தனர். இயற்கையின் எழுச்சி அவர்களுக்குத் தொல்லையாக அமைந்தது. காலைப் பனிமூட்டத்தில் அவர்கள் தலையில் ஆவி பறந்தது. பருவகாலச் சுழற்சிக்கு மீண்டும் ஆட்படப் போகிறோம் என்று எரிச்சல்கொண்டனர். ஆனால் உண்மையிலேயே அவர்கள் முக்தி அடைந்திருந்தால், ஏன் இந்த எரிச்சல்? அங்கே ஒரு அசாதாரணமான அமைதி சூழ்ந்திருந்தது. நிச்சயத்தன்மை தரும் வீட்டுச் சூழ்நிலையின் மாற்றமில்லாத ஓசை அங்கு இல்லாதிருந்தது. இது குளிக்கப் போக வேண்டிய வேளையாக இருக்கலாம் என்று அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் நினைத்தனர். நதிக்குப் போகும் வழியில் அவர்கள் மோகினியைச் சந்தித்தனர். அந்தச் சக்தி வாய்ந்த மனிதர்கள், மிகவும் தீர்க்கமாகவும் தீவிரமாகவும் ஆவல் பொங்கும் கண்களோடு அவளைத் தொடர்ந்தனர். நீண்ட வெள்ளை உடைகளுக்கு அடியில் குறிகள் விறைக்கத் தொடங்கின. நதிக்கு அருகில் அமர்ந்து அந்தப் புதிய அழகியுடன் பேச விரும்பினார்கள். சந்தேகமின்றி உள்ள உலகங்கள் அனைத்தும் தெரிந்த அவள், மதுபான விடுதிகள், அரண்மனைகள், படுக்கையறைகள், துறைமுகங்கள், கப்பல்கள், குதிரைகள், ரோஜா மலர்கள் ஆகியவற்றின் வாசத்தை உடையாக அணிந்திருந்தாள். மீண்டும் தங்களை ஏளனப்படுத்தத் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்த ஒரு அப்சரஸாக இருப்பாளோ அவள்? அல்ல, லேசாக இடையசைத்துக்கொண்டு அவர்களுக்கு முன்னால் போகும் இந்தப் பெண்ணிடம் இருந்த ஏதோ ஒன்று, அவர்கள் முன்னம் அறிந்திருந்த இன்பங்களுக்கெல்லாம் மேலானதாக இருந்தது. ரிஷிகள் ஒருவருக்கொருவர் காலைவணக்கம்கூடச் சொல்லிக் கொள்ளவில்லை. தான் மட்டும் அவளைத் தொடர்வதான எண்ணத்தில் மோகினியைத் தொடர்ந்தனர் ஒவ்வொருவரும். சட்டென்று சிரிப்பு, கத்தல், மணிகள், ஜால்ராக்கள், கஞ்சிரா ஆகியவற்றின் குழப்பமான ஒலி காட்டிலிருந்து கேட்டது. ரிஷிகளின் அசைந்தாடும் ஊர்வலம் மற்றொரு அசைந்தாடும் ஊர்வலத்தில் போய் மோதிக்கொண்டது. அவர்கள் தங்கள் பத்தினிகளைக் கண்டுகொண்டனர். இவர்கள் யாரும் அறிந்திராத ஒரு மனிதனை அவர்கள் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், அவன் சரியானவன் அல்ல. அவனை எடைபோட இது நேரமல்ல. ஏற்கனவே இரண்டு ஊர்வலங்களும் கலந்துகொண்டிருக்கின்றன. சட்டென்று ஒரு கணத்தில் ரிஷிகள் முக பாவங்களை மாற்றிக்கொண்டு, தங்கள் பத்தினிகளைத் திட்ட ஆரம்பித்தனர். தங்கள் பத்தினிகளைத் தேடிக்கொண்டு கிராமத்திலிருந்து வந்ததாகக் கூறினார்கள். மேலும் அவர்கள் கலைந்த தலையுடன் ஒழுங்கற்ற உடையுடன் ஒரு அழுக்குப் பிச்சைக்காரனுக்குப் பின்னால் அணி சேர்ந்திருந்தார்கள். அவனை நிச்சயமாகத் தண்டிக்கத்தான் வேண்டும். ஆனால், எங்கே அவன்? அவர்கள் சுற்றிலும் தேடினார்கள். மோகினியையும் தேடினார்கள். அங்கே இருவருடைய சுவடுமில்லை. குழப்பத்துடன் கோபமாக, ஆயுதமேந்திய முரட்டுக் காவலில் உள்ள கைதிகளைப் போல் தங்கள் பத்தினிகளை வீடு திரும்புமாறு ரிஷிகள் ஆணையிட்டனர்.

