Google   www kalachuvadu.com

சு.ரா. பக்கங்கள்
காமத்துப் பால் - ஒரு தமிழ் நாவல்

காலத்தின் கானல் - 6
19.10.98 திங்கள் மாலை 4 மணி
தீபாவளி தினம்

இன்று தீபாவளி தினம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்தானே? கொல்லப்பட்டானா? மாலை மணி நாலு. பக்கத்து வீட்டு முற்றத்திலிருந்து வெடிச் சத்தம் கேட்கிறது. குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாமல் வெடிச் சத்தம் மட்டும் கேட்பது ஒரு அலுப்பூட்டும் அனுபவம். அதோடு குழந்தைகளின் ஆரவாரமும் கேட்கவில்லை. மௌனமாக வெடித்துக் கொண்டிருப்பது குழந்தைகளுக்கு ஏற்ற பழக்கமில்லை என்று கவலை ஏற்படுகிறது. இறுக்கமாக இருக்கும் உலகத்தை அது மேலும் இறுக்கமாக்கும்.

இன்று வெயில் சற்றுக் கடுமைதான். காலையில் 9.30 மணிவாக்கில் எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்திற்குப் போனபோதே வெயிலின் அன்றைய சுபாவம் வெளிப்பட்டது. பதினைந்து நாட்கள் கடுமையாக மழை பெய்தபின் இரண்டு மூன்று நாட்களாகத்தான் வெயிலடிக்கத் தொடங்கியிருக்கிறது. உஷ்ண சாம்ராஜ்யம் மீண்டும் விரைவில் அமுலாகிக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது தோன்றுகிறது. வெளியே சொல்லவே இல்லை. அதற்குள் மற்றொரு நாவலா என்பார்கள் நண்பர்கள். சரிதான் அவர்கள் கேட்பது. ஐம்பது வருடங்களில் இரண்டு குட்டி நாவல்கள் எழுதியிருக்கும் ஒரு ஆசாமி தன் பெரிய - எடை மூன்று கிலோ பைண்டிங் உள்பட - நாவலை எழுதி முடித்த கையோடு அடுத்த நாவலைத் தொடங்குவது என்றால் அவர்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்? என்னைத் தங்களுக்குத் தெரியும் என்று தானே என் நண்பர்கள் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எழுதியிருப்பவை; சந்திக்கும் போது நான் பேசுபவை; என் முதுமை இவையெல்லாம் அவர்களுக்குத் தெரியும். என் மறுபக்கம். யாருக்குத் தெரியும் அதுபற்றி. எத்தனை பேர்களின் மறுபக்கங்கள் எனக்குத் தெரியும்? மறுபக்கத்தில் ஒளிந்துகொண்டிருப்பவை எவ்வளவோ. மையத்தில் மறைந்துகொண்டிருக்கிறது காமம். காமம் என்ற சொல்லை எழுதவே கை நடுங்குகிறது. மனதில் பதற்றம் ஏறுகிறது. இப்போதே இந்த நாவலை எழுதுவதைக் கைவிட்டுவிடுவோம் என்றுகூடத் தோன்றுகிறது. காமமும் உளறலும் நெருக்கமான உறவு கொண்டவை.

காமம் என்ற சொல்லை என் வாழ்நாளில் எப்போது நான் முதன் முதலாகக் கேட்டேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். திட்டவட்டமாக ஒன்றுமே சொல்ல முடியவில்லை. நாவல் என்பதற்காகத் தெரியாததை எல்லாம் தெரிந்த மாதிரிச் சொல்லலாமா? கூடாது என்றுதான் நான் சொல்வேன். எனக்கு நாவல் உண்மை என்ற பழைய வார்த்தையுடன் கொஞ்சம் சம்பந்தப்பட்டது. அனுபவம் என்ற பழைய வார்த்தையுடன் சம்பந்தப்பட்டது.

காமம் என்ற சொல் காதில் விழும்போதெல்லாம் சிறுவயதிலிருந்தே ஒரு ஆண் ஒரு பெண்ணின் உதட்டைக் கடித்துத் துப்புவதுபோல் ஒரு மனச் சித்திரம் மனத்தில் தோன்றும். ரத்த விளாறாய் இருக்கும் உதடுகளை மீண்டும் கடித்துத் துப்புகிறான். அடப்பாவி! அம்மணமாக நின்றுகொண்டு. ஆகுமா இது உனக்கு. புராணங்களில் நடமாடும் காமாந்தகாரர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. புராணமே தெரியாதே. புராணம் தெரிய வேண்டுமென்றால் சிறு வயதில் அம்மா இருக்க வேண்டும். அம்மா இல்லையென்றால் பாட்டியாவது இருக்க வேண்டும். இருவரும் இல்லை. இருந்தது சாம்பன். என் வயசைவிட ஒன்றிரண்டு கூட இருக்கலாம். பள்ளிப் படிப்பு பூஜ்யம். மண்டு என்றால் என்னைவிடப் பெரியமண்டு. அவனுக்குப் புராணம் தெரியாது. பேய்கள் பற்றித் தெரியும். கருக்கிருட்டில் பேய்கள் மாட்டில் பால் கறந்து குடிக்க வரும் என்பான். காம்பு விறைப்பிழந்து தொய்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். செம்பில் பால் குத்தும் ஓசை கேட்கும். அவை பற்றிச் சொல்வான். அவற்றுக்குக் காம உபாதி இருப்பதாகத் தென்படவே இல்லை. குறைந்தபட்சம் சாம்பசிவனின் பேய்களுக்கு. அவற்றிற்கு உடல் இல்லையே. அதன்பின் எப்படிக் காமம் இருக்க முடியும்?

'காமக்குரோதாதிகள்' என்பார் சங்கரசுப்புமாமா. ஒரு தடவைகூட அவர் குரோதத்திலிருந்து காமத்தைப் பிரித்ததில்லை. பன்மையை அவர் அனுபவிப்பதுபோலவும் தோன்றும். வீசப்படும் வலையில் சிக்காமல் துள்ளித் துள்ளித் தாண்டிப் போக வேண்டும். காமக்குரோதாதிகளின் வலை. அந்த வலையில் பாதம் சிக்கிவிட்டால் அதன் பின் விமோசனம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை. இவ்வளவு பயங்கரமானதாக இருந்தும் 'காமக்குரோதாதிகள்' என்ற வார்த்தைச் சேர்க்கை எனக்குப் பிடித்திருந்தது. அதை மனத்திற்குள் அழுத்தமாக வசைபோல் சொல்லிக் கொண்டு வந்தேன். காலம் 1940க்கு முன். உடல் கிடந்த இடம் கழுகன்தட்டு.

கழுகன்தட்டு என்பது ஒரு காடு. காலடிச்சுவடுகள் அற்ற பிராந்தியம். சதா காற்றடிக்கும். பேரிரைச்சலுடன். புழுதிக் காற்று. சூறை என்று சொன்னால்தான் மரியாதை தந்ததாக இருக்கும். புழுதிவாரித் தூற்றுவதில் என்ன கொண்டாட்டம். அந்த நாட்களில் புழுதியும் நிறைய இருந்தது. கோட்டாறிலிருந்து பார்வதிபுரம் வரையிலும் செம்புழுதிப் பாதை. வெளியில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தால் முழங்கால் வரையிலும் சிவப்புக் காலுறை அணிந்துகொண்டது போலிருக்கும். கீழுதட்டை நாக்குத்துழாவுகிறபோது தூசி ருசி தெரியும்.

(தொடரும்)

உள்ளடக்கம்