Google   www kalachuvadu.com

கடிதங்கள்

பயங்கரவாதத்தின் ஆணிவேரைப் பிடுங்காமல் மேம்போக்கான நடவடிக்கைகளால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்பது உண்மை. காந்திஜி படுகொலை செய்யப்பட்டபோது, ஜே. கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு கூறினார்: "காந்தியடிகள் பயங்கரவாதி ஒருவனால் கொல்லப்பட்டார் என்பது புறத் தோற்றம். அகத்தில் நாம் ஒவ்வொரு வரும் பயங்கரவாதிகளே. நம்முன் வன்முறையின் வேர்கள் ஆழமாகப் பதிந்துள்ளன."

வெறும் 'பொடா' மட்டுமே பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. 'பொடா' இருந்தபோதுதான் குஜராத்தில் கோயிலும் நம் பாராளுமன்றமும் தாக்கப்பட்டன. ஜனநாயகம் பற்றி ஓங்கியே பேசும் கட்சிகள் தங்களுக்கென்று வரும்போது நடுநிலையுடன் செயல்படுவதே இல்லை. அது நந்திகிராமாக இருந்தாலும், திபெத்தின் மீதான சீனத்தின் வலி சான்ற ஆக்கிரமிப்பாக இருந்தாலும் மகளிர் தின விழாவிற்கு அனுமதி அளிப்பதிலாகட்டும், ஒரு சார்பாகவே செயல்படுகின்றன. ராஜஸ்தானில் நடைபெறும் இறப்புகளைப் பற்றி பா ஜ க பெருமளவில் கூச்சல் போடுவதே இல்லை. தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட தினத்தை அஞ்சலி தினமாகக் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதற்கும் இதுவே காரணம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அச்சமே. அச்சம்தான் வன்முறையின் வித்து. பயங்கரவாதத்தின் வேர்களை விட்டுவிட்டுக் கிளைகளைக் களைய விரும்புகிறோம். அதனால் தோற்றுப் போகிறோம். "மதநல்லிணக்கம் என்பதைக் குறித்து, செயல்பூர்வமான சிந்தனையும் செயல் திட்டங்களும் தேவை" எனத் தலையங்கம் குறிப்பிடுவது இக்கனவு மெய்ப்பட மிகவும் உதவும்.

முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை

தலையங்கத்தில் 1992இல் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் இஸ்லாமியர்களை மக்கள் அந்நியப்படுத்தும் நிலையை உருவாக்கியது என்பது முற்றிலும் உண்மை. பாஜகவின் இந்துத்துவக் கொள்கை என்பது ஓட்டுக்காக. மக்களின் மத நம்பிக்கையைச் சாதகமாக்கி ஓட்டைப் பெற்றுப் பதவியில் அமர இந்துத்துவா எனப் பயன்படுத்துகிறது பாஜக. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக இருந்த நிலை பாபர் மசூதி இடிப்புக்குப் பின் மாறியது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி. ஒற்றுமையை உருவாக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயல வேண்டும். அது கனவுதான் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாதவரை அது கனவுதான். போலிச் சாமியார்களை நம்பி ஏமாறுவதுபோல்தான் இதுவும். 'உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்' கட்டுரை மூலம் அதுபற்றிய முழுவிவரம் தெரிந்தது. அரசோ அரசியல் கட்சிகளோ தலித் மக்களுக்குச் சாதகமாகவே உள்ளன. கல்வியில், வேலையில் இப்போதைய உயர்வுக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ், திராவிடக் கட்சிகளே. ஆகவே அவர்களுக்கு எதிராக இருப்பதாகக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்

தலையங்கத்தில் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மேன்மை குறித்த உணர்வு மிளிர்ந்தது. மதநல்லிணக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சிறுபான்மையினர்மீதான பரிவு இரட்டை வேட முறைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியச் சிறுபான்மையினர்மீதான பரிவின் நோக்கமும் இலங்கைச் சிறுபான்மையினரான தமிழர்கள்மீதான பரிவின் நோக்கமும் சரிநிகர் பார்வையின் பட்டதாக இருத்தல் வேண்டும். மாறாக அது வெளிநாடு, இது உள்நாடு என்று தத்துவம் பேசுவது வாக்கு வங்கி வேடுவர்கள் என்ற நிலையைத்தான் உறுதிசெய்யும்.

