|
உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியர் எம். எப் . உசேன் மீது இந்துத்துவ
அடிப்படைவாதிகளால் தொடரப்பட்ட ஏழு வழக்குகளில் மூன்றின் மீது மே 8ஆம் தேதி தில்லி
உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று
முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் குறித்தும் கலை சார்ந்த
செயல்பாடுகளின் அறம் குறித்தும் 74 பக்கங்களில் விரிவாக விவாதித்துள்ள அத்தீர்ப்பு
படைப்புச் சுதந்திரம் குறித்த மிக முக்கியமான ஒரு பிரகடனம் எனலாம்.
துயரத்தின் உருவகமாக இந்தியாவைச் சித்தரித்துச் சில ஆண்டுகளுக்கு முன் உசேன் வரைந்த
ஒரு ஓவியம் இந்துத்துவவாதிகளின் கடும் கோபத்திற்கு உள்ளானது. விரிந்த கூந்தலுடன்
மண்டியிட்டுச் சரிந்துகிடக்கும் ஒரு பெண்ணாக இந்தியாவைச் சித்தரித்திருந்தார் உசேன்.
நிர்வாணமான அப்பெண்ணின் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டிருக்கும். தீராத
கலவரங்களால் கடும் சோதனைகளுக்குள்ளாகியிருந்த தேசத்தின் நிலை குறித்து வெதும்பிய ஒரு
கலை மனம் ஆற்றிய எதிர்வினை அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஓவியத்தை வாங்கிய
ஒருவர் அதைப் 'பாரத மாதா' எனப் பெயரிட்டு அழைத்தபோது நெருக்கடி தொடங்கியது.
'பாரத மாதா'வை உசேன் ஆபாசமாகச் சித்தரித்துவிட்டதாகக் குற்றம் சுமத்தி, அவரது
ஓவியங்களை அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகள். நாட்டின்
பல்வேறு இடங்களிலுமிருந்த ஓவியக்கூடங்களில் இடம்பெற்றிருந்த உசேனின் விலை மதிப்பற்ற
ஓவியங்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டன. பல ஓவியக் காட்சிக்
கூடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. உசேன் தேசத்தையும் இந்துக்களையும்
இழிவுபடுத்திவிட்டதாகக் குறிப்பிட்டு, சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின்
பல்வேறு நீதிமன்றங்களில் அவர்மீது பல வழக்குகளைத் தொடர்ந்தனர். இவ்வழக்குகளின் மூலம்,
நாட்டின் மீதும் புராதனமான இந்தியப் பண்பாட்டுச் சின்னங்களின் மீதும்
பற்றுக்கொண்டவரும் தன் கலைப் படைப்புகளின் வழியே உலக அரங்கில் நாட்டின் மதிப்பை
உயர்த்தியவருமான எம். எப். உசேனைத் தனிமைப்படுத்தி அவரது படைப்புச் செயல்பாடுகளை
முடக்குவதையே அடிப்படைவாதிகள் தம் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தனர். பிறகு
உசேன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்குகளை விசாரிக்குமாறு
தில்லி உயர் நீதிமன்றத்தைப் பணித்தது.
நிர்வாணம் குறித்தும் பாலியல் சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் இந்தியச் சமூகத்தில்
நிலவிவந்துள்ள மதிப்பீடுகள் பற்றி அடிப்படைவாதிகள் மேற்கொண்டுவரும் பொய்யான
பரப்புரைகளுக்கு மே 8ஆம் தேதிய தனது தீர்ப்பில் எதிர்வினையாற்றியுள்ளார் நீதிபதி
சஞ்சய் கிஷன் கௌல். கலை விமர்சகர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கையாளும்
சொல்லாடல்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும்
பிரதி.
'காமசூத்ரா'வை உருவாக்கிய தேசத்தின் பாலியல் அணுகுமுறைகள் குறித்த
வரலாற்றுரீதியிலான சான்றுகளைத் தன் தீர்ப்பில் நினைவுகூர்கிறார் கௌல். பாலியல் ஒரு
கலை என்னும் ஆரோக்கியமான புரிதலைக் கொண்டவை நம் மரபுகள். இந்தியர்கள் பாலியலை ஒரு
கலையாகக் கற்றுக்கொண்டனர்; பரிசோதனைகளை மேற்கொண்டனர்; அதன் நுட்பங்களை சக
மனிதர்களுடன் பகிர்ந்துகொண்டனர்; பிறகு அவற்றை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும்
காப்பியங்களாகவும் நடனங்களாகவும் மாற்றித் தொடர்ந்துவரும் தலை முறைகளுக்குக்
கையளித்துச் சென்றனர். பாலியல் செயல்பாடுகளை அவர்கள் ஒருபோதும் பாவமாகக்
கருதியதில்லை, மூடிய கதவுகளுக்குள் விவாதிக்கும் ஒரு விஷயமாகவும் கருதவில்லை. வாழ்வை
முழுமைப்படுத்தும் அதன் உன்னதமான ஒரு பகுதியாகவே பாலியலை இந்தியர்கள் கருதினர் எனக்
குறிப்பிடும் கௌல், பண்பாட்டைத் தூய்மைப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும்
அடிப்படைவாதிகள் உண்மையில் தேசத்தை மறுமலர்ச்சிக் காலத்திற்கு முந்தைய ஒரு
காலத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறார்கள் எனக் கடுமையாக
விமர்சிக்கிறார்.
