|
எழுத்தாளர்களுக்கான உண்டு உறைவிட முகாம் (Writers Residency Programme) இவ்வருடம்
நவம்பர் மாதம் முதல் புதுவையில் நடைபெற உள்ளது. 'சங்கம்' என்ற அமைப்பு இதனை
இந்தியாவில் திட்டமிட்டுச் செயல்படுத்திவருகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக
இத்தகைய ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவரும் Ledig House International இப்போது 'சங்கம்'
வழியாக இந்தியாவிலே இந்த முகாமை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
'பிராங்க்ஃபர்ட் புத்தகச் சந்தை நிறுவனம்' நடத்திய இளம் பதிப்பாளர்களுக்கான
பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ள கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் சென்றிருந்தபோது ஒரு
விருந்தில் Ledig அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் D.W. Gibson தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டார். மேற்படித் திட்டத்தைக் கூறி ஒத்துழைப்பை வேண்டினார்.
பின்னர் மின்னஞ்சல் வழித் தொடர்புகளைப் பேணியதில் இந்தியாவில் இத்திட்டத்தைப்
பொறுப்பேற்று நடத்திவரும் ஆர்ஷியா சத்தர் அவர்களைச் சந்தித்து விரிவாகக்
கலந்துரையாடினோம். வடமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆர்ஷியா இந்திய
மொழி எழுத்தாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இம்முகாமில் அளிக்கப்பட வேண்டும் என்ற
கருத்தோடு முழுவதுமாக உடன்பட்டார்.
இவ்வருடம் நவம்பர் முதல் அடுத்த பிப்ரவரி வரை இம்முகாம் நடைபெறுகிறது. தனி அறையும்
உணவும் கட்டணமின்றி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். போக்குவரத்துச் செலவு
எழுத்தாளர்களுடையது.
எழுத்தாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் தங்கிப் பணிபுரிய
வேண்டப்படுகிறார்கள். தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக மூன்று மாதங்கள்வரை தங்கலாம்.
பத்து எழுத்தாளர்கள் தெற்காசிய நாடுகளிலிருந்தும் பத்து எழுத்தாளர்கள் உலக
நாடுகளிலிருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள்,
1. அவர்களை முன்மொழியும் இரண்டு கடிதங்களை (ஆங்கிலத்தில்) எழுத்தாளர்கள் அல்லது
பதிப்பாளர்களிடமிருந்து பெற்று அனுப்ப வேண்டும். 'எழுத்தாளர்கள்' என்பதில்
மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் அடங்குவர்.
2. வெளிவந்திருக்கும் நூலின் ஒரு பிரதி (இதைத் திருப்பி அனுப்ப இயலாது) அனுப்ப
வேண்டும். இதுவரை நூல் வெளிவராத எழுத்தாளர்கள் 25 பக்கம் மாதிரி கைப்பிரதியை அனுப்ப
வேண்டும். இது தாய்மொழியிலேயே இருக்கலாம்.
3. முகாமில் ஈடுபடப்போகும் பணி பற்றிய விண்ணப்பிக்கும் எழுத்தாளரின் ஒரு பக்க
அறிக்கை அனுப்ப வேண்டும்.
கடைசி நாள் ஜூலை 31
அனுப்ப வேண்டிய முகவரி:
Arshia Sattar, 3, Sharan Apts., 1 High Street,
Cooke Town, Bangalore 560 005.
மின்னஞ்சல்: arshia.sangam@gmail.com
கேள்விகள் இருப்பின் என்னைத் தொடர்பு கொள்க. kannan31@gmail.com அல்லது 9367511084.
- கண்ணன்
|