உத்தப்புரம் நிகழ்வு மனிதநேய உணர்வுகளையும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற மேன்மையையும் இன்னமும் புரிந்துகொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளாததன் வெளிப்பாடுதான் என்பதை உறுதி செய்கிறது.

நிர்மலா தேஷ்பாண்டே குறித்த அஞ்சலி அவர்தம் சமூக சேவைக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம்! ஆனால், பல காந்தி விசுவாசிகள் அண்ணல் காந்திக்குப் பிறகு காந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டவர்களை எல்லாம் தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடும் நிலை தொடர்கிறது. காந்தியம் மெல்ல அழிய இதுவும் ஒரு காரணம்தான் போலும்!

கா. இர. குப்புதாசு,
செஞ்சி

"இந்துத்துவ அடிப்படைவாதத்தைத் தன் ஒரே அரசியல் திட்டமாகக் கொண்டிருக்கும் பாஜகவும் அதன் தோழமை அமைப்புகளும் மூர்க்கமாகப் பின்பற்றிவரும் இந்துத்துவ அடிப்படைவாதக் கொள்கைகளின் விளைவாகச் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதற்றமும் அச்சமுமே இஸ்லாமியர்கள் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதற்கு முக்கியக் காரணம் என்பதை வசதியாக மறந்துவிட்டு, இது போன்ற கோரிக்கைகளை வைப்பதன் மூலம் தன்னைப் பயங்கரவாதத்திற்கு எதிரான சக்தியாகக் காட்டிக்கொள்வதற்கு முயல்கிறது".

எக்காலத்திலும் பாசிஸ சக்திகளுக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக, எழுந்து நின்று குரல் கொடுத்தவர்கள் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளுமே.

அது போன்றே சாதிய சக்திகளுக் கெதிராகப் போராட முனைந்த இயக்கங்களைப் பாராட்டுவது காலத்தின் கட்டாயம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கின்ற முயற்சி எப்போதுமே வெற்றி பெறுகின்றது. ஆனால், அவற்றை ஓட்டு வங்கியாக மாற்றுவதில்தான் பின்தங்கி விடுகிறார்கள். சு. வெங்கடேசன் கட்டுரை நெஞ்சை உலுக்குகின்ற செய்திகள் நிறைந்தது. தமிழகம் இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா என்று வெளிமாநிலத் தமிழர்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள்.

89 முதல் இருக்கின்ற சாதி மதிலை 2008இல் திறந்திருக்கின்றார்கள். முற்றிலுமாய் எடுத்துக் களைவதற்கு என்ன பிரச்சினை. உலகமே அதிசயிக்கும் 21ஆம் நூற்றாண்டுக் கொடுமை தமிழகத்தில். காட்டாளர்களைக் கண்திறக்கச் செய்த போராட்டத்திற்கு வெளிமாநிலத் தமிழர்களின் வாழ்த்துகள்.

க. வானமாமலை,
திருவனந்தபுரம்

சாதி இந்துக்களின் மனநிலையில் எழுப்பப்பட்டுள்ள சாதிச் சுவரை இடிப்பதுதான் அதிகச் சவாலானது. ஆனால், உத்தப்புரம் சுவர் இடிப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசும் காட்டிய ஆர்வத்தை யாராவது அந்த இரு சமூக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படக் காட்டினார்களா? ஏன் கட்டப்பட்டது? ஏன் இடிக்கப்பட்டது? பிரச்சினை இல்லாது வாழ்ந்த ஊரில் கம்யூனிஸ்ட்கள் காட்டிய அதிதீவிர தலித் பற்றுதல், வர்க்கப் போராட்டத்தில் தோல்வி கண்ட கம்யூனிஸ்ட்களின் இப்போதைய புதிய முகமூடி "தீண்டாமை ஒழிப்பு முன்னணி" அதாவது தலித் மக்களுக்குத் தாங்கள்தான் பாதுகாப்பு என்ற பிரச்சாரம்.

மேற்படி சம்பவத்துக்குப் பின் தலித் மக்கள் பிற சாதி மக்களிடமிருந்து வேறுபட்டு, பிரிந்து நிற்கிறார்கள். தலித் மக்களின் முன்னேற்றம் சுவர் இடிபட்டதால் ஏற்படும் என்பது கேலிக் கூத்து.

