Google   www kalachuvadu.com

பதிவு
கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள்
வெங்கட்ரமணன்

கல்யாணசுந்தரம்: கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம்:  வாழ்நாள் பங்களிப்புக்கான இயல் விருது

தற்பொழுது இலக்கிய உலகில் கவனம் பெற்றிருக்கும் விருதுகளுள் ஒன்றாக 'இயல் விருது' வளர்ந்திருக்கிறது. தனிப்பட்ட தெரிவுகளில் சிலருக்கு மாற்று கருத்துகள் இருந்தாலும், கனேடிய இலக்கியத் தோட்டத்தின் நோக்கத்தின் மீதும் செயல்முறைகளின் மீதும் கொஞ்சங்கொஞ்சமாக மதிப்பு உயர்ந்துவருகிறது. 2008ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கும் விழா வழக்கம்போல டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு ஆராய்ச்சித் துறையின் மங்க்சென்டரில் மே மாதம் 18ஆம் நாளன்று நடந்தது. ஏழாவது ஆண்டாக வழங்கப்படும் 'இயல் விருது' தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கில மொழியாக்கம் செய்து தமிழ் எழுத்தாளர்களை உலக அரங்கிற்கு எடுத்துச்சென்ற சேவைக்காக லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராமுக்கு வழங்கப்பட்டது. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நவீனத் தமிழ்ப் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டுத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்துவருபவர் இவர். மொழிபெயர்ப்புக்கு வழங்கும் உயரிய விருதான Hutch Crossword Book Award இவருக்கு இருமுறை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளும் நடத்திவருகிறார்.

சென்ற வருடத்திலிருந்து இயல் விருதின் கூடவே, வகைப்படுத்தப்பட்ட படைப்புகளுக்கான ஆண்டு விருதுகளும் வழங்கப்படுகின்றன. விருது பெறுபவர்களுக்கு 500 கனேடிய டாலர்களும் பட்டயமும் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டுக்கான பரிசுகளைப் பெறுபவர்கள்:

புனைகதை: யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்

புனைவிலி: நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன்

கவிதை: தொலைவில் - வாசுதேவன்

வாழ்நாள் பங்களிப்புக்கான இயல் விருது லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராமுக்கு வழங்கப்பட்டது. "வார்த்தைகளினாலான உலகம்: நவீனத் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பின் சிக்கல்கள்" என்ற தலைப்பில் ஏற்புரையாற்றிய லக்ஷ்மி, மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும் உன்னதமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியுலகத்துக்குத் தெரியவருவதில்லை என்றும் கூறினார். இந்தக் குறை எதிர்காலத்தில் நீங்கித் தமிழின் புகழ் உலகளாவும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இவ்விழாவில் சென்ற ஆண்டு முதல், இலக்கியத்திற்கான விருதுகளோடு தமிழ்க் கணிமை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் ஆயுட்காலச் சேவையைச் சிறப்பிக்கும் முகமாகத் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்படுகிறது. சமகாலச் சமூகத்தில் கணினியின் பங்கைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. நம் சமூகத்தில் இலக்கியம், திரைப்படம், நாடகம், ஓவியம், இன்னபிற கவின்கலைகள் அனைத்திற்கும் ஏதாவது ஒருவகையில் கௌரவம் அளிக்கும் முகமாகப் பெயரளவிலேனும் ஒரு விருது வழங்கப்படுகிறது. இருப்பினும் தமிழில் அறிவியல் தொழில்நுட்பத் துறைகள் பெரிதும் கவனம் பெறுவதில்லை. அந்தவகையில் இவ்விருதை ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம். காலச்சுவடு அறக்கட்டளையின் உதவியில் வழங்கப்படும் இவ்விருதைக் கனேடிய இலக்கியத் தோட்டம் நிர்வகிக்கிறது. இவ்வருட விருதைப் பெறும் முனைவர் கல்யாண சுந்தரத்துக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப்பட்டயமும் வழங்கப்பட்டது.

