Google   www kalachuvadu.com

மதிப்புரை
பிரயாணத்தின் நீள் வாக்கியங்கள்;
அகப்பரப்பின் தனிப்பாடல்
க. சீ. சிவகுமார்

இருள்வ மௌத்திகம்

ஆசிரியர்: கோணங்கி
பக். : 384 விலை: ரூ. 212
முதற்பதிப்பு: டிசம்பர் 2007
வெளியீடு
காதை
19, சீனிவாச ரெட்டித் தெரு, தியாகராய நகர்
சென்னை - 600 053

இமையின் மீது பாரத்தைப் போட்டு விட்டு உறங்கப்போகையில் கண்ணயருவதற்குச் சற்றுமுன்னரும் பின் உறக்கக் கனவிலும் தோன்றும் காட்சிகள் பற்பல. சில கனவுகள் நினைவுக்குவந்து நாளின் முதல் காலையைச் சற்றுநேரம் அபகரித்துக்கொள்வதும் உண்டு. கோணங்கியைத் தொடர்ந்து நான் வாசித்துவருவதற்கு, அவரது புத்தகங்கள் படிக்கும் தினங்களின் இரவுகளில் விதவிதமான கனவுகள் வரும் என்பது ஒரு காரணம். இது பொது அனுபவமாக அன்றி ஏகமானதாகவும் இருக்கலாம். இந்த உண்மை பிடிபட்டபின் இருள்வ மௌத்திகத்தை வாசித்த முதல் நாள் கனவும் விசித்திரமானதே. புத்தகம் ஒன்றைப் படிப்பதான கனவு.

ஒப்பீட்டளவில் பாராமல் தனித்த நிலையிலேயே இப்பிரதியின்மீது கருத்துகள் கூறிவிடச் சித்தம் மிகுந்திருந்தாலும் எண்ணற்ற விசித்திர சாத்தியங்களின் சாயை பூர்வத்திலும் வர்த்தமானத்திலும் படிகிறபடியினாலே, முன்னர் உருப்பித்த ஏடுகளைப் பற்றிப் பேசுதல் அவசியமாகிறது.

எண்களைப் போலவே அளவு விகிதமடங்குக் கூறுவெளிகளை உள்ளடக்கியதே எழுத்தும். காட்டாக 8 என்கிற எண்ணை இரண்டாக நெடுக்குவாக்கில் வகிர்ந்தால் இரண்டு 3கள் கிட்டுகின்றன. குறுக்காக வெட்டினால் இரண்டு பூஜ்யங்கள். எழுத்துரு மாற்றப்பட்ட 2ஐத் தழைகீழாக்கினால் 5.

திருப்புகிற வாக்கில் திருப்பினால் 6உம் 9உம் பரஸ்பர மாற்றம்கொள்கின்றன. எண்களை வைத்து முகம் வரைகிற இவ்வினை இத்துடன் நிற்க. ஆறைப் போல மூன்று இல்லை என்கிற கட்டத்திலிருந்து கோணங்கி பயணம் அல்லது தள மாற்றம் அடைந்தார். அதாவது, கொல்லனின் ஆறு பெண்மக்களைப் போல பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் இல்லை. பின்னர் வாக்கியச் சரங்களை மானுடக் கழுத்தில் சூட முடியாத அளவுக்கு நெடுமையாக்கி, மலை யருவிகளுக்கு ஒப்பான ஆற்றொழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

