Google   www kalachuvadu.com

காலச்சுவடு பயணம்
இடையறாத காரியங்களும் தொடர்ந்துவரும் கனவுகளும்
அரவிந்தன்

காலச்சுவடு நூறாம் இதழ் வெளியானதையட்டி சென்னையில் ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற 'ஒருநாள் பண்பாட்டு நிகழ்'வில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.

நிகழ்வில் கட்டுரையின் உள்ளடக்கம் ஒலி-ஒளி காட்சியாகவும் ஒளிபரப்பப்பட்டது. ஒலி-ஒளிக்காட்சியை வடிவமைத்தவர்கள் கீழ்வேளூர் பா. ராமநாதன், ந. செல்லப்பா.

- பொறுப்பாசிரியர்

'கனவுகளும் காரியங்களும்'. 1988இல் சுந்தர ராமசாமி காலச்சுவடைத் தொடங்கியபோது காலச்சுவடு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து எழுதிய பிரகடனம். படைப்பாக்கங்களில் மட்டுமின்றி இலக்கிய, சமூக விமர்சனங்களிலும் ஈடுபட்டுவந்த சுந்தர ராமசாமி, தனது சமரசமற்ற அணுகுமுறைக்குப் பேர்போனவர். எனவே, அவர் காலச்சுவடு இதழைத் தொடங்கியபோது சூழலில் பெரும் எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகியது.

முதல் இதழுக்குக் கிடைத்த வரவேற்பு, 'கனவுகள் அல்ல, காரியங்கள்' என்று இரண்டாம் இதழில் அறிவிக்கும் ஊக்கத்தை சு.ரா.வுக்குத் தந்தது.

சு.ரா. கொண்டுவந்த இதழ்கள் தரம் சார்ந்த கறாரான அளவுகோல்களின் அடிப்படையில் படைப்புகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டன. எதிர்பார்த்தது போலவே தமிழ்ச் சூழல் இந்த அணுகுமுறையை அசௌகரியங்களுடன் எதிர்கொண்டது. எனினும் இளம் படைப்பாளிகளின் உற்சாகமான ஒத்துழைப்பும் ஆர்வமும் பல பரிசோதனைகளைச் செய்ய ஊக்கமளித்தன. பல முக்கியமான கட்டுரைகள், சிறந்த கதைகள், மொழிபெயர்ப்புகள், எம்.என். ராய் போன்றோர் குறித்த சிறப்புப் பகுதிகள் எனத் தமிழ்ச் சிற்றிதழ்களின் களத்தைக் காலச்சுவடு விரிவுபடுத்தியது.

படைப்புகளின் தரம், வடிவமைப்பு, அச்சுத் தரம் என அனைத்து அம்சங்களிலும் அழுத்தமான சுவடுகளைப் பதித்துச் சிற்றிதழ்களின் வரையறைகளை அர்த்தபூர்வமாக மாற்றியமைத்தது 1991இல் வெளிவந்த காலச்சுவடு சிறப்பு மலர்.

இந்தச் சிறப்பு மலருடன் சு.ரா. தொடங்கிய காலச்சுவடு தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. தனி ஒரு மனிதனாக ஒரு இதழைக் கொண்டுவரும் சிரமங்களைச் சமாளிக்க முடியாமல் சு.ரா. காலச்சுவடை நிறுத்தினார். "காலச்சுவடைத் தொடர நான் அதிக அளவுக்கு என்னை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை இப்போது . . . என்னுடைய நாளைய செயல்பாடுகளுக்கு அவர்கள் (வாசகர்கள்) தரும் ஊக்கத்தை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று மலரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1994இல் காலச்சுவடு தன் இரண்டாம் கட்டப் பயணத்தைத் தொடர்ந்தது. பதிப்பாளர்-ஆசிரியராகக் கண்ணன் பொறுப்பேற்றார். ஆசிரியர் குழுவில் கண்ணனுடன் மனுஷ்ய புத்திரன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோர் இடம்பெற்றார்கள். அதே பெயரில் காலாண்டி தழாகவே வந்தாலும் உள்ளடக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆழமும் விரிவும் கொண்ட நேர்காணல்கள் இரண்டாம் கட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கின.