இந்து மரபின் தொன்மையான பண்புகளாக விளங்கிய சகிப்புத்தன்மையையும் பன்முக
அடையாளங்களையும் சுட்டிக்காட்டும் நீதிபதி, அடிப்படைவாதம் அந்தக் கூறுகளை
அழித்துவிட்டதுதான் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார்.
சகிப்புத்தன்மையும் பன்முக அடையாளங்களுக்கான அங்கீகாரமுமே ஜனநாயகத்தின் ஆன்மாவாக
இருக்க முடியும் எனவும் வலியுறுத்துகிறார் கௌல். அடிப்படைவாத நடைமுறைகளால்
உருவாகியுள்ள பதற்றம், மனித உரிமை, கருத்து படைப்புச் சுதந்திரம் ஆகியவை குறித்து
விரிவாக விவாதிக்கும் இத்தீர்ப்பின் ஒரு முக்கியமான வரி, அதன் உள்ளடக்கத்தை
முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு கருத்துச் சுதந்திரம் பற்றிய ஒரு
பொன்மொழியாகக் கருதப்படுவதற்கும்கூடத் தகுதியானது.
FREEDOM OF SPEECH HAS NO MEANING IF THERE IS NO FREEDOM AFTER SPEECH...
(கருத்து வெளிப்பட்ட பின்னர் சுதந்திரம் இருக்கவில்லையெனில் கருத்துச்
சுதந்திரத்திற்கு எந்தப் பொருளும் இல்லை.)
தீர்ப்பின் தொடக்கத்தில் பாப்லோ பிக்காசோவின் மேற்கோள் ஒன்றினை
எடுத்தாண்டிருக்கிறார் நீதிபதி. 'கலை ஒருபோதும் புனிதமானதல்ல, அதனைப் புரிந்துகொள்ள
முடியாதவர்களிடமிருந்தும் ரசிப்பதற்குப் போதிய அளவு தயாராகாதவர்களிடமிருந்தும்
விலக்கப்பட்டிருப்பதே கலை. ஆம், அது அபாயகரமானது. எங்கே புனிதம் நிலவுகிறதோ அங்கே
கலை இருப்பதில்லை' என்னும் அந்த மேற்கோளைத் தொடர்ந்து அடிப்படைவாதிகள் உசேனின்
ஓவியத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை எனச் சுட்டிக்காட்டுகிறார் கௌல். குறிப்பிட்ட
அந்த ஓவியம் ஆபாசமானதோ அருவருக்கத்தக்கதோ அல்ல, பாலியல் தூண்டலை உருவாக்கும் எந்த
அம்சமும் துயரம் ததும்பும் அப்பெண்ணின் நிர்வாணத் தோற்றத்தில் இல்லை எனக்
குறிப்பிடும் அவர், இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதல்களால் நாட்டைவிட்டு
வெளியேறிக் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அயல்நாடுகளில் வசித்துவரும் 90வயது
எம். எப். உசேன் இத்தீர்ப்பின் மூலம் தாய் நாட்டுக்குத் திரும்பித் தன் கலைப்
பணியைத் தொடர்வார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கருத்துரிமைக்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் மனித உரிமைக்கும் கடும் சேதங்களை
ஏற்படுத்திவரும் அடிப்படைவாதிகள் மற்றும் கலாச்சாரக் காவலர்களின் இருபது ஆண்டுகாலச்
செயல்பாடுகளுக்கு இத்தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. ஆனால், வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கின்றன
ஊடகங்கள். கொண்டாட வேண்டிய கலைஞர்களும்கூட மௌனமாகவே இருப்பது ஒரு புதிர். மற்ற
எவருக்கும்விட ஊடகங்களுக்கும் கலைஞர்களுக்கும் முக்கியமானது இத்தீர்ப்பு.
இத்தீர்ப்பு குறித்த விவாதங்களை முன்னெடுத்துச் செல்வது கருத்துரிமை குறித்த
விழிப்புணர்வைப் பரவலாக்குவதற்குத் துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.
|