வண்ணமும் சந்தமும் சந்தியும் சாரியையும் யாப்பும் காப்பும் உடைத்தான தமிழ், வார்த்தைக் கோர்ப்பில் ஸ்வரரூபங்களை உற்பத்தி செய்யும் என்பது உண்மைதான். அவர் அந்த உண்மையைப் பெரிதும் சார்ந்தவராக எழுதுகிறார். புல்லாங்குழலின் ஓசை, ஆவினங்கள் போடும் அசை, ஒரு சிற்பத்தின் ஒசிவு, மழைக்காலப் பாறையில் புற்களிடையே தோன்றும் ஈரக் கசிவு அத்தனையையும் எழுத்து சமைத்தே படையலிட்டுவிடும் என்று எதிர் பார்க்கிறவராக அவரை அவரது எழுத்துகள் காட்டுகின்றன. எழுத்து, தன்னளவில் கண்ணுறுவோரின் அனுபோகம் மற்றும் ஈடுபடல் விகிதம் இரண்டையும் சார்ந்தது. அதல்லாதபடிக்கு எழுத்து என்பது வெண்பரப்பின் மீது கறுப்பு உருக்கள். தினத்தந்தியின் வடிவில் உருது மொழியில் அச்சடிக்கப்பட்ட விவிலியத்தை 'வேளாங்கண்ணி ஸ்டோரில்' நீங்கள் கொடுத்தால் பொதியப்படும் பொட்டுக்கடலை இந்த உண்மையை விளங்கச்செய்யும்.

இருள்வ மௌத்திகம் 4 பிரிவுகளைக் கொண்டது. 1. இதுவரை தன் நூலைப் படித்து முடித்திராத வாசகனின் குறிப்புகள் 2. கதாந்தம் (ஏழு கதைச்சுருள்கள் அல்லது பிரதிகள் கொண்டது) 3. குறு நாவல் - பதினெட்டு முனிவங்களும் சில சிற்றடுக்குகளும் கொண்ட 'தழும்புகள் சிவந்த அணங்கு நிலம்' 4. நேர்முகம் - தன்னுடன் தன் நேர்காணல்.

தன்னுடன் தன் நேர்காணல் ஆகிய 'மொழிவு' படைப்பாளனை இன்னும் மனதுக்கு நெருக்கமானவனாக ஆக்கிக்காட்டுகிறது. நூலின் முதலாம் எண்ணாக இது பொருத்தப்பட்டிருப்பின் நூற்பயன் அதிகரித்திருக்கும் - முதலிலிருந்து கடை நோக்கிப்போகும் முறைசார் வாசிப்பாளருக்கு.

கோணங்கியின் கதைகள் கதைகளாக இருப்பதில்லை. அதை அவரும் உணர்ந்து வைத்திருப்பதாலேயே அவரும் கதாந்தம், கதா சுருள் என்பன போன்ற பெயர்களைப் பிரதிகளின் மீது கூறுகிறவராக இருக்கிறார். கதா சுருள் என்பது ஓரளவு பொருத்தமானதே. செய்திச் சேனல் காட்சிகளில் நாள் முழுதும் ஓடும் ரிப்பன் விசை எழுத்துக்கள் போல ஓடிய வண்ணமே உள்ளன வாக்கியங்கள். நினைவில் நில்லாச் சரமெனப் பல கடந்தும் விடுகின்றன. நினைவாற்றல் பரிசீலனையின் பொருட்டு நான் படிக்கும் பக்கங்களுக்கு முக்கோண மடிப்பு இடுவதில்லை. ஆகவே, கோணங்கியில் படித்ததையே மீண்டும் படிக்க நேர்கிறது. அதுவும் புதிது போலத் தோன்றுகிறது.

இழைப்புள்ளிகள் அற்ற கோலமிடல். ஜாங்கிரியும் இடியாப்பமும் கோல வடிவமென நம்பத் தகுந்த தாயினும் கோலமற்றுப் போவது இப்படித்தான். கண்படு பொருள்கள் தொங்கலில் இருக்க ஒரு சால்வையைப் பற்றியோ ஒரு தையற்காரன் அல்லது முத்து விற்பவனைத் தொடர்ந்தோ முடிவின்மை நோக்கிக் கதையைச் செலுத்த அவரால் இயல்கிறது. மண் சிலம்பையில் ஒற்றைக் கால் காகத்தில் மனம் பற்றி நின்ற என்னை எங்கெங்கோ இட்டுக்கொண்டு போகிறார்.