ரிஷிகள் சிவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், சிவன் அவர்களில் சிலரைத் தனது மேன்மை வாய்ந்த சகலைகள் என அடையாளம் கண்டார். வசிஷ்டர், அத்ரி, புலஸ்தியர், ஆங்கிரஸர், புலகர், க்ரது, மரீசி - இவைதான் அருவருப்பான, சாம்பல் பூசிய அவளது மணமகனைக் குறித்து அவமானத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வெறுக்கத்தக்க அளவுக்கு மேட்டிமையுடன் தக்ஷன் சதியிடம் கடகடவென்று உதிர்த்த சில பெயர்கள். அவர்கள் சரியானவர்கள், சரியான விஷயங்களைச் செய்பவர்கள், சரியான எண்ணங்களை எண்ணியவர்கள். அவர்களில் சிலரைச் சிவன் ஏற்கனவே பார்த்திருக்கிறார். பூமியிலல்ல, வானத்தில், சப்தரிஷி மண்டலத்தின் நடுங்கும் ஒளியில் அவர்களைத் தொடர்ந்து கவனித்திருக்கிறார். வானில் அந்த ஒளிகள், அலைமோதும் நிழல்களின் ஊடாக, பழைமை குறித்த ஏக்கத்தோடு தொலைதூரத்திலிருந்த கிருத்திகையை, அவர்களின் பிரியமானவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. பூமியின் மேல், வயதான கணவர்களைப் போல், திரும்பத் திரும்ப நடப்பவைக்குப் பழகிப்போய், உலகின் அசுத்தங்களில் இருந்து அவர்களைப் பிரித்துவைத்திருக்கும் காற்றுக் குமிழிக்குள் வாழ்ந்தனர். எவ்வாறிருந்தாலும் சதி சாம்பல் திரளாகிப் போனதற்கு இந்த மேன்மையான துறவிகள்தானே காரணம்? சாம்பல். ஆமாம். ரிஷிகளால் இதைத்தான் புரிந்துகொள்ள இயலவில்லை. எதை அவர்கள் அறவே விலக்கினார்களோ எது அவர்களை விரட்டிக்கொண்டு வந்ததோ அதை. எல்லாம் கலந்துபோகிறது, இணைகிறது, அனைத்தும் சாம்பலில் சமானமாகிறது. சாம்பலின்றி வெளிச்சம் உண்டாவதில்லை. அனைவரும் பலவித விலங்குகள் என்று புரிந்துகொள்ளும்வரை வெளிச்சம் உண்டாவது இல்லை. விலங்குகள் சாம்பலில் தகவல் பரிமாறிக்கொள்கின்றன. மங்கலமானதை மணமுள்ள தாக்க சாம்பலால் மட்டுமே இயலும். அதனால்தான் ரிஷிகள் வீட்டுப் பெண்கள் அவ்வளவு வெறிகொண்டு சிவனைத் தொடர்ந்து சென்றனர்.

ரிஷிபத்தினிகள் தங்கள் வீட்டில் அடைந்துகொண்டனர். ரிஷிகள் ஒன்று கூடினர். கடுமையுடன் இருந்தனர். அந்தப் புதியவனை வேட்டையாடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். அவனைக் கொல்லுங்கள் என்றது ஒரு குரல். அவனது ஆண்மையைப் போக்குங்கள் என்றது மற்றொரு குரல். கௌதமர் இந்திரனுக்குச் செய்ததைப் போல. ஒருவரும் மோகினியைப் பற்றிக் குறிப்பிடவில்லை, அவள் தோன்றியே இருக்காததுபோல். இதற்குள் அவர்கள் சேமித்துவைத்திருந்த ஏராளமான தவவலிமையை அவர்கள் கோபம் விழுங்கியிருந்தது. பார்வைகளைப் பரிமாறிக்கொண்டபோது, பழிதீர்க்கப் புறப்பட்ட முரடர்களாக, மிகச் சாதாரணமான மனிதர்களாக அவர்கள் தெரிந்தார்கள். காட்டில் தேடுவதற்காகப் பிரிந்து சென்றபோது சிரிப்பு, கனைப்பு, ஊளை, கர்ஜனை போன்ற ஒலிகளால் மதிகெட்டுப்போயினர். விலங்குகளின் பெருமான் அவர்களைக் கேலிசெய்துவிட்டுக் காணாமல் போனார். ஆனால் கடைசியில் ஒரு திருத்தப்பட்ட நிலத்திட்டில், ஒரு மரத்தண்டின் மீது அவர்கள் அவரைக் கண்டனர். அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். "நீங்கள் எனது ஆண்மையைப் போக்க விரும்புவதானால், அதை நானே செய்துகொள்கிறேன்," என்ற சிவன், அமைதியாக ஒரு சிவந்த ஆண்குறியையும் விதைப்பையையும் ஒரு கையால் பிடித்து, ஆழமான புற்களுக்கிடையே வீசினார்.