நேர்காணல்கள், படைப்புகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றில் விளிம்பு நிலை வாழ்வு சார்ந்த அக்கறைகள் அழுத்தம் பெற்றன. பின் நவீனத்துவப் பிரகடனங்கள் எதுவும் இல்லாமலேயே மைய நீரோட்டத்தைத் தாண்டிய பார்வைகளும் பதிவுகளும் காலச்சுவடில் பெருமளவில் இடம்பெற்றன. நேர்காணல் செய்யப்பட்ட ஆளுமைகளின் தேர்வும் மொழிபெயர்ப்புகளும் இதர கட்டுரைகளும் இலக்கிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து தீவிர இதழியலின் பரிணாம வளர்ச்சிக்கு அடிகோலின.

முத்தம்மாவின் கதை என்னும் நேர்காணல், நாவரசு கொலை குறித்த சமூக - உளவியல் ஆய்வுக் கட்டுரை, அம்பை, டி. ஆர். நாகராஜன், எஸ். ராமகிருஷ்ணன், பிரேம் - ரமேஷ் ஆகியோரின் நேர்காணல்கள், பெரியார் குறித்த விவாதங்கள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் குறித்த கருத்தாடல்கள், பா. வெங்கடேசனின் 'மழையின் குரல் தனிமை' என்னும் குறுநாவல், எம். ஏ. நுஃமானின் 'பிரதியின் மரணம்' என்ற கட்டுரை ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில பதிவுகள்.

காலச்சுவடில் வெளியான மதிப்புரைகளும் விமர்சனக் கட்டுரைகளும் புதுமைப்பித்தன் முதலானோர் வளர்த்தெடுத்த சமரசமற்ற விமர்சனப் பார்வையை முன்னெடுத்துச் சென்றன. விருப்பு - வெறுப்புகள், அச்சம் ஆகியவை தவிர்த்த கூர்மையான குரல்கள் விமர்சனத் துறையில் அதிகமாக எழத்தொடங்கின. விரிவான ஆய்வுகளுக்கு இடமளிக்கப்பட்டது. புதுமைப்பித்தன் எழுதிய கறாரான விமர்சனங்களை மறு வெளியீடு செய்ததன் மூலம் விமர்சனத் துறையில் ஆக்கபூர்வமான சலனங்கள் ஏற்பட்டன. புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிரம்மராஜன், பிரமிள், சி. மணி, இமையம், முதலான படைப்பாளிகள் குறித்த ஆழமான விமர்சனக் கட்டுரைகளைக் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

பதிப்புத் துறையில் மறுமலர்ச்சி: 1998இல் காலச்சுவடு நான்கு நூல்களை வெளியிட்டது. சு.ரா.வின் நாவல், அவரது கட்டுரைகள், புதுமைப் பித்தனின் வெளிவராத படைப்புக்கள், மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் ஆகிய நான்கு நூல்களும் சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு விழா ஒன்றில் வெளியிடப்பட்டன. நவீனத் தமிழிலக்கியப் பரப்பில் பல்வேறு தளங்களில் இயங்கிவந்த பல்வேறு ஆளுமைகளும் பெரும் திரளான வாசகர்களும் கலந்துகொண்ட அந்த விழா தமிழ் இலக்கியச் சூழலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதுடன் தமிழ்ப் பதிப்புத் துறையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. தீவிர இதழ்கள், நூல்கள், பதிப்பகங்கள் ஆகியவை பெருகத் தொடங்கின. வெகுசன இதழ்களின் பக்கங்களிலும் இந்தத் தாக்கங்களின் பிரதிபலிப்புகளைக் காண முடிந்தது.

ஏதேனும் ஒரு பொருளை மையப்படுத்திப் பலவிதமான பார்வைகளை வெளிப்படுத்தி அப்பொருள் சார்ந்த கவனத்தையும் விவாதங்களையும் உருவாக்குவதற்கான களமாகக் காலச்சுவடின் சிறப்புப் பகுதிகள் உருப்பெற்றுள்ளன. மரண தண்டனை குறித்த சிறப்புப் பகுதியைத் தமிழ் இதழியலின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம். தொடர்ந்து தமிழ் வழிக் கல்வி, நதி நீர் இணைப்பு, தமிழர் உணவு, தமிழ்க் காதல், காந்தி முதலான பல பொருள்கள் குறித்த அரிய கட்டுரைகள் இப்பகுதிகள் மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன.

