Google   www kalachuvadu.com

பதிவு: அற்றைத் திங்கள், சென்னை. 30.03.2008
விமர்சிப்பது எளிதல்ல
பெ. பாலசுப்ரமணியன்

காலச்சுவடு அறக்கட்டளை, மாஃபா அறக்கட்டளை, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், புக் பாயிண்ட் ஆகியவை இணைந்து நடத்தும் அற்றைத் திங்களின் இறுதி நிகழ்வு, மார்ச் மாதம் 30.03.2008 அன்று புக் பாயிண்ட் அரங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கார்ட்டூனிஸ்ட் மதன் கலந்துகொண்டார்.

சமூகப் பிரச்சினைகளை நடு நிலைமையோடும் நுட்பமாகவும் விவாதிக்கும் இலக்கிய இதழான காலச்சுவடு வாசகர்களாகிய நீங்கள் வெகுசனப் பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாகப் பணியாற்றி, மசாலாப் படங்களைப் பற்றி விமர்சித்துவரும் என்னை ஏற்பீர்களா என்ற தயக்கம் எனக்கிருந்தது. ஆனால், அந்தத் தயக்கம் இப்பொழுது இல்லை. இது போன்ற இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்று உங்களோடு உரையாட வாய்ப்புக்கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுத் தன் உரையைத் தொடங்கினார் மதன்.

இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே மற்ற மாணவர்களைப் போன்று பள்ளியில் நடைபெறும் ஓவியம், கட்டுரை முதலான போட்டிகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்பேன்; மனப்பாடம் செய்து சொற்பொழிவாக ஒப்பிப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்ற மதன், கல்வி கற்ற குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் தனக்கு இது போன்ற பயிற்சிகள் கைவரவில்லை என்றார். ஒருமுறை பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மேடையேறிப் பேசாமல் நின்றதனால் வெளியேற்றப்பட்டதை அவமானமாக, படுதோல்வியாகத் தான் உணர்ந்ததையும் நினைவுகூர்ந்தார்.

கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலும் பொருளாதார வசதியும் இருந்தும் பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றாமல் வேறு திசையில் பயணிப்பவர்கள் உண்டு. இத்தகைய நிகழ்வு மதன் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளது. படித்தவர்கள் நிரம்பிய குடும்பப் பின்னணியில் வந்த நான் வேறு தளத்தில் பயணித்தவன் என்று குறை கூறுவர். இன்றும் என்னுடன் படித்த நண்பர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீ ஒரு வழிதவறிப்போன கார்ட்டூனிஸ்ட் என்பார்கள் எனத் தன்னுடைய வாழ்க்கைத் தேர்வு குறித்துப் பேசினார்.

ஆனந்த் என்றும் கோவிந்தகுமார் என்றும் குடும்பத்தாராலும் நெருங்கிய நண்பர்களாலும் அழைக்கப்படும் தனக்கு மதன் என்கிற பெயர் வெகுசனத் தன்மையுடனான அடையாளத்தைத் தரும் பெயர் என்றார்.

ஒருமுறை நான் தஞ்சைக்கருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு வரையப்பட்டிருந்த ஓவியங்களில் அசுரனை வதம் செய்யும் மகிசாசுர மர்த்தினி ஓவியம் என்னை முதலில் கவர்ந்தது. நான் முதலில் வரைந்தது மகிசாசுரமர்த்தினி ஓவியந்தான். அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடாமலிருந்த மதன் மைலாப்பூரிலுள்ள ஒரு கார்ட்டூனிஸ்ட்டைச் சந்திக்கச் சென்றதாகவும் எலும்பும் தோலுமாக இருந்த தன்னைப் பார்த்து, காட்டூன் பற்றித் தெரியுமா? என்னும் வினாவுடன் அது சார்ந்த அறிமுகத்தையும் புரிதலையும் தன் மனத்தில் உண்டாக்கினார் அந்தக் கார்ட்டூனிஸ்ட் என உணர்ச்சி பூர்வமாக அந்த நிகழ்வை விவரித்தார். அச்சமயத்தில் டேவிட் என்பவர் 'ஹிந்து'வில் கார்ட்டூன்கள் வரைந்து வந்தார். அவரைப் பின்பற்றி வாசு, சங்கர் போன்ற கார்ட்டூனிஸ்டுகள் நிறையப்பேர் உருவானார்கள். அவரது தாக்கத்தினால் நானும் கார்ட்டூன் வரைவதில் முழுமையாக ஈடுபட்டேன். பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்று கார்ட்டூன் சம்பந்தமான நூல்கள் பலவற்றைப் புரட்டிப்பார்த்து அந்நூல்களிலுள்ள அவர்களது கார்ட்டூன்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன் என்றார். எந்தத் துறையில் இயங்கினாலும் தன்னாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் மதன்.