சிவனின் குறி விழுந்த இடத்தில், ஒரு ஒளிச்சர்ப்பம் நெளிந்து சென்றதை ரிஷிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். புற்கள் கருகிய வாசம் வீசியது அங்கே. மெதுவாக, அமைதியாக, ரிஷிகள் ஒளியைப் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். "அது வேறெந்த ஒளியையும் போலில்லை," என்று அவர்கள் நினைத்தனர். சிவன் மறைந்துவிட்டதைக்கூட அவர்கள் உணரவில்லை. அந்தத் துளைத்துப் புகும் ஒளி ஏரிக்குள் சறுக்கிச் சென்றது. கவனிப்பதற்காக ரிஷிகள் கரையில் நின்றனர். தண்ணீருக்கடியில் ஆழத்தில் ஒளி நெளிந்து வளைந்து சென்றது. அது அடுத்த கரையை அடைந்ததை அவர்கள் பார்த்தனர். பிறகு அது வானில் எழுந்தது. சூரியன் அஸ்தமித்திருந்தது, நிழல்கள் ஏரியின்மேல் ஊர்ந்துகொண்டிருந்தன. மையத்தில், தண்ணீரும் வானமும் ஒளிரும் ஒரு ஒற்றை மடிப்பாக ஒன்றுகலந்தது. அது எங்கே தொடங்கியது, எங்கே முடிந்தது என்று யாரும் சொல்ல முடியாது.

செவ்வகில் மரக்காட்டைவிட்டுச் சிவன் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தார். எலும்புக் கிண்ணம் இன்னமும் அவர் கைகளில் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓரிரு அடிகளுக்குப் பின்னால் அமைதியாகத் தொடர்ந்துகொண்டிருந்தாள் கந்தையான பிரம்மஹத்யா. யாரும் கவனிக்கவில்லை. மற்ற அநேகரைப் போல அவர்களும் வெறும் ஒரு பிச்சைக்கார ஜோடி. அவர்கள் கடைவீதியில், ஒரு அரண்மனையில், ஒரு துறைமுகத்தில் நிற்பார்கள். சிவனின் கண்கள் வெறுமையாக இருந்தன. யாரும் அவர்களிடம் பேசவில்லை. சாலையருகில் ஒரு நெருப்பைச் சுற்றி இருந்த மற்ற பிச்சைக்காரர்கள் காசிக்குப் போவதாகவும் ஏனெனில் அதுதான் இறப்பதற்கு நல்ல இடமென்றும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டார்கள். சிவன் மரணத்திற்காக ஏங்கினார். ஆனால் திரும்பத் திரும்ப வரும் மரணமல்ல. பிரம்மாவின் கடுங்கோபத்தினால் ஏற்பட்ட ஊழித்தீயில் ஒரேயடியாக அழிந்துபோவதிலிருந்து பிரபஞ்சத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் அறிமுகப்படுத்திய புனர்மிருத்யு அல்ல. அவர் தேடிக்கொண்டிருந்தது அரியதான, இனியதான ஒன்றை, சர்வநிச்சயமான மரணத்தை. அந்த எலும்புக் கிண்ணத்துடன் இருந்த கொடுமையான ஒட்டுதலின் மாற்றிவிட முடியாத அழிவைத் தேடிக்கொண்டிருந்தார். தன்னை இருப்புக்குக் கொண்டுவந்தவனை விடுவிக்க உலகத்தால் முடியுமா?

தொலைவில் தெரிந்த நகரத்தை அவர்கள் கண்டபோது பிரம்மஹத்யா முன்னே சென்றாள். அது வேறெந்த பெரிய நகரத்தையும்போல்தான் இருந்தது. ஆனால், காற்றில் ஏதோவொன்று வித்தியாசமானதாக இருந்தது. மிக மென்மையான பொடியின் எண்ணற்ற துகள்கள். ஒரே சமயத்தில் இனிமையாகவும் இனிமையற்ற தாகவும் உள்ள ஒரு நுட்பமான மணம். பண்டக சாலைகள், பட்டறைகள், தொழுவங்கள், சந்தைகள், நந்தவனங்கள், அரண்மனைகள் இவற்றுக்கு அப்பாலிருந்து வந்தது முழுவேகத்துடன் ஓடும் ஒரு நதியின் ஓசை, கடல் போன்ற ஒரு நதி, மறுகரை பனியில் காணாமல் போயிருந்த நதி. அங்கே, கங்கையின் மறுகரையில், விடுதலை இருந்ததாக அவர்கள் கிசுகிசுத்துக்கொண்டனர்.

