Google   www kalachuvadu.com

காலச்சுவடு இதழ் 102இல் தேவிபாரதியின் 'உரையாடல்கள் தொடர்கின்றன' பதிவிற்கான எதிர்வினை
கடமையைத்தான் செய்தேன்

காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு குறித்த "உரையாடல்கள் தொடர்கின்றன" என்கிற தேவிபாரதியின் பதிவில் (ஜூன் 2008 காலச்சுவடு) 'தமிழ் ஊடகங்களில் இஸ்லாம்' எனும் தலைப்பில் நிகழ்ந்த கலந்துரையாடல் குறித்த செய்தி இடம்பெற்றுள்ள பகுதியில் "இஸ்லாம் குறித்து ... பார்வையாளர் தரப்பிலிருந்து விவாதத்தினிடையே மலர்மன்னனும் ப்ரவாகனும் கருத்துரைத்தார்கள். இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகக் குற்றம் சுமத்தி உரத்த குரல் எழுப்பினர்" எனச் சொல்லி இருக்கிறார்.

உண்மையில் எனது தரப்பு என்ன என்பது குறித்த ஒரு தன்னிலை விளக்கம்:

மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்ற 'பத்திரிகையாளர்' கிருஷ்ணானந்த், ஒரு "உண்மையை மறைத்து" மாபெரும் 'தேச சேவை' செய்த பெருமிதத்தைப் பீற்றிக் கொண்டிருந்தார். எந்த உண்மையும் சமூகத்திற்குப் பாதகமாகப் போய்விடாது என்கிற எனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் நான் குறுக்கீடு செய்தேன்.

அந்த உண்மை என்னவெனில், சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மேலவைத் துணைத் தலைவராக இருந்த இஸ்லாமியப் பெண் நஜ்மா ஹெப்துல்லா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது ஒரு நாள், தான் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக அவை நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக அடுத்த நாளுக்குத் தள்ளிவைக்க உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டாராம். அதை ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்களாம். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த கிருஷ்ணானந்த் உட்பட்ட-'பத்திரிகையாளர்கள்' அடுத்த நாளுக்கான தலைப்புச் செய்தி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்க, ஒரு 'மூத்த' பத்திரிகையாளர் இந்தச் சம்பவம் வெளியானால் சமூகத்தில் அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். எனவே இந்தச் செய்தியை நாம் யாரும் எழுத வேண்டாம் என்று விளக்கியதும், பத்திரிகையாளர்களின் 'பொறுப்பை உணர்ந்து' கிருஷ்ணானந்த் உட்பட எவருமே அதை அடுத்த நாள் செய்தியாக வெளியிடவில்லையாம். உண்மையை மறைக்கின்ற இந்த 'தேச சேவை' அருவருக்கத்தக்க இழிசெயல் என்பதாக எனது கண்டனத்தைப் பதிவுசெய்ய முற்பட்டேனே தவிர வேறுவகையில் இடையீடு செய்யவில்லை.

மக்கள் பிரதிநிதியான நஜ்மா ஹெப்துல்லா இத்தகைய வேண்டுகோள் விடுக்கிறார் என்பது அவருடைய மனநிலையைக் காட்டுகின்ற ஒரு விஷயம். அதாவது, 'இறையாண்மை மிக்க' நாட்டின் மக்கள் அனைவரின் நலனுக்காகச் செயல்படுவதற்கென உள்ள ஒரு அவை எனக்கு ஒரு பொருட்டல்ல; நாடு அல்ல முக்கியம், எனது மதக் கடமையே எனக்கு முக்கியம்' என்பதுதான் அவரது நிலைப்பாடு. அவரது இந்த நிலைப்பாட்டை மக்களிடமிருந்து மறைத்த குற்றத்தைச் செய்துவிட்டு அதையே ஒரு பெருமையாகப் பீற்றிக்கொண்ட கிருஷ்ணானந்த் மற்றும் பத்திரிகையாளர்களின் செயல்பாட்டைக் கண்டிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது எனது கருத்து. இப்படி ஒரு குற்றத்தைச் செய்த பத்திரிகையாளர்கள், ஊடகங்களில் இஸ்லாம் குறித்து மோசமாகச் சித்தரிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டுவதுதான் அவலம். இவர்கள் ஒரு உண்மையை மறைக்கலாம். மற்ற ஊடகங்கள் மறைப்பதும் திரிப்பதும் மட்டும் குற்றம் என்கிற இவர்களின் முரண்பட்ட நிலையைத் தோலுரித்துக்காட்டுகின்ற கடமையையே நான் செய்தேன் என்பதைத் தெளிவுபடுத்தும் அவசியம் இப்போது நேர்ந்திருக்கிறது.