குஜராத் வன்முறைகளைக் கருத்தியல் ரீதியிலும் நடப்புக் கண்ணோட்டத்துடனும் விமர்சிக்கும் இரண்டு சிறப்புப் பகுதிகளை வெளியிட்ட காலச்சுவடு, மதச்சார்பின்மை குறித்த வரையறைகளின் போதாமைகள் குறித்தும் விவாதித்தது. குஜராத் வன் முறைகளை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வன்முறைகளைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தையும் ஓவியக் கண்காட்சியையும் காலச்சுவடு நடத்தியது. வன் முறையில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் நிதி வசூல் செய்து அனுப்பிவைத்தது.

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் காலச்சுவடு நடத்திய 'தமிழ் இனி 2000' கருத்தரங்கம் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றின் மாபெரும் நிகழ்வாக அமைந்தது. உலகம் எங்கிலும் இருக்கும் தமிழ் இலக்கியவாதிகள் கலந்துகொண்ட அந்த நிகழ்வு தீவிரத் தமிழ்ப் பரப்பில் நடைபெற்ற உலக அளவிலான முதல் கருத்தரங்கம் என்னும் பெருமையைப் பெற்றது.

தமிழ் எழுத்தின் அனைத்து வகைமைகளையும் தழுவிய ஆழமான கட்டுரைகள் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. திராவிட இலக்கியம், தேசிய இலக்கியம், குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கியச் சிற்றிதழ்கள் எனப் பல துறைகளும் கவனம் பெற்றன. தமிழ் எழுத்துத் துறையில் சொல்லத்தக்க வகையில் பங்காற்றிய பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள்.

'தமிழ் இனி 2000' கருத்தரங்கம் தமிழ்க் கருத்துலகில் ஏற்படுத்திவரும் சலனங்களும் தாக்கங்களும் இன்றளவிலும் தொடர்கின்றன. கருத்தரங்கின் முழுமையான பதிவுகளின் தொகுப்பு 2006இல் வெளியாயிற்று.

1998 வெளியீட்டு விழாவும் 'தமிழ் இனி 2000' கருத்தரங்கும் தமிழ்ச் சூழலின் ஆக்கபூர்வமான சில மாற்றங்களுக்கு வித்திட்டன.

2005இல் நடைபெற்ற புத்தாயிரத்தில் தமிழ் நாவல்கள் என்னும் கருத்தரங்கமும் 2006இல் நடைபெற்ற பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75 கருத்தரங்கமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பெரும் நிகழ்வுகள். 2006இல் நடந்த கருத்தரங்கில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நாடகம் போன்ற பிற கலைத் துறைகளிலும் காலச்சுவடு சிறப்புக் கவனம் செலுத்திவருகிறது. சென்ற ஆண்டு காலச்சுவடு அறக்கட்டளையும் தேசிய நாடகப் பள்ளியும் இணைந்து ஒரு மாத காலத்திற்கு நாடகப் பயிலரங்கம் ஒன்றை நாகர்கோவிலில் நடத்தின. அதன் முடிவில் மூன்று நாட்களுக்கு நவீன நாடக விழாவும் நடைபெற்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் மூன்று நாள் கொங்கு மண்டலக் கலை விழாவினைக் காலச்சுவடு அறக்கட்டளை நடத்தியது.

இவை தவிர, புதுமைப்பித்தனின் எழுத்துக்களை முழுமையாகவும் துல்லியமாகவும் ஆவணப்படுத்தும் திட்டம் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாகப் புதுமைப்பித்தன் சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் செம்பதிப்புகள் வெளியிடப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை வெளிவராத மற்றும் தொகுக்கப்படாத புதுமைப்பித்தனின் படைப்புக்கள் பலவும் இத்திட்டத்தின் மூலம் நூல் வடிவம் பெற்றுவருகின்றன.

2000 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலச்சுவடு இரு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. பல்வேறு நிகழ்வுகளால் சூழலில் உருவாகியிருந்த இடைநிலை இதழுக்கான தேவையைப் பூர்த்திசெய்யும் விதமாக உள்ளடக்கத்தின் எல்லைகள், தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் விரிவடைந்தன. பயணத்தின் இந்தக் கட்டத்தில் அரசியல் சார்ந்த சமூகப்பார்வைக்கான முக்கியத்துவம் கூடியது.

