Google   www kalachuvadu.com

கடிதங்கள்

ரவிக்குமாரின் 'புழக்கடை மனிதர்கள்' பத்தி வீட்டுப் பணியாளர்களின் இன்றைய நிலை புழக்கடையில் தொடங்கி பாலியல் கொடுமையில் முடிகிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கீதாக்கள் ஆயிரம் பேர். பெயர்கள் மட்டும் மாறும், பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை. இன்றைய காலகட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினையை முன் வைத்துள்ளார். அரசும் பெற்றோர்களும் சிந்திப்பார்களா?

வளர்ச்சித் திட்டங்களுக்காக விளை நிலங்கள் அபகரிக்கப்படுதல், பொது மூலதனங்களின் பற்றாக்குறை, நீராதாரங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்திய விவசாயத்தைச் சில்லறைச் சலுகைகளை அறிவிப்பதன் மூலம் காப்பாற்ற முடியாது என்ற தலையங்கத்தின் வரிகள் மூலம் நிகழ்கால உண்மையை எடுத்துக்காட்டிய காலச்சுவடுக்கு நன்றி.

எம். சிவபாரதி
தென்காசி

அரசாங்கத்திற்கு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைவிடக் கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதில்தான் கவனம் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை. இதுதான் இன்று விலைவாசி விஷம் போல ஏறக்காரணம். நமது நாடு விவசாய நாடு என்பதை நிதி அமைச்சர் மறந்து, தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை நிதிநிலை அறிக்கையாகத் தயார்செய்து தந்தது, இந்திய மக்களின் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும். தலையங்கம் தந்த தகவல்கள் மறுக்க இயலாத உண்மைகள். 'போரும் தமிழ் சினிமாவும்' கட்டுரையில் பல அரிய செய்திகளைக் கொடுத்து கட்டுரையாளர் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். புழக்கடை மனிதர்கள் உள்நாடு, வெளிநாட்டுக்கு வேலை தேடிச்சென்று மரணத்தையும் நாடிச்செல்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுமளவிற்குப் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அரசு இவர்களைக் கைவிட்டுவிட்டது போல இருக்கிறது.

வறுமை காரணமாக வாழ்வை இழந்து விடியலைத்தேடும் இவர்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ரவிக்குமார் வாழ்த்தப்பட வேண்டியவர்.

அ.ரா. வலம்புரி நாகராஜன்,
ஈரோடு

விலை அபரிமிதமாகக் கூடியதில் வாழ்க்கை திணறுகிறது. தங்கள் தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல் சில்லறை வணிகத்தை ஏகபோக நிறுவனங்களுக்கு அளித்ததும் பதுக்கி வைத்துக் கொள்ளை லாபம் அடிப்பதுமே காரணம். இதைத் தடுக்க அரசு முன் வருமா? வராது. எந்த அரசு வந்தாலும் முதலாளி வர்க்கத்தைச் சார்ந்துதான் செயல்படும். நிதிநிலை அறிக்கை, அடுத்த தேர்தலை வைத்துத் தயார்செய்யும் நிலை, எந்த ஆட்சி வந்தாலும் இந்த நிலைதான். தியடோர் பாஸ்கரனின் 'போரும் தமிழ் சினிமாவும்' கட்டுரை மூலம் 'பர்மா ராணி' படம் பற்றிய விவரம் தெரிந்தது. திரைப்படத்தையும் நடிகர்களையும் தன் கொள்கையைப் பரப்ப, மக்களின் ஆதரவைத் திரட்ட முதன்முதலில் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்பதும் இந்தியாவில் சட்ட சபைக்கு நுழைந்த முதல் நடிகர் கேபி.எஸ் என்பதும் தெரியவந்தது.

ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்

விலைவாசி உயர்வால் நடுத்தர மக்களின் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மக்களைப் பற்றிய கவலையே இல்லை என்றுதான் படுகிறது. அவர்களுடைய குறிக்கோளும் நோக்கமும் அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, அமெரிக்காவுக்கு அடிவருடிக்கொண்டிருப்பதிலும் பன்னாட்டு முதலைகளின் கால்களில் மண்டியிட்டு, நாட்டைத் தாரைவார்ப்பதிலுமாக நாள்களை நகர்த்துவதுமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட், தோழர்கள் வெறுமனே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வீதியில் இறங்கி மக்கள் போராடாத வரையில் இந்நாட்டுக்கு இதுதான் கதி.

ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்
கோவை 8

தலையங்கம் படித்தேன். 'பசியுடன், வேறு வழியில்லாமல், காலந்தள்ளுபவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கிலிருக்குமென்பது (இந்தியாவில்) எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்! பொருளாதார வல்லுநரான நமது நிதி அமைச்சர் இந்திய அளவில், 'பசி'யுடன் வாழ்ந்துவரும் நபர்களின் எண்ணிக்கையை அடியோடு நிர்மூலம் செய்யாவிட்டாலும் சிறிது குறைக்கவாவது செய்திருக்கலாம். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, தினப்படி நாம் உபயோகித்தே தீர வேண்டிய அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது! பசிப்பிணியாளர்களின் எண்ணிக்கை, குறையாவிட்டாலும் கூடாமலிருந்தால் சரி. பசியை, 'ப.சி'யால் வெல்ல முடியுமென்பதை அவர் காட்ட வேண்டும்!

கே.எஸ். கீழாம்பூர் ராமையா
புதுச்சேரி

மே 2008 இதழ் கண்டேன். தலையங்கம் சமூக அக்கறையுடன் தீட்டப்பட்டுள்ளது. மாநில, மைய அரசுகள் புதிய பொருளாதாரக் கொள்கைபால் மயக்கமுற்று, நமது விளைநிலங்களைக்காவு கொடுக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்களுக்குத் தரும் சலுகைகளில் பத்து சதவீதம்கூட விவசாயிகளுக்குத் தருவதில்லை. இடுபொருள் செலவு அதிகம். விளைபொருளுக்கு அடிமாட்டு விலை. விவசாயிகள் தற்கொலைசெய்யாமல் என்ன செய்வார்கள். ஊடக வணிகமும் அரசின் பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது இதனால் விலைவாசி சாதாரண, நடுத்தர மக்கள் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலையைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு.

தலித்தியம் என்பது சாதிப் பாதுகாப்பு அல்லது சாதி அமைப்பு அல்ல; தலித் இலக்கியம் என்பது தலித் விடுதலைக்கானது. அது மனித விடுதலைக்கு முதல் படி. இந்தக் கட்டுரை இன்னும் விவாதிக்க இடம்தரக்கூடியது.

இரவீந்திர பாரதி
அரூர்

இராம. திரு. சம்பந்தம் அவர்களைப் பற்றி, நண்பர் ராஜமார்த்தாண்டன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பில் எழுத்தாளர்கள்மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு உரிய கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது. நான் ஒரே ஒருமுறைதான் அவரைச் சந்தித்திருக்கிறேன். தினமணி அலுவலகத்தில் ராஜமார்த்தாண்டனைச் சந்திக்கச் சென்றபோது அவர்தான் என்னை சம்பந்தம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். என்னுடைய எந்தப் படைப்பையும் அவர் படித்திருக்கவில்லை என்றாலும் மிகவும் ஆர்வத்துடனேயே என்னிடம் பேசினார். எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கன்னடப் பதிப்பான 'கன்னடப் பிரபா' நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளில் எழுத்தாளர்கள் பங்குபெறுவதைப் பற்றியும் அவற்றின் தாக்கத்தைப் பற்றியும் சிறிது நேரம் அவருடன் பகிர்ந்துகொண்டேன். அப்படிப்பட்ட கட்டுரைகளுக்குத் 'தினமணி'யிலும் இடமுண்டு என்றும் எதிர்பார்த்த அளவுக்கு எழுத்தாளர்கள் எழுதுவதில்லை என்றும் அவர் சொன்னார். அதற்குப் பிறகுதான், நான் 'தினமணி'யில் கட்டுரைகளை எழுதத்தொடங்கினேன். கட்டுரைகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் மாலையில் அவரே தொலைபேசியில் அழைத்துக் கட்டுரையில் தனக்குப் பிடித்த பகுதிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசுவார். மறுநாள் இரவிலும் சில சமயங்கள் அழைத்துப் பேசியதுண்டு. வெளிவந்த கட்டுரைகளையட்டி யாரேனும் முக்கியமானவர்கள் அவரோடு தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டிருப்பார்கள். அவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டு உற்சாகப்படுத்துவார். அழுத்தமான குரலோடு பேசிய அந்த உரையாடல்கள் என் மனத்தில் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. அவருடைய காலத்தில் இருபத்தைந்து கட்டுரைகளுக்கும் மேல் எழுதியிருப்பேன். அந்த உத்வேகத்துக்குக் காரணம், அவருடைய உரையாடல் கொடுத்த உற்சாகம் மட்டுமே. நான் மட்டுமல்ல, என்னைப் போலவே பல புதிய கட்டுரையாளர்கள் அவருடைய காலத்தில் உருவாகி எழுதினார்கள். இருபது பேராவது தொடர்ந்து எழுதினார்கள். கட்டுரைகள் என்பவை, ஒருவகையில் சமூகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளையட்டி நிகழ்த்தப்படும் எதிர்வினைகள். இப்படிப்பட்ட எதிர் வினைகள் வழியாகவே ஒரு சிந்தனைத் தளம் ஒரு சூழலில் உருவாகிவரும். 'தினமணி'யில் அத்தகைய ஒரு சிந்தனைத் தளம் உருவாவதற்கு முக்கியமான காரணமாக இராம. திரு. சம்பந்தம் இருந்தார். ஒரு பத்திரிகையாசிரியர் என்கிற அளவில் இது மிகப்பெரிய சாதனை என்பதே என் எண்ணம்.