இருபதாண்டுகள் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள், தலித் மக்கள் துயர் துடைக்கும் தலித் அமைப்புகள், இவர்களைவிட நாங்கள் முற்போக்கானவர்கள் என்று செய்தி பரப்பும் நோக்கம்தான் கம்யூனிஸ்ட்களின் எண்ணங்கள்.

எல்லாக் கொள்கைகளையும் இழந்து எந்தப் பாதையில் போவது என்று திகைத்து நிற்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வை மாற்றத்தைக் கட்டுரையாளர் பாராட்டுகிறார். இதில் அவர்கள் உறுதியாக நிற்பார்கள் என்று நம்புகிறார். அவர்கள் வேஷம் கட்டுகிறார்கள் என்பதை அவர்களோடு பழகியவர்களுக்கும் சரித்திரம் கற்றவர்களுக்கும் தெரியும்.

மனச்சுவர்கள் இடிபடட்டும். அதற்கு உங்கள் பத்திரிகையின் இலக்கியப் பார்வை தொடரட்டும்.

ந. ஆவுடையப்பன்,
இலத்தூர்

"உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்" என்று எழுதும்போது என் விரல்கள் நடுங்கி வெட்கப்படுகின்றன. இருப்பது 21ஆம் நூற்றாண்டல்லவா, கல்வியறிவு பெறாத கற்காலமல்லவே என மனம் வெம்புகிறது. சு. வெங்கடேசனின் வார்த்தைகளில் தெறிக்கிற உண்மைக்கு அரசும் சாதியர்களும் என்ன பதில் சொல்லிவிட முடியும். நாட்டையே பிரித்த "பெர்லின் சுவர்" இடிக்கப்பட்ட ஆண்டில் சாதியின் பெயரால் கட்டப்பட்ட "தீண்டாமைச் சுவர்" எத்தனை பெரிய அவமானச் சின்னம் என்பதை நினைக்கும்போது "என்ன சாதி என்று கேட்பவரை எட்டி உதையடி பாப்பா அவர் முகத்தில் காறி உமிழ்ந்திடு பாப்பா" என்ற பாரதியின் வரிகள் காற்றில் அலைகின்றன. பெரியாரின் வழிவந்தவர்களும் சரி, தேசியக் கட்சிகளின் வழிவந்தவர்களும் சரி, எந்தத் தொகுதியில் எந்தச் சாதிக்காரர்கள் அதிகம் என அறிந்து அதற்குத் தகுந்தவாறு "எம்.எல்.ஏ.", "எம்.பி" என சீட் கொடுப்பவர்கள் எவ்வாறு சாதிக் கொடுமைகளைத் தடுத்துவிட முடியும். இது போன்ற அரசியல்வாதிகள் படித்திருக்கிறார்களோ இல்லையோ பருவம் வந்தவுடன் சாதியின் பெயரைப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்கிறார்கள். மலருக்கும் ஜாதிப் பெயரைச் சூட்டியவர்கள்!

சாமியையே சாதிப் பெயர் சொல்லிப் பிரிப்பவன் சதையும் ரத்தமுமாய் இருக்கும் சகமனிதனை என்ன செய்வான் என்பதற்குச் சாட்சியாய் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இத்தனை ஆண்டுகளாய். அது தலித்துகளுக்கான அவமானமல்ல; ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கான அவமானம். "தங்களின் உரிமைக்காக எதையும் இழக்கத் துணிகிற தலித்துகள் ஒரு பக்கம். எதை இழந்தாலும் சாதியை இழக்கமாட்டோம் என்று கொக்கரிக்கிற சாதியர்கள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடையில் இருக்கிறது "உத்தப்புரம்", "தமிழகம்", "இந்தியா"! எத்தனை சத்திய வார்த்தைகள். மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு முன்னால் நாளிதழ்களில் ஒரு செய்தி பார்த்தேன், "ராமர் பாலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல் என்று தண்ணீரில் மிதக்கும் கல்லைப் பார்த்து இந்துத்துவவாதிகள் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள் பயபக்தியோடு. அப்படி எனக்குப் புனிதமான கல் "உத்தப்புரம் தீண்டாமைச் சுவரிலிருந்து" பெயர்க்கப்பட்ட ஒரு செங்கல்லாகத்தான் இருக்கும். ஒடுக்கப்பட்டவன் நிமிர்ந்தெழுந்தால் ஒடுக்கியவன் ஓடிப்போவான்.

