Google   www kalachuvadu.com

காலச்சுவடு இதழ் 102இல் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் சிறப்புப் பகுதிக்கான எதிர்வினை
அது ஒரு பாதுகாப்புச் சுவர்
தீண்டாமைச் சுவரல்ல

எந்த ஓர் ஊரிலும் பெரும்பான்மையராகவுள்ள சமூக மக்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இதுதான் நடைமுறை நியதி. அந்தப் பெரும்பான்மையான மக்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தலித் மக்களாக இருந்தாலும் அவர்கள்தான் அந்த ஊரில் ஆதிக்கச் சமூகத்தார்.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் உத்தப்புரம் ஊராட்சியில் வாழ்ந்துவருகின்ற மக்களில், கட்டுரையாளர் கொடுத்துள்ள புள்ளிவிவரப்படி, பள்ளர் சமூகம் 650 குடும்பங்கள், கொடிக்கால் பிள்ளைமார் சமூகம் 450 குடும்பங்கள், கவுண்டர் சமூகம் 150 குடும்பங்கள், கள்ளர், பறையர், அருந்ததியர் போன்ற ஏனைய பத்துச் சமூகங்களும் சேர்ந்து 100 குடும்பங்கள். ஆக, இந்த ஊரில் ஆதிக்கம் செலுத்துகின்ற வாய்ப்பு பள்ளர் சமூகத்துக்கே.

பள்ளர் சமூகத்தினர் முக்குலத்தோரைப் போல் போர்க்குணம் உடையவர்கள். அதற்கு மாறாகப் பிள்ளைமார்கள் மென்தன்மைக்குப் பழக்கப்பட்டுப் போனவர்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, ஆன்மீக மனப்பான்மை என்று பல தலைமுறைகளாக வாழ்ந்துவருபவர்கள்.

மதுரை மாவட்ட ஊரகப் பகுதி களில் ஒரு சொலவடை உண்டு. 'கள்ளர் மறவர் கனத்த அகம்படியர், மெல்ல மெல்ல மாறி வெள்ளாளர் ஆனார்' என்பதுதான் சமூகப் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கின்ற அந்தச் சொல்லாடல். இது எந்தளவுக்கு உண்மை என்பது சமூக அறிவியலாளர்களின் ஆய்வுக்கு உரியது.

இங்கே புரிந்துகொள்ளப்பட வேண்டிய யதார்த்த நிலை யாதெனில், போர்க்குணம் கொண்டவர்களும் பெரும்பான்மையினராகவும் உள்ள தலித் மக்களுடன் இருந்த கூட்டுறவு, கூடி வாழும் உறவு, சீர்குலைந்து, பகைமை ஏற்பட்டுவிட்ட நிலையில் அவர்களிடமிருந்து ஒதுங்கிப் பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும் என்ற பிள்ளைமார்களின் நிலைப்பாடுதான் அந்தச் சுவரை எழுப்பக் காரணமானது. அது ஒரு பாதுகாப்புச் சுவர்தானேயன்றித் தீண்டாமைச் சுவர் அல்ல.

கூட்டுக் குடும்பமாக இருந்துவந்த அண்ணன் தம்பியரிடையே ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு, அது பாகப் பிரிவினையாகக்கூட இருக்கலாம், உறவு முறிந்து பகைமை ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிலையில், வீட்டையே இரண்டாகப் பிரித்து, பிரிவினையை உறுதிப்படுத்துகின்ற முறையில் வீட்டின் நடுவில் சுவர் எழுப்பிக்கொள்கின்றனர். இனிமேல் அண்ணன் தம்பி உறவு இல்லை, இருவரும் தனித்தனி வாசம், தனித்தனிப் புழக்கம் என்றாகிவிடுவதைப் பல குடும்பங்களில் பார்க்கிறோம். அதேபோல்தான் இந்த உத்தப்புரம் ஊரில் எழுப்பப்பட்டுள்ள சுவர். தலித் மக்களிடமிருந்து பிள்ளைமார் மக்கள் பிரிந்து வாழ முற்பட்டனர். தலித் மக்களிடம் ஒப்புதல் பெறாமல் தம்முடைய தனி விருப்பத்தில் மட்டும் சுவர் எழுப்பியிருந்தால், அது அவர்களின் அடாவடித்தனமான செயல் என்று சொல்லலாம். பாதுகாப்பை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஒத்துழைப்புடன், இரு சமூகத்தினருக்கும் ஏற்புடைய முறையில் ஒப்பந்த வரைவிட்டு, அதில் இரு பிரிவினரும் கையப்பம் இட்டு, அதன் பின்னர்தான் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. தலித் சமூகத்தினர் ஐவரைத் தனியாக அழைத்துச்சென்று அவர்களை அச்சுறுத்தி அவர்களின் கையெழுத்தைப் பெற்றனர் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. ஏனென்றால், அச்சுறுத்தலுக்கு அஞ்சுகின்றவர்கள் இந்தத் தலித் மக்கள் அல்லர். உறவு முறிந்துவிட்டதால் இரண்டு பிரிவினர்க்கும் தனித்தனிப் பள்ளிகள், தனித்தனித் தண்ணீர்த் தொட்டிகள் எனத் தனித்தனிப் புழக்கமானது.