பாவண்ணன்,
பெங்களூர்

தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா? கட்டுரையின் நோக்கம் சார்ந்தும் வாழ்க்கைத் தத்துவம் சார்ந்தும் எழும் சில அடிப்படைக் கேள்விகளுக்கான பதில் என்னவாக இருக்கக்கூடும் என யோசிக்க வைத்துள்ளது. எந்த ஒரு எழுத்தாளனின் விமர்சன நோக்கும் வாழ்வின் மீதான கரிசனத்திலிருந்தும் கலைஞனுக்கே உரிய வித்தியாசமான பார்வைக் கோணத்திலிருந்தும் பிறப்பதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. இந்த வகையில் எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் இடை வெளியை ஏற்படுத்துவது எது என்ற வினாவும் தவிர்க்கக்கூடியதல்ல. கலைஞனின் சிந்தனை மேம்பாடு சாதியக் கூறு என்கிற குறுகிய மனப்பான்மையின் தடுப்புச் சுவர்களைத் தகர்த்தெறியும் வல்லமை படைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே தான், கலைஞன் சார்ந்துள்ள சாதியைக் கலை ரசிகர்கள் பார்ப்பதும் கிடையாது.

பா. செல்வவிநாயகம்
சென்னை

'தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா' கட்டுரையில் தமிழ் இலக்கியங்கள் யாவும் சாதியையும் மதத்தையும் வளர்ப்பனவாகவே உள்ளன என்றும் திருக்குறள்கூட 133, 927 ஆகிய குறள்களில் சாதி குறித்தும் வர்ணப்பாகுபாடு குறித்தும் தெளிவாகப் பேசியுள்ளதைக் காணமுடியும் என்றும் கட்டுரையாளர் இமையம் இயம்பியுள்ளார். இவரது இக்கூற்று சரியல்ல என்பதைத் திருக்குறள்மீது ஈடுபாடுகொண்டோர் எவரும் எளிதில் புரிந்துகொள்வர்.

இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி யாதொன்றிலும் குறை காண்பது இக்கட்டுரையாளரின் இயல்பு போலும். திருக்குறளையும் இவர் விட்டுவைக்கவில்லை என்பதுதான் நமக்கு வியப்பாக உள்ளது.

க.சி. அகமுடைநம்பி
மதுரை

அனைத்து நிலை மக்களின் உள்ளக் கொதிப்பைத் தலையங்கம் பிரதிபலித்தது. அரசின் விரைவு நடவடிக்கை அவசியமான ஒன்று.

