|
1970, 80களில் சுந்தர ராமசாமி, தனது இல்லத்தின் மொட்டை மாடியில் 'காகங்கள்'
என்னும் கலை, இலக்கியக் கூட்டத்தை மாதந்தோறும் நடத்திவந்தார். அவர் மறைவுக்குப்
பின், அவரது நினைவாகக் 'காகங்கள்' கூட்டத்தை நடத்துமாறு நண்பர்கள் கேட்டுக்
கொண்டதற்கிணங்க, சுந்தர ராமசாமியின் முதலாவது நினைவு நாளன்று 'மீண்டும் காகங்கள்'
கூட்டத்தை நடத்தத்தொடங்கினார் கண்ணன். மாதந்தோறும் ஓராண்டுக்குத் தொடர்ந்து
நடத்துவதென்றும் அதன்பின் அவ்வப்போது சிறப்புக் கூட்டங்கள் நடத்துவதென்றும்
முடிவுசெய்யப்பட்டது. 29.2.08 அன்று நடந்த 'மீண்டும் காகங்கள்' சிறப்புக்
கூட்டத்தில், கனடாவில் வசித்துவரும் கவிஞர் சேரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
"மீண்டும் காகங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களுடன் எனது கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த கண்ணன் அவர்களுக்கு என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் ஒரு கலந்துரையாடலைத்தான் நான் விரும்புகிறேன்.
அதற்கு முன்னதாகச் சில குறிப்புகள் - சிறிய வாழ்க்கைக் குறிப்புடன் என் உரையைத்
தொடங்குகிறேன்" என்ற அறிமுகத்துடன் பேசத் தொடங்கினார் கவிஞர் சேரன். அவர் உரையின்
சுருக்கம் வருமாறு:
"1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் ராஜீவ்காந்தியும்
அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனயும் கையெழுத்திட்ட சில தினங்கள் கழித்து, நான்
வெளிநாடு புறப்பட்டேன். ஒன்றரையாண்டுகள் வெளிநாட்டிலிருந்தேன். மீண்டும்
யாழ்ப்பாணம் திரும்பி மூன்று மாதங்கள் சொந்த ஊரிலிருந்தேன். 1990ஆம் ஆண்டு மார்ச்
மாதம் இலங்கை வடக்கு - கிழக்குப் பிராந்தியத்திலிருந்து கடைசி இந்திய
ராணுவச்சிப்பாய் வெளியேறிய அன்று நான் திரிகோண மலையில் இருந்தேன். பழையபடி மீண்டும்
வெளிநாடு செல்லவேண்டிவந்தது. அதற்குப் பிறகு பதின்மூன்று ஆண்டுகள் சொந்த ஊருக்குப்
போகவில்லை. அது ஒருவகைப் புலம்பெயர்வு.
புலம்பெயர்வு மனித வாழ்க்கையில் காலங்காலமாக நடந்துவருகிறது. புலம் பெயர்வை நாங்கள்
இரண்டு வகையாகக் கொள்ளலாம். தாங்களாகவே விரும்பி, நல்ல வாய்ப்புகளுக்காக எங்கள்
இடத்தைவிட்டுப் போவது. இன்னொரு வகை, தங்களது விருப்பமில்லாமல், கட்டாயமாகப்
புலம்பெயர்க்கப்பட்டு, புகலிடம் கோரி வெளிநாடுகளுக்குப் போவது. இரண்டையும் நாங்கள்
தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து
வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் உருவாக்கிவரும் வாழ்க்கை முறையை
ஆறாம் திணை அல்லது புதிய திணை என்கிறேன். அலைந்துழல்வு என்பது இந்தப் புதிய
திணைக்கு நாங்கள் கொடுக்கும் பெயர். காயம்பட்ட மனத்துடன், காயம்பட்ட உடலுடன்
நாளாந்தம் வாழ்க்கையில் உழன்று திரிதல். அதை நாங்கள் அலைந்துழல்வு என்கிறோம்.
இவ்வகையிலேயே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையும் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஈழப் போர் காரணமாக, நாலுபேருக்கு ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எட்டிலிருந்து ஒன்பதரை லட்சம் பேர் வரையிலான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து கனடா,
நோர்வே, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற
நாடுகளில் வசித்துவருகின்றனர். புலம்பெயர்ந்தோர் என்று நாங்கள் சொல்வது
அவர்களைத்தான்.