நகரத்திற்குள் போவதற்கு முன்னால், சிவனும் அவருடைய துணையும் ஒரு ஆடம்பரமான வேள்வி நடந்துகொண்டிருந்த சீர்படுத்தப்பட்ட நிலத்தை அடைய முயன்றனர். ஆனால் இந்த முறை அவர்கள் துரத்தப்பட்டனர். பிச்சைக்காரனின் கையிலிருந்து இயற்கைக்கு மாறாக அந்த எலும்புக் கிண்ணம் தொங்கிக்கொண்டிருப்பதை யாரோ ஒருவர் கவனித்தார். அவர்கள் அவரை நிறுத்தினார்கள். சிரித்துக்கொண்டே ஒரு நீண்ட கழியைக் கொண்டு அதை அவரிடமிருந்து பிய்த்துவிட முயன்றார்கள். கிண்ணம் விழுந்தது, ஆனால் உடனடியாக வேறொன்று அவருடைய கைகளிலிருந்து வளர்ந்தது. இப்போது யாரும் சிரிக்கவில்லை. கிலியோடு வெறித்தார்கள். உணவு கிடைக்காமல் சிவனும் பிரம்மஹத்யாவும் வெளியேறினார்கள்.

மானின் தலையான மார்கழியின் எட்டாவது நாள் அது. ஏற்கனவே அறிந்த ஒரு இடத்துக்கு மீண்டும் செல்வதுபோல், சிவன் நகரத்தை நோக்கி விரைந்தார். விரைவாக நடந்துகொண்டிருந்த அவரது நடை எவ்வாறு ஒரு நடனமாகிக்கொண்டிருந்தது என்பதை பிரம்மஹத்யா பார்த்தாள். விளக்குகளும் பயணிகளின் ஆரவாரமும் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லாமல், சிதைகள் நிரம்பி இருண்டு புகையும் அகன்ற பரப்பொன்றுக்குப் போனார் சிவன். தன் கால்கள் சொதசொதப்பான கூழினுள் அமிழ்வதை பிரம்மஹத்யா அப்போது உணர்ந்தாள்: சாம்பல், குருதி, கருகிய சதை. நரிகளும் வல்லூறுகளும் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் அவற்றின் குரல்கள் கேட்டன. நெருப்பு உருவாக்கும் தெளிவற்ற நிழல்கள். அவிமுத்தா என்ற பெயர்கொண்ட ஒரு பெரிய மயானம் அது. பிரம்மஹத்யாவுக்கு முன்னால் நடந்த சிவனின் காலடிகள் மென்மையாகவும் கச்சிதமாகவும் இருந்தன. அவ்வப்போது சிதையன்று பற்றியெரியும். மற்றவை கனலில் அமிழும். சிவன் கீழே அசைவற்று அமர்ந்தார். பிரம்மஹத்யா நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் அவரிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால் இப்போது தாங்கள் காதலர்கள், அந்த மயானம் தங்கள் படுக்கை என்பதுபோல் அவரது பெயரைச் சொல்ல வேண்டும் என்ற வலிமையான உந்துதலை உணர்ந்தாள் அவள். அவளால் அதைச் செய்ய இயலவில்லை. சிதைகளும் நிலவும் அளிக்கும் இருண்ட வெளிச்சத்தில், சிவனது உள்ளங்கை தன் கிண்ணத்தை இரவுக்கு அர்ப்பணிப்பதை அவள் பார்த்தாள். கபாலம் பொடிப் பொடியாகி விழுந்தது. சிவனின் மெலிந்த கைகள் கடைசியில் விடுதலையடைந்ததைப் பார்த்தாள். அவளது கால்களுக்குக் கீழே தரை நெகிழத் தொடங்கியது. வழிவிட்டு அவளை அது உள்ளிழுத்துக்கொண்டது. ஒரு ஓசையுமின்றி அவள் வாய் பிளந்த பிளவிற்குள் மூழ்கினாள்.

n

'கா' நாவல், காலச்சுவடு வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது.

உள்ளடக்கம்