'போரும் தமிழ் சினிமாவும்' நேற்றைய சினிமா வரலாற்றினை நினைவுக்குக் கொண்டுவந்து அதிசயிக்க வைத்தது. ஊடகங்களைக் களத்தில் இறக்கியதில் காங்கிரசின் பங்கினை உணர முடிந்தது.

அசோகமித்திரனின் புகைப்பட நினைவுகள் கட்டுரை, அந்தக் காலத்துப் பிரச்சினைகளை அழகாகச் சொன்னது. இசையின் கவிதை அலைபாயும் மனத்தின் ஆற்றொழுக்கை அழகாகக்காட்டியது. சம்பந்தம் அஞ்சலி ஒளிவுமறைவின்றி உண்மையைச் சொன்னது.

ரவிக்குமாரின் கட்டுரை அர்த்தம் பொதிந்தது. மே இதழ் முழுவதும் உயிரோட்டமாக இருந்தது.

கா. இர. குப்புதாசு,
செஞ்சி

'விலைவாசி உயர்வு: திணறும் வாழ்க்கை' தலையங்கம், மிகவும் நியாயமான முறையில் விஷம் போல் ஏறிவரும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த தவறுகின்ற அரசுகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. தற்கொலைச் சாவுகளும் பட்டினிச் சாவுகளும் நமது மண்ணில் அன்றாடம் நிகழ்வது வேதனையளிக்கும் செயல். விளைநிலங்களோடு போராட முடியாமல் விவசாயம் இங்கே சுருங்கிக்கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் ஏழை எளிய மக்கள் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகின்றனர். ஜனசமூகத்தின் மீது மெய்யான அக்கறை காட்டி வரும் அமைப்புகள் நீர்த்துப் போய்க்கொண்டிருக்கின்றன. தேர்தலில் பெறும் வெற்றியும் அதை அடைவதற்கு உண்டான வழிகளுமே முதன்மையாகி விட்ட சூழலில், மக்கள் நலன் எனும் கொள்கை, கிழிந்து சிதைந்துக்கொண்டிருக்கிறது.

கே. ரவிச்சந்திரன்,
திருச்சி

ஏப்ரல் 2008 இதழில் வெளியான, "சிற்றிதழ் இயக்கம் சில பார்வைகள்" மிகப் பயனுள்ளதாக அமைந்திருந்தது. ஒரு பத்திரிகை அல்லது சிற்றிதழ் தரமாக இருப்பதற்கும் தரமான படைப்பை வெளியிடுவதற்கும் அதன் ஆசிரியரே முதன்மையான காரணம். மேலும் தரமான இதழ் பிறப்பதற்கும் சமூக மாற்றத்திற்கும் காரணமாக அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்கள் இருந்துள்ளனர். பாரதி, கஸ்தூரி ரங்க அய்யங்கார், திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, வ.ரா, பி.எஸ். ராமையா, சி.சு. செல்லப்பா போன்றோரைக் குறிப்பிடலாம்.

இன்று பத்திரிகைகளை வர்த்தகச் சூதாடிகள் கையகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இருக்கும் சில பத்திரிகைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. முதலாளிகள்தான் இருக்கிறார்கள். சாதி, மதம், அரசியல் சாராத பத்திரிகைகள் மிகக் குறைவு. சிற்றிதழ்களின் பின்புலத்திலும் சில விஷமிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சிற்றிதழ்கள் சில தரமாக, சிறப்பாகச் செயல்படுவதை நாம் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.

ச. புகழேந்தி
தஞ்சாவூர்

மறைந்த சு.ரா. அவர்கள் சிந்தனைக்களத்தில், ஆழத்தில் மிகச் சில எழுத்தாளர்களுடன் மட்டுமே ஒப்பிடக் கூடியவர். அவர் சில காலம் எழுதாமல் இருந்தபோது இது எனது அந்தரங்கமான இலக்கியச் சோகம் என்று முன்பொருமுறை ஜெயகாந்தன் சொன்னது என் நினைவுக்குவருகிறது. 'ஒரு புளிய மரத்தின் கதை'யை யாரும் படிக்கலாம். அவரை ஆதர்சமாகக் கொண்டு எழுதுபவர்களிடம் அந்த எளிமையைக் காணோம்.

கவிதைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கால திராவிட இயக்க எழுத்துக்களைப் போலப் பெயரை எடுத்துவிட்டால் யார் எழுதினார்கள் என்பதே தெரியாது. இந்த விமர்சனங்கள் பாமரத்தன மானவையாய் இருக்கக்கூடும். பாமரர்கள் சார்பிலும் ஒரு அபிப்பிராயம் பதிவாவது தவறல்ல.

காலச்சுவடுக்கு இலக்கிய உலகில் உள்ள இடத்தையும் மரியாதையையும் யாரும் மறுக்க இயலாது.

பூபாளன், குச்சனூர்

கடந்த ஆண்டு தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழகத் தொடர்பு வகுப்புகளுக்குச் சென்றிருந்தபோது பேராசிரியர் லூர்து அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. தொடர்பு வகுப்புகளுக்குச் செல்லும்பொழுது கல்லூரியில் உள்ள நாட்டுப்புறவியல் காட்சியகத்திற்குச் செல்வதைச் சில மாணவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஒருமுறை, அங்கு நடைபெற்ற கலை விழாவைக் காணச் சென்றபொழுது பேராசிரியர் தே. லூர்து அதில் கலந்துகொள்ள வந்திருந்தார். வயது முதிர்ச்சியால் தளர்வுற்ற நிலையில் ஒருவரின் உதவியுடன் ஆர்வத்தோடு அவர் வந்திருந்தது எங்களுக்கு வியப்பைத் தந்தது. தான் வெற்றிகரமாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் அத்துறையின் வளர்ச்சியில் அவர் காட்டிய ஈடுபாடு ஒரு பாடமாகத் தோன்றியது. அவரது நூல்களை வாசித்த, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த மாணவர்களில் ஒருத்தி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

ர. கார்த்திகா, அம்பாசமுத்திரம்

'போரும் தமிழ் சினிமாவும்' கட்டுரை நமது அரசியல் சரித்திரத்தை அழுத்தமாக உணர்த்தி எழுதப்பட்டுள்ளது. 'வெள்ளையனே வெளியேறு' போராட்டக் காலத்திலும் சுதந்திரப் போராட்ட சரித்திர நிகழ்வுகளிலும் திரைத் துறை எவ்வாறு திண்டாடியது என்பதைத் திறம்பட வரைந்துகாட்டியிருக்கிறார். நடிக, நடிகைகள் போராட்டக் களத்தில் தேசியத்திற்காகப் போராடியதும் சிறை சென்றதும் வெறும் சரித்திரமாகவே நின்று விட்டதே!

எம்.வி. மணி, எம்.எம். சிதம்பரநாதன், சீதாலட்சுமி ஆகியோரைப் பற்றி நான் படிக்காமல் இருந்து விட்டேனே என்பதை தியடோர் பாஸ்கரன் மண்டையிலடித்தால் போல் சொன்னது, இன்னும் கொஞ்ச காலம் உரைக்கும்.

வனங்களை அழித்து, பூமியின் இயற்கைத் தன்மையை இல்லாமல் செய்கின்ற செய்திகளை இருட்டடிப்புச் செய்துவிட்டோம். வருங்காலம் நரகமாகும் நிலையை எடுத்துச்சொல்லி வேதனைப்படுவது யார்? இந்திய மண், தமிழ் மண் எல்லாம் தனது பாரம்பரியத் தன்மையை இழந்துகொண்டிருக்கின்றன என்று நினைவுபடுத்தியது யார்? 1893இல் வோல்கர்! 1901இல் மாலீசன், 1924இல் ஆல்பர்ட் ஹோவார்ட். இல்லாத பிரச்சினைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் மராட்டிய, கர்நாடக, தமிழ் மாநிலங்களில் அரசியலே தெரியாதவர்கள் அரசியல் செய்கிறார்கள். மேற்கூறியவர்கள் தமிழ் மண்ணைப் பற்றிப் புரிந்துவைத் திருப்பதை நீங்கள் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள் என்ற சூடான விவாதத்தைச் சரித்திரப் பின்னணியில் தொடங்கிவைத்துள்ளார் சங்கீதா ஸ்ரீராம்.