ந. வந்தியக்குமாரன்,
சென்னை

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் குறித்த சு. வெங்கடேசனின் கட்டுரை விரிவான தகவல்களைத் தந்துள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தையுமே கட்டுரையாளர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திருமாவளவன், கிருஷ்ண சாமியையும் விட்டுவைக்கவில்லை. என்ன செய்வது? வாக்கு வங்கிகளைக் குறிவைத்து நடைபெறும் அரசியலில் இது தவிர்க்க முடியாதது. மார்க்ஸிஸ்ட் கட்சி, வாக்கு வங்கி பற்றிக் கவலைப்படாமல் இப்பிரச்சினையைக் கையாள முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில், தலித் ஒருவர் தனிப் பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தமிழகத்தின் அவமானச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. கட்டுரையாளரின் கோபம் நியாயமானதுதான். அதே நேரத்தில் தலித்துகள் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து, பிற இனத்தவருடனும் இணக்கமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் தலித்துகளில் ஒரு பிரிவினர் (அல்லது அவர்களில் ஒரு சிலர்) தங்களை உயர்சாதியினராகவும் ஆதிக்கச் சாதியினராகவும் நிலைநாட்ட முற்படுவதும் நாங்கள் தலித்துகளே அல்ல எனச் சிலர் கூறி வருவதும் இன்னும் ஒரு பிரிவினர், உள் ஒதுக்கீடு என்ற பெயரில் பிரிந்துசெல்ல முற்படுவதுமான செயல்கள் தலித் முன்னேற்றத்திற்கு எவ்வகையிலும் பயன்தரமாட்டா!

கா. தங்கதுரை,
பழனி

உத்தப்புரம் சுவர் தோழர் பிரகாஷ் காரத் வருவதற்கு முன்பு கொஞ்சம் இடிக்கப்படுகிறது. 1989க்குப் பின் காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் கிடையாது. சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக் காலத்தில் ஒருவரோடு ஒருவர் மனித நேயத்தோடு வாழக் கற்றுக்கொள்ளவில்லை என்றால் கற்ற கல்விக்கு என்ன அர்த்தம்? இந்த மாநில அரசு 1989இலிருந்து என்ன செய்துகொண்டிருக்கிறது. இரண்டு பள்ளிகள், இரண்டு தண்ணீர்த் தொட்டிகள் போன்று எல்லாச் சலுகைகளையும் கொடுத்து ஜாதியை வளர்த்து விட்டிருக்கிறது.

நாட்டில் தொடர்ச்சியாகக் குண்டு வெடிப்பு சர்வசாதாரணமாகிவிட்டது. பொடாச் சட்டம் கேலிக் கூத்தாகிவிட்டது. எந்தச் சட்டமும் சமுதாயத்தில் வெற்றி பெறவில்லை. மனித சமுதாயம் இது தவறு, மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது என நினைத்து, உயிரை உயர்வாக மதித்தால்தான் இது நிறுத்தப்படும்.

இரா. சண்முகவேல்,
கீழக்கலங்கல்

'அகவிழி திறந்து' பத்தி படித்தேன். சமூகம் நமக்கு வழங்கியுள்ள அடையாளங்களைப் புறக்கணிக்க முடியாது. அதன் திசையில் அடித்துச் செல்ல நாம் அனுமதிக்காமல், தகுதிப்படுத்தும் விழுமியங்களை உள்வாங்கி, எதிர்நீச்சல் போட வேண்டும் என்பதைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய மாணவ, மாணவியர்களுக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயனுள்ள பத்தி. 'உறங்காப் பத்து', 'ஓவியம் செதுக்குகிற பாடல்', 'அப்பாவின் தோட்டம்', முதலிய பரிசுக் கவிதைகள் சிறந்த தேர்வு!