கல்யாண் என்று அழைக்கப்படும் முனைவர் கல்யாணசுந்தரம், சுவிட்ஸர்லாந்து நாட்டின் லூஸான் நகரின் ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல் துறை ஆராய்ச்சியாளராக இருக்கிறார். சென்னையில் பிறந்து, அங்கு ஆரம்பக் கல்வியைப் பெற்ற கல்யாண் அமெரிக்காவின் நோட்ரேடாம், இந்தியானா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக ஸ்விஸ் நாட்டில் ஆராய்ச்சிப் பணிபுரிகிறார். தமிழ்க் கணிமைக்குப் பல வழிகளிலும் தொடர்ந்து தொண்டாற்றிவருகிறார்.

mmm

நாம் ஒரு அற்புதமான காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும், அறிவியலாலும் தொழில்நுட்பத்தாலும் வழிநடத்தப்படுகின்றன. நாம் துய்க்கும் கலைகள், இரசிக்கும் இசை, படிக்கும் புத்தகம், களிக்கும் விளையாட்டுகள் இப்படி ஒவ்வொரு துறையிலும் அவற்றின் போக்குப் பெரிதும் அறிவியலால் நிர்வகிக்கப்படுகிறது. ஏன் நாம் சுவாசிக்கும் காற்று நுண்சவ்வினால் வடிகட்டப்படுகிறது, குடிக்கும் நீர் நானோமீட்டர் அளவே துளைகள் கொண்ட வடிகட்டியால் சுத்தப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சமகாலத்தில் மனிதனின் எந்த ஒரு வளர்நிலையையும் நுட்பத்தின் பாதிப்பிலிருந்து பிரித்தெடுக்க முடியாது.

கட்புல ஊடகத்தின் பெருக்கத்தாலும் தொடர்ந்து மின் ஊடகத்தின் வருகையாலும் புத்தகங்கள் அழிந்து போகும் என்று பலர் அஞ்சலி பாடிவிட்டுப்போய்விட்டார்கள். இருப்பினும், எழுதப்பட்ட வார்த்தை, தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தொடர்ச்சியாக உருமாற்றிக்கொண்டு நிலைத்திருக்கிறது. களிமண் பலகை, பனையோலை, காகிதம் என்று பல வழிகளில் அது கடந்த காலத்தில் நிலைத்திருக்கிறது. வரும் நாள்களில் அது மின் வடிவில் சேமிக்கப்பட்டும் பகிரப்பட்டும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது நிச்சயம்.

1971 ஆம் ஆண்டு இல்லினாய் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் ஹார்ட் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைக் கணினியில் தட்டச்சு செய்தார்; அதுவே உலகில் மின் வடிவில் சேமிக்கப்பட்ட முதல் புத்தகம். அதுவே ப்ராஜக்ட் கூட்டன்பர்க் என்ற தன்னார்வத் திட்டத்தின் தொடக்கமாகவும் ஆனது. இது புத்தகச் சேமிப்பு மற்றும் பகிர்முறைகளில் புது வாசல்களைத் திறந்துவிட்டது. ஒரு சுவாரசியமான விடயம், திரு. ஹார்ட் ஒரு எழுத்தாளரோ பதிப்பாளரோ அல்லர். அவர் மனிதன் - கணினி ஊடாட்ட முறைகளை ஆராயும் கணினி நுட்பர். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் ஹார்ட்டின் ஒரே நோக்கம் எழுதப்பட்ட வார்த்தையைக் கணினியில் சேமிப்பதுதான். அன்று தொடங்கிய கூட்டன்பர்க் திட்டம் இன்று தன்னார்வலர்களின் முயற்சியால் பதினாறாயிரம் புத்தகங்களுக்கு மேலாக யாராலும் இலவசமாகப் பெறக்கூடிய, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு அற்புதமான தகவல் களஞ்சியமாக வளர்ந்திருக்கிறது.