2002இல் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ரவிக்குமார், அரவிந்தன் ஆகியோர் இக்குழுவில் இணைந்துகொண்டனர். 2003இல் நஞ்சுண்டனும் இணைந்தார். அய்யனார், சிபிச்செல்வன், திவாகர் ரங்கநாதன் ஆகியோர் துணை ஆசிரியர்களாகத் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினர். பின்னர் பெருமாள்முருகன், ப்ரேமா ரேவதி, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் இணைந்தனர்.

ஆ. இரா. வேங்கடாசலபதி, கனிமொழி, கோகுலக்கண்ணன், ப்ரஸன்னா ராமஸ்வாமி, களந்தை பீர்முகம்மது, எம்.ஏ. நுஃமான், சேரன், பத்மநாப அய்யர், ரெ. பாண்டியன், சை. பீர்முகம்மது முதலானோர் அடங்கிய விரிவான ஆலோசனைக் குழுவும் உருவாக்கப்பட்டது. 2007இல் ஆசிரியர் குழுவில் இணைந்த தேவிபாரதி, தற்போது இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், மனுஷ்ய புத்திரன், பிரேம் - ரமேஷ், சங்கர ராம சுப்பிரமணியன் போன்ற படைப்பாளிகளின் முக்கியமான சில படைப்புக்கள் காலச்சுவடில் வெளிவந்து பரவலான கவனம் பெற்றிருக்கின்றன.

ஜே. பி. சாணக்யா, சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி முதலான பல இளம் படைப்பாளிகளுக்குத் தங்களைக் கூர்மைப்படுத்திக்கொள்ள உதவும் களமாகக் காலச்சுவடு செயல் பட்டுவருகிறது. காலச்சுவடு 50ஆம் இதழ் இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டிருந்தது. சிறுகதை, கவிதை, குறும்படம் ஆகிய துறைகளில் இளம் படைப்பாளிகளுக்கான போட்டிகளை நடத்திப் பல இளம் படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வழிவகுத்தது.

இன்று தனித்த அடையாளத்துடனும் வீரியத்துடனும் உருக்கொண்டுள்ள பெண் எழுத்தின் வளர்ச்சியில் காலச்சுவடுக்கு அழுத்தமான பங்கு இருக்கிறது. எத்தனையோ அவதூறுகள், வெறுப்புணர்வுகள் ஆகியவற்றை எதிர்கொண்டு காலச்சுவடு தொடர்ந்து பெண்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை அளித்து வருகிறது. சல்மா, சுகிர்தராணி முதல் லதா, கவிதா வரையிலும் பல பெண் படைப்பாளிகளின் பிரதான வெளிப்பாட்டுக் களமாகக் காலச்சுவடு இருந்துவருகிறது.

தலித்துகளின் படைப்புகள், விமர்சனப் பார்வைகள், அம்மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது காலச்சுவடு. இடஒதுக்கீட்டு மனப்பான்மையின் அடிப்படையிலோ, அனுதாப உணர் விலோ அல்லாமல், பெண்கள் மற்றும் தலித்துகளுக்கான வெளியைத் தனது இயங்குதளத்தின் இயல்பானதும் பிரிக்க முடியாததுமான பகுதிகளாகக் கருதிச் செயல்பட்டுவருகிறது காலச்சுவடு. இதைத் தவிர, தொ. பரமசிவன், ம. இலெ. தங்கப்பா, தியடோர் பாஸ்கரன் முதலான வெவ் வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் காலச்சுவடில் பங்களித்துவரு கிறார்கள்.

மாறிவரும் சூழலில் பெருகிவரும் பொறுப்புகளைக் கணக்கில் கொண்டு காலச்சுவடு 2004 ஜூன் மாதம் முதல், மாத இதழாக வெளிவருகிறது.