சாதிய ஒடுக்குமுறை காரணமாகக் கட்டாயப் புலப்பெயர்வுக்கு ஆளானவர்கள் வரலாற்றில்
மறைக்கப்பட்டுள்ளனர். 1,16,000க்கும் அதிகமானோர் அநியாயமாகத் தமிழ்நாட்டில் அகதி
முகாம்களில் வசிக்கின்றனர். சிக்கலான விடயம் என்னவென்றால், இவர்களுடைய வாழ்க்கை
நிலையை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒரு முரண்பாடுதான். கனடா,
நோர்வே, ஜேர்மனி போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து, ஓரளவில் வசதியாக வாழுகின்ற
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றித்தான் கவனிக்கிறோம். - தமிழ்நாட்டில் அகதிகளாக
உள்ளோரின் வாழ்க்கை நிலையிலிருந்து இவர்களின் வாழ்க்கை நிலை பல்வேறு அம்சங்களில்
வித்தியாசமானது - நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
புலம்பெயர் வாழ்க்கையில் நாங்கள் முதலில் எதிர்கொள்ளும் சிக்கல் பருவநிலை
சார்ந்தது. சிலபோது பகல் 6 மணித்தியாலங்கள், சிலபோது பகல் 14 மணித்தியாலங்கள் எனத்
தலைகீழான மாற்றங்கள். அது நாங்கள் எதிர்கொள்ளும் முதல் சிக்கல்.
அடுத்து, நாங்கள் எதிர்கொள்வது தமிழ் அடையாளம் சார்ந்த சிக்கல். முதல்
தலைமுறையினருக்கு இந்தச் சிக்கல் இல்லை. ஆனால், இரண்டாம் தலைமுறையைச்
சேர்ந்தவர்களுக்கு, வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு, தமிழ்
வீட்டுப் பாவனைக்குரிய மொழியாக மட்டுமே இருக்கிறது. அவர்கள் ஜேர்மன் - தமிழ்
பேசுபவர்களாக, பிரஞ்சு - தமிழ் பேசுபவர்களாக வளர்கிறார்கள். தமிழில் பேசவியலாத ஒரு
தலைமுறையும் உருவாகிவருகிறது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாகவே அடையாளம்
காண்கிறார்கள். தங்களுக்கென ஒரு தனி நாடு என்ற வகையில் தமிழ்த் தேசியம்
பேசுபவர்களாக இருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்தோரின் இலக்கியத்திலும் மாற்றங்களைக் காணவியலும். அவர்கள்
எழுத்துக்களில் புதிய அனுபவங்கள், புதிய வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்த
வேண்டியிருப்பதால், புதிய மொழி, புதிய சிந்தனை தேவைப்படுகிறது. பிறை நிலவு அங்கே
தலைகீழாகத் தொங்குகிறது. புதிய சூழ்நிலையில் வேறு வகையான மரங்களை, வேறு வகையான
இயற்கையைத் தங்கள் இலக்கியங்களில் கொண்டுவர வேண்டியிருப்பதால் புதிய படிமங்களை,
புதிய கருத்துகளைச் சொல்ல வேண்டியதிருக்கிறது. இந்த மாற்றங்கள் முக்கியமானவை.
அடுத்து மிக முக்கியமான விடயம் புதிய சமூக உறவுகள் சார்ந்தது. இதுவரை நாங்கள்
கருதிவந்திருக்கும் குடும்ப அமைப்பில் ஆண் - பெண் அதிகார மாற்றங்களைச் சந்திக்க
வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் முதலாவதாக ஒரு பெண் புலம்பெயர்ந்து வெளிநாடு
சென்றால், பின்னர் அங்கு செல்லும் கணவன், குழந்தைகள், மற்ற குடும்ப உறுப்பினர்கள்
அவளைச் சார்ந்தவர்களாக வாழ வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
சமூக உறவில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றம் ஒருபால் உறவுப் பிரச்சினை.
டொரொண்டோவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் - 10,000 தமிழர்களுக்கு மேல் வசிக்கும் -
பகுதியின் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஒருபால் உறவுக்காரர்கள் குடியிருக்கிறார்கள்.
ஆண்டுக்கொருமுறை பெரிய கேளிக்கை, கொண்டாட்டம் நடைபெறும். பத்து லட்சத்துக்கும்
மேற்பட்ட ஆண் - பெண் ஒருபால் உறவுக்காரர்கள் கூடுவார்கள். அவர்களின்
கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் அருகில் வசிக்கும் தமிழர்கள் தாங்கள்
விரும்பியோ விரும்பாமலோ பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருபால் உறவுக்காரர்களாக
வாழ்வதற்கான சுதந்திரம் அங்கே இருக்கிறது. இப்படியான சமூக உறவு மாற்றத்துக்கான
சாத்தியப்பாடுகள் எங்களது சொந்த இடமான யாழ்ப்பாணத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்க
முடியாது.
