Google   www kalachuvadu.com

சு.ரா. பக்கங்கள்
காலத்தின் கானல் - 6

20.10.98 செவ்வாய்
காலை 8 மணி

பாலைவனத்தில் பசுஞ்சோலைத் திட்டுப் போல் எங்கள் வீட்டைச் சுற்றிய பிராந்தியம். பத்துப் பதினைந்து வீடுகள். மூன்று முக்கியச் சந்துகள். வீட்டின் இடது பக்கமாக நடந்தால் நாலு எட்டில் கோட்டாறு பார்வதிபுரம் செம்மண் புழுதி ரோடு. வலது பக்கம் சில எட்டுக்களில் மூன்று முக்கிய சந்துகள் தாண்டியதும் எஸ்.எல்.பி. பள்ளிக்கூடம். கருங்கல் சுவர் மனதில் அழுத்தமாகப் பதியும். கம்பீரமான கட்டிடம். பெரிய பெரிய தூண்கள். நாகரிக உலகத்திற்கும் எங்களுக்குமான இடைவெளி அதிகமில்லை என்ற ஆறுதலை ஆரம்ப நாட்களில் தந்துகொண்டிருந்தது அந்தக் கட்டிடம்தான். நான் முதலில் பார்த்த அன்றே அதை நேசிக்கத் தொடங்கினேன். அந்தக் கல்லையும் செம் மண்ணையும் வேப்பமரங்களையும். அங்குதான் நான் சேர வேண்டியிருக்கும் என்று என் மாது மாமா சொன்னபோது அது என்னைக் கபளீகரம் செய்ய முயலும் என்ற அச்சம் எனக்குள் கபக்கென்று பற்றிக்கொண்டது. அந்தக் கட்டிடத்தின் வெளியே திட்டுக்களிலும் மேடுகளிலும் படிக்கட்டுக்களிலும் அமர்ந்து அதைச் சும்மா நேசித்துக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே சென்று மாட்டிக்கொள்ளவும் கூடாது. வேப்பமரங்கள் எனக்கு இல்லாமல் ஆகிவிடக் கூடாது.

கொடுமையான காலம். ஒருவிதத்தில் இப்போதைவிடவும். யார் கையிலும் காசில்லை. மேல்சட்டையில்லை. ஒற்றை வேட்டிகள் பொதுவாக அழுக்காக இருந்தன. செருப்பில்லை. வெளிறிப்போன குடைகள். லஹரியில் திளைக்க விரும்பும் மாணவர்கள் பொடி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காலையிலும் மாலையிலும் கஞ்சி. பொருளாதாரத் தன்னிறைவைச் சுட்ட ‘கஞ்சிக்கு வழியுண்டு’ என்கிறார்கள்.

காலம். தாண்டிவரும் காலம் காணும் கொடுமைகள் தாண்டிவந்த காலத்துக்கே மறந்து போய்விடும்போது கண்டதே காட்சி என்று வாழும் மனிதனுக்கு என்ன புரிந்துவிடும்? அவன் உயிர் தரித்துக்கொண்டிருக்கும் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறான். நானும் இருந்துகொண்டிருக்கிறேன். எனக்குத் திகைப்பாக இருக்கிறது. பயமாக இருக்கிறது. எதைப் பார்த்துத் திகைக்கிறேன் என்றோ எதைப் பாத்துப் பயப்படுகிறேன் என்றோ எனக்குச் சொல்லத் தெரியவில்லை. யார் எதைக் கேட்டாலும் முழிக்கிறேன். வீட்டுக்கு வருகிறவர்களை நான் சந்திக்காமல் இருப்பதுதான் என் வீட்டுக்காரர்களுக்குப் பிடிக்கிறது என்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் இந்த உலகத்தில் இரண்டு பேர் இருக்கிறார்கள். மாது மாமா. சாம்பன் எனும் பேய்க்கதை நிபுணர். இந்த இருவருடனும்தான் நெருக்கமான உறவு இருந்தது என்று சொல்ல வேண்டும்.

காலம் நேர்வரையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற கற்பனையைச் சாத்தியமாக்கிவிட்டோம். ஆனால், நினைவுகள் அந்தக் கற்பனையை ஏற்றுக்கொண்டிருக்கின்றனவா? அவை முன்னகர்கின்றன; பின்னகர்கின்றன.

உள்ளடக்கம்