கண்மாயே ஒரு மண் சிலம்பை, சங்கு வடிவத்தூக்கணாங் கூடுகள் எனப் பிரதிக்குள் அவர் காட்டும் உவமைகள் ஏராளம். நேரங்களில் ஒரு வாக்கியமே சரசரவென ஊர்ந்து அதன் மெழுகு நீர்த் தடத்தில் காணும் பன்னிற மினுமினுப்புகளும் அபாரமாயிருக்கின்றன. அப்படியான சமயங்களில் 'பட்டபாட்டுக்குப் பலன் கிடச்சுதடா சாமி' என்று தோன்றும். முத்துவணிக காலம், கண்ணகை காடேகும் காலம், கண்ணாடிகளின் வருகை, உடைகளின் மாற்றம் . . . எனக் காலவெளியைக் காட்சிப்படுத்துவதில் அவரது மனத்தின் பிரயாணம் பெருமளவு வெற்றிபெறுகிறது.

கோணங்கியின் மொழிமயக்கம் கொள்ளும் குதர்க்கம் அளவிலி சாத்தியங்களை ஏற்படுத்துகிறது. குந்தி தேவிக்கோ கன்னிமரியாளுக்கோ இருக்கன்குடி மருத்துவச்சி பிரசவம் பார்த்துவிட முடியும். அவரும் பாஸ்போர்ட் எல்லைகளை வெறுக்கிறாரென்று பேட்டியில் தெரிகிறது.

மூன்றாம் உலக நாட்டின் தற்காப்புக் குரலாக தாஸ்களின் பாடல் எப்போதும் கேட்கும் சாத்தியம் உண்டு. மதுரகவியும் விஸ்வநாதனும் சங்கரனும் பாடுவதாலேயே கும்பெனியாரின் வரவும் எப்போதும் எதிர்பார்ப்புக்குரியது.

அவரது வீச்சுக்கு உதாரணமான ஒரு பத்தி இவ்வாறாக அமைகிறது.

'கவண்கல் தெறித்த ஒலி இரும்புக் காலத்துக்குத் தாவியது எஃகுத் தொப்பியில் பட்டு. திரேதாயுகத்து ஜன்னல் எரிகிறது. ஜாக்கிக் குதிரைகள் துரைமார் சுருட்டுப் புகை சுற்றி வளையும் தூரத்திலிருந்து எம். எச். சுய்டர் சுழல் துப்பாக்கி நீட்டி குறிதப்பாமல் சாய்த்த பழந்திருடர் மறைந்த ஆநிரைக் கூட்டம்.' (பக்கம்-302 குறுநாவலில்)

தமிழ்க் கதையாடலில் கழுதைகள் இன்னும் புழங்குகிற படைப்புகளைத் தரும் ஓரிருவரில் கோணங்கிதான் முக்கியமானவர். மண்ருசி நெளியும் புழுதான் அவர் என்பதன் சாட்சியாகப் பிரதியெங்கும் ஓடிக்கிடக்கின்றன வரிகள். தலைப்புக் கதை தவிரவும் புலிக்குகை நாயனம், மோன இழை ஆகியன எனக்கு வாசிக்கப் பிடித்திருந்தாலும் நான் தோய்ந்து படித்த கதை 'வெள்ளரிப் பெண்'தான். அப்படி ஒரு புலத்தைக்காட்டவோ கட்டமைக்கவோ ஒரு தேர்ந்த ஒளிச்சித்ரவானால் மட்டும் இயலும்.