காலச்சுவடு பயணம் 'இடையறாத காரியங்களும் தொடர்ந்துவரும் கனவுகளும்' அரவிந்தன் கட்டுரை இதழின் பரிணாம வளர்ச்சியில் பங்குபெற்ற கதைகள், கட்டுரைகள், கட்டுரையாளர்கள் எனக் கடந்துவந்த நிகழ்வுகளை நினைவூட்டியது. 'மீண்டும் காகங்கள்' வழியாகக் கவிஞர் சேரன், புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, அயலில் நிகழ்கின்ற சூழல், வாரிசுகளின் மொழி, கல்வி மற்றும் சிந்தனைகளை 'அலைந்துழல்வு என்னும் புதிய திணை' தலைப்பில் பகிர்ந்திருப்பது சிறப்பு.

எம். சிவபாரதி
தென்காசி

பா. செயப்பிரகாசத்தின் எதிர்வினை அருமையாக உருவாக்கம் பெற்றுள்ளது. அவர் எடுத்துவைத்துள்ள கருத்துகளுக்குத் தரவுகளும் கவிதையும் நன்றாக இருந்தன.

சு. வெங்கடேசனின் கட்டுரையிலும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரையிலும் விளக்கப்பட்ட கருத்துகள், சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களுக்குப் பின்னும் தீண்டாமை மறையாமலிருக்கிறது என்பதை உணர்த்துகையில் மனம் சங்கடம் கொள்கிறது. தாகூரின் "கோரா", பிரேம் சந்தின் "கோதான்" பற்றிய அசோகமித்திரனின் செய்திகள் நன்றாக இருக்கின்றன. கண்ணனின் "அகவிழி திறந்து" பத்தியாகத் தோன்றவில்லை. மனவெளிப்பாடுகளின் யதார்த்தத்தைப் பக்குவமாகச் சொல்லிச் செல்கிறது. பயிற்சிப் பட்டறை மாணவர்கள் சிந்தனை வயப்படும் வகையில் உரையாடல் அமைந்துள்ளது. புகழ் சேர்க்கும் கருத்துகள் கோகுலக் கண்ணனின் 'கனம்' சிறுகதை. சு.ரா. 75-கவிதைகள் பரிசு பெறத்தக்க சிறப்புடையவைதான். சு.ரா பக்கங்கள் இதழின் கடைசிப் பக்கத்தில் வெளியாகியுள்ளது பிரிட்ஜஸ் இதழில் கே.ஏ. அப்பாஸ் எழுதிவந்ததை நினைவூட்டுகின்றன.

குரு. ராதாகிருஷ்ணன்,
நெல்லிக்குப்பம்

சுகிர்தராணியின் கவிதைகள் தனித்த அடையாளத்துடனும் வாசகனைச் சட்டென உள்ளிழுக்கும் முனைப்புடனும் உள்ளன. மரபை மீறுதல் என்பது நவீனப் பெண் கவிதைகளின் நோக்கமாக இருக்கலாம். ஆயினும் பாலுறவு சார்ந்த உடல் அவயங்களை அப்படியே கவிதைகளில் காணும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தென்றல் சண்முகசுந்தரம்
நத்தக்காடையூர்

"இடையறாத காரியங்களும் தொடர்ந்துவரும் கனவுகளும்" என்னும் அரவிந்தனின் கட்டுரை காலங்கள் கடந்தாலும் காலச்சுவடின் சுவடுகள் மறையாது என்பதைக் காட்டுகிறது. தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியங்களையும் தமிழ் வாசகர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் காலச்சுவடின் வளர்ச்சி தமிழ் உள்ளளவும் பெருகிக்கொண்டே இருக்கும்.

"கவிதை மொழியும் உடல் அரசியலும்" என்ற தலைப்பில் பெண்மையின் துடிப்புகளைக் கவிஞர் சுகிர்தராணியின் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள ந. முருகேச பாண்டியனின் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது. பெண்களின் உணர்வுகளையும் மூடப்பழக்கங்களையும் பெண் மூலம் உணர்த்துவது கவிஞரைச் சிறப்படைய வைக்கிறது. எதை எழுதலாம் எதை எழுதக் கூடாது என்ற நிபந்தனை படைப்பாளிகளுக்கு இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

முனைவர் துரை. மணிகண்டன்
கச்சமங்கலம்.

சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகளைக் கடந்த போதிலும்கூட, தலித்துகள் தங்களின் அடிப்படை மற்றும் ஜீவாதார உரிமைகள் என்ன? என்பதை அறியாதவர்களாய் இருக்கும் அவலம் இந்தியாவில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இக்கொடுமை தொடர அடிப்படைக் காரணம் அவர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்படுத்தாததே. தலித் முன்னேற்றத்திற்கு ஆட்சி மற்றும் அதிகார மையங்களில் பரவலாகத் தலித்துகளின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகளைத் தகர்க்க வேண்டும். மேலும் மேட்டுக்குடித்தனத்தைத் தூக்கிப் பிடிக்க, தலித்தியத்தையும் தலித்துகளையும் தொடர்ந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மேட்டுக்குடியினரின் நிழலில் கரையும் நவீனத் தீண்டாமை அவலத்தின் ஓலங்களைச் செவிசாய்க்கத் தயார் இல்லாத அநீதியான போக்கை முதலில் களைவது மக்களின் எதிர்பார்ப்பு.

நீண்ட நெடிய காலமாக தலித்துகளின் வரலாறு, பண்பாடு, இலக்கியம் எனப் பல துறைகளை ஆதிக்கச் சக்திகளின் பார்வைகளால் மட்டுமே கட்டமைப்பதும் சதித் திட்டங்கள் தீட்டுவதும் பல்வேறு வழிகளில் அம்மக்களின் சுய அடையாளங்கள் அனைத்தையும் அழிக்க எத்தனிப்பதும் அந்த இனத்தின் வரலாற்றையும் வாழ்வியலையும் இருட்டடிப்புச் செய்வதற்கான நோக்கத்தின் கூறுகளென நான் கருதுகிறேன். மானுட விடுதலைக்கான கலகக் குரலை முழக்கம் செய்ய, தலித் இலக்கியம் சாதியக் கூறுகளை வேரறுக்க, நிச்சயம் பாடுபடும் என்கிற பா. செயப்பிரகாசத்தின் குரலை ஆதரவுக் குரலாக நான் கருதுகிறேன்.

பா. செல்வவிநாயகம்,
சென்னை

இதழ் 101இல் இடம்பெற்ற இமையத்தின் கட்டுரையில், தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா, சாதி ஒழிப்பு இலக்கியமா என்பதில் பலருக்கும் பரவலான சந்தேகங்கள் உண்டு. தலித் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் சாதி ஒழிப்புக்கான ஆயுதமாகச் செயல்பட வேண்டும். பிற வகையான சாதி இலக்கியங்களின் போக்கு தங்கள் மரபுகளை, தங்கள் ஆதிக்கத்தைத் திணிப்பதற்காகச் சாதியைத் தக்க வைத்துக்கொள்ளுவதாக இருக்கும். ஆனால், தலித்தியம் சாதி, மத, இனங்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு ஒரு பொதுவான தளம் நோக்கிக் கட்டமைக்கப்பட வேண்டும். அதுதான் தலித் விடுதலையாக இருக்க முடியும். தலித்தியவாதிகளின் பல்வேறு போக்குகளை இமையம் விமர்சித்திருப்பது சிறப்பு.

'புழக்கடை மனிதர்கள்' படித்தேன். ரவிக்குமாரின் தொடர்ச்சியான செயல்பாடு இது போன்ற மரணங்கள் நிகழாதிருக்க வழிவகுக்கும்.

சம்பந்தம், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் அஞ்சலிக் கட்டுரைகளில் அவர்களின் பணியும் வாழ்வும் இறந்தும் உயிர்மை பெறுவதைக் காண முடிந்தது.

கவிதைகள் நுட்பத்துடன் செறிவாக உள்ளன. உமா மகேஸ்வரியின் 'மீளா முட்டம்' கவிதை சிறப்பு.

பொ. வேல்சாமியின் 'சங்க காலக் குடும்ப அமைப்பு?' பல்வேறு சங்க நூல்களின் ஆய்வுகளின் அடிப்படையில் அலசி ஆராயப்பட்டு, தெளிவாகக் கட்டுரையாக்கம் பெற்றுள்ளது.

தலித் வரலாற்று மாதம் பற்றிய ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்புகள் கவனிக்கப்பட வேண்டியவை.

விழி. பா. இதயவேந்தன்
விழுப்புரம்

உள்ளடக்கம்