|
கலகம், புரட்டிப் போடுதல், தலித் மொழியில் எழுதுதல் என்றெல்லாம் பேசப்பட்ட
பரபரப்பு, தலித் இலக்கியத்தைச் சரியான அர்த்தத்தில் உருவாக்காமல் திரும்பவும்
இழிநிலையைப் பேசும் வடிவத்தையே பரிந்துரைத்துவிட்டது என்று இமையம் சொல்லும்
கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டியவை. அதே போல் வெகுமக்கள் ஊடகத் தளத்திலும் சிறப்பு
மலர்களிலும் தலித் எழுத்தாளர்களுக்காக இடத்தை ஒதுக்கி அவர்களைக் கொண்டே அப்பக்கங்களை
நிரப்புவது என்ற சலுகை, ஒருவிதத்தில் தீண்டாமைதான் என அவர் வாதிடுவது ஏற்கத்தக்க
ஒன்றுதான்.
எதுவுமே கிடைக்காமல் போன ஒரு கூட்டத்திற்கு, ஒதுக்கீடு ஆறுதல் அளிக்கும் கொழுகொம்பு;
அதைப் பற்றிக்கொண்டு மேலே வரலாம். ஆனால், அதையே விடுதலைக்கான, தீண்டாமையை
ஒழிப்பதற்கான, சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான அருமருந்து என நம்புவது பேதைமையே.
இமையமும் இத்தகைய கருத்துத் தளத்தில் இருந்தே, "இந்திய - தமிழ்ச் சமூகம்,
உயர்வுதாழ்வு என்ற படிநிலைகள் கொண்ட சமூகமாக இருக்கிறது என்பதை தலித் இலக்கியம்
மட்டுமே பேசவில்லை. பழங்கால இலக்கியங்களும் பேசியுள்ளன" என்பதற்கான மேற் கோள்களைக்
காட்டி விளக்கியுள்ளார். அதே நேரத்தில் இமையம் தனது கட்டுரையில், மேலான இலக்கியம்
எது? என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டு,
· சிறந்த இலக்கியம் என்பது இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்தது. தன்னுள் எந்த
அடையாளத்தையும் கொண்டிருக்காது. தன்மீது ஏற்றப்படும் மதிப்பீடுகளையும்
புனிதங்களையும் உதறித்தள்ளுவது.
· மொழியின் வழியே வாழ்வை உற்று நோக்குவதுதான் இலக்கியம். நிஜமான இலக்கியம்
சமூகத்தின் எல்லாவிதமான கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டது இலக்கியத்திற்கு அடிப்படை
உணர்ச்சிப்பெருக்கு. அறிவு அல்ல. அறிவு முன்தீர்மானங்களையும் முடிவுகளையும் மட்டுமே
உருவாக்கும். நிஜமான இலக்கியம் இந்த இரண்டு குணங்களையும் கடந்து நிற்கும்.
தேடுதல்தான் இலக்கியம்; பதில்களும் விடைகளுமல்ல. என்பதாகச் சில பதில்களைச் சொல்லிப்
பார்க்கிறார். அதோடு "யார் சிறந்த இலக்கியவாதியாக விளங்க முடியும்?" என்று இன்னொரு
வினாவை எழுப்பிக்கொண்டு, எழுத்தாளனுக்கு வேலிகளற்ற சுதந்திரம் வேண்டும். அவன்
பாசாங்குகளையும் எழுத்தாளன் என்கிற அடையாளத்தையும் விட்டுவிட வேண்டும்.
எல்லாவற்றையும் தேடுகிறவனாக, கேள்விகளைக் கேட்கிறவனாக மட்டுமே இருக்க வேண்டும்.
நிஜமான எழுத்தாளன் தடைகளற்றவனாக, வேலிகளற்றவனாக இருப்பான். அவனது எழுத்து சமூகத்தின்
இழிவுகளை அகற்றுவதற்குப் பெரிய சக்தியாக இருக்கும்.
· தான் பார்த்தவற்றை நேர்மையான முறையில் சார்பற்ற நிலையில் பதிவு செய்கிறவன் தான்
கலைஞன்.
· ஒரு எழுத்தாளன் எதை எழுதுவது என்பதைவிட, எதை எழுதக்கூடாது என்பதுதான் முக்கியமானது.
இந்தத் தேர்வுதான் படைப்பிலக்கியத்தில் முக்கியமான பகுதி என்று அவருக்குச்
சொல்லப்பட்ட அல்லது கற்றுணர்ந்த சில பதில்களைச் சொல்லியுள்ளார். இவையெல்லாம்
சேர்ந்து அவரைப் பாராட்டலாம் என்கிற நினைப்பைத் தடுத்துவிடுகின்றன.