நூலின் மொழிநடையுடன் கருதிப்பார்க்கிறபொழுது எழுத்துப் பிழைகள் குறைவான பதிப்பாக்கம். நல்ல வடிவமைப்புள்ள புத்தகம். மேற்காட்டுங் குறிகளும் முற்றுப் புள்ளிகளும் தவிர்ந்த ஏனைய தமிழ் நிறுத்தற்குறிகளையும் கோணங்கி ஆலோசிக்கலாம். ரோகிகளைப் பற்றிக் கோணங்கி கொண்டிருக்கும் புனித மயக்கம் தமிழில் எங்கும் காணாதது. பவுத்தம் சமணம் முதல் விவிலிய கிரேக்கத்தொன்மங்கள் ஈறாகப்பதின் திசைத்தொன்மமும் மண் மணமும் விரவிய தகவல் நடை. அவரது மனப்பரப்பிலிருந்து சுயம்புவாக உருவாகி வாக்கியங்கள் துலங்குகின்றன. வாகனத்தின் முன்விளக்கை 'ஹெட்லைட்' என்றே எழுதுகிற அவரது இயல்பிலிருந்து அது தெற்றென விளங்குகிறது. கருவிகள் மாறக்காலமும் காவலலும் சட்டங்களும் மாறும் நிலவுலகில் கோணங்கி விழைகிற புவி எத்தகையது என்பது தெளிவாக விளங்காததாகவே இருக்கிறது.

அவரது வரிகள் சில பின்வருமாறு:

'இன்னும் நுழைய முடியாத பூவேதாளச் சருக்கம் கூறி இசையும் காமமும் மறுப்பும் ஒன்றுக்குள் ஒன்று எதிர் அடுக்கில் திருப்புகழ். அச்சு எந்திரங்கள் சித்திரக்காரத் தெருவை அழித்து நகல் பெருக்கத்தைச் செய்தவேளை தேவதாசி ஒழிப்புச் சட்டம் இசையைப் பறித்தது.' (பக்கம்: 222).

இருள்வ மௌத்திகத்தை வாசிக்கும் முயற்சியில் அது என் கைப்பையில் தங்கி இரண்டு மாநிலத் தலை நகருக்கும் ஐந்து மாவட்டத் தலைநகருக்கும் பயணித்தது. புதுக்கோட்டையில் எழுத்தாள நண்பன் புதுகை சஞ்சீவியுடன் ஆட்டோப் பயணம் போய்வருகிற இடைவெளியில் நண்பன் சரவணன் இந்த 333 பக்கங்களை ஜெராக்ஸ் போட்டுவிட்டான். கோணங்கியின் சமகாலக் கவர்ச்சி அலாதியானது என்பது கண்கூடு.

பறவைகள் திட்டமிட்டு விதைப்பதில்லை என்றாலும் எச்சமிடுவதன் வாயிலாக இயற்கையின் சங்கிலியில் பங்காற்றுகின்றன. நமக்குப் பறவையைப் போல இறக்கைகள் இல்லாத பட்சத்தில் விதைக்கிற இடம், புலம் மற்றும் தன்மை குறித்து ஓர்மை கூடுதல் நலம் பயக்கும்.

கோணங்கியைப் படிக்கையில் எனக்கு இருள்வமாகத் தோன்றுகிற ஒற்றை உணர்ச்சி ஒன்று உண்டு. ஒரு மரகத வண்ணப் பரப்பில் வனம் மண்டிய வெற்று ஒற்றை வெளிகளினூடே மாந்தர் போலக் காணுகிற அரூபங்கள் (இதை உருவிலி என்பதாக அல்லாமல் விளங்கப்படுத்த முடியாத உருவங்களாகக் காணுகிறேன்) மறைவதும் தோன்றுவதுமாக இருக்கிறார்கள். அதன் மீதான ஆர்வத்தில் ஆச்சரியக் குறிக்கும் அனுபந்தச் சாயை படர்ந்து இரட்டிக்கிறது.

ஆழத்தில் அலையும் அரூபமாம் பொருளென்ன! பொருளின் பொருளென்ன!

உள்ளடக்கம்