நுண் அரசியல் சார்ந்த எழுத்துக்களுக்கு முக்கிய இடம் அளித்துவரும் அதே வேளையில் மைய நீரோட்ட அரசியல் குறித்த கூர்மையான விமர்சனங்களும் காலச்சுவடில் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. பாரபட்ச மற்ற பார்வையும் சமரசமற்ற அணுகுமுறையும் கொண்ட இந்த விமர்சனங்கள் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசும் அரிய குரல்களாக ஒலிக்கின்றன. பாராட்டத்தக்க விஷயங்களைப் பாராட்டத் தவறாத காலச்சுவடு, தனது கறாரான பார்வையால் அதிகார பீடத்தினரால் விலக்கப்படும் ஒரு இதழியக்கமாக இருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அரசு நூலகங்கள் காலச்சுவடு இதழ்களை வாங்குவது இந்த நூறாம் இதழிலிருந்து நிறுத்தப்பட்டிருப்பதைக் காலச்சுவடின் பாரபட்ச மற்ற, சமரசமற்ற அணுகுமுறைக்குக் கிடைத்த சான்றிதழாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சாதி, மதம், அரசியல் சித்தாந்தம், எனப் பல தளங்களிலும் வேறுபட்ட பலர் ஒன்றுபடும் ஒரு புள்ளி காலச்சுவடைத் தங்களுக்கு எதிரான சக்தியாகப் பார்க்கும் அணுகுமுறைதான். விமர்சனம் என்று வரும்போது யாரையும் எதற்காகவும் தவிர்க்கும் அணுகுமுறை காலச்சுவடுக்கு இல்லை என்பதற்கான அடையாளமாகவே இதைப் பார்க்க முடியும். காலச்சுவடு மீதான விமர்சனங்களுக்கும் காலச்சுவடின் பக்கங்களிலும் மேடைகளிலும் தாராளமாக இடமளிக்கப்படுவதும் இதே அணுகுமுறையின் ஓர் அங்கம்தான்.

2006 ஆகஸ்ட் மாதத்தில் காலச்சுவடு வேறொரு பரிணாமம் கண்டது. தமிழ்ச் சூழலில் இடைநிலை இதழ்கள் பெருகி, தீவிரமான ஆக்கங்கள் குறைந்துவந்தன. சிற்றிதழ்களிலிருந்து வெகுஜன இதழ்கள் ஊக்கம் பெற்றுவந்த காலம் மாறி, வெகுஜன இதழ்களின் பாதிப்புகள் சிற்றிதழ் இயக்கத்தின் மீது படியத் தொடங்கிய நேரம் அது. இந்நிலையில் அக்கறைகள், அணுகுமுறைகள், வெளிப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் தீவிரமும் கனமும் கூட வேண்டிய தன் தேவையை உணர்ந்த காலச்சுவடு, அதற்கான முன்முயற்சியை எடுத்தது. சற்றுப் பெரிய அளவில், அதிகப் பக்கங்களுடனும் மேலும் கூர்மைப்படுத்தப்பட்ட கவனங்களுடனும் வெளிவரத் தொடங்கியது.

இசைக் கலைஞர் சஞ்சய் சுப்பிர மணியன் நேர்காணல், மு. அருணா சலத்தின் தமிழிலக்கிய வரலாறு தொகை நூல் குறித்த பொ. வேல்சாமியின் விமர்சனக் கட்டுரை, ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த ரவிக்குமாரின் விரிவான ஆய்வு, காந்தி குறித்த சிறப்புப் பகுதி, பதிப்புத் துறை குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகள் முதலான பல ஆக்கங்கள் சமகாலத் தமிழ் எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்திவருகின்றன.

100 இதழ்களைக் கடந்து 20 வயது நிறையும் இந்தத் தருணம் வெறும் காலக் கணக்கு சார்ந்த அடையாளம் அல்ல. 100 இதழ்கள், 20 ஆண்டுகள், 250 நூல்கள், பல கருத்தரங்குகள், எண்ணற்ற விவாதங்கள் என இப்பயணத்தின் சுவடுகள் பல்வேறு பரிமாணங்களுடன் காட்சியளிக்கின்றன.

'கனவுகளும் காரியங்களும்' என்று காலச்சுவடு பயணத்தைத் தொடங்கிய சுந்தர ராமசாமி, இரண்டாம் இதழில், 'கனவுகள் அல்ல, காரியங்கள்' என்றார். காரியங்கள் பெருகப் பெருகக் கனவுகளும் பெருகியபடி இருக்கின்றன. வளர்ந்துவரும் காரியங்களும் பெருகிவரும் கனவுகளுமாய்க் காலச்சுவடின் பயணம் தொடர்கிறது.

உள்ளடக்கம்