வெகுசனப் பத்திரிகையில் முதன்மை வகிக்கும் ஆனந்த விகடனில் கார்ட் டூனிஸ்ட் அசிஸ்டெண்ட் எடிட்டராக முன்பு பணியாற்றத் தொடங்கி ஜூனியர் விகடனில் பணியாற்றியது வரை தான் கடந்து வந்த பாதைகளைக் குறிப்பிட்டுப் பேசினார் மதன். ஆனந்த விகடனில் இடம்பெறும் கேள்வி-பதில் பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்குச் சாதாரணமாகப் பதிலளித்துவிட முடியாது என்றும் உலகளவிலான புத்தகங்களை, வரலாற்று நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தால்தான் பதில்தர முடியும் என்ற மதன் திரை மறைவில் விமர்சிக்கும் பணி எளிதல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார், பெண் கவிஞர்களின் ஒரு பக்கக் கவிதைக்கு இமேஜைப் படித்து அதை வெளிப்படுத்துவதாக, கார்ட்டூனும் ஓவியமும் வரைந்ததையும் கூறினார்.

எல்லோராலும் போற்றப்பட்ட கரிசல் காட்டு எழுத்தாளரான கி. ராஜநாராயணனின் எழுத்தை அதுவரை படித்திராத தான், நண்பர்கள் மூலம் படிக்க நேர்ந்ததையும். அவரது எழுத்துகளில் ஊன்றிப்போய் அதன் பாதிப்பில் கி.ரா பக்கங்கள் என ஆனந்த விகடனில் புதியப் பகுதியாகத் தொடங்கியதையு குறிப்பிட்டார். மேலும் அவரது கரிசல் எழுத்துக்கு ஓவியமும் கார்ட்டூனும் போட முடியாத நிலை ஏற்பட, ஆதிமூலத்தை அணுகியதையும் அவரும் ஓவியம் போட முடியாதென மறுத்ததற்குப் பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் பெசன்ட் நகரில் ஆதிமூலத்தைச் சந்தித்து கி.ராவின் கரிசல் எழுத்துக்கு எந்த மாதிரியான படங்கள் வரைவது என்பது குறித்த அனுபவங்களை ஒரு மணிநேரம் சந்தித்துப் பேசியதையும் அதன் பிறகு கி.ரா. பக்கங்களுக்கு ஓவியம் வரைய ஆதிமூலம் ஒத்துக்கொண்டதையும் மிகுந்த ஆர்வத்துடன் சொன்னார்.

இன்று வெளிவந்துகொண்டிருக்கும் சிறுபத்திரிகைகளில் ஓவியங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் கார்ட்டூன்களைப் பயன்படுத்துமிடங்கள் குறைவு. இருப்பினும் அவை தனித்திறமையுடன் வெளிப்படுகின்றன என்ற மதன், உரையின் முடிவில் நான்கைந்து கார்ட்டூன்களை வரைந்து காட்டினார்.

தான் சொல்லவரும் கருத்தை எழுத்துரு மூலம் தருவதைவிட கார்ட்டூனில் விளக்குவது எளிதில் பார்வையாளர்களைச் சென்றடையும் என்ற மதனின் கார்ட்டூன்கள் அதிகம் பேசப்பட்டவை. இந்திரா காந்தி மரணமடைந்த துக்கத்தை வெளிப்படுத்த ஒரு கார்ட்டூன் வரைந்தேன். அது இந்திராவை இந்தியாவே தன் மடியில் தாங்கிக்கொண்டு கண்ணீர்த்துளிகள் சிந்துவதாக இருந்தது. பலராலும் பேசப்பட்ட கார்ட்டூன் அது என்று குறிப்பிட்ட மதன் பின்பு வாசகர்களின் கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார். தேவிபாரதியின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.

உள்ளடக்கம்