முன்முடிவுகளையும் தீர்மானங்களையும் கறாராக விலக்கித் தள்ளுவது ஒன்றுதான் இமையத்தின்
நோக்கம் என்பது போலப் பேசும் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள இவையெல்லாம் கறாரான
தீர்மானங்கள் அல்லாமல் வேறென்ன? இனி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை என்ற முடிவுகள்
அல்லாமல் தொடர் விவாதப் புள்ளிகளாகவா இவை இருக்கின்றன?
இலக்கியம் என்பதை ஒற்றை வரையறையின் மூலம் நிறுவிக் காட்டிவிட முடியாது என்பதைப் பலர்
பலவிதமாக விளக்கிக்காட்டிப் பல காலம் ஆகிவிட்டது. கவனமாக அதை விலக்கிவிட்டுச்
சிறந்த இலக்கியம் என்ற ஒன்றை, ஒற்றை வரையறையால் நிறுவிக்காட்ட முயல்கிறார் இமையம்.
இப்படிப்பட்ட நோக்கம் கொண்ட கட்டுரைக்குத் "தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு
இலக்கியமா?" என்ற வினா வாக்கியத்தைத் தலைப்பாக வைத்துக் கொண்டதுதான் ஏன் என்பது
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தனது கட்டுரையின் தொடக்கத்தில், "தலித் இலக்கியம் என்பது சாதி எதிர்ப்பு
இலக்கியமல்ல என்று தொடங்கி சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் அது எப்படியெல்லாம்
வதைத்துவந்திருக்கிறது என்பதைச் சொல்கிற இலக்கியமே தலித் இலக்கியம்" எனத் தெளிவாகச்
சொல்லிவிட்டு, பின்னர் விலகிச்சென்று குழப்புவது ஏன் என்பதுதான் புரியவில்லை.
தமிழ் இலக்கியப் பரப்பில் தலித் இலக்கியம் என்ற வகைப்பாடு பேசப்படுவதற்கு முன்பும்
ஏற்றத்தாழ்வின் இருப்பை இலக்கியங்கள் பேசியுள்ளன. ஆனால், தலித் இலக்கியம் என்னும்
வகைப்பாடுதான் வதைக்கப்படுவதற்கும் வதைப்பதற்கும் உரிய அதிகாரத்தைத் தந்த கருத்தியல்
தளத்தையும் அடையாளப்படுத்திக் காட்டியது. அக்கருத்தியல் தளம் யாருக்கெல்லாம்
சாதகமாக இருக்கிறது என்றும் அதைக் கேள்விக்குட்படுத்தி, கேலிசெய்து, சிதைத்து
நொறுக்காமல் மனிதாபிமானம் பேசுவதில் நியாயம் இல்லை என்று சொன்னது.
ஆதிக்கம் செய்பவர்களுக்குச் சாதகமான கருத்தியலை ஏற்றுக் கொண்டதாகத் தமிழ் வாழ்வு
இருப்பதைப் புரியும் அறிவு வேண்டும். அதை மாற்றுவதற்கான முன் நிபந்தனைகளை
வைக்கும்போது அறிவும் வேண்டும். உணர்ச்சிப் பெருக்கும் வேண்டும். இவ்விரண்டின்
கலவையாக இலக்கியம் இருக்கும். இவ்விரண்டும் சம அளவில் இருக்கும்போது உருவாகும்
இலக்கியம் சரியான இலக்கியமாக இருக்க முடியும். ஒன்று கூடுதலாகி இன்னொன்றைக்
கெடுக்கிறது; அதிலும் அறிவு மட்டுமே இருந்தால் இலக்கியமே காணாமல் போய்விடும் என்று
வேண்டுமானால் விவாதம் செய்யலாம்?
இலக்கியப் படைப்பு என்பது கலாச்சாரச் செயல்பாடு. அதனுடைய நோக்கம் சமூகமேம்பாடு என
நம்பும் இமையம் தனது படைப்புகளில் அதை நேரடியாகச் சொல்வதில்லை; அதற்காக அதை விட்டு
விலகி நிற்கிறார் என்பதும் உண்மையல்ல. சாதி ஏற்றத்தாழ்வு என்னும் வன்முறையாலான
இந்தியச் சமூகத்தை எழுதுகிறவன் தேர்வுசெய்ய வேண்டியது சாதியப் பிளவுகளை ஏற்கச்
செய்யும் நம்பிக்கைகள், சடங்குகள், புனிதங்கள் ஆகியவற்றின் மீது நடத்தும்
தாக்குதல்தான் எனத் திட்டமிட்டுக் கதைகள் எழுதும் இமையம் கட்டுரைகள் எழுதும்போதும்
மேடைகளில் பேசும் போதும் வேறு ஒரு நபராக இருக்கிறார் என்பது வியப்பான ஒன்றுதான்.
நமது வாழ்க்கையில் சந்திக்கும் எண்ணற்ற வியப்புகளில் இதுவும் ஒன்று என விட்டுவிட
வேண்டியதுதான்.
|