கவிதைக்குப் புதிய பரிமாணங்கள் ஏற்படக் காரணமானவரும் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அர்ப்பணக் குணத்தோடு ஒலிச்சுவை மூலம் பண்டிதப் பிரமாணங்களும் இல்லாது மக்களின் பிரச்சினையைப் பாடிய மாகவிஞனை மொழிகள் உள்ள வரையும் மறக்க முடியாது. அந்தப் பாட்டுத் தேனீயின் ரீங்காரம் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

மைக்கில்லாமல் இரு உயர்ந்த நிலவிளக்கு வெளிச்சத்தில் நின்று இரண்டரை மணிநேரம் தமது படைப்பைப் பாடி, இல்லை, இடியென முழங்கிக் காண்பவனையும் கற்சிலையாக்கும் திறன் வேறு எந்தக் கவிஞனுக்கும் உண்டா என்று சிந்திக்க வைக்கும் சிறந்த படைப்பாளிக்கு, சுகுமாரன் தமது 'வசந்தத்தின் இடிமுழக்கத்தில்' அஞ்சலி செய்தது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

க. வானமாமலை, திருவனந்தபுரம்

'வார்த்தை'யின் வாழ்த்துகள்
காலச்சுவடு- 100

காலச்சுவடு பத்திரிகையின் 100வது இதழ், பதிப்பகத்தின் 250வது நூல் வெளியீடுகள் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிற்றேடுகளின் வரலாற்றில் காலச்சுவடு பதித்த தடங்கள், அதன் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களைத் தாண்டி வாழ்த்த வேண்டிய ஒன்று. சிறுபத்திரிகை இயக்கத்துடன் தொடர்ந்து தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதல், பின்பு கண்ணனின் தொடர் முயற்சியினால் சிறப்பான பதிப்புகளும் பதிவுகளும் பெற்று காலச்சுவடு நிறுவனம் வளர்ந்து வருவது பாராட்டிற்குரிய விஷயம். பதிப்புத் துறையில் காலச்சுவடு காட்டிய சிரத்தை, தமிழ்ப் புத்தக ஆக்கத்தில் ஈடுபட்டிருப்போருக்குப் புத்துணர்வு அளித்திருக்கிறது. தயாரிப்பு நுணுக்கங்களைத் தியாகம் செய்துதான் சிறுபத்திரிகைகள் வெளிவர வேண்டும் என்ற சாபக்கேடு கண்ணனால் பெருமளவு நீங்கியது எனலாம். ஆய்வுப் பதிப்புகள் தமிழிலும் உண்மையான ஆய்வு நெறிகளைப் பயன்படுத்தி வெளிவருவது சாத்தியமே என்று காலச்சுவடு பதிப்பகம் நிரூபித்திருக்கிறது. மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கு வரவேற்பு இல்லை என்பதையும் பொய்யாக்கியிருக்கிறது. சிறந்த படைப்புகள் எனத்தக்க பலவற்றையும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. சிற்றேடுகளை எப்படி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்கு பிறருக்கும் வார்த்தைக்கும் முன்னோடியாகக் காலச்சுவடு திகழ்கிறது. காலச்சுவடு நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி: வார்த்தை மாத இதழ், மே 2008

கிருஷ்ணன் நம்பி படைப்புகள்:
ஒரு வேண்டுகோள்

கிருஷ்ணன் நம்பியின் ஆக்கங்கள் அனைத்தையும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாகக் கொண்டு வரும் பணி நடைபெற்றுவருகிறது. கிருஷ்ணன் நம்பி எழுதிய 'ஒரு விநோதம்', 'ஒரு கனவு' ஆகிய சிறுகதைகள் வெளியான இதழ்கள் கைவசம் இருப்போர் அனுப்பித் தந்து உதவவும் அல்லது தகவல் தெரிவிக்கவும். மேலும், கிருஷ்ணன் நம்பியின் தொகுக்கப்படாத ஆக்கங்களின் பிரதிகள் வைத்திருப்போரும்

காலச்சுவடு பதிப்பகம், 669,
கே.பி. சாலை, நாகர்கோவில்
629 001 (தொ.பே: 04652 - 278525)

என்ற முகவரிக்குத் தொடர்பு கொண்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளடக்கம்