Google   www kalachuvadu.com

எதிர்வினை
பார்வையாளர்கள் பொம்மைகள் அல்ல

"காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு" பற்றிய தேவிபாரதியின் பதிவைப் படித்தேன் (காலச்சுவடு இதழ் 102).

நடந்தது என்னவாக இருந்தாலென்ன, பத்திரிகை இருப்பது நமது கையில், எதையும் நம் இஷ்டத்துக்கு வளைத்துக் கொண்டால் போயிற்று என்பது முதலாளிமார் சொந்தமாக வைத்துள்ள வணிகப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிற்கு உள்ள நிரந்தர வழிகாட்டு நெறிகளின் அடிப்படை. இதன் காரணமாகவே என்னால் எங்கும் நிலைத்திருக்க இயலாது போயிற்று. இந்த அடிப்படையைக் காலச்சுவடும் வரித்துக்கொள்வது வருத்தம் தரும் வளர்ச்சி.

எனது குறுக்கீடு, "தமிழ் ஊடகங்களில் இஸ்லாம்" என்கிற தலைப்பிலான கலந்துரையாடலின் போக்கைப் பாதித்ததாக, தேவிபாரதியின் பதிவு சொல்கிறது. உண்மையில் போக்கு பாதிக்கப்படவில்லை; அதன் பிறகு கலந்துரையாடலே நடைபெறவில்லை என்பதை அங்கு எஞ்சியிருந்த பார்வையாளர்கள் அறிவார்கள். எனது குறுக்கீட்டிற்கு மேடையிலிருந்தவர்களின் எதிர்வினை எவ்வாறாக இருந்தது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

கலந்துரையாடல் மேடையில் இந்துத்துவத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க இயலாது என்று ஆசிரியர் கண்ணன் சொன்னதாகப் பதிவு செய்தது சரிதான். ஆனால், காலச்சுவடு மேடையில் இந்துத்துவத்திற்குப் பிரதிநிதித்துவத்தை நான் எதிர் பார்க்கவும் இல்லை, வேண்டவுமில்லை என்பதை நான் அவருக்குச் சொன்னேன். காலச்சுவடு என்ற ஊடகத்தில் இஸ்லாம் குறித்துவந்த பதிவுகளின் தொகுப்பு வெளியிடப்பட்டதையட்டித் "தமிழ் ஊடகங்களில் இஸ்லாம்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே, காலச்சுவடு பதிவுகளை முன்னிறுத்தி, ஓர் ஒப்பீட்டு ஆய்வாகப் பிற ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய பதிவு என்னவாக இருக்கிறது என்று கலந்துரையாடல் நடைபெறும் என்றுதான் எதிர்பார்த்தேன். சிந்தனைத் தளத்தில் தீவிரகதியில் இயங்கும் காலச்சுவடு இதழின் கனத்திற்கு ஏற்பக் கலந்துரையாடல் நடைபெறாமல் பொருத்தம் இன்றியும் ஒருதலைப் பட்சமாகவும் வெறும் அரட்டைப் பேச்சைப் போல அது நீர்த்துப்போவது ஏன் என்றுதான் கேள்வி எழுப்பினேன்.

ஒரு பிரச்சாரம்போல ஒருதலைப் பட்சமாகக் கலந்துரையாடல் திசை மாறிப்போனால் மாற்றுக் கருத்துக்கும் இடம் அளிப்பதுதான் முறையாக இருக்கும் என்றுதான் சொன்னேன்.

காலச்சுவடு இதழ் ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல் என்பது மேடையில் நாலுபேர் அவர்களுக்குள் பேசிக் கொள்வதற்குப் பார்வையாளர்கள் பொம்மைகளாக உட்கார்ந்து வெறும் மௌனச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது எந்த அளவுக்குக் காலச்சுவடு இதழின் லட்சணத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

மலர்மன்னன்
சென்னை

உள்ளடக்கம்