மேலும், இஸ்லாமியர்கள் குறித்து ஊடகங்கள் சித்தரிப்பதற்கு எந்த அடிப்படை உண்மையுமே இல்லை என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க, கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் முயன்றுகொண்டிருக்க, இதுபற்றி தாரிக் அலி, ஷெய்க் அன்வர் போன்றவர்களின் கருத்துகளையும் எடுத்துச் சொல்லுங்கள்; அவர்களின் வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேனே தவிர தேவிபாரதி சொல்லியிருப்பதைப் போலல்ல.

முன்வரிசையில் இருந்த மலர் மன்னன் என்ன கேட்டார் என்பது கூடக் காதில் விழாத நிலையில் நான் கடைசியில் அமர்ந்திருந்தேன். அவரது வினாவுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, அவரை ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி என்று கிருஷ்ணானந்த் ஒலிபெருக்கியில் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்ததை மட்டுமே நான் கேட்க முடிந்தது.

தஸ்லிமா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என்றோ ஹெச்.ஜி. ரசூல் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் நடந்துகொண்ட விதம் தவறு என்றோ சொல்வதற்கு அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற எவருக்கும் மனமில்லை. மேலும் இஸ்லாமியர் பற்றி நிறையக் 'கட்டுக்கதைகள்' உலவவிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள், யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் குறித்துப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் பற்றி இவர்கள் வாய் திறக்கவில்லை. இந்தியாவில் இந்து மதவெறியர்கள் மட்டும் அப்படிச் செய்வதுபோலத் தெரிய வேண்டும் என்கிற அவர்களின் அவா இதில் வெளிப்படுகிறது. உண்மையில் இஸ்லாமிய நாடுகளில், இந்து மதத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒருவரும் இல்லை என்பதை எவ்வளவு இழிவாகப் பேசுவதை, அது சார்ந்த கட்டுக்கதைகளை இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களைக் கேட்டு அறியும்படி காலச்சுவடு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாட்டில், தமிழர்களை 'மாவுப் பயல்கள்' என்றும் 'தமிழன்' (அவர்கள் உச்சரிப்பில் 'தம்பளை') என்றும் இழிவுத் தொனியில் இஸ்லாமியர்கள் பேசுவதைக் கண்டித்து ஒரு நாளேனும் இவர்கள் பேசியிருப்பார்களா என்பதையும் கருதிப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறேன்.

இத்தகைய 'நேர்மை'யாளர்கள் பிற ஊடகங்களைக் குற்றஞ்சொல்கிறார்கள் எனும்போது, குறுக்கிட்டு உண்மையைச் சொல்லாதவர்கள் குற்றவாளிகள் என்பதனால் நான் எனது கண்டனத்தைப் பதிவுசெய்யவே குறுக்கிட்டேன்.

மேலும், மதவெறிக்கு எதிரான எனது நிலைப்பாட்டையும் செயல்பாட்டையும் பதிவுசெய்வதும் அவசியம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் இங்கே வந்த பா.ஜ.க. தலைவர் அத்வானியை எதிர்த்துக் கருப்புக்கொடி காண்பிக்க முயன்றதற்காகச் சிறைப்பிடிக்கப்பட்டேன். தவிரவும் இஸ்லாமியர்கள் மீதான மத வெறியர்களின் தாக்குதல் ஒவ்வொன்றின்போதும் ஏதோவிதத்தில் எனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளேன் அல்லது போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை இப்படி இருக்க மொத்தமாக மலர்மன்னனுடன் சேர்த்து என்னையும் ஓரணியில் தேவிபாரதி எழுதி இருப்பதற்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

சௌமியா நாராயணன்

உள்ளடக்கம்