அடுத்து எங்கே வேர்கொள்வது என்ற பிரச்சினை. மொழி சார்ந்தா, இனம் சார்ந்தா என்னும்
பிரச்சினை. ஜேர்மன்காரனாகவும் தமிழனாகவும், நோர்வேக்காரனாகவும் தமிழனாகவும் ஒரே
நேரத்தில் இருக்க முடியுமா? அப்படியாகவும் இருக்கிறார்கள். தமிழர்களாகவும் இருக்க
விரும்புகிறார்கள். இப்படியாக இங்குமல்லாத அங்குமல்லாத நிலை. ஒரே நேரத்தில்
ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களுக்கு மாற வேண்டிய நிலை. இது ஆரோக்கியமானது என்றே
நான் கருதுகிறேன்.
அடுத்த மூன்றாவது தலைமுறையினரிடையே தமிழுக்கும் இலக்கியத்துக்குமான அவர்களின் உறவு
எந்தவிதமானதாக இருக்கும் என்று எங்களுக்குச் சொல்லவியலாது. இவ்வகையிலான புதியவகைச்
சிக்கல்களை, சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதே எங்கள் முன்னுள்ள பிரச்சினையாக
இருக்கிறது. இது நாட்டுக்கு நாடு வேறுபட்ட நிலையிலும் உள்ளதாகவே கருதுகிறேன்."
சேரனின் உரையைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும்
எழுப்பினர். அவற்றுக்கான சேரன் பதில்களின் சாராம்சம் வருமாறு:
"இந்தியத் தமிழர்களிடம் மட்டுமல்ல, எல்லாத் தமிழர்களிடமும் நாங்கள் எதிர்பார்ப்பது,
தோற்றப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும் என்பதுதான். தமிழை அடுத்த புதிய கட்டத்துக்கு எடுத்துச்செல்வது, ஆட்சி
மொழி, கல்வி மொழியாக மாற்றுவது போன்றவை குறித்துச் சிந்திக்க வேண்டும். 'தமிழ்
வாழ்க' என்ற கோஷங்கள் நடைமுறையிலும் வாழ்க்கையிலும் நாங்கள் அதைக்
கடைப்பிடிக்கவில்லை.
எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பது மிகச் சிக்கலாக இருக்கிறது.
அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க என்ன புத்தகம் இருக்கிறது? சுவர் இருந்தால்தானே
சித்திரம் எழுதமுடியும். நாங்களே சுவரை எழுப்பி, நாங்களே சித்திரம் எழுத
வேண்டியவர்களாக இருக்கிறோம். எங்களுடைய சிக்கல் இதுதான்.
முதலாவது தலைமுறைக்குக் கழிவிரக்கம் தவிர்க்க முடியாததாக இருந்தது. எப்போதாவது ஒரு
சந்தர்ப்பத்தில் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவோம் என்ற நம்பிக்கை இருப்பதால்
ஏற்படும் கழிவிரக்கம். இப்போது இரண்டாவது, மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது.
அவர்களுக்கும் கழிவிரக்கம் இருக்கிறது. அது இனத்துவம் சார்ந்தது. காலங்காலமாக அங்கே
புகலிடத்தில் வாழ்ந்தாலும் தமிழர்கள் ஜேர்மன்காரர்களாகவோ, நோர்வேக்காரர்களாகவோ
ஆகிவிட இயலாது. அவர்கள் கறுப்பர்கள்தாம் என்பதால் ஏற்படும் கழிவிரக்கம்.
கனடாவில் 13இலிருந்து 14ஆயிரம் மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். அவர்களுக்கு முதல்
வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை தமிழை இரண்டாவது மொழியாகப் படிப்பிப்பது எப்படி
என்பதுதான் எங்களது சிக்கலாக இருக்கிறது. சில நாடுகளில் தமிழை ஒரு பாடமாக
வைக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுதப்படுகிறது. அது தமிழ் உணர்வு சார்ந்ததாக அல்லாமல்
அரசியல் சார்ந்த நிலைப்பாடாகவே இருக்கிறது."
கலந்துரையாடல் முடிந்ததும், கவிஞர் சேரன் தனது 'மீண்டும் கடலுக்கு'
தொகுப்பிலிருந்து 'துண்டிக்கப்பட்ட காலின் கதை' கவிதையையும் 'நீ இப்பொழுது இறங்கும்
ஆறு' தொகுப்பிலிருந்து 'அறிவுஜீவியாக வளரத்துடிக்கும் ஒரு அப்பாவிப் பொதுமகனின்
கேள்விகள்' கவிதையையும் உணர்ச்சி பொங்க வாசித்து, அவை எழுதப்பட்ட சூழலையும்
விளக்கினார்.
|