1998ஆம் ஆண்டு மதுரைத் திட்டம் கூட்டன்பர்க் திட்டத்தை அடியற்றித் தொடங்கப்பட்டது. இதற்கான விதை இணையத்தில் முனைவர் கல்யாணசுந்தரம், முனைவர் குமார் மல்லிகார்ச்சுனன் போன்றவர்களால் தூவப்பட்டது. கணினி வழியே படிக்கக்கூடிய தமிழின் முதல் மின் நூலான திருக்குறள் விரைவில் வெளியிடப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது 250க்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் ஐந்நூறுக்கு மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் தட்டச்சு செய்யப்பட்டு இலவசமாகத் தரவிறக்கக் கிடைக்கின்றன. மறுபதிப்பிற்கு வழியில்லாமல் வழக்கொழிந்துபோகும் அபாயத்திலிருக்கும் செவ்வியல் இலக்கியங்கள் முதலில் மின் வடிவாக்கப்பட்டன. தொடர்ந்து சமகாலத்தில் காப்புரிமையற்றுத் திட்டத்திற்குக் கொடையளிக்கப்படும் பிற நூல்களும் வெளியிடப்படுகின்றன.

அரசியல் நிலை காரணமாக உலகெங்கிலும் பரந்து கிடக்கும் ஈழத் தமிழர்களின் படைப்புகள் மதுரைத்திட்டத்தில் வெளியிடப்படுகின்றன. 1981ஆம் ஆண்டு காடையர்களால் தீயிடப்பட்ட யாழ் நூலகத்தை நினைவுகூர்ந்தால் மதுரைத் திட்டத்தின் முக்கியத்துவம் எளிதில் புலப்படும். இன்றைக்கு இத்திட்டத்தின் மூலம் 250 புத்தகங்கள் பல தமிழ் நூலகங்களிலும் இல்லங்களிலும் கணினிகளிலும் குறுவட்டுகளிலும் சேமிக்கப்பட்டு அழிவில்லாமல் நிரந்தரமாக்கப்பட்டிருக்கின்றன.

mmm

மதுரைத் திட்டத்தைத் தொடக்கத்திலிருந்து முன்னின்று வழிநடத்திவரும் கல்யாணின் சேவையைப் பாராட்டும் முகமாக அவருக்கு 2008ஆம் ஆண்டு தமிழ்க் கணிமைக்கான 'சுந்தர ராமசாமி' விருது வழங்கப்படுகிறது. மதுரைத் திட்டத்திற்கு அப்பாலும் தமிழ்ச் சமூகத்திற்குக் கணினித் துறை வழியே கல்யாண் பல பங்குகளை ஆற்றியிருக்கிறார். கணினி வழியே தமிழை வாசிக்க உதவும் மயிலைத் தமிழ் எழுத்துருவை வடிவமைத்து இலவசமாக வெளியிட்டிருக்கிறார். தகவல் பரிமாற்றத்தை நெறிப்படுத்தும் Tamil Standard Code for Information Interchange (TSCI) என்ற தகுதரத்தை உருவாக்கியதில் கல்யாணின் பங்கு முக்கியமானது. தமிழ்த் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நெறிப்படுத்தும் உலகத் தமிழ் தகவல் மைய (உத்தமம்) அமைப்பில் தொடக்கம் முதல் சேவையாற்றிவரும் கல்யாண் தற்பொழுது அதன் தலைவராகவும் இருக்கிறார். உத்தமம் நடத்திய தமிழ்க் கணினி மாநாடுகளின் தலைவராகவும் தகவல் தொழில்நுட்ப நெறியாளராகவும் கல்யாண் பங்காற்றியிருக்கிறார்.

தமிழ்க் கணிமை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கல்யாணின் சாதனைகளைக் கௌரவிக்கும் முகமாக 2008 ஆம் ஆண்டின் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருதை அவருக்கு அளிப்பதில் கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.

உள்ளடக்கம்