இவ்வாறு முறிந்துவிட்ட உறவுடன் கடந்த 19 ஆண்டுகளாக இரண்டு சமூகத்தினரும் சண்டை சச்சரவின்றி அமைதியுடன் இருந்துவந்துள்ளனர். அரசியல்வாதிகள் புகுந்து இப்போது அந்த அமைதியைக் குலைத்துவிட்டனர். இதுவரை பாதுகாப்புணர்வுடன் வாழ்ந்துவந்த பிள்ளைமார் சமூகத்தினர் அந்தப் பாதுகாப்பு அரண் தகர்க்கப்பட்ட நிலையில், தம்முடைய ரேசன் கார்டுகளையெல்லாம் எறிந்துவிட்டு, கட்டுரையாளர் சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளபடி, "எங்களுக்குப் பாது காப்பில்லை. . . பாதுகாப்பில்லை" என்று கத்திக்கொண்டே ஊரைவிட்டு வெளியேறித் தாழையூத்து மலையடி வாரத்துக்கு ஓடினர். இதனை ஆதிக்கச் சாதியினரின் குரல் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது முரண்பாடு. கட்டப்பட்ட சுவர் உள்ளிட்ட தங்கள் கோயில் பகுதி முழு வதற்கும் பட்டா வழங்க வேண்டுமென்று பிள்ளைமார் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். கட்டுரையாளர் எழுதுகிறார் 'இவையனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக எவ்விதப் பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் எழுதிக்கொடுக்கிறது. "சட்டத்தின் ஆட்சி" என்று சொல்வதைவிட அயோக்கியத்தனமான வார்த்தை வேறெதுவும் இருக்க முடியாது.'

பிள்ளைமார் சமூகத்துக்குரிய தனிப்பள்ளி குறித்து எழுத முற்பட்ட கட்டுரையாளர், பிள்ளைமார் மக்களை இழிபிறவிகள் என்று பழித்துரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர். எஸ். எஸ். கிருஷ்ண சாமி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவகர் போன்றவர்களையெல்லாம் எள்ளி நகையாடி எழுதுவதில் இக்கட்டுரையாளர் இன்பம் காண்பதாகத் தோன்றுகிறது. இப்படி மதிப்புக்குரியவர்களையெல்லாம் இழித்தும் பழித்தும் எள்ளி நகையாடியும் எழுதுவதுதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விதிமுறையா என்ற ஐயம் எழுகிறது.

அண்மைக் காலத்தில் அமைதிகாத்து வந்த உத்தப்புரம் கிராமத்தின் இன்றைய நிலையைக் கருதிப் பார்க்கும்போது, 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்ற பழமொழிதான் நினைவுக்குவருகிறது.

அண்மைக் காலம்வரை கிராமங்கள் ஒற்றுமையாக இருந்துவந்தன. ஊர்க் கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு கிராமத்தையும் ஒழுங்கமைதியில் நிலை நிறுத்துவதாக இருந்தது. அரசியல் கட்சிகள் புகுந்த பின்னர், ஒவ்வொரு கிராமமும் மூன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுபட்டு, ஒற்றுமை என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. ஊர்க்கட்டுப்பாடு என்பதெல்லாம் பழங்கதையாய்ப் போய்விட்டது.

க.சி. அகமுடைநம்பி,
மதுரை

உள்ளடக்கம்